"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, December 08, 2008

தேர்தல் முடிவுகளும் தீவிரவாதமும்

ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஷ்ஹரிலும் பிஜெபி தனிப்பெரும்பான்மை அடைந்திருக்கிறது. மிசோரம், டெல்லியில் காங்கிரஸ் வென்றிருக்கிறது தனிப்பெரும்பான்மையுடன். ராஜஸ்தானில் காங்கிரஸ் (96) வென்றிருக்கிறது. என்றாலும் ஆட்சி அமைக்க சில சுயேட்சை நண்பர்களின் ஆதரவு தேவைப்படலாம்.


ஒன்றுமற்றது என எண்ணப்பட்ட பிஎஸ்பி, எல்லா இடங்களிலும் தன் இருப்பைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. தலித்கள் மட்டுமின்றி, பிராமிணர்களையும் தேர்தலில் நிறுத்துவோம் என்ற அவர்கள் நிலை, தொடர்ந்து ஆதரவு பெற்று வருகிறது. ஆனால், அவர்கள் வென்ற இடங்களை விட, அவர்கள் காங்கிரஸ், பிஜெபியின் வெற்றி வாய்ப்புகளைப் பல இடங்களில் பாதித்திருக்கின்றனர். அதுவே பிஎஸ்பி யின் முக்கிய நோக்கமாக கூட இருக்கலாம். இனி புள்ளிவிபரவியலாளர், தொடர்ந்து ஆய்ந்து, சதவிகிதங்களோடு வரும் பொழுது, பிஎஸ்பி எப்படி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தன்னை நடத்திக் கொள்ளும் என்று தெரிய வரும்.


யாருடைய ஓட்டு வங்கியை உடைத்திருந்தாலும், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக தன்னை வளர்த்துக் கொள்வதுவும், அதன் மூலம் பேரங்களைப் பேசுவதும் தான் அதன் எண்ணமாக இருக்கும். ஏற்கனவே, மாயாவதி, தன்னை இந்தியாவின் அடுத்த ஒபாமா என சொல்லிக் கொண்டு இருக்கிறார். பிரதமர் கனவு அவரிடம் எப்பொழுதும் இருந்தே வந்திருக்கிறது. அதற்கான நியாயமும் அவரிடம் இருக்கிறது.


தன்னை கவனமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், அனைத்தையும் மறுத்து, தன்னை முழுக்க முழுக்க தலித் அடையாளத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அதையும் மீறி, தன்னை வளர்ப்பதன் மூலமே, இந்தியாவின் உச்ச அதிகார மையத்தில் தான் வீற்றிருக்க முடியும் என்று புரிந்து கொண்ட செயல்பாடுகளின் மூலம் அவர் சரியான திசையிலே தான் செல்கிறார் என்பதை உணர முடிகிறது.


இங்கு குறிப்பிடத்தக்க வெற்றி என எடுத்துக் கொண்டால் ராஜஸ்தானைத் தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்காத மாநிலம். ராஜஸ்தானும், டெல்லியும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் தேர்தலை சந்தித்த மாநிலம் என்பதால் அதன் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரு மாநிலத் தேர்தலிலும் பிஜெபி முக்கியப் பிரச்சினையாக ‘தீவிரவாதத்தை’ முன் வைத்தது. அதிலும், அத்வானியும், வசுந்தராவும் அலறும் குரலில் தீவிரவாதத்தையும், காங்கிரஸ் அதை தடுக்கத் தவறி விட்டது எனவும் முழங்கினார்கள். ஆனால், மக்கள் அதை காதில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, ‘தீவிரவாதத்தைத் தடுப்பது’ தங்கள் ஏகபோக உரிமை என பிஜெபி ‘இறுமாந்திருந்ததற்கு’ மறுப்பு சொல்லி தூக்கியெறிந்திருக்கிறார்கள் மக்கள்.


இங்கு இரண்டு விஷயம் கவனிக்கப்படத்தக்கது.


ஒன்று -

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை விட, அபாயகரமான இந்துத்வ தீவிரவாதத்தைத் தடுக்கத் தவறிய நிலையில் இருந்து கொண்டே தீவிரவாதத்தை தடுக்காத பழியைக் காங்கிரஸின் மீது திணிக்க நினைத்தது.


இரண்டு -

தீவிரவாதத்திற்கு எதிராக மொத்த இந்தியாவும் ஒன்றிணைந்து தங்கள் கோபத்தை வெளிக்காட்டிய பொழுது, அவர்கள் தங்கள் வெறுப்பை உமிழ்ந்த ஒரே இனமாக இருந்தது – The Political Class. அவர்கள் தங்கள் கோபத்தை அரசியல்வாதிகள் என பொதுப்படையான ஒரு வகுப்பின் மீது காட்டினார்களே தவிர, காங்கிரஸ் என்ற ஒரு கட்சியின் மீது காட்டவில்லை.

அரசியல்வாதிகள் ஒரு குடையின் கீழாக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்பிய ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக, அத்வானி சர்வ கட்சி கூட்டத்திற்குப் போகாமல், பிரச்சாரத்திற்கு சென்று, அரசைக் குறை கூறிக் கொண்டிருந்தார் – மக்களின் மனநிலையை அறியாமலே.

தாஜ் ஒரு பாரம்பரிய கட்டிடம் அதை சிதைத்துவிட்டார்களே என அழுதது மக்களிடத்திலே எடுபடவில்லை. புராதணக் கட்டிடங்களை சிதைத்ததற்கு முன்னோடி தான் என்பதை அவர் வசதியாக மறந்து விட்டார். ஒரு கட்டிடத்தை இடிப்பதற்காக, இந்தியாவின் ஊர் ஊராக தேரில் பயணம் வந்ததும், அதுவரையிலும், அயோத்தி என்ற இடத்தின் உள்ளூர் பிரச்சினையாக – ஒரு நிலத்தகராறாக மட்டுமே இருந்து வந்த பிரச்சினையை, தனது அரசியல் லாபத்திற்காக, இந்து-முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி, இனக்கலவரங்களை மூட்டி, அதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டவர் தான் என்பதை அத்வானி மறந்து விட்டு, இன்று, தீவிரவாதத்திற்கான காரணத்தை பிற கட்சிகளின் மீது திணிக்கப்பார்த்ததை மக்கள் ஏற்கவில்லை.


இப்பொழுது, பிஜெபி தன்னை அடுத்த கட்ட நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.


தீவிரவாதத்தை ஒரு தேசிய பிரச்சினையாக அணுக வேண்டும். அதை தனக்கு ஓட்டு வாங்கித்தரும் ஒரு துருப்பு சீட்டாக மட்டுமே பயன்படுத்தக் கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது. ஒரு பொறுப்புள்ள கட்சியாக செயல்பட வேண்டுமென்றால், தனது எஜமானர்களை அடக்கி வைக்க வேண்டும். எஜமானர்களை அடக்குவது சாத்தியப்படுமா என்பது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தான். ஆனால் அதை கண்டிப்பாக அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.


அடுத்து, counter terrorism என்று நாமகரணம் சூட்டப்பட்டு, இந்தியாவிற்குள்ளேயிருந்து கிளம்பியிருக்கும் தீவிரவாதக் கும்பலையும், எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற வகையில், ஒரு நாட்டின் அமைதியைக் குலைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவை பொருளாதார ரீதியாக உயர்ந்துவிடாமல் செய்து, அதன் மூலம் வல்லரசு என்ற நிலையை எட்டி விடாமல் இருக்க முயற்சிக்கும் அண்டை நாட்டின் தீவிரவாதத்தையும் ஒரே நிலையில் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். தீவிரவாதம் என்பதிலும் இனம் பார்ப்பது, பிஜெபி-யின் நோக்கத்தை எப்பொழுதும் கேள்வி கேட்க வைக்கும்.


ஒரு சாத்வி தீவிரவாதியாக இருக்கவே முடியாது, அவரை எப்படி துன்புறுத்தலாம் என்று ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டு, போலிஸ் விசாரணையில் இருப்பவருக்காக ஆதரவு குரல் கொடுத்தவர் அத்வானி. அடுத்த பிரதமர் இவர் தான் என பலராலும் முன்வைக்கப்படும் ஒருவர், போலிஸ்துறையினருக்கு எதிராக இத்தனை வெளிப்படையாகக் கருத்தை முன்வைத்தது, தீவிரவாதத்தின் மற்றொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்த போலிஸ் குழுவினரின் மன உறுதியை முற்றிலுமாகப் பாதித்திருந்திருக்கும்.

பிறப்பில் தான் சாதி பார்ப்போம் என்ற மனநிலையிலிருந்து, தீவிரவாதத்திலும் இனம் பார்த்து தான் குரல் கொடுப்போம் என்ற தடுமாற்றத்தைத் தான் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதை பிஜெபி புரிந்து கொண்டு, தீவிரவாதத்தை ஒரே பார்வையில் நடத்துவது என்பதைத் தீர்மானித்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அடுத்த தேர்தலில், தீவிரவாதம் என்ற நிலையை முன்வைத்து பிஜெபி தேர்தலில் இறங்கினால், முதலில், அது தான் தீவிரவாதிகளின் ஆதரவாளன் அல்ல என்ற இக்கட்டான நிலையை கடந்தே ஆக வேண்டும். குறைந்த பட்சம் காங்கிரஸிற்கு அத்தகைய நிலை இருக்காது.

தாங்கள் ஆரம்பித்து வைத்து ஆபத்தான விளையாட்டு, இப்பொழுது தங்களுக்கு எதிரான தடத்திற்கு திரும்புகிறது என்பதை பிஜெபி உணர வேண்டும்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்