"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, October 22, 2005

கணவன் !

மாலை சாயும் வேளையானால்

முகம் கழுவி

பவுடர் பூச வேண்டும்.

காடான கூந்தலை

பிடித்துக் கட்டி

ஒரு கொத்துபூக்களை

அணிய வேண்டும்.

புருவம் திருத்திய

நெற்றியில் குங்குமம்

துலங்க வேண்டும்.

பட்டாம்பூச்சியாக

வெட்டும் இமைகளின் அடியில்

மை தீட்ட வேண்டும்.

உதடுகளில் மட்டுமல்ல -

வெட்டிய கூர் நகங்களில் கூட

சாயம் தீட்ட வேண்டும்.

வியர்த்துப் போன அக்குளில்

கமகம நறுமண திவலைகள்

அடிக்க வேண்டும்.

எல்லாம் செய்து

மகாலட்சுமியாக போக வேண்டும்

படுக்கை அறைக்கு.

ஆங்கே காத்திருப்பான் -

வளையம் வளையமாக

ரசித்து விடும் புகைமண்டலத்தினுள்

நாற்றமெடுக்கும் வாயுடன் -

கணவன்.. .. .

Monday, October 17, 2005

தண்டனை....

தனியாக வந்த பொழுது
நீர் எமக்கு அனுசரணையாயிருந்தீர்
பசி தாகமென்ற தவிப்புகளை
அமைதி கொள்ளச் செய்தீர்
பின் வழிகாட்டியாய்
சிந்தனைகளுக்கு
வண்ணம் பூசும் ஓவியனாய்
பல்வேறு அவதாரமெடுத்தீர்
பல்வேறு தருணங்களில்.

மெல்ல மெல்ல கற்று தேர்ந்து
தனித்தியங்கும் தன்மையுற்றதும்
அறிந்து கொண்டோம் -
நீர் காட்டித்தந்த
வழித்தடங்கள் பலவும்
எங்கும் செல்லாதவையென்று.
நீர் சுற்றி வளைத்து
போட்டுத்தந்த பாதைகளனைத்திற்கும்
நேர்வழி கண்டுகொண்டோம் இன்று.

உன் பிரம்மாண்ட நிழலில்
இருண்மை அப்பிய மலர்த்துளிகளில்
இன்று சூரியம் வழிகிறது
வலிக்க வலிக்க சூல் கொள்கிறது
எம் கர்ப்ப மூளைகள்.
உம்மை கடும்விசாரணை செய்து
வீதியில் நிறுத்தி கேள்விகேட்க
எண்ணிய பொழுதிலே
நீர் விலகிக் கொண்டீர்
மிகைபீடங்களில் -
புன்னகைத்தமர்ந்து
கேள்விகளுக்கப்பாற்பட்ட ஓர் இறைத்தூதனாய்
எமக்கெட்டாத தூரத்தில்.

உம்மை
விசாரிப்பதோ
கேள்விகேட்பதோ
பண்பாடற்ற செயலியாய்
பதிவு செய்யப்படும்
வரலாற்றில்.

எம்மால் முடிந்த
எளிய தண்டனைவொன்றை செய்வோம்
உமக்கு
பீடங்களற்ற சிலையொன்றை வைப்போம்
மிக அதிகமாக மாசுபடும் வீதியொன்றில்.

Sunday, October 16, 2005

கதவுகள் திறக்கின்றன.......

முறிந்த சிறகு
தேவையற்று கிடக்கிறது
தெருவை வீட்டிற்கு சொல்லும்
திண்ணைகளொழிந்த வீதியில்.

பூட்டிய
கதவுகளின் தோரணை
தொடங்கியதன்று.

தன்னுள்
விரியக் காத்திருக்கும்
உள்வெளியை
இறுக்கிப் புழுக்குகிறது
சன்னல்.

புதிய மலர்வுகளின்
வாழ்துடிப்பை
ஏந்திவரும் காற்றை
வீதியில் நிறுத்துகிறது
குளிர்மி.

முன்னறிவிப்பில்லா
வருகைகள்
முற்றிலும் மறுக்கப்படும்.
தேவையான பதில்
கதவு சொல்லும்.
மேலதிக தகவலை
கதவிடுக்கு உள்வாங்கும்.

செய்திகள்
தொடர்புகள்
சித்திரங்கள்
நூலகங்கள்
எவற்றிற்கும்
கதவுகள் விரிவதில்லை
அவைகளுக்கென
தனித்தடங்களுண்டு
நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்தில்.

ஒரு நாளின்
சொற்ப சமயம்
திறந்து மூடும்
பணிகள் நிமித்தம்
பள்ளி நிமித்தம்
சென்றுவர.

மற்றைய நேரத்தில்
விட்ட மூச்சையே
திரும்பப் பிடித்து
சுவாசித்துக் கிடக்கும்
இந்த
மௌன கதவு.

எப்பவும்
அடைந்தே கிடக்கும்
இந்த வீட்டுச் சிறை
சலித்து நகரும்
தெருப்பிச்சையின் அதிசயமாய்
கண்முன்னே விரிகிறது
பூட்டிக் கிடந்த கதவு.

வெளியேறுகிறான்
முறிந்து கிடந்த
சிறகு மாட்டி
காற்றில் மிதந்து செல்லும்
ஒருவன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்