"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, October 03, 2008

நேசமிகு மரணம்

நேசமிகு மரணம்
*****



எனக்கு அவசரதேவையாக
ஒரு கோப்பை நீரும்
ஒரு சிட்டிகை நச்சுப்பொடியும்
மேலும்
விஷக்குவளையை உதடுகளில் பொருத்தவும்
நானில்லாத என்னுடலை
படுக்கையில் கிடத்தவும்
துணையாக ஒரு மனித உயிர்.


நீங்கள் தயாராகும் முன்
சற்று தெரிந்து கொள்ளுங்கள்


என்ன செய்து கொள்ள வேண்டுமென்ற
தீர்மானமான முடிவை எட்டிவிட்டாலும்
வினைமுடிக்கவியலா முடக்கத்தினுள்
தாவரமாய் துவண்டு கிடக்கின்ற என்னை
நானே காலியாக்கிக் கொள்ளும் முடிவிற்கு
உங்களால் எளிதாக உதவிட முடியாது
கொலையாளியெனும் பட்டமேற்காமல்


என்னைக் கொலை செய்வதன் மூலமே
உங்களால் நிரூபிக்க இயலும்
என் மீது உங்களுக்கெந்த அதிகாரமுமில்லையென்பதையும்
நீங்கள் என்னை நேசித்தீர்கள் என்பதையும்
****






Voluntary euthanasia: When the person who is killed has requested to
be killed.


துயரமும் அவலமும் ததும்பும் நாட்களை அசையவியலா ஓருயிர் தாவரமாய் படுக்கையிலோ, நகரும் நாற்காலியிலோ கழிக்கும் விரக்தியில் - இந்த உடலை விட்டு விலகிப் போவதன் மூலம் தனக்கும் தன்நேசத்திற்குரியவர்களுக்க்கும் நிரந்தரமான தீர்வைத் தேடி எடுக்கும் முடிவு தான் தன்னழிப்பு. மரணத்தின் மூலமே நேசத்தைத் தக்க வைத்துக் கொள்ளவியலும் என்பதே ஒரு முரண் தான்.


சில நாடுகள் இதை சட்டபூர்வமானதாக அறிவித்திருந்தாலும், இங்கு வந்து இறந்து போனவர்களின் துணை சொந்த நாடு திரும்பும் பொழுது கைது செய்யப்படலாம்.


இதை விவாதமாகக் கொண்டு, the sea inside என்ற ஸ்பானிஷ் திரைப்படம் ஒன்று
வந்திருக்கிறது.


சமீபத்தில், இங்கிலாந்தில் இது சம்பந்தமாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் –


Debbie Purdy என்ற பெண், தன் நோயின் தன்மையால் மேலும் வாழ்வது அர்த்தமற்றதென முடிவு செய்து செத்துப் போவதற்கு முடிவு செய்தார். ஆனால், அவரால் பிறர் உதவியின்றி, எதுவும் செய்து கொள்ள இயலாது. மேலும் இங்கிலாந்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. அவர் ஸ்விட்சர்லாந்து செல்ல வேண்டும். அங்கு சென்று தன் சாவிற்கு தன் கணவர் சட்டத்திற்குட்பட்டு, எத்தனை தூரம் உதவ முடியுமென்று தெரிந்து கொள்ள
விரும்புவதாக நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார். (Gulfnews, 3/10/08)


அதுவே இங்கு கவிதையாக....

Thursday, January 31, 2008

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்
உனக்காக எப்படி துக்கிக்கிப்பதென்ற
ஒத்திகைகள்
எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன

ஏகத்துக்கும் நீருண்டு வயிறு புடைத்தப் பெருநதி
கரையறியாது தடம் மீறி பிரவாகிப்பதைப் போன்று
உன் நினைவுகளின் புறவடிவம்
என்னுள் மரணிக்கும் தினத்தின் துக்க ஒத்திகைகள்
பெருக்கெடுத்தோடிக் கொண்டேயிருக்கிறது

குமுறிப் பொங்கியெழுந்து வீழ்வேனோ
மீளவியலாத அருவியைப் போன்று?

உதடுகளைக் கடித்துக் கொண்டு
கனத்த மௌனத்துள்
என்னை அடை காப்பேனோ?

கறுப்புக் கண்ணாடியணிந்து
கலங்கிய ரத்தச் சிவப்புக் கண்களை
பிறர் பார்வையிலிருந்து மறைப்பேனோ?

எப்படி
என் துக்கங்களைக் கொண்டாடுவேனென்பதை
அந்த நிமிடத்தைய தீர்மானங்களாவிருக்கட்டும்

முதலில்
உன் மரணம் நிகழ்ந்தால்
எனக்கு அறிவிக்க ஏற்பாடொன்றைச் செய்து



வை!!!

Friday, April 27, 2007

காதலைத் தேடி.........

நேற்றிரவு
அகராதியில் தேடியலைந்தேன்
காதலென்ற சொல்லை.

எங்கோ
தொலைந்து போய்விட்டிருந்தது.

இன்றோ
அது மீண்டும் வந்தது
எவ்வுடையும் அணியாது
எந்தப் பம்மாத்துமில்லாது
ஏகாந்த வெளிகளில்
புலரும் ஒளிபோல்

மீண்டும் பிடித்து
அடைத்து வைத்தேன்
அகராதியினுள்.

இப்பொழுது,
அங்கே சொல் இருக்கிறது.
பொருள் தானில்லை.

வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பில்
உதிரா வண்ணம் போல்
அது மட்டும் உன்னிடத்திலே
ஒட்டிக் கொண்டுத் திரிகிறது
அகராதிகளை அர்த்தமற்றதாக்கி.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்