"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Friday, November 28, 2008

Trial By bloggers

Trial By Bloggers


நாற்பத்தெட்டு மணி நேரங்களைத் தொடப் போகும் இந்த யுத்தத்தில், இன்னமும் நிலைமை தெளிவடையவே இல்லை. ‘முடிந்து விட்டது’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய ஒரு நிமிட இடைவெளிக்குள், அதிகாரிகள், ‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை, விலகுங்கள்’ என்று அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு முன்னரே வெற்றி குரல்களும், பாராட்டு குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

It’s spontaneous.

தேவையான ஒன்றும் கூட.

தங்கள் பணியை எந்த சார்புமற்ற பொதுமக்கள் உற்சாகக் குரல் கொண்டு ஆதரிக்கிறார்கள் என்பது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்த வீரர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தைக் கொடுக்கும். ஒவ்வொருவருமே தங்கள் பணிக்காக வெறும் சம்பளத்தை மட்டும் கொண்டே திருப்தியுறுவது கிடையாது.

Appreciation is an important motivation.

இந்தத் தாக்குதல் பற்றி, பலவகை எண்ணங்களும் கருத்துகளும் வலைத்தளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வையில் கருத்துகளை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளை சுதந்திரமாக வைக்க உரிமை இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் பின்னூட்டமிடவில்லையென்பதால், அவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை மொத்தமாக ஒரே பதிவாக எழுதி விடுகிறேன்.

‘இந்தத் தீவிரவாதம், கஜினி முகமது, கோரி முகமது வந்த பொழுதே வந்துவிட்டது’என்ற நகைச்சுவையுடன், ஒரு முழுநீள காமெடியுடன் இட்லிவடை தளம் ஆரம்பிக்கின்றது. புஷ்ஷின் உறுதியான தலைமையாலேயே மீண்டும் அங்கு ஒரு தீவிரவாத செயல் நிகழவில்லை என்றும் வாதிடுகிறார்..

‘அமெரிக்கர்களின் நலனை உலகம் முழுவதும் தாக்குவோம்’ என்ற அல்-கொய்தாவின் நிலைபாட்டையொட்டி, அமெரிக்கர்கள் இயங்கும் ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தத் தான் செய்கின்றனர் - அதை எதிர்த்துத் தான் அவர்களும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றனர் நேர்மையற்ற வழிகளில் என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? புஷ்ஷின் இந்தத் தோல்வி தான்,சமீபத்தில் நடந்த தேர்தலில் அகோரமான தோல்வியை அவரது கட்சிக்கும், நண்பருக்கும் பெற்று கொடுத்ததும் என்பதுவும், 'மிக மோசமான அதிபர்' என்ற பெயருடனும், பெருத்த அவமானத்துடனும் தான் அவர் பதவி விலகுகிறார் என்பதும் தெரியாதவர்களாக இவர்கள். இல்லை, நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் அதனால் உலகம் இருண்டுவிட்டது என்று நாங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களது வாதத்தின் 'அதிபுத்திசாலித்தனம்' குறித்து நகைக்க வேண்டியிருக்கிறது. இறுக்கமான சூழ்நிலையைக் குறைக்கத் தேவையான காமெடி நடிகர்களின் பணியைச் செய்திருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாக். அரசைக் குறி வைத்துக் கூட தீவிரவாதத்தைத் தொடர்கின்றனர் என்ற பொழுது, அல்-கொய்தாவிற்கு யாரும் பொருட்டில்லை. இவர்களை ‘நல்லது / கெட்டது’ என்ற எல்லைக்குள் வைத்து மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறு எந்த சித்தாந்தாங்களுடன் இணைக்க முடியாது. தன்னிச்சையாக இயங்கும் ஒரு Evil force மட்டுமே இவர்கள். அதை நியாயப்படுத்த அவர்கள் எந்த ஒரு தத்துவத்தையும் இழுத்து வந்து தங்களுக்கு அரணாக நிறுத்தி வைக்க முடியும். Counter terrorism என்ற வகையில், தாங்கள் நீதி வழங்கப் போவதாக எண்ணிக்கொண்டு, தீவிரவாதத்தை கையிலெடுத்த சில அமைப்புகளைப் போன்றதே இந்த அமைப்பும். counter terrorism என்பது ‘ரா’வின் வேலை என்று சொல்லி மற்றொரு நகைச்சுவையாளர் ஒருவர் தனது தேசபக்தியையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன், இவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு நரேந்திர மோடி தான் சரி என்ற தீர்வையும் முன்வைக்கிறார். டோண்டுவும் கூட அந்த கருத்தைத் தான் வைக்கிறார். இந்தத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுவது ஒன்று தான் வழி என்ற இனஒழிப்பை ஆதரிக்கும் இவர்களால் வேறு நற்சிந்தனைகளை முன் வைக்க முடியாது. இஸ்லாமியர்களை அழித்து ஒழித்த பின்பு, வேறு எவரைக் குறித்த counter terrorism குண்டுகளை சங் பரிவார்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப் போகிறார்கள் என்பது ஒரு interesting question! அல்லது தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடப் போகிறார்களா என்பதுவும் தெரியவில்லை. மூடிவிட மாட்டார்கள். அழித்தொழிப்பிற்கு, அவர்களது மேலாண்மையை எதிர்க்க பலர் இருக்கின்றனர்.


மறுபுறம் பல கேள்விகளை எழுப்பி, இந்தத் தீவிரவாதிகளை இந்துத்வத்தின் முகமாகப் பார்க்க முனைகிறது – சத்தியமார்க்கம். அந்தத் தீவிரவாதிகள், தங்கள் கைகளில் சிவப்புக் கயிற்றை அணிந்திருந்தார்கள் என்ற சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வருவது எத்தனை சரியாகும்?

என்றாலும், சத்தியமார்க்கம் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று – ஏன் ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்டார்? Counter terrorism என்ற பெயரில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்த சில அமைப்புகளைக் குறித்த தகவலை வெளிக்கொணர்ந்தார் – அவர்கள் சங் பரிவார் சித்தாந்தத்தில் வந்தவர்கள் தான் என்ற தகவலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், சங் பரிவார்களும், அதன் அரசியல் முகமான பிஜேபி-யும் இனியும் தீவிரவாத துருப்புச் சீட்டை எடுத்ததெற்கெல்லாம் வீசியெறிய முடியாது என்ற இக்கட்டான நிலைமைக்கு கொண்டு வந்த ஆத்திரம் இருந்தது. அதனால், தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்தது.


ஆரம்பத்தில் அப்படித் தான் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருக்கும். ஆனால், தொடர்ந்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த நிலையின் உக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது. இது குறித்து நான் பண்புடன் தளத்தில் 27/11/08 (http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0a509464b1ee8136#) தளத்தில் எழுதியிருந்தேன் இவ்வாறு:


// ஹேமந்த கர்கரே - தானாகத் தான் அங்கு சென்றிருக்கிறார். அவரைக் கொல்வது தான்
உத்தேசம் என்றால், அவர்கள் இந்த வழியைத் தேடியிருக்க மாட்டார்கள். உயர் அதிகாரிகள் முன்னணியிலிருந்து சண்டையிடுவார்கள் என்று எவருமே எண்ணிப்பார்த்திருக்க முடியாது. அவரது பதவியின் தன்மையைக் கொண்டு பார்த்தால், அவர் பின்னால் நின்று கொண்டு, தனது கான்ஸ்டபிள்களை முன் அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக முன்னணிக்குச் சென்று தானே தீவிரவாதிகளை எதிர் கொண்டிருக்கிறார் என்ற பொழுது அவரது தீரம் பிரமிக்க வைக்கிறது. //


இது போன்று ஒரு உயர் அதிகாரியே துப்பாக்கியை எடுத்து வந்து, தனது படையினருடன் தோளாக தோள் நின்று போரிடுவார் என்று எந்த இயக்கமும் நம்பி திட்டம் தீட்டியிருக்க முடியாது. அதிகாரிகள் பெரும்பாலும் responsible for taking the decision – not for executing it themselves in the field. அவர் முன்னணிக்குச் சென்று யுத்தமிட்டது தீரம் என்றாலும், இன்று இழப்பு நமக்கு தான். இதையே என்றென்றும் அன்புடன் பாலாவும் தனது தளத்தில் தெரிவித்திருக்கிறார்.


சத்தியமார்க்கம் முன்வைத்த தியரி ஒத்துவருமா என்று தெரியவில்லை.


இந்த மாதிரி ஒருநிலை சார்பான கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிற தளங்களின் கருத்துகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழரங்கம், ராயகரன் எழுதிப் பதிவிட்ட, பம்பாய் பயங்கரவாதம் ஆளும் வர்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கட்டுரை படிக்க வேண்டும்.

// அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும் தான் 'பயங்கரவாதத்தை" உற்பத்தி செய்கின்றது. இந்தப் பூமியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்" எதிர் தாக்குதலாகின்றது. //

பயங்கரவாதத்தின் உற்பத்தி மூலத்தைத் தொட்டிருக்கிறார், இராயகரன்.

// சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்".//

என்று அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பொதுப்படையாகவே சொன்னவர்,

// பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். //

என்று இந்த இரு தின யுத்தத்தை இந்து பயங்கரவாதத்தின் எதிர்வினையாகப் பார்க்கிறார். இந்தத் தாக்குதல், இந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பின்வினை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இன்றைய தினத்தில் நடந்த பம்பாய் தாக்குதல் குறி வைத்தது – அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இஸ்ரேல் மக்கள். அயோத்தி சம்பவத்திற்குப் பின், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தாக்குதல் தொடுத்தவர்கள் – இப்படி ஒரு selected targetஐ குறிவைத்து இயங்கியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு இந்திய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் குறியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நிகழ்ந்தது – குறி வைக்கப்பட்டவர்களில் எவரும் இந்தியர்களாக இல்லை.

இறந்து போனவர்களில் இந்தியர்கள் இருக்கக்கூடும் – அது, crossfireல் மாட்டிக்கொண்டவர்கள் தான். குறிப்பாக ஊழியர்கள். தாஜ் ஊழியர்கள்.

அதனால், இந்த மும்பை தாக்குதல், வெறுப்படைந்த இந்திய முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் – அதற்கான நியாயம் அவர்களுக்கிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை மறுக்கிறேன்.

மேலும் ஊடக உலகைப் பற்றிய குறைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை ஒரு வன்முறையாகச் செய்கிறார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தே திணிப்புகளே – செய்திகளை தங்கள் நலனுக்குகந்ததாக மாற்றிப் பேசவைப்பதே – ஊடக வன்முறைகளாக மாறுகிறது. ஆனால், இங்கு எந்த சித்தாந்த திணிப்புமின்றி, காட்சிகளை அது நிகழும் வகையில் அப்படியே காட்டுவது என்பதை வன்முறையாகப் பார்க்க முடியாது. அதிலும், சில காட்சிகளை அவர்களே தவிர்த்துவிட்டார்கள் என்பதுவும் தெரிய வந்தது. இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் எந்த ஒரு ஊடகமும், எந்த ஒரு முடிவையும் செய்யாமல், நாலு ‘எக்ஸ்பர்ட்டுகளைக் கூப்பிட்டு’ தாங்கள் கண்டுபிடித்த முடிவைச் சொல்லி, கருத்து கேட்காமல் இருந்ததே ஒரு ஆறுதல்.

அதை பின்னர் செய்யக்கூடும். ஆனால், அதை செய்யாது நிகழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதை குறை கூற முடியாது. இது குறித்து நான் எழுதியது:


// மேலும் ஒரு முழு இரவு முழுக்கவும் விழித்திருந்து - 12:30 லிருந்த்து காலை 10:00 மணி வரைக்கும் தொடர்ந்து பார்ர்த்த பொழுது - ஒரே ஒரு வார்த்தை கூட 'islamic terrorist' என்ற வார்த்தைப் பேசப்படவே இல்லை. முதன் முதலாக ஒரு செய்தியை அச்சத்துடனும், பதட்டத்துடனும் பாராமல், ஒரூ இந்தியன் என்ற உணர்வுடன் பார்க்க வைத்தது. இப்பொழுது கூட, terrorist என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இனி, இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை -மாறாக அவர்களை கெட்டவன் என்ற நோக்கை மட்டும் கொண்டே பார்க்க வேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கின்றனர்ர். முதன்முதலாக, அத்வானி அரசைக் குறை கூறாமல், மன்மோகன்சிங் குடன் மும்பை வருவதற்கு தயாராகியிருக்கிறார். தீவிரவாதத்திற்கு எதிராக, ஒருமித்த குரல்
ஒன்றாக எழுந்திருக்கிறது. அதைவரவேற்கத் தயாராகுங்கள்.//


தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.


பின் எவர் தான் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை trial by media ஆவாக எவரும் செய்ய வேண்டியதில்லை. அதற்கான துறைகள் விசாரித்து, முறைப்படியான தகவல்களைக் கொடுக்கட்டும் என்று பொறுத்திருக்கத் தான் வேண்டும். இல்லையென்றால், ஊடக வன்முறைகள் என்று புலம்பும் பிளாக்கர்கள், தாங்கள் செய்யும் ‘வன்முறையைக்’ காண கண்ணில்லாதவர்களாகிவிடுவார்கள்.

Trial by media என்பது போய் trial by bloggers என்ற தளத்திற்குப் போய்விடுவோம்
அனைவரும், தீவிரவாதம் குறித்த பார்வையில் ஒரு மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் – including trial by blogs.

Sunday, November 23, 2008

தமிழீழ அங்கீகார மாநாடு

வருகின்ற டிசம்பர் 1, அன்று 'தமிழீழ அங்கீகார மாநாடு' ஒன்றை விடுதலை சிறுத்தைகளின் இளஞ்சிறுத்தைகள் நடத்துகின்றனர். அதில் அனைவரும் பங்கேற்று ஆதரவு குரல் கொடுங்கள்.

நவம்பர் 26ஆந் தேதியன்று, மதுரையில் நடத்துவதாக இருந்தார்கள். ஆனால், சட்டக் கல்லூரியின் பிரச்சினையால், மதுரையில் சிறுத்தைகள் கூடினால் தென் மாவட்டங்கள் சூடேறும் - நீங்கள் சென்னைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்ற காவல் துறையினரின் வேண்டுகோளின் படி, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

அனைவரையும் அழைத்துள்ளனர்.

ஒரு தேசமாக அங்கீகாரம் கிடைப்பது ஒன்று தான் மீதம் என்ற சூழலில், அரசினால் அந்த அங்கீகாரம் கிடைக்காது என்ற பொழுதில், மக்களாக அந்த அங்கீகாரம் வழங்க, முனைந்திருக்கின்றனர். ஈழமக்களின் போராட்டங்களின் பொழுது, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பலரும் - தலைவர்கள் உட்பட கலந்து கொள்ளும் இந்த விழாவில், அனைவரும் கலந்து கொள்வது, சிறப்பானதாக இருக்கும்.

Saturday, November 22, 2008

மைக்கெல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்தார்.

பெப்ருவரி 25, 2007 அன்று நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைகிறார். அதற்கான காலம் கனிந்து வருகிறேன் என்று.

இன்றைய செய்தி - ஜாக்ஸன் இணைந்தே விட்டார் என்று.

Good Luck and Welcome Jackson.

வணக்கம், மைக்கெல் ஜாக்ஸன், வாருங்கள்.





மிக்காயீல் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு அவர் இஸ்லாத்தில் இணைந்த செய்தியும், கடந்த வருடம் நான் எழுதிய பதிவின் மீள் பிரசுரமும் இதோ கீழே::



Troubled pop star Michael Jackson has converted to Islam and changed his name to Mikaeel.

Jackson, 50, was dressed in the Islamic garb as he pledged his allegiance to the Koran at a friend's house in Los Angeles. He sat on the floor as an Imam was called to officiate the ceremony.

Jackson, who was raised a Jehovah's Witness, decided to convert after discussing religion with a music producer and songwriter on his new album - both of them converts to Islam.

"They began talking to him about their beliefs and how they thought they had become better people after they converted. Michael soon began warming to the idea. An Imam was summoned, and Michael went through the shahada, which is the Muslim declaration of belief," a source was quoted as saying.

Mikaeel is the name of one of Allah's angels.

கடந்த வருடம் நான் எழுதிய பதிவு இது தான்.


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்

Sunday, December 30, 2007

பே நசீரின் மரணம் இட்டுச் செல்லும் பாதைகள்....


"உங்களுக்குப் பாக்கிஸ்தான் செல்வதற்கு அச்சம் இல்லையா?"

" இல்லை "

"உங்கள் உயிருக்கு ஆபத்து என்று தோன்றவில்லையா?"

"இல்லை. வாழ்வதும், இறப்பதுவும் இறைவனின் கையில் இருக்கிறது. இறைவன் என்னை அழைக்கும் வரை, இறப்பைப் பற்றிய அச்சமின்றி இருப்பேன்"

தீர்க்கதரிசனம் என்பது இதுதானா?

NDTVயின் பர்கா தத் பேநசீரின் உரையாடிய பொழுது, பேநசீர் இவ்வாறு குறிப்பிட்டார். "என் சொந்த மண்ணிற்குத் திரும்ப, நாட்களை, மணிகளை, நிமிடங்களை, நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தேன்" என்று பூரிப்புடன் சொன்னார். அவர் முகத்தில் எப்போதுமில்லாத அசாத்திய நம்பிக்கை.

ஆனால், இவை எவற்றையும் இறைவன் கேட்கவில்லை போலிருக்கிறது. அழைத்துக் கொண்டான். அவ்வாறு சொல்லி நடந்த விஷயங்களை ஜீரணித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால், இந்த மரணத்தை செரித்துக் கொண்டால் போதுமா? பாக்கிஸ்தானில் நிகழ்பவை இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும். தீவிரவாதிகளை எதிர்த்துப் போர் புரிய இந்தியா, தனது ஒத்துழைப்பை அமெரிக்காவுக்கு நல்கிய பொழுது, அதை அமெரிக்கா நிராகரித்தது. பாக்கிஸ்தானையே தேர்ந்தெடுத்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை முஷரஃப் ஒழித்து விட்டாரா?

முஷரஃப் தீவிரவாதிகளை ஒடுக்கி விட்டாரா என்ற கேள்விக்கு, உதடு பிதுக்கி இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் தீவிரவாதிகள் பற்றிய புரிதலே இல்லையோ என நினைக்கும் படியாகத் தான் செயல்பாடுகள் இருக்கின்றன. அமெரிக்காவின் வற்புறுத்தலுக்காகவே, தீவிரவாத எதிர்ப்பைக் கடைபிடிக்கிறார் போலும் தோன்றுகிறது. பே நசீர் புட்டோவின் மரணத்துக்குக் கூட ஒருவிதத்தில் அவர் காரணமாகி விட்டார் என்றே கூற வேண்டும்.


அமெரிக்காவின் தொடர்பில் இருக்கும் எவரையும் மலைக்குகைகளில் ஒளிந்து வாழும் தீவிரவாதிகள் மன்னிக்கத் தயாரக இல்லை. பேநசீர் பாக்கிஸ்தான் திரும்பும் முன், முஷ்ரஃப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் - அதிகார பகிர்வு ஒப்பந்தம் மிகத் தவறானது. இந்த ஒப்பந்தத்தை முன்னின்று நிகழ்த்தியது அமெரிக்கா என்பது வெளிப்படையாகத் தெரியும் அனைவருக்கும். அப்படி இருக்கையில், வெகு அலட்சியமாக அவரது பாதுகாப்பைக் கையாண்டது மிகத் தவறானது.

இம்ரான் கான் பேட்டியை NDTVயில் காண நேர்ந்தது. அப்பொழுது அவர் சொன்ன சிலவை சிந்திக்க உகந்தது. எல்லாவற்றிற்கும் அல்கொய்தா பெயரையே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதற்கான நீதிவிசாரணை நடத்தப்பட்டு, அவர்களது குற்றங்கள் நிரூபிக்கப்படவேண்டும் என்றார். முடக்கிப்போடப்பட்ட நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

பேநசீரின் மரணத்திற்கு மெஹ்சூத் என்ற தாலிபான் தலைவர் தான் காரணம் என்று ஒரு டேப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உடனே அல்கொய்தா அதை மறுத்திருக்கிறது. தன்னுடைய செயல்களுக்கு எப்போதுமே உரிமை கொண்டாடும் ஒரு இயக்கம் வெளிப்படையாக மறுத்தது - புட்டோவின் கொலையில் புதிய சந்தேகங்களை உருவாக்குகிறது. குண்டு பாய்ந்து இறக்கவில்லை. வண்டியின் மேற்கூரையில் தலை மோதிய அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்ற தகவலை இப்பொழுது கூறுகிறார்கள். பேநசீரின் உதவியாளர் அதை மறுத்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை. குடும்பத்தினரின் வேண்டுகோள் ஏற்று செய்யவில்லை என்கிறார்கள். ஆக, தீவிரவாத சதி என்பது பெரும் குழப்பத்திற்குத் தான் இட்டுச் செல்கிறது. அரச சதியாகக் கூட இருக்கலாம் என்ற ஊகமும் பலரால் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவரின் வாகனம் அருகே அத்தனை அநாயசமாக ஒருவரால் நெருங்க முடிகிறது என்பதே எத்தனை தீவிரமாக தீவிரவாதம் எதிர்க்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும். பின் எங்கிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படுகிறது என்ற கோஷத்தை நம்புவது?

தீவிரவாதம் என்பது ஒரு ideology. அதை ஒழிக்க வழமையான ஆய்தங்கள் ஏந்திய ராணுவத்தால் முடியாது. இது உலகெங்கிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போர் புரிந்த அரசுகளின் அனுபவமாக இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தை மற்றொரு சித்தாந்தத்தின் மூலமாகத் தான் எதிர்க்க முடியுமே தவிர, ஆய்தப் பலப்பிரயோகம் அடக்கி விடாது. ஆகையால் ஆய்த வலிமை கொண்டு, தீவிரவாதத்தை எதிர் நோக்குவதை விட, தீவிரவாதிகளின் இயங்குதளமாக அமையும் மக்கள் வாழுமிடங்களை அணுகி, அவர்களை வென்றெடுப்பதின் மூலமே தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

ராணுவ ஆக்கிரமிப்பால், எல்லா இடங்களையும் நிரப்பிவிட்டால், தீவிரவாதிகள் இருக்க இடமில்லாமல் ஓடி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புத் தான் அரசு எந்திரங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறது. எந்திரத் தனமாக செயல்படும் அரசுகள் இருக்கும் வரை, மக்கள் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக் கிடக்க நேரிடும். தங்களுடைய தேவைகளை மக்களின் அதிருப்தியில் எளிதாக ஊடுருவச் செய்து, தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள தீவிரவாதிகளால் எளிதாக முடிகிறது.

முதலில் தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகத் தான் அடையாளம் காணவேண்டுமே தவிர, அவர்களை மக்களின் மதத்தோடு இணைத்துப் பேசி, மக்களை அன்னியப்படுத்தி, தீவிரவாதிகளை நோக்கி நெட்டித் தள்ள முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமானால், அத்தகைய செயல்களைச் செய்யலாம். ஆனால், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் அதை அவ்வாறு செய்ய முடியாது. அது தேவையற்ற மூர்க்கத் தனத்தில் தான் கொண்டு போய்விடும். மக்களின் எந்த ஒரு கலாச்சார கூறுகளோடும் தீவிரவாதிகளை இணைத்துப் பேசுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பின் இயங்கக் கூடிய ஒரு நிர்வாகத்தை மக்களுக்கு அரசு தரவேண்டும். வடமகாணங்களில், இன்றளவும் அரசு என்று ஒன்றில்லாமல், பழங்குடி இனத்தலைவர்கள் தயவில் தான் அரசு இயங்குகிறது. இந்தத் தலைவர்களை, மதத்தின் பெயரால், தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது தீவிரவாதிகளுக்கொன்றும் பெரிய சித்து வேலை கிடையாது. அரசு நிர்வாகம் நடக்க வேண்டுமென்றால், அங்கு முதலில் மக்கள் பங்குபெறக் கூடிய ஆட்சி தேவை. முறையான தேர்தல்கள் மூலம் மக்களை பங்கு பெற வைக்க முடியும்.

இதெல்லாம் இல்லாமல், முஷ்ரஃப் தன் ராணுவத்தின் பலத்தையும், அமெரிக்காவின் ஆய்த சப்ளையையும் மனதில் கொண்டு, தீவிரவாதிகளுடன் போர் தொடுத்தால், நாட்டை அழிவுப் பாதையில் தான் நடத்திச் செல்ல முடியுமே தவிர, நேர்வழியில் அல்ல. பாக்கிஸ்தானில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால், பாக்கிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்பட்டு, அவர்கள் முழுமனதுடன் தீவிரவாதத்தை மக்கள் ஆதரவுடன் எதிர்த்துப் போரிட வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வெட்டி சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு மனப்பூர்வமாக போரிட முன்வர வேண்டும்.

பாக்கிஸ்தான், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சீரிய சூழ்நிலையில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள, முஷ்ரஃப் உதவ வேண்டும். தன் பதவியைத் துறந்து விட்டு, மக்கள் அரசு அமைய உதவ வேண்டும். முஷரஃபிற்குத் தேவையான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அமையக் கூடிய அரசு செய்ய வேண்டும். அவரின் உயிருக்கும் எந்நேரமும் ஆபத்துகள் விளையக் கூடுமென்பதால், அவரது பாதுகாப்பிற்குப் அமையவிருக்கும் அரசுகள் உத்தரவாதம் தரவேண்டும். அத்துடன் மக்களை அரவணைக்கும் வேலையில் - மக்களை ஒன்றிணைக்கும் வேலையில் அரசு ஈடுபட வேண்டும்.

இல்லையென்றால், பாக்கிஸ்தான் தோற்கும். சிதறிப்போகும். சிதறிப்போகும் பாக்கிஸ்தானால் தான் இந்தியாவுக்கு அதிக ஆபத்துகள் விளையக் கூடும்.

பேநசீரின் மரணம், தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு வலுவான கதவைத் திறந்து வைத்திருக்கிறது. மக்களின் ஆதரவை தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமுகப்படுத்த பாக்கிஸ்தானில் நல்ல சூழ்நிலை நிலவுகிறது.

இதை பயன்படுத்துவார்களா?

Tuesday, July 31, 2007

நர்கீஸின் மகனுக்கு ஆறு வருட தண்டனை.




ஒவ்வொரு நாளும் வரச் சொல்லி, காத்திருக்க வைத்து, பின்னர் திருப்பி அனுப்பி - ஒரு வழியாக சஞ்சய் தத்துக்கு நீதி மன்றங்கள் வழங்கிய torture நிறைவு பெறுகிறது.





எப்பொழுதும் பாதுகாப்பின்மையென்ற அச்ச உணர்விலே வாழ்ந்து வந்தவர், சஞ்சய் தத். நடிகராக தொழிலில் அதீத கவனம் செலுத்திய தந்தை, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் தாய், அதீத பணம், எளிதாகக் கிடைக்கும் போதைவஸ்துகள் என அவருக்கு நிகழ்ந்தவை அனைத்துமே தவறானவை. பின்னர் தந்தை தன் காதல் மனைவியை மீட்க புற்று நோயுடன் ஒரு அதீத போராட்டம் நடத்தி தோல்வியுற்று, தன் மகன் பக்கமாக தன் கவனத்தைத் திருப்பிய பொழுது காலம் மிகக் கடந்து போய்விட்டிருந்தது. போதைப் பொருளின் பிடியிலிருந்து மீட்க மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்குச் சென்று திரும்பியவர் வாழ்வில், மீண்டும் புயல். நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை.




இத்தகைய பாதுகாபின்மை என்ற அச்ச உணர்வு குடைந்து கொண்டே இருந்த பொழுது தான் அவரைத் தவறான வழியில் நடத்தும் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நர்கீஸ் என்ற முஸ்லிம் பெண்ணின் புதல்வனான உனக்கு பாதுகாப்பில்லை என்று தவறான உபதேசங்களுடன், பாதுகாப்புக்காக வைத்துக் கொள் என்று சொல்லி, ஆயுதங்களை வைத்துக் கொள் என்று அவர் தலையில் கட்டி விட்டனர். அந்த ஆய்தங்களால் எந்தப் பாதுகாப்புமில்லை. மாறாக, மனவலிமையும், நேர்மையும் மட்டுமே வலிய ஆயுதங்கள் என்பதை அவரும் விளங்கிக் கொள்ளவில்லை. என்றாலும் மும்பை வெடிகுண்டு வழக்கும், அதிலிருந்து மகனைக் காப்பாற்ற ஒரு தந்தையாக சுனில் தத் நடத்திய போராட்டங்களும், பின்னர் தந்தையின் மரணமும், இடையில் கொஞ்ச நாள் சிறை வாழ்க்கையும் அவரை நிறையவே மாற்றி இருந்தன. சிறை தண்டனை என்பது ஒரு மனிதனை திருத்தவும் நல்வழிப்படுத்தவும் தான் என்றால், அவர் அந்த நல்வழிக்கு வந்து விட்டவர் தான்.




தீர்ப்பைப் பற்றிய வானொலி செய்தியில் குறிப்பிட்ட சில வரிகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. மும்பை குண்டு வெடிப்பின் காரணகர்த்தா அனீஸ் இப்ராஹீமுடன் நட்பாக இருந்தார், அனீஸின் அண்ணன் தாவூத் இப்ராஹீமை துபாயில் சந்தித்துப் பேசினார், அத்துடன் ஆயுதங்கள் வைத்திருந்தார் - இத்தகைய காரணங்களுக்காக, அவருக்கு சிறை தண்டனை விதிக்கிறேனென்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.




ஒருவரை நண்பராகக் கொண்டு, பின்னர் அந்த நண்பர் தீயவர் என்றால், அவரிடம் நட்பாக இருந்தவர்கள் அனைவரும் தீயவர் - தண்டிக்கப்பட வேண்டியவர் என நீதி மன்றங்கள் கருதத் தொடங்கினால், நாம் என்ன செய்வது. நம்முடன் நட்புடன் இருப்பவர்களைப் பற்றி துப்பறியும் நிறுவனங்கள் மூலம் ஆய்வறிக்கைப் பெற்று, பின்னர் தான் தீர்மானிக்க வேண்டுமா? அது எல்லோருக்கும் இயலுமா? ஒருவரை - சந்திப்பது ஒன்று மட்டுமே குற்றம் புரிந்தவராகக் கருத இடம் கொடுக்கும் என்றால், தாவூத்தை எத்தனை எத்தனை மும்பை திரையுலகப் பிரமுகர்கள் சந்தித்திருக்கின்றனர்? எத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அவரை சந்தித்திருக்கின்றனர்? அவரிடம் கொடை பெற்றிருக்கின்றனர் என்ற கணக்கை அரசும், காவல்துறையும் நீதிமன்றங்களும், அரசும் ஆராயுமா? மாட்டிக் கொண்டவனுக்குத் தர்ம அடி போடுகிறார்கள் அவ்வளவு தான்?




சஞ்சய்யின் தாயார் - நர்கீஸ் தத் நடித்த ஆவாரா படத்தின் இறுதிக் காட்சியில், ராஜ்கபூரைப் பார்த்து சொல்வார் - இந்த சிறை தண்டனை, இன்னும் உன்னை, நல்லவனாக மாற்றும். ஆகையால் இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள் என்று. திரை உலகையும் தாண்டி, ராஜ் கபூரை நேசித்தவர், காதலித்தவர். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், அன்று காதலனிடம் பேசிய அந்த 'டயாலாக்கை' மகனிடமும் ஆத்மார்த்தமாகச் சொல்லி இருப்பார் - 'இன்னமும் நல்லவனாக மாறு' என்று.




Sanjay, Don't let your heart sink. No one has got any grudge against you. Come back as a man, the son of Nargis.




Friday, April 13, 2007

மன்னிக்கலாமா ராமனை?

இந்த வார தமிழ் மணமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது - ராமன் போன்ற உத்தமன் தான் என்ற தோல் போர்த்திய ஒரு வலைப்பதிவர் செய்த அயோக்கியத்தனத்தால். He proved that the intellectual giants of the byegone era are fast turning into pygmies.

ஒரு பதிவில் மன்னிப்பு கேட்டு, குரு என வணங்கி விட்டு, பின்னர் தனிமையில் அமர்ந்து கொண்டு, அந்த குரு எழுதிய மாதிரி ஆபாசங்களை அரங்கேற்றிய அந்த வலைப்பதிவரின் வக்கிரத்தைத் தெரிந்து கொண்டும் அவருக்கு மேலும் ஒரு மன்னிப்பை வழங்கி இருக்கிறார்கள் அமுக அன்பர்கள்.

பெருந்தன்மையானவர்கள்.

ஆனால் இந்த வலைப்பதிவரின் மோசடித்தனத்தால் பாதிக்கப்பட்ட, மனம் வருத்தப்பட்ட மற்ற பல வலைத் தள அன்பர்கள் மன்னித்து விட்டார்களா? இல்லை அமுக அவர்களையெல்லாம் மறந்து விட்டார்களா?

இந்த நபர் தான் சல்மா அயூப் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது ஒரு இஸ்லாமியப் பெண் தன்னை ஒரு சீர்திருத்தவாதியாகவும், இஸ்லாத்தைத் தட்டி கேட்பதாகவும் பொய்யாகவும், புனைவாகவும் ஒளிந்திருந்து விமர்சனங்களை எழுப்பி இஸ்லாமிய பதிவர்களின் மன உளைச்சலுக்குக் காரணமானவர். அப்பொழுதே இவ்வாறு எழுதுபவர் ஒரு உண்மையான இஸ்லாமிய பெண் அல்ல என்று உறுதியாகத் தெரிந்ததால், அந்த போலியின் வலைத்தளத்தில் எந்தப் பின்னூட்டங்களும் நான் இடவில்லை. ஆனால், அந்தப் போலிக்கும் மாய்ந்து மாய்ந்து விளக்கம் எழுதிக் கொண்டிருந்த அன்பர்களும் நண்பர்களும் உண்டு. மற்றும் அந்தப் போலியை உண்மை என நம்பி, இஸ்லாம் இப்படித்தான் என தங்கள் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொண்ட நண்பர்களால் இஸ்லாமியர்கள் அடைந்த வருத்தத்திற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்பொழுது அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் - இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்தவர்களின் யோக்கியதைப் பற்றி.

உண்மையான விமர்சனங்கள் வேறு - காழ்ப்புணர்ச்சியில் எழுப்பப்பெறும் விமர்சனங்கள் வேறு என்பது.

தங்கள் கொள்கையில் - நம்பிக்கையில் - எத்தனை ஏளனத்திற்கும், இடர்பாட்டிற்கும் ஆளானாலும் மாறாது உறுதியாக இருப்போம் என்று நிருவிக் காட்டிய இஸ்லாமிய வலைப்பதிவர்களைக் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் - அடிப்படைவாதிகள் என்று.

இப்பொழுது அனைத்து வலைப்பதிவர்களின் மனசாட்சியின் முன் நான் வைக்கும் கேள்வி:::

சொல்லுங்கள்,

யார் அடிப்படைவாதி என்று?

தங்கள் மதத்தைப் பற்றிய செய்திகளை மட்டும் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டு, நட்புடன் எழுதிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துவிட்டு, பின்னர் அவர்கள் பதில் எழுதத் தொடங்கியதும், அய்யோ, அம்மா இவன் அடிப்படைவாதி என புலம்புவது எந்த வகையில் நியாயம்?

இந்த நபர் குறித்து பல செய்திகளும் வெளி வருகின்றன.

இவர் எழுதிய போலி பெயர்களில் மேலும் சில

ஆரோக்கியம்

ஏமாறாதவன்

என்ற பெயர்களிலும் எழுதியவர் இவர் என சொல்லும் பொழுது -

இவரால் நான் தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

'எல்லா அய்யன்களையும் போட்டுத் தள்ள வேண்டும்...' என்ற அளவில் கூட வன்முறைகளையும் பிற இனத்தவரையும் தாக்குதல் கூடாது என்று எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

'எந்த பிராமணனும் என்னை இம்சிக்கவில்லை ' என ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டும், என் மனசாட்சியைத் தொட்டு, தைர்யமாக என வலைப்பதிவில் எழுதியவன். அந்த வரிகளை எழுதி முடித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, அந்த வரிகளை சோதனை செய்யும் முயற்சியாக இந்த நபர் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

ஏமாறதவன் என்ற பெயரில் எழுதிய இந்த நபர் - மரியாதை இனியும் அவசியமோ? - இவன் ஏமாறதவன் என்ற பெயரில் எனக்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - நான் அதை
பிரசுரிக்கவில்லை. அதிலே அவன் எழுதிய வரிகள் - 'நண்பன் ஷாஜி ஐயா - உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்' என்னுடைய ஆன்மீகத்தைப் பற்றி விமர்சிக்க இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது?


நான் பேச விரும்பும் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள இவனால் முடியுமா?

குரானில் ஆபாசம் நிறைந்திருக்கிறது என எழுதிய நாய் இவன் தானே? Secret, ஆடை என்று குழப்பிக் கொண்டு, இப்னு ஹம்துனை வம்புக்கு இழுத்தவன். பின்னர், அபூமுஹை விளக்கம் எழுதினார் - நான் ஆறு குரான் மொழி பெயர்ப்புகளைக் கொண்டு, அவற்றிற்கான விளக்கத்தைக் கொடுத்த பொழுது, புரிந்து கொண்டதற்காகவும், தவறாக எழுதியதற்காகவும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத இந்த நாய் - என் தளத்திற்கு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - எனக்கு ஆன்மீக அறிவு கிடையாது என்று. உண்மையான விளக்கம் வேண்டி எழுதிய வலைப்பதிவராக இருந்திருந்தால், அந்த விளக்கங்களுக்காக நன்றி கூறி இருக்க வேண்டும். ஆனால், அறிவுகளில் ஒன்று குறைவாக இருக்கும் இவனிடத்தில் நாகரீகம் காட்ட வேண்டுமா?

இவ்வாறு தவறு செய்ததை ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டி விளக்கம் கொடுத்தும், அதைக் கண்டு கொள்ளாமல், மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிக் கேவலமாக உண்மமக்குப் புறம்பாக பேசவும் எழுதவும் செய்த இவனுக்கு அமுக நண்பர்கள் மன்னிப்பு வழங்கியதை கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலவில்லை.

மன்னிப்பு என்ற வார்த்தையின் மகிமையை அறிந்தவனிடத்தில் தான் அதை வழங்க வேண்டுமே தவிர, அதன் மாண்புகளைப் பற்றித் தெரியாத இவனுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

22ஆம் தேதிய வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு போக வேண்டும் - அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த நாயும் கலந்து கொள்ளும் என்று தெரியவந்த பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது என்னால் இயலாது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால்,

- குரானில் ஆபாசம் மலிந்து இருக்கிறது என்ற பொய்யான செய்தியைப் பரப்பிய இவனது முகத்தில் குறைந்தபட்சம் காரி உமிழாமல் நான் திரும்பினால்,

- இஸ்லாமிய அடிப்படை வாதி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் எட்டு மாதங்கள் வலைப்பதிவே எழுதுவதை விட்டு அஞ்ஞான வாதம் புரிந்த என் மன வேதனைகளுக்காக இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

- இஸ்லாமிய வலைப்பதிவர்களை தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டுமென்று முனைந்து செயல்பட்டவனை இவன் என்று தெரிந்து கொண்டும் இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

அது என்னுள்ளே ஏற்படுத்தும் குற்ற உணர்விற்கு யார் பெறுப்பேற்பது?

அமுக நண்பர்கள் மன்னித்திருக்கலாம்.

ஆனால், இஸ்லாமிய வலைப்பதிவர்களே நீங்கள் சொல்லுங்கள் -

இவன் மன்னிக்கப்படவேண்டுமா?

இந்த விடுமுறையில், சென்னைக்கு வரும்பொழுது கண்டிப்பாக இது குறித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சந்தித்து உரையாடுவேன். காவல்துறைக்கும், வழக்காடு மன்றங்களுக்கும் இவனை இழுத்துச் செல்வதன் சாத்தியதைப் பற்றிக் கண்டிப்பாக ஆய்வோம்.

மேலும்

உடனடியாக இஸ்லாமிய வலைப்பதிவர்கள் இவனது அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பி,

இவன் செய்த ஈனச்செய்கைகளைக் குறிப்பிட்டு, மத நல்லிணக்கத்திற்கு தெரிந்தே வேட்டு வைக்கும் இவன் போன்ற நபர்களுக்கு தொடர்ந்து உங்கள் நிறுவனத்தில் பணி கொடுத்து, சம்பளம் கொடுத்து ஆதரிக்க வேண்டுமா ?

என்ற கேள்வியுடன் மின்னஞ்சல் அனுப்பலாமா? இது குறித்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எல்லோருக்கும் சம்மதமென்றால், அதை செய்யலாம்.

இது குறித்து, சென்னை வரும் பொழுது சந்திக்க விரும்பும் வலைப்பதிவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் தனி மடல் மூலமாக.

Friday, March 16, 2007

வில்லங்கத்தில் விக்கிபீடியா......

மிக சமீபத்தில் படித்த செய்தி - பல பல்கலைக் கழகங்கள், விக்கிபீடியா தரும் தகவல்களை ஆதாரப் பூர்வமானது என ஏற்க மறுத்து விட்டன. அவற்றை தகவல் அறிந்து கொள்ள வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அவை மட்டுமே ஆதாரபூர்வமானவையாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்றன.

ஒரு சுதந்திரமான தகவல் மையம் - யார் வேண்டுமானாலும் தகவல் தரலாம் - மாற்றலாம் - மறுபரீசீலனைக்கு உட்படுத்தலாம் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட விக்கிபீடியாவின் தகவல் மையத்தைக் கண்காணித்து திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களில் பலர் - amateurs.

12,999 நபர்கள், நீங்கள் தரும் தகவலை உடனுக்குடன் கேள்விக்குட்படுத்துகிறார்கள், விவாதிக்கிறார்கள், சீர்திருத்துகிறார்கள் என்று சொல்லப்படும் இந்த சீர்திருத்துநர்களின் பின்னணி என்ன?

வேலை வெட்டி அற்றவர்கள் தான். இணையத்தில் பலமணி நேரம் செலவழிக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே இந்த வெட்டுதல் ஒட்டுதல் தொழிலில் இறங்க முடிகிறது. இந்த வெட்டி, ஒட்டும் பணி செய்யும் நபர்களின் கல்வித் தகுதி என்ன? யாருக்கும் தெரியாது!!!

இந்த வெட்டி ஒட்டும் வேலையைச் செய்தவர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்ட. ஒருவர் மோசடியாளர் என சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. ESSJay என்று தன்னை சொல்லிக்
கொண்டவர், ஒரு தனியார் பலகலைக்கழகத்தில் தான் ஒரு பேராசிரியர் என்றும், கிறித்துவ மதத்தின் சட்ட திட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால், அவருடைய உண்மையான தகுதி - அவர் பள்ளியைத் தாண்டதவர். உண்மையான பெயர் ரியான் ஜோர்டான். இவர் மிகுந்த தகுதி வாய்ந்தவர் என கருதி, ஜிம்மி வேல்ஸ் 'விக்கிபீடியா நிறுவனர்' இவருக்கு தன் மற்றைய நிறுவனத்தில் முழுநேர பணி கொடுத்திருக்கிறார்.

முதலில், ஜிம்மி வேல்ஸ் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை என்றாலும், பின்னர் தொடர்ந்து வந்த புகார்களினால், அவரை நீக்கிவிட்டார். தெரிந்த ஒருவரே இப்படி என்றால், இன்னும் தெரியாதவர்களின் தகுதி என்ன என்பதை யாராலும் சொல்ல முடியாது.

மேலும் யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்று கொடுத்த சுதந்திரத்தை மக்கள் என்ன செய்தார்கள் - தங்கள் இஷ்டம் போல், விருப்பம் போல், தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். ஒரு கட்டத்தில், ப்ளேர், புஷ், மற்றும் சில முக்கியஸ்தர்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்க்க, இறுதியாக விக்கிபீடியா நிறுவனமே தலையிட்டு இவர்களைப் பாதுகாக்க வேண்டியதாயிற்று.

இந்த விக்கிபீடியாவைப் பற்றி. கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவும் கருத்து - Wikipedia lacks accountability, authority, scholarly credentials, accuracy and scrupulousness. இவை தான் விக்கிபீடியாவின் பின்னணி.


சரி, இப்போ இதெல்லாம் எதற்காக?

தருமி அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதில் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன் - அவர் நிறைய விஷயங்களை விக்கிபீடியாவிலிருந்து எடுத்திருந்ததாகக் கூறினார். விக்கிபீடியாவின் தகுதி என்ன என்று தேடிய பொழுது கிடைத்த சங்கதிகள் தான் இவை. 'இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் பரிபூர்ணமானவை' என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால், விக்கி பீடியா இவற்றிலிருந்து முற்றிலும் மாறானவை என்று மிகத் தீவிரமாக நம்புகிறார்கள். அவற்றை ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஆராய்ச்சிகள் மூலம் நிருவப்பட்ட அறிவியலை வேண்டுமானால் இத்தளத்தில் வாசிக்கலாம்.

ஆனால், மத ஆராய்ச்சிகளை இத்தகைய கத்துக்குட்டிகளிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. விக்கிபீடியா மத, தத்துவ ஆராய்ச்சி நூல்களுக்குத் தகுந்த நூல் அல்ல.

விரிவான செய்திகளுக்கு இங்கே படியுங்கள்;

மேலும் ஒன்று

(இந்த ஆதாரங்களையெல்லாம் புறக்கணித்தாலும், தருமி எழுப்பும் கேள்விகளை ஏற்றுப் பதில் சொல்ல முனைகிறேன் - வரும் பதிவுகளில்)

Wednesday, March 07, 2007

மாங்கா மடையர்கள்.....

எரியும் புத்தகக் கடைவீதி.

ஒரு இனத்தை அழிக்க, ஆதி காலம் தொட்டே இருந்து வரும் வழக்கம்- அறிவைத் தேடும் வழிமுறைகளை ஒழித்து விடுவது. அதைத் தான் இன்று ஈராக்கில் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். இத்தனை காலமும், இன அழிப்பிற்காக போராடிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது, ஒரு புத்தகங்களை விற்கும், நூலகங்கள் நிறைந்த ஒரு கடை வீதியை தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.

முத்தனபி தெரு என்று சொல்லப்படும் அந்தக் கடை வீதியின் வயது ஆயிரம் வருடங்களுக்கு மேல். 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞரின் ஞாபகமாக அந்தத் தெருவிற்கு முத்தனபி என்று பெயர் வைத்து, அந்தத் தெரு முழுவதும், புத்தகங்கள் விற்பனைக்கும், நூலக வாசிப்புக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

அறிவைக் கொண்டாடிய முத்தனபி தெரு

அந்தத் தெருவில், இலக்கியவாதிகளும், கருத்தாளர்களும் கூடுவார்கள் தினமும். பல்வேறு வாத பிரதிவாதங்கள் நிகழும். இவைகள் எல்லாம், அமைப்பு ரீதியாக அல்லாமல், நட்பு வட்டங்களாக குழுமம் குழுமாக கூடி விவாதத்திலும், தர்க்கத்திலும் ஈடுபடும் இடமாகவும், புத்தக வாசிப்பும், பகிர்ந்து கொள்ளுதலுமாக, இலக்கிய பூங்காவாக திகழ்ந்த இடம்.

அந்தக் காலத்தைய ப்ளாக்கர்கள் கூடும் இடம்?!!!

கொடுமையான, இனப் போராட்டத்தில் கூட, அந்தத் தெருவை எவரும் தொட்டதில்லை. ஈராக் மக்களின், post Saddam காலகட்டத்தின், நிம்மதியான பாதுகாப்பான இடமாக இந்த தெரு இருந்தது. ஆனால், அங்கு தான் - இனங்கள் தாண்டிய அறிவுசார் வட்டமாக இயங்கிய அங்கு தான், வெடிகுண்டு பயமின்றி, மக்கள் புழங்கிய சமயத்தில் குண்டு வெடித்திருக்கிறார்கள். 26 பேர் மரணம். அதைவிட கொடுமை, பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எரிந்து நாசமாகி விட்டன.

புத்தகங்கள் தேடுதல், வாங்குதல், படித்தல், பாதுகாத்தல், பகிர்தல், என பல உள்ளார்ந்த அனுபவங்களைத் தரும். அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். புத்தகங்களைத் தேடுவது, இறைவனைத் தேடித் திரியும் பயணம் போல இன்பமான அனுபவம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். ஒரு மாதத்தில் ஒரு நாளேனும் ஒரு புத்தகக் கடையினுள் நுழைந்து, புத்தகங்களைத் தேடித்தேடி வாங்காவிடில், மனம் பரபரக்கத் தொடங்கி விடும். தான் தேடி செல்லும் புத்தகங்கள் கிடைக்காவிட்டால், மனம் சோர்ந்து விடுவதும், கிடைத்து விட்டால், மகிழ்ச்சி கொள்வதும் என எப்பொழுதுமே, புத்தகங்களுடன் ஒரு பரவச நிலையிலான உறவு என்னுடையது.

புத்தகங்களின் மீது காதல் கொண்ட அனைவருக்குமே அது ஒரு பரவச நிலையைக் கொடுக்கும். காதலிக்கும் புத்தகங்களை ஒரு போதும் கடன் கொடுக்காது, வைத்துப் பாதுகாப்பது, அப்படியே மீறி எவரேனும் வாசிக்க விரும்பினால், தங்கி இருந்து, வாசித்து போங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்வது - இப்படியான புத்தகக் காதலனுக்கு, ஒரு புத்தகக் கடைத்தெருவே எரிந்து போனது - சில தீவிரவாதிகள் யாரையோ எதிர்ப்பதற்காக, தங்கள் சொந்த நாட்டின் அறிவுதேடலை கொன்று புதைத்து விட்டார்கள் என்ற செய்தியைப் படித்ததும், அடைந்த வேதனையை சொல்லி முடியாது.

இது இப்படியென்றால், இந்தப் புத்தகங்களை வியாபாரம் செய்தவர்கள், கண்ணீர் மல்க கூறிய செய்தி -ஒரு மனிதனுக்கு மிஞ்சிப் போனால், ஒரு நூற்றாண்டு வாழ்வு. ஆனால், இந்தப் புத்தகங்கள் நிரந்தரமான வாழ்வுடையது அல்லவா? எதை கொல்கிறோம் என்று தெரியாமலே, இந்தப் பாவிகள் செய்தது ஈராக்கின் பல தலைமுறைக்கான அறிவு செல்வத்தை அல்லவா அழித்து விட்டார்கள்.

Murder the intellectual capability of the country.

ஆமாம் - தீவிரவாதம் இப்பொழுது புதிய தளத்தில் பயணிக்கிறது. Murder the intellectual capability of the country. சிந்திக்கும் சக்தியை அழித்தொழித்தால், பின்னர் எல்லாம் தங்கள் கைவசப்படும் என்ற திட்டத்துடன் செயல்படத் தொடங்கி விட்டனர். இந்த சித்தாந்தத்தில் செயல்பட்ட சில குழுக்களால், பாதிக்கப்பட்ட சமூகங்கள் எத்தனை. தலைமுறை தலைமுறையாக கல்வி பெற வசதியின்றி, வீழ்ந்து விட்டன. இன்று அதலபாதாளத்தில் விழுந்தவர்களைக் கை தூக்கி விட, எத்தனை முயற்சிக்க வேண்டியதிருக்கிறது.

தீவிரவாதிகளும் இப்பொழுது அதைத் தான் செய்ய முனைந்திருக்கிறார்கள். தங்களைக் குறித்து கேள்வி எழுப்ப சக்தியுள்ளவர்கள் - இந்த intellectuals மாத்திரமே. இவர்களைத் தேடித்தேடி கொன்று கொண்டிருக்க முடியாது. அதனால், அவர்களின் அறிவின் மூலமாகிய புத்தகங்களை அழித்து ஒழித்து விட்டால், இனி என்றுமே சிந்திக்கத் திராணியற்றவர்களாய், தாங்கள் சொல்லும் அடிப்படை வாதத்தை பிடித்துக் கொண்டு, தங்களோடு சேர்ந்து நிற்பார்கள் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது - ஒவ்வொருவரின் கடமையாகும். இது மதம் சார்ந்த விடயமென இன்று ஒதுங்குபவர்கள் - சிந்தனை செய்யும் மனமுடையவர்களுக்கு எதிராக மௌனம் காக்கிறார்கள் - மனித இனத்திற்கெதிராக துரோகமிழைக்கிறார்கள் என்று தான் சொல்வேன்.

Tuesday, March 06, 2007

இது ஒரு பொன்மாலைப் பொழுது - கவிப்பேரரசு வைரமுத்துவுடன்..

கடந்த வெள்ளியன்று, ஒரு திருவிழா நடந்தது துபாயில். காக்கா சலாஹுத்தீன் என்று அழைக்கப்படும் ETA நிறுவனத்தின் தலைவருக்குப் பாராட்டு விழாவும், கவிஞர் வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியம் நூல் வெளியீட்டு விழாவும் இணைந்து ஒரே மேடையில் நடைபெற்றது. இது குறித்து, ஆசிப் ஜாடைமாடையாக ஒரு ஜாலி பதிவு போட்டுவிட்டாலும், இந்த விழா பற்றி, சிறிது விரிவாகப் பேசியே ஆகவேண்டும்.

திரு. சலாஹுத்தீன் அவர்கள் மேடைப்பேச்சாளர் இல்லையென்றாலும், இயல்பாக அன்று பேசியது ஆச்சர்யமூட்டியது. அவர் சுவையாக, விரிவாகப் பேசியதை, கேட்டுக் கொண்டிருந்த, கவிஞர் வைரமுத்து அவர்கள் கூட, பின்னர் தன் பேச்சில் குறிப்பிட்டு, அவர் (சலாஹுத்தீன் அவர்கள்) தன் வாழ்வியல் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் எல்லோரும் பயன் பெறும் வகையில் என்று கேட்டுக் கொண்டார்.

திரு. சலாஹுத்தீன் அவர்களின் பேச்சு, மிக எளிமையாக இருந்தது. இறைவனுக்கு நன்றி கூறினார். சிறு வயதிலே பேரம் பேசி பொருட்களை வாங்கும் அளவிற்கு தன்னை வளர்த்ததைக் குறிப்பிட்டு, தன் பெற்றோர்களுக்கு நன்றி கூறினார். தனக்கு ஒத்துழைத்து, இந்நிறுவனம் செழித்து வளர உதவிய தன் நிறுவன ஊழியர்களுக்கு நன்றி கூறினார்.

ஊழியர்களுக்கு நன்றி கூறும் பொழுது ஒரு சுவையான கதை ஒன்றையும் கூறினார். அது இது தான்.

ஒரு சிறுவன் பள்ளித் தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவன் சொன்னான் பரீட்சையில், பசுமாட்டைப்பற்றி அல்லது தென்னை மரத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்லப்போகிறார்கள் என்று ஒரு தகவல் சொல்லிவிட்டுப் போக, சிறுவன் யோசித்தான் ஒன்றைப் படித்து விடலாம் என்று தென்னை மரத்தைத் தேர்ந்தெடுத்தான். நன்றாகப் படித்து விட்டு, தேர்வுக்குப் போய், வினாத்தாளை வாங்கியவனுக்கு திகில் அடித்துப் போனது. பரீட்சையில் கேட்டிருந்தது - பசுவைப் பற்றி ஒரு கட்டுரை வரைக என்று.

யோசித்தான். பிறகு எழுதத் தொடங்கினான். தென்னை மரம் உயரமாக வளரும். இளநீர் தரும். தேங்காய் தரும். தென்னை மட்டைகள், கூரை வேயப் பயன்படும். என்றெல்லாம் தென்னை புகழ்பாடி, ஒரு முழு கட்டுரையும் எழுதி முடித்து விட்டு, கடைசியாக எழுதினான் - இத்தகைய சிறப்புமிக்க தென்னையில், பசு மாட்டைக் கட்டுவார்கள் என்று.

அதுமாதிரித் தான் நானும் என்றார். ETA என்ற நிறுவனம் 46,000 ஊழியர்களைக் கொண்டது. மத்தியக் கிழக்கு, இந்தியா, தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் தொழில் புரிகிறது. அது தொடாத துறைகளே கிடையாது. இப்படி சிறப்புமிக்க நிறுவனத்தின் தலைவர் மட்டுமே நான் என்றார். தன் நிறுவனத்தின் பெருமை அனைத்தும் தன் ஊழியர்களுக்கு மாத்திரமே என்றதும் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரமாகியது.

பின்னர் மற்ற சம்பிரதாயங்கள் நடந்தேறின. சால்வை போர்த்துதல், கேடயம் வழங்குதல், பதில் பரிசு என்று ஒரே மாற்றி மாற்றி புகழ் பாடி எல்லோரையும் கொஞ்ச நெளிய வைத்தார்கள்.



(படத்தில் இருப்பவர்கள் - இசாக், ஹதீம் அண்ணன், கவிஞர் வைரமுத்து, நண்பன், முத்துகுமரன்)

பின்னர் கருவாச்சி காவியம் வெளியிட, கொஞ்சம் தயார்படுத்திக்க, இடைவெளி ஒன்று கிடைக்க, குழந்தைகள் நடனம் இரண்டை அரங்கேற்றினார்கள். சங்கங்கள் நடத்துவதன் முக்கிய காரண காரியமே நடனம் ஆடுவதற்குத் தானே.!!! நடனம் ஆடுவது குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்பதைத் தவிர, அதில் வேறு கூறுகள் கிடையாது. படைப்புத் திறமையோ, கலை ஆர்வமோ துளியும் இருக்காது. அன்றும் அதே. கவிஞரின், ரண்டக்க ரண்டக்க என்ற பாடல். ஆடிய குழந்தைகள் எல்லோரும் மழலை மாறாதவர்கள்.

முத்தத்தால்
என் வியர்வையெல்லாம்
சுத்தம் செய்யேண்டி

என்றெல்லாம், எழுதப்பட்ட வரிகளுடைய இந்தக் கேவலமான பாடல்களுக்கு இந்த குழந்தைகள் ஆடத் தான் வேண்டுமா, என்று நான் முணுமுணுத்தது கொஞ்சம் சத்தமாகவே ஆகிவிட்டது போலும். முன்வரிசையில் இருந்தவர் திரும்பிப் பார்த்து கொஞ்சம் முறைத்துக் கொண்டார்.

பாடல்கள் முடிந்து புத்தக் வெளியீட்டு விழா ஆரம்பித்தது. கவிஞர் வைரமுத்து அவர்கள் திரைப்பட உலகிற்காக பல சமரசங்களைச் செய்து கொண்டவர், அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட, திரைத்துறை தரும் மயக்கமும், வருவாயும் தான் முக்கியம் என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு. தமிழ் அவருக்கு இரண்டாம் பட்சம் என்பதும் எங்களுக்கு அவர் மீது இருக்கும் ஒரு குறைபாடு. இதையெல்லாம் அவருக்கு யாரும் சொல்லித் தந்தார்களோ அல்லது அவராக ஊகித்துக் கொண்டார்களோ தெரியவில்லை. எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக, அன்று அவர் தமிழை முன்னிலைப் படுத்திப் பேசியது மகிழ்வாக இருந்தது. போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்று, பிறகு உண்மையாக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி எழுந்து வந்தது போன்றதாகி விட்டது.

தன்னுடைய கம்பீரமான குரலில், அன்று தமிழ் பண்பாட்டை முன்நிறுத்த வேண்டும் என்று சொல்லி தொடங்கினார். அதாவது, சலாஹுத்தீன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய சொற்களைப் பேசி முடித்த பின் தான்.

தமிழன் எங்கு சென்றாலும், அந்த மண்ணை வளம் பெறச் செய்வான் - புத்திசாலிகளாக இருப்பான் - சென்ற மண்ணையும் சொந்த மண்ணாக மதித்து உழைப்பான் என்று சொல்லி வந்திருந்தவர்களை உற்சாக மூட்டினார். அவரது நீண்ட உரையை எழுதிக் கொண்டிருக்க முடியாது.

அவர் பேச்சிலிருந்து சில துளிகள்:


#
குழந்தைகளுக்கு நல்ல பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள் ரண்டக்க, ரண்டக்க என்பன போன்ற பாடல்களுக்கு, ஆடச் செய்யாதீர்கள் இது ஒரு சினிமாவின் வியாபார வெற்றிக்காக எழுதப்பட்டது. தாளம் நன்றாக அமைந்திருப்பது ஒன்றே நடனம் அமைப்பதற்குக் காரணமாக்கிவிடக்கூடாது. நல்ல கருத்துள்ள பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். விழா அமைப்பாளர்கள் முகத்தில் அசடு வழிந்தாலும்,. பின்னர் நீங்கள் வருவதற்கு முன் உங்கள் பாடல்களில் சிலவற்றைப் பாடினோம் என்றெல்லாம் சமாதானம் சொல்லி, சீட்டு கொடுத்து அனுப்பினார்கள்.

#
ரஹ்மானைச் சந்தித்து, ரோஜாவிற்குப் பாடல் எழுதிய சூழலை சொன்னார்.

குளிர் அடிக்கும் விதமாக அரவிந்தசாமியும், மதுபாலாவும், காஷ்மீரத்தில் பாட ஒரு பாடல் வேண்டும் என்று மணிரத்தினம் சூழலையெல்லாம் விளக்கிச் சொல்ல, ரஹ்மான் ஒரு ட்யூனைக் கொடுக்க - 30 க்கும் மேலாக நிராகரிக்கப்பட்டு, கடைசியாக தேர்ந்தெடுத்தது அது.

மணிரத்தினம் சொன்ன மூட் - பாட்டில் குளிர் அடிக்க வேண்டும். காஷ்மீரத்தின் குளிரை, மக்கள் பாட்டில் உணர வேண்டும் என்பது தான் சூழல். ரஹ்மானின் ட்யூனில் குளி அடித்தது. கவிஞரும் பாடல் எழுதினார் -

இது காஷ்மீரமா...
வெள்ளைக் கார்காலமா..

என்று ஒரு பாடலை எழுதி முடித்துக் கொடுத்து விட்டுப் போகிறார். பாடல் பாடப்பெறுகிறது. இரவு கவிஞருக்குப் போன் வருகிறது. "சார், இந்தப் பாடல் வேண்டாம்"

"ஏன்?"

"வேணாம்னா, விட்ருங்க சார். வேற பாட்டு எழுதித் தாங்க.."

"சரிங்க. வேண்டாம். ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்லித் தான் ஆகணும்.."

"நான் காஷ்மீரத்தைக் காட்டுகிறேன். பின்னர் பாட்டிலும் இது காஷ்மீரமா எம்று நீங்கள் சொல்லிக் காட்டணுமா? அது தான் காட்சியிலே வந்து விடுகிறது. எல்லோரும் பார்ப்பதை ஏன் சொல்லிக்கிட்டு இருக்கணும்? மேலும், இப்போ காஷ்மீரில் கலவரம். ஒருவேளை அங்கே படப்பிடிப்பு நடத்த முடியவில்லையென்றால், நான் ஊட்டிக்கு கூட மாத்திக் கொள்வேன். அப்போ, ஊட்டியைக் காட்டி, காஷ்மீர்னு சொல்ல முடியாது. அதனால வேணாம்."

பிறகு கவிதை மாறுகிறது. காஷ்மீர் எனக் குறிப்பிடப்படாமலே பாடல் வேறு உருவம் பெறுகிறது. வெற்றியும் பெறுகிறது.

இது போல மேலும் சில பாடல்களைக் குறிப்பிட்டார். ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் உப்புக் கருவாடு உருவான கதையையும் குறிப்பிட்டார். அருமையான ஒரு பாடல் எழுதி முடிந்ததும், ஷங்கர் சொன்னாராம் - பதிமூன்றாவது ரீலிலே, பாடல் வருகிறது. இத்தனை மென்மையாக மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தால், எல்லோரும் எழுந்திருந்து, வெளியில் போய் விடுவார்கள். அப்புறம் என்னுடைய, க்ளைமேக்ஸ் படுத்துடும் சார். வேகமான துடிப்போடு ஓடிக் கொண்டே இருக்கிற மாதிரி ஒரு பாடல் எழுதுங்க என்று சொன்னார். அப்படி மாத்தி அரைமணி நேரத்தில் எழுதிக் கொடுத்த பாட்டு தான் உப்புக் கருவாடு என்ற பாடல் என்றார்.

கடைசியாக குறிப்பிட்டார் - திரைத்துறையில் பல சமரசங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. ஒரு பாடலைக் கவிஞன் மட்டுமே தீர்மானிப்பதில்லை. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களிலிருந்து, இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் அதில் இணைகிறார்கள். எல்லோரையும் திருப்தி படுத்தினால் மட்டுமே ஒரு பாட்டு உருவாக முடியும். இத்தகைய சமரசம் தேவை என தன் பக்கத்து நியாயங்களை எடுத்து வைத்தார்.

சமரசம் செய்து கொள்ளாமலே எழுதவும் முடியும் என்று இயங்கியவர்கள் இருக்கையிலே, இந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ள சிரமமிருக்கிறது. அந்த சமரசங்களை ஈடுகட்டும் விதமாகத் தான் இந்த மாதிரி, திரைத்துறையினரின் தலையீடு இல்லாத, மற்ற படைப்பிலக்கியங்களையும் நான் செய்கிறேன் என்றார்.

கருவாச்சி காவியம் பெரும் வரவேற்பைப் பெற்றது ஆனந்த விகடனில் வந்த பொழுதே. இனி அவருக்கு சமரசம் செய்து தான் கவிஞனாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அதை ஏற்றுக் கொண்டு, இந்த சமரசங்களைக் கைவிட்டு, நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆவலாகவும் இருக்கின்றது.

இறுதியாக, புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் தன் கையொப்பமிட்டுப் புத்தகங்களை வழங்கினார். வெறுமனே கையெழுத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு, புத்தகத்தை எடுத்து வர விருப்பமில்லை. புத்தகத்தில், நண்பன் என்று என்னுடைய கையொப்பமிட்டு, அவரிடமிருந்து, மீண்டும் ஒரு முறை ஒரு சிறிய வாழ்த்துடன் கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டேன் புத்தகத்தை.

Friday, March 02, 2007

டாக்டர். A.P.J.அப்துல் கலாமிற்கு ஒரு வேண்டுகோள்


Dear Sir

Its high time you take rest from this politics.

குழந்தைகளிடம் உங்கள் கனவுகளை விதைக்கும் நல்ல காரியத்தைப் பற்றி பேசுங்கள்.

இந்த அழுத்தம் மிகும் குடியாட்சித் தலைவர் அரசியலை விட்டு விலகுங்கள்.

இரண்டாவது முறையாக உள்ளே நுழையாதீர்கள்.

இந்தியக் குழந்தைகளுக்கு உங்கள் கனவுகள் தேவை.

Its high time you take rest from this politics.

(புகைப்படம் : The Gulf News, 2-03-07)

Tuesday, February 27, 2007

வலைப் பதிவருக்கு சிறைத்தண்டனை


ஆமாம் - வலைப்பதிவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது - எகிப்து நாட்டில், ஒரு பல்கலைக் கழகம் தன் அறிவுறுத்தலையும் மீறி, அந்த மாணவன் செயல்பட்டதாகப் புகார் கொடுத்தது நீதிமன்றத்தில். அது குறித்து விசாரித்த காவல்துறை, பல மாணவர்களைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்தி வைக்க, அவர்களையெல்லாம் விசாரித்த நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது - ஒருவரைத் தவிர.

அப்துல் கரீம் நபில் என்ற அந்த மாணவர் (22 வயது) இஸ்லாத்தையும், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கையும் விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அல் அசார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். அந்தப் பல்கலைக்கழகம் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகும். கரீம் அமெர் என்ற பெயரிடப்பட்ட வலைத்தளத்தில் அவர் தனது பல்கலைக்கழகத்தைப் பற்றி, மோசமாக எழுதியுள்ளார். எகிப்து அதிபரின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார். அவரை பல்கலைக்கழகத்தை விட்டு, கடந்த வருடம் வெளியேற்றி, அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற அந்தப் பல்கலைக்கழகம், அரசை வற்புறுத்தி வந்துள்ளது.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள நீதிமன்றத்தில், ஐந்து நிமிடம் வாசிக்கப்பட்ட அந்த தீர்ப்பில், இஸ்லாத்தின் மீது அவதூறு எழுதியதற்காக முன்று வருடத் தண்டனையும், அதிபரை விமர்சித்ததற்காக, ஒரு வருடமும் ஆக மொத்தம் நான்கு வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டார். சாதாரணமாக இவ்வகை குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் கால அளவு - 9 வருடங்கள். நீதிபதி தனது அறிக்கையை வாசித்த பொழுது, அமைதியாக இருந்த நபில், உடனடியாக சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஹாபிஸ் அபூ ஸாத், எகிப்து மனித உரிமை குழுவின் தலைவர், இந்த தீர்ப்பு மிகக் கடுமையானது என்று கூறியுள்ளார். என்றாலும், எகிப்து, தனது நாட்டின் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வண்ணமாக இந்த வழக்கைக் கருதி செயல்பட்டது என்பதே உண்மை.

ஒருவர் தனது வலைப்பதிவில், தனது சொந்தக் கருத்துகளை எழுதியது குறித்த அதிருப்தி காரணமாக இத்தனை கடுமையான தண்டனை வழங்கியது தவறு என அமெரிக்காவின் செனட் உறுப்பினர் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் எகிப்திய தூதுவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

செய்தி: The Gulf Today - Page 7 News Agency: Associated Press

வளைகுடா நாடுகளில் இருந்து வலைப்பதியும் நண்பர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடந்த முறை துபாய் வலைப்பதிவர்கள் சந்தித்த பொழுது, இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது எழுந்த ஒரு கேள்வி: இங்கு நடக்கும் நிகழ்வுகளை - அறிந்தவற்றை - தெரிந்தவற்றை - பார்த்தவற்றை அப்படியே எழுதலாமா என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்ட பொழுது, அவ்வாறு செய்யாமல் இருப்பதே நலம் என்று தான் முடிவு செய்யப்பட்டது. நான் எழுதும் செய்திகள் பெரும்பாலும், பத்திரிக்கைகளில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பத்திரிக்கைகளில் வரும் செய்திகளே. பல்வேறு பத்திரிக்கைகளை இணையம் மூலம் படிக்க வாய்ப்பிருந்தாலும், அவையெல்லாம் வளைகுடா ஆட்சியாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்படாததினால், அவற்றை மேற்கோள் காட்டி எழுதுவதில்லை. அவை செய்திகளாக மட்டும் தான் வாசிக்கிறேனே தவிர, அதை வைத்துக் கொண்டு, விமர்சனத்தில் இறங்குவதில்லை.

இங்கிருந்து எழுதும் நண்பர்கள் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் - ஆனால், ஆட்சியாளர்களை, அல்லது ஆட்சிமுறையை விமர்சிப்பது அத்தனை நல்லதல்ல.

சரி, சரி, பின்னூட்டங்களைக் கொஞ்சம் பார்த்து எழுதுங்க. அப்புறம் வெளியிடவில்லையென்றால், கருத்து சுதந்திரம் கொடுக்க மாட்டேனென்கிறான் என்று புலம்ப வேண்டாம்.

கருத்து சுதந்திரத்தை விட, கழுத்து சுதந்திரம் மிக முக்கியமல்லவா?

Sunday, February 25, 2007

மைக்கேல் ஜாக்ஸன் முஸ்லிமாகிறார்?


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்.

Tuesday, January 10, 2006

திசைகள் இதழில்....

திசைகள் இதழில் குஷ்பு / சுஹாசினி மற்றும் அவர்களது ஆதரவாளர்களை விமர்சித்து எழுதிய கவிதை இது.

http://www.thisaigal.com/jan06/PoemShajahan.htm

பதிப்பித்த ஆசிரியர் மாலனுக்கும் அவரது குழுவிற்கும் நன்றி.

புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் அருணா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Thursday, December 22, 2005

புதிய தேவாலயம்....

புதிய தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 10மில்லியன் திர்ஹம் செலவில் ஜெபல் அலியில் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த தேவாலயம் தான் கிரீக் ஆர்த்தோடாக்ஸ் பிரிவினரின் முதல் தேவாலாயம் ஆக இருக்கும் - அமீரகத்தில்.

பாரம்பரியமிக்க பைசாண்டைன் மரபு வழக்கப்படி அமையும் இந்த தேவாலயத்திற்கு செய்ண்ட் மேரி கிரீக் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கட்டப்படுவதற்குத் தேவையான நிலத்தை துபாயின் இளவரசரும், அமீரகத்தின் பாதுகாப்பு மந்திரியுமான ஷேக் முகமது அவர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பத்து மில்லியன் திர்ஹம் செலவை ஈடுகட்ட வசூல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்திற்கு துபாயில் இருந்து 400 பேரும், ஷார்ஜாவில் இருந்து 200 பேரும் வருவர். விழாக்காலங்களில் இது இருமடங்காக ஆகலாம்.

இது வரையிலும் இவர்கள் மற்ற தேவாலயங்களில் - குறிப்பாக ஹோலி டிரினிடி தேவாலயத்தில் பிரார்த்தித்து வந்தனர். அந்த தேவாலயத்துக்கு, மற்ற கிறித்துவ மத குழுக்களும் அதிகம் வரத் துவங்கியதால், இட நெருக்கடியுடன், நேர நெருக்கடியும் ஏற்படுவதால், புது ஆலயம் கட்டுவதான திட்டம் செய்து, இப்பொழுது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி கிறித்துவர்களை - ரஷ்யா, சிரியா, கிரீஸ், உக்ரைன், மற்றும் சைப்ரஸ் நாட்டு மக்களால் ஆன இந்த கிறித்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவாலய நடவடிக்கைகள் - அரபு மற்றும் கிரேக்க மொழியில் நடைபெறும்.

அமீரகத்தின் மத நல்லிணக்கத்திற்கும், சகிப்புத் தன்மைக்கும் இது மேலும் ஒரு நல் உதாரணமாகும்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்