"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்
Showing posts with label அரசியல் - தமிழகம். Show all posts
Showing posts with label அரசியல் - தமிழகம். Show all posts

Sunday, November 23, 2008

தமிழீழ அங்கீகார மாநாடு

வருகின்ற டிசம்பர் 1, அன்று 'தமிழீழ அங்கீகார மாநாடு' ஒன்றை விடுதலை சிறுத்தைகளின் இளஞ்சிறுத்தைகள் நடத்துகின்றனர். அதில் அனைவரும் பங்கேற்று ஆதரவு குரல் கொடுங்கள்.

நவம்பர் 26ஆந் தேதியன்று, மதுரையில் நடத்துவதாக இருந்தார்கள். ஆனால், சட்டக் கல்லூரியின் பிரச்சினையால், மதுரையில் சிறுத்தைகள் கூடினால் தென் மாவட்டங்கள் சூடேறும் - நீங்கள் சென்னைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்ற காவல் துறையினரின் வேண்டுகோளின் படி, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

அனைவரையும் அழைத்துள்ளனர்.

ஒரு தேசமாக அங்கீகாரம் கிடைப்பது ஒன்று தான் மீதம் என்ற சூழலில், அரசினால் அந்த அங்கீகாரம் கிடைக்காது என்ற பொழுதில், மக்களாக அந்த அங்கீகாரம் வழங்க, முனைந்திருக்கின்றனர். ஈழமக்களின் போராட்டங்களின் பொழுது, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பலரும் - தலைவர்கள் உட்பட கலந்து கொள்ளும் இந்த விழாவில், அனைவரும் கலந்து கொள்வது, சிறப்பானதாக இருக்கும்.

Friday, November 21, 2008

Is IT people a seperate entity?








IS IT people a seperate entity?

ஒரு தொழிற் சமூகமாக இந்த வகை போராட்டங்களில் ஈடுபட வைப்பது நியாயமா?


தமிழ் என்ற உணர்வு ஒன்றே மட்டும் தான், தமிழீழ ஆதரவிற்குத் துணையாகும்.
IT என்ற பல வகை மனிதர்களையும், அவர்கள் சென்னையில் இயங்குவதால் மட்டுமே,
ஒரு அழகிய டீ சர்ட்டுகளுக்குள் அடைத்து தமிழின உணர்வாளர்களாக மாற்றிக்
காட்ட முனைவதில் அர்த்தமேயில்லை.


இதில் கலந்து கொண்ட அனைவருமே, தமிழுணர்வால், கலந்து கொண்டார்கள் என்றால், அதை ஏற்பதில் தயக்கமில்லை. ஆனால், வற்புறுத்தலின் பேரால், கலந்து கொள்ள வைக்கப்பட்டார்கள் என்றால், இத்தகைய உணர்வுகள் தேவையற்றவை. ஏனென்றால், எனக்குத் தெரிந்து, மொத்த இந்தியாவுமே, தேசபக்தி என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு, தமிழீழ விடுதலையை ஏளனம் செய்யும் பார்வையையே எல்லா தளங்களிலும் முன் வைத்திருக்கின்றன.

சென்னையில் IT people என்பது ஒரு தனி அடையாளாமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. இங்குள்ள பல IT நிறுவனங்களின் தலைமையகமோ, அல்லது கிளைகளோ, மற்ற மாநிலங்களிலும் இருக்கின்றன. அங்குள்ளவர்களின் நிலைபாடுகள் முற்றிலும் மாறாக இருக்க வாய்ப்பிருக்கின்றன.

தமிழர்களுக்கான காவிர் நீர் ஆற்றுப் பிரச்சினையில், தமிழர்களுக்கெதிரான ஒரு நிலைபாட்டை பெங்களூர் IT நிறுவன ஊழியர்கள் எடுக்க நேர்ந்ததையும் எல்லோரும் அறிவர். அவ்வாறிருக்க, தமிழீழ நிலைபாட்டில், ஒரு அடையாளமாகத் தங்கள் கிளை நிறுவன ஊழியர்களை இவ்வாறு அனுமதிப்பது, தங்கள் தமிழ் பற்றை, தாங்கள் சென்னையில் யங்குவதால் மட்டுமே அனுமதிப்பது போலல்லவா இருக்கிறது?


ஆகையால் ஒரு தொழிற் சார்ந்து ஒரு இனமாக உருவெடுப்பதைக் காட்டிலும், நேர்மையாக இருப்பதுவே மேல். இது குறித்து யாருமே எந்த தவறான பார்வையும் முன்வைக்கவில்லை.

'டெக்கிஸ்'களுக்கான உலகம் தனியானது. அதனால், அவர்களைக் குறித்து கவலை கொள்வதை விட்டு விடலாம். அதையும் மீறிய தமிழுணர்வாளர்களால் இருப்பார்களேயானால் சரி, மற்றபடிக்கு, அவர்கள் தங்கள் secular credentialsஐ விட்டு விட்டு, பேருக்காக இத்தகையப் போராட்டங்களை நடத்தி தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளவேண்டிய அவசியமேயில்லை. அது இல்லாமலே, அங்கிருக்கும் உணர்வாளார்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

புரிந்து கொள்வார்கள்.

புரிந்து கொண்டோம்.

காவிரி ஆற்று நீர் பிரச்சினைக்காக ஒரு நிலையும், ஈழ பிரச்சினைக்காக ஒரு நிலையும் என்று அரசியல் சதுரங்க ஆட்டத்திற்குள் எல்லாம் அவர்கள் நுழைய வேண்டியதில்லை. தொழில்நுட்ப சமூகம் ஒரு தனி உலகம். அவர்கள் சமூக பிரச்சினைகளில் தலையிடவில்லையே என்று யாரும் புகார் செய்யவில்லை. அதே சமயம் அவர்கள் ஒரு இனத்திற்கான எதிர்வினையாளிகள் என்றும் யாரும் புகார் செய்யவில்லை.

சிலர் அவ்வாறு செய்திருந்தாலும் அது ஒரு ஆதங்கமாகத் தான் இருந்திருக்கும்.

தங்கள் ஆடைகளில் வசீகர வாக்கியங்களை ஏந்திக் கொள்ளும் அதே சமயத்தில், கைப்பேசியில் யாருடனோ பேசத் தவிக்கும், வெற்று ஆராவாரத்துடன், ஈழம் பேசப்பட வேண்டியதில்லை.



(புகைப்படங்கள் - இலக்குவன் / பண்புடன் குழுமம்.)

Sunday, October 07, 2007

நரியின் ஞாநம்

நிலமெங்கும் படர்ந்த சிறகொடுக்கி
மரயுச்சியில் கண்மூடியமர்ந்தது
அறிவின் மேலோடுடைத்து வேர் முடுக்கி
புதிய வானம் திறந்து வைத்த பறவை

வாய்ப்பமைகையில் வஞ்சக ஞாநம் பாடும் நரி
எட்டாக் கனி கண்டு ஏங்கிய நரி
எட்டப்பன் காக்கையை ஏமாற்றிய கதையை
இன்னமும் வெற்றியாக விழாவெடுக்கும் நரி
ஞாநம் பெருக்க்க்க்க்க்க்க்கெடுக்க ஊளையூட்டியது
தன் இறப்பு வரையிலும் பயப்படுத்தும் பறவை
விடியல் தொட்டு அந்தி வரை
தன்னை வேட்டையாடித் திரியும் பறவை
இரையாக வீழும் தருணம் வந்ததாக

நளின அசைவுகளுடன் சிவப்புத் துணி வீசாது
நஞ்சு தோய்த்தலங்கரிக்கப்பட்ட
கத்தியொன்றை மறைத்துக் கொண்டு
காளையடக்கும் வீரன் போல துள்ளிப்பாடியழைக்கிறது
எச்சில் வடிக்கும் சக ஞாநமடைந்த நரிகளை

மரத்தின் அருகே தன்னைத் தூக்கிப் போக
நடுங்கும் தொடையின் தசையிறுக்கிப் பிடிக்க
மந்தையாக மந்திரமொலித்து அச்சம் போக்க
முரசறைந்து போர் அறிவிக்க

ஒருமித்த குரலில் ஓங்கியிட்ட ஊளைகள்
உளறலாகித் தொலைக்கிறது
அக்கறையுடன் ஓய்வெடுக்கச் சொல்வதாக

சிறகு விரித்து தலை நிமிர்ந்தெழுந்து
காற்றில் மிதக்கையில்
சிதறியோடுகின்றது ஞாநக்கூட்டம்
ஒவ்வொரு சிறகிலும் ஒரு சிறகின் பிரதியாக
ஆயிரமாயிரம் கழுகுகள் கண் சிவப்பேறி
தன்னை வேட்டையாடும் தகிப்புடன்
பெரும்பறவையை தூக்கி மிதக்கும்
வேட்கைப் பெருக்கத்தில் சிதறியோடுகின்றன
மொத்த நரிகளும்
கத்தியொன்று தங்களிடமிருப்பதையும் மறந்து

இனியுமொரு எட்டாக் கனி கதையும்
எழுதப்படலாம் இங்கே…

Sunday, March 05, 2006

மீண்டொருமுறை அடங்க மறு....

அனைவருக்கும்,


என் கவிதையில் என்ன புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது - ஆனால், என் கவிதை எல்லா நேரத்திற்கும் பொருந்துமாறு எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவு - முகமூடி எடுத்துக் கையாண்டமையே அதற்கு சாட்சி.

இந்தக் கவிதை திருமாவிடம் அதிமுக பக்கம் போகவேண்டாம் என்று சிலர் துபாயில் வைத்து வாதாட முனைந்த பொழுது எழுதப்பட்டது. அதாவது 23-2-06 அன்று. அப்பொழுது பரவலான பேச்சு - பாமக தங்களுக்குக் கிடைத்த தொகுதியில் சிலவற்றை விட்டுக் கொடுத்தாவது விடுதலைச் சிறுத்தைகளை தங்கள் பக்கம் நிறுத்திக் கொள்வார்கள் என்ற பேச்சிருந்தது. வன்னியர் - தலித் நல்லுறவு எக்காரணத்தைக் கொண்டும் முறிந்து விடக்கூடாது - அந்த நட்பு தொடர வேண்டும் என்ற ரீதியில் எல்லோர் சிந்தனையும் இயங்கிக் கொண்டிருக்க, அந்த நட்பைப் பாதுகாக்க திருமா என்ன விலை கொடுக்க வேண்டும்?

பாமக சின்னத்தில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், பாமகவின் தலித் பிரிவு தலைவராக வேண்டுமானால் திருமாவினால் மின்ன முடியுமே தவிர, விடுதலை சிறுத்தைகள் ஒரு தனி சக்தியாக வலுவாக வடிவெடுக்க முடியாது.

விடுதலைச் சிறுத்தைகளை ஒரு மக்கள் சக்தியாக, அமைப்பாக, அரசியல் கட்சியாக ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கென அங்கீகாரமும் இட ஒதுக்கீடும் செய்து - அதுவும் வென்றாலும் தோற்றாலும் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டு வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக மலர சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும் ஒரு கூட்டணியாக இருந்தால் மட்டுமே இணைய வேண்டும் - இது தான் அவர்களது குறிக்கோளாக இருந்தது.

எத்தனை காத்திருந்தாலும், திமுக விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடங்கொடாது என்பது தெளிவானதும், (பாமக - சிறுத்தைகளைப் பிரித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணமாக இருக்கலாம்) பின்னர் தயங்கி நிற்பதில் எந்தப் புண்ணியமும் இல்லை. சமூக தளத்தில் வேண்டுமானால், தீண்டாமை இருக்கலாமே தவிர, அரசியல் களத்தில் தீண்டாமை கிடையாது.

திருமாவிற்கு இருந்த ஒரே நெருடல் - பாமக தலைவர் மருத்துவர் தான். இறுதியில் பாமக தலைவர் பிரியா விடை கொடுத்தே திருமாவை அனுப்பி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. (ஊகம் தானோ?)

இது, 24.2.06 அன்று திருமா - ஆற்றிய உரையிலும் தெளிவாகியது. மருத்துவர் தங்களுக்காகப் பேசியதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், எப்பாடுபட்டாவது, இந்த இரு சமூகங்களின் நல்லுறவைப் பேணி காப்பேன் என்று உறுதி மொழியே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அதிமுக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது துபாய் நண்பர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது - பாமகவை விட்டுப் பிரியாமல் இருப்போம் என்ற எதிர்பார்ப்பு. (இது திமுகவிற்கான ஆதரவு இல்லை) இந்தப் பின்னணி தெரிந்து தான் கவிதை எழுதினேன்.

சிலபல இலவசங்களைத் தந்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமைகளிடமும்
அடங்க மறு, அத்து மீறு.

- இந்த வரிகளில் நான் குறிப்பிட்ட தலைவர் கருணாநிதி. பாமகவிற்கு ஒதுக்கிய சில இடங்களைக் கொடுத்து, உங்களை சரிக்கட்ட முனைந்தால், ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்பது தான் இந்த கவிதையின் கோரிக்கையாக இருந்தது.

இறுதியில், அதுவே நிகழவும் செய்தது.

திருமா திமுகவை விட்டு விலக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும்.
அது போலவே - வைகோவின் நண்பருடன் ஒரு சந்திப்பு என்ற பேட்டியிலும், நான் குறிப்பிட்டிருந்தேன் - திரு. வா.மா.குலேந்திரன் என்ற லண்டன் நகர வழக்கறிஞர் - ஒரு புத்தகம் அச்சடித்து எடுத்துச் செல்கிறார். கூட்டணி பற்றி முடிவாக அறிவிப்பு வந்ததும் தான் அந்த புத்தகம் வெளியாகும் என்று.

அது வைகோவின் மனநிலை எப்படி செயல்படுகிறது என்ற கணிப்பு. இனி அந்தப் புத்தகம் லண்டனிலிருந்து எங்களுக்கு வரும். வந்ததும் முழு தகவல்.

முஸ்லிம் லீகும் அம்மாவுடன் இணைகிறது. திருப்தி தான். இதயம் கிழிகிற அளவிற்கு எல்லோருக்கும் இடம் கொடுத்து, அங்கு ஒரே நாற்றம். இதயத்திலிருந்து வெளியேறி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த அரசியல் கூட்டணியால் சில நன்மைகள் கூட விளையக் கூடும். அம்மா தமிழ் மீது சற்றே அதிக அளவு அக்கறை காட்டக் கூடும். என்றாலும் ஜெவின் கடந்த கால செயல்பாடுகள் - தனக்குக் கிடைத்த ஆதாயம் நிறைவு பெற்றதும், மற்றவர்களை கை கழுவி விடும் - அந்த அகம்பாவத்திலிருந்து விடுபட்டு, முழுமையடைந்த தலைவராக மாறிவிட்டாரா என்பது இந்தத் தேர்தலின் முடிவின் போது தான் தெரிய வரும்.

அதுசரி, தமிழ் ஆர்வலர்கள் கருணாநிதிக்கு எதிராக திரும்பி விட்டார்களா என்ற கேள்வி எழுகிறதா? என்றுமே, கருணாநிதியை தமிழ் ஆர்வலர்கள் நம்பியதே இல்லை. தமிழைப் பயன்படுத்தி, ஆசியக் கண்டத்தின் செல்வந்தர் குடும்பங்களில் ஒன்றாக தன் குடும்பத்தை முன்னேற்றி விட்டார் என்பது ஒன்று தான் அவரது சாதனை. அது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமே உதவுமே தவிர, தமிழ் நாட்டிற்கல்ல. இன்னும் சொல்லப் போனால், மிகுந்த பணபலத்தைக் கொண்டு, ஊடக வன்முறையையும், அநாகரீகத்தையும் அவர்களால் அரங்கேற்ற முடியும்.

கருணாநிதியின் பேனா முனையில் வந்து விழும் நளினமான தமிழுக்கு மயங்கிக் கிடந்த சிலர் - மதிப்பு கொண்டிருந்த சிலர், இன்று அந்த பேனாவின் முனை சிறிது சிறிதாக ஒளி மங்கி, வலுவிழந்து வருவதை சற்று வருத்தத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது. தன் மகன் என்ற பாசத்தினால் அறிவுக் கண்ணையும் இழந்த திருதராட்டிரன் போலத் தான் கருணாநிதியின் இன்றைய நிலைமையும் இருக்கிறது. தன் மகனுக்குப் போட்டியாக வருபவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து அழிக்க முற்படுகிறார் அவர். பாவம் - அதுவே திமுகவின் அழிவாகவும் அமைந்து விடப் போகிறது என்பதை அவருக்குச் சொல்ல அருகில் யாருமில்லை.

Sunday, January 29, 2006

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அவர்கள் வருவதாக இருந்த ஜனவரி 6ம் தேதிக்கு இரண்டு தினங்கள் முன்பாக துபாயின் ஆட்சியாளர் மரணமடைந்து விட, அவர் வருகை தள்ளிப் போய்விட்டது - பிப்ருவரி 24ம் தேதிக்கு.

அடுத்து கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் திட்டமிட்ட வருகையையும் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. அவரது சமீபத்திய மூன்று நூல்கள் மற்றும் கவிதைக்காக அண்ணன் அறிவுமதியால் தொடங்கப்பெற்ற ‘தை’ கவிதை இதழையும் துபாயில் அறிமுகப் படுத்தி வெளியிடும் விழாவும் பிப்ருவரி இறுதிக்கு தள்ளிப் போட வேண்டியதாயிற்று.

இவ்வாறு சோர்வு தரும் வண்ணமாக அமைந்து விட்ட இந்த ஜனவரியை வெறும் நண்பர்கள் கூடிப் பேசியும், எங்களது கவிதைகளை வாசித்து திருத்தி அச்சுக்குத் தயார் செய்து கொண்டும் மட்டுமே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்த பொழுது, கடந்த வாரம் ஒரு தொலைபேசி.

பேசியவர் - திரு. வ.மா.குலேந்திரன் அவர்கள். இவரை இங்கிலாந்தில் அகதிகளாக குடியேற்ற உரிமைக்காகப் போராடும் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும் - ஒரு வழக்கறிஞராக.

அந்த வழக்குரைக்கும் தொழிலுக்குப் பின் அவருக்கென ஒரு இலக்கிய முகமும் உண்டு என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.

அவர், சென்ற முறை துபாய் வந்த பொழுது, அவருக்கு ஒரு சிறிய வரவேற்பு அளித்திருந்தோம். அதன் பின் அவர் நண்பர் இசாக்குடன் தொடர்பு வைத்திருந்தார். எப்பொழுது வந்தாலும் எங்களை சந்தியாது செல்லக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தோம் என்றே சொல்ல வேண்டும்.

அவர், இந்தியா வந்து, நெடுமாறன், சுபவீ, வைகோ அவர்களை சந்தித்து விட்டு, பின்னர் லண்டன் செல்லும் வழியில், துபாயில் எங்களைச் சந்திப்பதற்காக நான்கு நாட்கள் பயணத்தில் விடுப்பு விட்டிருந்தார். அவர், அவரது துணைவியார், மற்றும் மாமியார் ஆகியவர்களுடன் வந்திருந்தார்.

துக்கம் அனுஷ்டிப்பின் போது, விழாவாக கொண்டாட கூடாதென்பதால், ஒரு கலந்துரையாடல் அமர்வாக அந்த நிகழ்ச்சியை அமைத்தோம். அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்து நண்பர் தமிழன்பு அவர்களை அழைத்து வந்தார் தெய்ராவிற்கு.

தமிழ் உணவகத்தின் மாடியில் அமர்ந்து அவரது கவிதைத் தொகுதியைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கினோம் அண்ணன் செ.ரா.பட்டணம் மணி அவர்கள் தலைமையில்.

அவரது அகராதி கவிதைகள் என்ற குறுங்கவிதைகளிலிருந்து நண்பர்கள் குழாமின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர்.

சில கவிதைகள் மிக விரிவான விவாதத்திற்கு இட்டு சென்றன என்றால் மிகையாகாது. சில எளிய கவிதைகள் சிந்தனைக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது.

கீழ்க்கண்ட ஒரு கவிதையைப் பாருங்கள்:

கருணாநிதி.

தமிழும் பணம் சேர்க்கும்
அமிழ்தம் என்று
உலகிற்கு அறிவித்த - சிறந்த
கலைஞர் இவர்.

தமிழ் மீது கொண்ட பற்றை மிகத் திறம்பட இவர் பயன்படுத்திக் கொண்டதை வேறு எந்த தமிழகக் கவிஞர்களாவது சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. சந்தேகம் தான். ஆனால், ஈழக்கவிஞர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் எதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும். எளிதாக சொல்லி விட்டார்.

இந்தக் கவிதையை ஒட்டிய சிந்தனையாக அன்று காலையில் தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறுகதையும் எண்ணத்தில் எழுந்தது. அது மாலன் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ என்ற சிறுகதை தான்.

ஒரு பெண் - தமிழ் சிரியரால் உந்தப் பெற்று, தமிழார்வம் கொண்டு, தமிழ் கற்று, வேசமும், விசையும் பெற்றவளாய் கல்வி கற்று வெளி வருகிறாள். அந்தப் பெண்ணிற்கு வேலையே கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக சாதாரண அறிவுள்ள தங்கை பாத்திரம் ஒன்று படைக்கப் பெற்று வாழ்க்கையில் ஜெயிப்பதாகக் கதை போகிறது.

எப்படி?

// நான் எம்.ஏ முடித்தபோது திலகவதி டிகிரி வாங்கினாள். காலையில் ஜெர்மன், மாலையில் டிராவல் ஏஜென்சி என்று ஏதேதோ படித்து, கூடவே இரண்டு மூன்று சர்டிபிகேட்டுகள் வாங்கினாள் //

இந்தக் கதை குமுதம் இதழில் வெளியாகி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சரி, இப்போது கேள்வி.

படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது.

ஆனால், இங்கே விவாதம் - எப்படி சிலர் தமிழால் பிழைத்தார்கள் - செல்வந்தர்கள் ஆனார்கள் என்பது தான். தமிழ் மொழி கற்பது உதவாது என்பது மாலன் வாதமானால், அதற்கு நேர் மாறான, தமிழால் வெற்றி பெற்றவர்களையும் காட்ட முடியும்.

ஏன், மாலனின் வெற்றி கூட அவருடைய தமிழ் தான்.

இன்று புத்தக கண்காட்சியில், பல மக்களும் வரிசையில் நிற்கின்றனர் - உள் நுழைவதற்கு என்னும் பொழுது இனி தமிழில் எழுதுபவர்களுக்கும் - தமிழால் பிழைக்கும் ஒரு வழி இருக்கிறது என்று தெளிவாக, உறுதியாக சொல்ல வைக்கிறது தானே?

மாலனின் இன்றைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன இதில் என்பதை அறிய ஆவல் தான் - மாலன் தன் எண்ணங்களை மீண்டும் ஒரு முறை சொல்வாரா?

தமிழால் பணம் சேர்க்க முடியும் என்பதன் மீதான தன் எண்ணங்களை.!!!

ஒரு சின்ன கவிதை தான் - ‘அகராதி’ கவிதை தான். ஆனால், அந்த தொடர்புகள் வழியாகப் பயணித்தால், எத்தனை சிந்தனைகள் விரிகின்றன.!

இந்த சிந்தனை தொடர்புகள் வழியாக மேலும் ஒரு கவிதையையும் சொல்லத் தான் வேண்டும். அது அப்துல் ஹமீத் பற்றியது:

அப்துல் ஹமீத்

உலகத் தமிழர்
அறிவர் இவரை
இவர் தமிழால்.

அப்துல் ஹமீதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. கடந்த 30.05.05 அன்று துபாய் வந்திருந்தார். அவருக்கு தமிழிணைய நண்பர்கள் சார்பாக ஒரு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் சிறப்புரை ஆற்றினார். அவருடயை இனிய எளிய தமிழை கேட்க ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.

யாரோ ஒருவர் அப்படி பேசியிருந்தால் அது வருத்தத்திற்குரியதாக இருந்திருக்காது. ஆனால், பலரது அபிமானத்தையும், அன்பையும் தமிழால் பெற்ற அப்துல் ஹமீது அவர்கள், அன்று பேசிய பேச்சு, தமிழ் ஆங்கிலக் கலப்பிற்கு வக்காலத்து வாங்குவதாகவே இருந்தது. விருந்தினராக வந்தவரை விமர்சிக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டோம். பின்னர் விழாவில் முக்கியப் பங்கு வகித்த நண்பரிடம் அது குறித்து வருத்தம் தெரிவித்தோம்.
இதையும் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டோம். தமிழால், பிழைக்க முடியாது என்று பேசுபவர்கள் - இந்த இருவரையும் மறந்து விடக் கூடாது என்றே வலியுறுத்தினார்கள் அனைவரும்.


இது மாதிரி, நிறைய கவிதைகள் - அதைத் தொடர்ந்த அனுபவங்கள் - இவற்றையெல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கையிலே பேச்சு மற்றவற்றைப் பற்றியும் திரும்பியது. இலங்கை அரசியல் - இந்திய அரசியல் என்றெல்லாம் திரும்பியது. ராஜபக்ஷவைப் பற்றி குறிப்பிட்டு, எதனால் ஜெ அவரை சந்திக்க மறுத்தார் என்பது குறித்த அவரது கருத்தைக் கேட்டோம். அவர் சொன்ன பதில் - தமிழக தேர்தலைக் குறித்தான கவலை கொண்டுள்ள ஜெ, தன் அணிக்கு இரு நபர்களை எதிர்பார்த்தார். ஒருவர் பாமகவின் ராமதாசு மற்றவர் மதிமுக வைகோ. இருவருக்குமே ராஜபக்ஷவின் சந்திப்பு வேம்பாக இருக்குமென்பதால், அந்த சந்திப்பைத் தவிர்த்தார் என்றும் மற்றபடிக்கு அவர் தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டிருப்பார் என்று நம்பத் தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.

வைகோவை அவர் சந்தித்தது பற்றி கேட்டோம் - மிக குறைந்த நேரமே அவருடன் உரையாட முடிந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக நம்பப்பட்டதால், பலரையும் நேரிலே பார்த்துப் பேசுவதாக ஏற்பாடு. அதனால், ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த நேரமே. மேலும், வீட்டைச் சுற்றிலும், ரகசிய ஒற்றர்கள் வேறு. வருகை தருபவர்களைப் பற்றிய குறிப்புகளும் தொகுக்கப்படுகின்றன என்பதால், அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றார். (2.1/2 மணி நேரம் மட்டுமே) அந்த குறைந்த நேரத்திலும், அவர் வீட்டிலிருந்து, தட்டச்சு செய்து வைக்கப்பட்டிருந்த பெரியார் திடலில் ஈழத்தமிழர் தரவு மாநாட்டில் வை.கோ ஆற்றிய உரையின் தொகுப்பையும், அவர் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் தொகுத்துப் புத்தகமாக்கிக் கொண்டு வந்திருந்தார்.

‘ஈழத்தமிழரைக் காப்போம்’ என்ற புத்தகம் அந்த வகையில் மிகக் குறைந்த காலத்தில் புத்தகமாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். வைகோவின் மற்றுமொரு புத்தகத்தையும் எடுத்து வந்திருப்பதாகவும் - கூட்டணி தெளிவாக அமைக்கப்பட்டவுடன் மட்டுமே அதை நண்பர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று வைகோ கூறியிருக்கிறார் என்ற தகவலையும் தெரிவித்தார். அந்தப் புத்தகம் லண்டன் சென்று அங்கிருந்து தான் வரவேண்டும் போலிருக்கிறது.

கூட்டணி பற்றி என்ன மனநிலையில் இருக்கிறார்?

கருணாநிதி தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தன் கட்சிக்காரர்களுக்குக் கணிசமான அளவு தொகுதி வைகோ எதிர்பார்க்கிறார்.

ஜெயுடன் இணைவது பற்றி எந்த மனநிலையில் இருக்கிறார்?

தன் மனநிலையை விடவும் - தன் கட்சிக்காரர்களின் மனநிலையைத் தான் இந்த முறை முக்கியத்துவப் படுத்துவேன் என்கின்றார் வைகோ.

அப்படியானால் ஜெவுடன் உறவு வைத்துக் கொள்ள அவர் தயாராகிவிட்டாரா?

அதை கருணாநிதி தான் தீர்மானிப்பார்.

குழப்பமான பதில் தான். என்றாலும் அதற்கு மேலாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்டோம். அது வைகோவின் மனம் திறந்த கடிதம் தான். இப்பொழுது அதை வெளியிடுவது உசிதமல்ல - ஆனால், கூட்டணி முடிவானதும், அந்தப் புத்தகத்தை அனுப்பித் தருவேன் என்று உறுதி கூறினார்.

பின்னர் வழக்கமான தமிழக தலைவர்கள் பற்றிய விசாரிப்புகள். அப்பொழுது தான் தகவல் சொன்னார் - சுபவீ விபத்துக்குள்ளான செய்தியை. தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வில் இருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தொலைபேசியில் தொல்லை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என்றாலும், அனைவர் சார்பிலும், சுபவீயிடம் இசாக் நலம் விசாரித்தார்.

நெடுமாறன் ஐயா அவர்களைச் சந்தித்ததைக் குறிப்பிட்டு, அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டது கண்டு தன் வருத்தத்தையும் தெரிவித்தார்.

பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலையும் சந்தித்தார். நக்கீரன் இதழில் தொடராக வந்த ‘இந்துமதம் எங்கே போகிறது’ என்ற புத்தகம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இருப்பது குறித்து நக்கீரன் கோபால் தன் மகிழ்வை தன்னிடம் பகிர்ந்து கொண்டதை தெரிவித்தார்.

பின்னர் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக நடைபெற இருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டோம். கவிதைப் போட்டிக்கு கிட்டத்தட்ட 800 கவிதைகள் வந்து சேர்ந்திருப்பதையும், நடுவர்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டதையும் அறிவித்தோம். இப்பொழுது, அந்தக் கவிதைகளுக்கு எண்களிட்டு, அந்த எண்களையும் பெயர்களையும் தனியாக எடுத்து விட்டு, கவிதைகளை மட்டும் திரட்டி, மூன்று பிரதிகள் எடுத்து, நடுவர்களுக்கு அனுப்பி வைக்கும் வேலை நடைபெறுவதையும் குறிப்பிட்டோம்.

துபாயில் இருந்து எழுத்துலகில் இயங்கி வரும் ஐந்து நண்பர்களின் புத்தகங்களை இந்த ஏப்ரல் / மே மாத வாக்கில் வெளியிட முனைந்திருப்பதையும், அவ்விழாவிற்கு துபாய்க்கு கவிக்கோ, இன்குலாப், மேத்தா, அண்ணன் அறிவுமதி அவர்கள் அனைவரையும் அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்தோம்.

எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமென்றால், பெரும் பொருட் செலவு ஆக கூடும். எவ்வளவு முடியும் என்று தெரியாது. ஆனால், இதுவரையிலும் விரும்பியவற்றை நிறைவேற்றிக் கொள்ள எங்களால் முடிந்திருக்கிறது என்ற அனுபவமே துணையாகி இருக்கிறது.

அனுபவ பகிர்வாகவும், அரசியல் விமர்சனமாகவும், உலக நடப்பாகவும், கவிதை விமர்சனமாகவும் என்று பல தளங்களில் இயங்கிய இந்த கலந்துரையாடலை மாலை 6.30 மணி அளவில் முடித்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் போனதே தெரியவில்லை.

அவர் எழுதிய புத்தகம் - அகராதிக் கவிதைகள். மணிமேகலைப் பிரசுரம். விலை ரூ.25.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்