"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, December 15, 2006

நெரிசல் மிகும் கரை.

நெரிசல் மிகும் கரை.


மூன்று கடிதங்களைக் கையில் கொடுத்தாள் அம்மா.. ஒரு புகை வலிக்க கழிவறை செல்ல முனையும் பொழுது.

அம்மா அறிவாள் - கழிவறை தான் எனது பிரத்யேக வாசக சாலை என்பதை.

முதல் புகையை வெளி ஊதிவிட்டு, முதல் கடிதத்தின் முகவரி பார்த்தேன்.

சுந்தர்.

நல்ல நண்பன். உதவ முயற்சித்தேன். ஆனால், அனர்த்தமாகி விட்டது. விளக்கிச் சொல்ல முயன்றேன். புரிந்து கொண்டான். பின்னர் சில நாட்கள் இடைவெளி விழுந்து விட்டது.

கடிதம் மிகச் சுருக்கமாகவே எழுதப்பட்டிருக்கிறது.

'அன்பு நண்பனே,

நன்றி.

என் காதலை மெனக்கெட்டு அவளிடம் மன்றாடி சொல்ல முயன்றமைக்கு. எனக்காக நீ எத்தனை வாதாடி இருப்பாய் ஒரு நண்பனாய்? மறுத்து விடுவாள் என்று தெரிந்தும், அவளுடன் உண்டான உன் நட்பை பயன்படுத்திக் கொள்ள முனைந்தமைக்கு மன்னித்து விடு.

அவளின் திருமண நாளைக்கு முந்தைய தினத்தில் என் காதலை அவளிடத்தில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்றில்லாமல், சொல்லியமைக்கு நன்றி.'

முதல் கடிதம் வாசித்தாயிற்று.

அடுத்த கடிதம் -

மோகன்

யார் இது? அறிமுகமற்ற நபர்? எப்படி என் முகவரி அறிமுகமற்ற நபரிடத்தில் கிடைத்தது?

' நான் சந்த்யாவின் கணவன். என்னைத் தெரியாத உங்களுக்கு கடிதம் எழுதுவது ஒரு உண்மை வேண்டி. நீங்கள் என் மனைவியை எங்கள் திருமணத்திற்கு முந்தைய மாலை சந்தித்திருக்கிறீர்கள். நீண்ட நேர தனிமையில், நீங்கள் என்ன செய்தீர்கள் - உங்களுக்கும் என் மனைவிக்கும் இடையில் என்ன உறவு? கணவனன்றி வேறொருவனுடன் ஒரு பெண் தனித்திருப்பது எதன் காரணமாகவும் ஏற்றுக் கொள்ள இயலாது. அவள் நட்பென்கிறாள். ஆனால், நீங்கள் வாழ்ந்த ஊரோ, படித்த கல்லூரியோ அவ்வாறு சொல்லவில்லை. காதலென்கிறது. உண்மயை சொல்லி பதில் எழுதுங்கள்'

சாறு பிழிந்த எலுமிச்சை போல கசங்கிப் போனது மனது. மனைவியை நம்பவில்லை. நான் மட்டும் சொல்லி நம்பி விடவா போகிறான்.? ஊரும் உலகும் பிரதானமாக சிந்தனையைப் பாதிக்க அனுமதித்து விட்டு, இதென்ன குறுக்கு விசாரணை?

அடுத்த கடிதம் - ஆச்சரியமாக இருந்தது. சாத்தியமா என்ன? சந்த்யாவின் அம்மாவிடமிருந்து. அவள் வீட்டிற்குப் போகும் பொழுதெல்லாம் அதிகம் பேசாமல், ஏதாவது உபசரித்து விட்டு, எங்களைத் தனியே விட்டுவிட்டு, விலகிப் போய்விடும் நாசுக்கான தாய்.

வெகு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன்

' நீ சந்த்யாவை அவளது திருமண நாளின் முந்தைய தினத்தில் கடற்கரையில் தனித்து சந்தித்தது அவளது கணவன் காதிற்கு வந்துவிட்டது. அது குறித்து உனக்குக் கூட கடிதம் எழுதி இருப்பார். பதில் எழுத வேண்டாம். அவருக்கு மட்டுமல்ல, சந்த்யாவிற்கும் சேர்த்து தான்.. அவரை நாங்கள் சமாதானப்படுத்தி விட்டோம் - இனி எந்தவொரு காலத்திலும் அவளைப் பார்க்கவோ, கடிதம் எழுதவோ செய்ய மாட்டாய் என்று உறுதி மொழி கொடுத்து.

அந்த மாலை நேர சந்திப்பில், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கப் போவதில்லை. உன்னை எனக்குத் தெரியும். ஒரு நல்ல மனைவியாக இரு என நல்ல புத்தி சொல்லித்தான் அனுப்பி வைத்திருப்பாய். என்றாலும் எனக்காக அவளை இனி தொடர்பு கொள்வதை நீ தவிர்த்து தான் ஆக வேண்டும்.’

ஒரு மாலை சந்திப்பை காரணம் கொண்டு நட்பை முடித்து வைத்து விட்டார்கள்.

எல்லோரும்.

அந்த மாலை சந்திப்பு

நெரிசல் மிகும் கரை.

அலைகள் தொட்டு விலகி மீண்டொரு தொடுதலுக்குத் தவித்து மீள்வதைப் போல காற்றில் அலையடித்துக் கொண்டிருந்த கூந்தலை அடக்கிக் கொண்டிருந்தாள்,

நீராக தளும்பும் அவள் அருகே கரையாக நான்.

ஒன்றோடொன்று கலக்காமல் ஒட்டியும் விலகியும் ஒன்றின் ஆதாராமாக நிற்கும் மற்றொன்றைப் போன்று அவளும் நானும். உலகம் அறிமுகமாகாத காலத்தே தோன்றிய உறவென்பதால், நட்பாகாவே நீடித்து விட்ட பழக்கம்.
வெகு நேர மௌனத்திற்குப் பின்னர் அவள் சொன்னாள் "நாளைக்கு எனக்குத் திருமணம்"

"தெரியும் "

"நீ என் நண்பனாக எப்பொழுதும் இருப்பாயா?"

"அதிலென்ன சந்தேகம்?"

"என்னைப் பார்க்காத பொழுதும் கூட?"

"எத்தனை காலம் பார்க்காதிருந்தாலும் கூட, நீ என்றுமே எனக்கு நட்பாக இருப்பாய்"

நாங்கள் நண்பர்களென்பதை அறிந்தவர்கள் நானும் அவளும் சில நண்பர்கள் மட்டுமே. புரிந்தவர்கள் புது உறவுகளுக்கு வழி தேடி உதவி கேட்டு அணுகவும் செய்தனர். அப்படி உதவி கோரிய நண்பனின் கடிதம் ஒன்று சட்டைப் பையினுள் - காதல்.

நேரில் சொல்லி பதில் கிட்டாத காதல், நண்பனின் பரிந்துரையின் வலுவில் பதில் கிடைத்துவிடுமென்ற தவிப்பில் எழுதப்பட்ட காதல் சட்டைப்பையினுள் மடிந்து கிடக்கின்றது. எப்பொழுது அதை எடுத்து அவள் கையில் தரலாமென்ற சிந்தனை மௌனத்தினுள் புதைந்து கிடக்கின்றது.

"நாளை நீ இன்னொருத்தரின் மனைவி. என்றாலும், உன்னிடம் கடைசியாக ஒரு கடிதம்.."

வாங்கி அதை மேலும் சிறிதாக மடித்துக் கொண்டே சொன்னாள் "நமக்கான பிரபஞ்ச வெளி நம் நட்பு. அதில் நீயும் நானும் மட்டுமே இருப்போம். வேறெந்த உறவுகளும் வேண்டாமே, என்ன?"

நன்றாக மடிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை மீண்டும் என் சட்டைப் பையில் சொருகி வைத்து விட்டு எழுந்து கொண்டாள்.

நம் நட்பு
நமக்கான
பிரபஞ்சவெளி.
உனக்கும் எனக்குமான
நட்பிற்கென
விதிக்கப்பட்ட வெளியில்
உறவுகள் உயிரிலிகள்

அவளது சொற்களை கவிதையாக வடிவமைத்துப் பெற்ற தாக்குதலில், நான் அமர்ந்து கிடக்கையில், அவள் விலகி விலகி நடந்து போய் கொண்டிருந்தாள்.

"ஹேய்.. சந்த்யா..." அலைகளின் உற்சாகத்தையும் தாண்டிய என் குரல் அவளை ஒரு நிமிடம் நிறுத்தியது. "உனக்கான வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ்ந்து விடு. உன்னைத் தொலைத்து விடாதே - எதன் காரணம் கொண்டும்..."

கடற்கரை முழுவதும் பிரகாசித்த ஒரு புன்னகை.

பின் ஒரு கையசைப்பு.

மீண்டும் திரும்பி நடந்தாள்.

போய்விட்டாள்.

நான் அந்த மூன்று கடிதங்களுக்கும் பதில் எழுதவேயில்லை. அவளையும் அதன் பின் சந்திக்கவேயில்லை.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்