"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, September 19, 2007

பசி விடும் நேரம்





மசூதியைச் சூழவும்
பசிகள் அமர்ந்திருக்கின்றன
நொடிகளைத் தள்ளிக் கொண்டு
நிமிடங்கள் அவசரமில்லாமல்
நகர்ந்து கொண்டிருக்கின்றன

பெரும் வாகனங்களில்
வந்திறங்குகிறது
கஞ்சியும், பிரியாணியும்

விரும்புவதை செலவிடச் சொல்லிய
இறைவன் கட்டளைக்காக
தர்மம் செய்ய முனைந்தவரின்
வீடொன்றிலிருந்து
பணிக்கப்பட்ட கூலிகளின்
அநிச்சையான உழைப்பிலிருந்து

தாம்பாளத் தட்டுகளில் விளம்பப்படுகிறது
மூவருக்கு ஒரு தட்டாய்
பகிர்ந்துண்ணும் பண்பாட்டையொட்டி

ஆர்ப்பாட்டமில்லாத
அரவமில்லாத விளம்பல்கள் முடிகின்றன
தொண்டர்களின் பொறுப்புணர்வினால்


பசிகள் விடைபெற்றுக் கொள்ள
பாங்கொலிப்பது மட்டுமே பாக்கி
பசியாற்ற
கறித்துண்டுகளை அனுப்பியவரை
எங்குமே காணவில்லை
பசிகளுடன் அமர்ந்திருக்க

மினாராக்களின் மாடங்களில்
புறாக்களும் தான்

Sunday, September 16, 2007

பூனைக்குட்டி



மிதக்கும் இருளினுள்

கொட்டப்படுகிறது
கொஞ்சம் வெளிச்சம்
ஒரு பூனையைத் தேடி

தட்டுப்பட்ட வெளிச்சத்தில்
சரேலென விடுபட்டுப் பாய்கிறது
இரை தேடும் பூனை

மென்பஞ்சுப் பாதங்களுள்
நார்நாராகக்கும் கூர்நகங்கள்
பாந்தமான பதவிசான
நடையலங்காரத்தினுள்
கொலைவெறியேறிய மூர்க்கம்
சிறு நாக்கு நீட்டி
மீசை நக்கி மடங்கும் நேர்த்தியில்
இரையொன்றின் மரண சம்பவம்

விடுபட்டு விட்டேத்தியாய்
வேட்டையாடித் திரியும்
இந்தப் பூனையை
இன்றாவது பிடித்துவிட வேண்டும்

இருள் நக்கும் வெளிச்சத்தில்
அதன் தீட்சண்ய முனகல்களைத்
தேடித்திரியும் காதுகளுடன்
அலைகின்றன கண்களும் கால்களும்
பூனையின் அரவமேதும் காணாது
திகைத்து நிற்கையில்
புலன்களற்ற வடிவத்தில் நிற்கிறேன்
பாதமடி ஒட்டி பின்பிரிந்து
நீளும் நிழலுடன்

Friday, September 14, 2007

பயணத்தின் தொடக்கம்.

பயணத்தின் தொடக்கம்.













தொடர்ந்த சன்னல் திறப்புகளினூடே

பயணித்துப் பயணித்து

மீண்டும் மீண்டும் போய் விழுகிறது

சிறு சிறு வெளிகளுனுள்



ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புபடுத்த

மீண்டும் மீண்டும் சன்னகல்ளைத் திறந்து

தொடர் பயணம் செய்கையில்

ஐயுறுகிறது பெருவெளி அடைந்தோமாவென



பெருவெளிக்கான திறப்பின் சன்னல்

மாயச்சுவற்றில் இருப்பின் தடமற்று

ஒளிந்திருக்கின்றது

மொழிகளற்ற புன்னகை சிந்தி



எதைத் தடவி

எதைத் திறந்தோமென அறியாதிருக்கையில்

ஒவ்வொரு சிறுவெளியும்

ஒரு பெருவெளியாக உருத்தோற்றமெடுக்கையில்

சிறுவெளியினுள் ஐக்கியமாகிறது பயணம்

அந்தம் அடைந்துவிட்டதாக

Saturday, September 01, 2007

ஓவியம்




வண்ணங்கள் இறைக்கப்பட்ட ஓவியத்தில்
உன்னை அமர்த்தியிருக்கிறான் அவன்
எந்த வண்ணத்தில் உன்னை வரைவதென
ஒரு பெரும்யுத்தம் நிகழ்த்தியிருக்க வேண்டும்

வண்ணங்கள் காயாத தூரிகையும்
ஆடைகளற்ற முதுகில் பூசப்படக் காத்திருக்கும்
நிறக்கலவைகளும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன
இன்னமுமெந்த முடிவாக்கத்தையும்
அவன் எய்திருக்கவில்லையென

வண்ணக்கலவைகளில் பரிட்சார்த்தங்களை
முயற்சித்துக் கொண்டேயிருப்பவனுக்காகக் காத்திருக்கிறது
எந்த உத்தேசங்களுமற்று
முதுகில் இழுக்கப்பட்ட முடிவற்ற கோடுகளுடன்
ஒவியமொன்றின் தொடக்கம்

கோடுகள் படர்ந்து பரவி
தோளின் மீதாக திரும்பி நோக்கும் முகத்துடன்
பிம்பமாயெழுந்து ஓவியனின் கலையாக
நீ நிறுவப்படுகையில்
உனதான அடையாளங்கள் மறக்கப்படும்

பல வேளைகளில் ஆடை களைந்து
தூரிகையோட்டங்களுக்குக் காத்திருந்து களைத்துப் போன
உனது நிர்வாணத்திற்கு கூலி தரப்பட்டு
உனது அடையாளங்கள் பதியப்படாமலே திருப்பப்படலாம்.

தூரிகையும் இயக்கிய கைகளும் எதுவுமற்று
முடங்கிக் கிடக்கையில்
ஓவியம் உயிருறுவது
உன்னில் எதைக் காண்பதென்ற
உக்கிரத் தேடுதலுக்கிடையில் நிகழும்
ஒரு கண பொறியில் வெடிக்கலாம்

காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்
தீ நாவுகளின் வீச்சைப் போன்று
அங்குமிங்கும் விரைந்தோடும் தூரிகையினின்று வழியும்
வண்ணங்களில் வரையப்பட்ட உன்னுடல்
ஓவியமாக பேசப்படலாம் ஓவியனுடன்

ஆடை மூடிய நீ மட்டும் யாராலும் அறியப்படாதவளாய்
எங்கேனுமொரு வெளியில் அலைந்து கொண்டிருக்கலாம்
ஓவியம் நீ என்றுன்னை உணரா மனிதர்கள் மத்தியில்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்