"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, January 28, 2007

சாமியா(ஆ)டிகள்...

எல்லாவற்றையும் தன் விருப்பம் போல்
காட்டிக் கொள்ளும் கண்ணாடிகள் மீது கோபம்.
ஒரு நாள் பின்னிரவில் நடத்திய தாக்குதலில்
கண்ணாடிகள் அழிந்து போயின.

உண்மைகளைத் தான் உரைத்தன
உன்னிடத்திலிருப்பதைத் தானே காட்டின
பேசிக்கொண்டவர்களுக்கு தெரியவில்லை
கண்ணாடிகள் தந்த பிம்பங்களிலே தன்னையறிந்தவர்கள்
அந்த பிம்பங்களிடமே தங்களைத் தொலைத்து
அவற்றின் நிழல்களில் கரைந்து போனதை

எங்காவது தங்களை அடகு வைத்துவிட்டு,
இடைத்தரகனை மீட்பவன் எனக்கொண்டாட
காலகாலமாய் காத்திருக்கும் இவர்களுக்கு
கண்ணாடிகள் தரும் பிம்பங்களற்று
எந்தத் தேடுதலையும் சாதிக்க சாத்தியப்பட்டதில்லை.

தன் தேடுதல்களுடன் அந்தரங்க உறவேற்காதவன்
கண்ணாடிகள் நிறைத்த அறையில் -
எல்லோரும் காணும் சாத்தியதையுண்டாய அறையில்
தன் பிம்பங்களுடன் கொண்டாடுகிறான்
தன் அந்தரங்கங்களை.

தன்னையும் தன் தேடுதலையும்
தனிமனித அனுபவமாயறியாமலே
புதியதாய் மீண்டும் பிம்பங்கள்
படைத்துத் தரும் கண்ணாடி தேடியலைகிறார்கள்.
அழிந்து போன கண்ணாடித் துண்டுகளில்
சிதறிக்கிடந்த உடைந்த சித்திரங்களை
வாரியள்ளி குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டே..

Friday, January 26, 2007

நீ........

நீ மரித்த பின்
நான் வாசிக்கின்றேன்.
எதை வாசித்தேன்
எதை விட்டேனென்பது
இங்கு பிரச்சினையல்ல.

மையம் விலக்கி
விளிம்பில் வெளிச்சம் தேடும்
எல்லாவற்றையும் எடுத்துக் கவிழ்த்து
எங்கோ தொலைந்து போன
தொலைக்கப்பட்டவைகளைத் தேடித் திரியும்
மனதிற்கு
பாதை எது வேலி எது பிரச்சினையல்ல.

இப்படித்தானென்ற முன்முடிவுகள்
முன்னேயே சொன்னேனேவென்ற கருத்துக் கணிப்புகள்
எத்தனை பேருக்குப் பிடிக்கும் கணக்குகள்
எல்லாவற்றிலும் எப்பொழுதும்
தோல்வியில் தேடிக் கொண்டேயிருக்கும் இருத்தல்
விளிம்பிலோ மையத்திலோ
உள்ளேயோ வெளியேயோ
எப்படியிருந்தாலும்
தேடும் தவிப்பைக் கொண்டாட
தானிருப்பதை அறிவித்து சிரமிக்காத
தன்னையொத்த தேடுதலை தவிப்பாகக் கொண்ட
ஒரு நீ வேண்டும் -
பெயர்களற்ற உறவுடன் அருகே
கருவிழிகளால் தொட்டுக் கொள்ளும் அருகே...
உண்மையாய் உயிர்ப்பாய் உறவாய்..

Tuesday, January 23, 2007

ஜிஹாத் வழிகாட்டி...

அவனது கரங்களில்
கதிரவன் மோதி சிதறும்
கனத்த வாள்.

காலடியில் வீழ்ந்து திமிறும்
ஆக்கிரமிப்பாளனின்
மார்பின் மீதேறியமர்ந்து
கழுத்தை மையமாக்கி
வானுயருகிறது வாள்
வலுவாக வீழ்வதற்கு.

சாவோமென்ற அச்சத்தில்
எச்சில் கூட்டி உமிழ்கிறான்
கோழையாகிப் போனவன்.

ஓங்கிய வாள்
உயரத்தில் உறைந்து போக
அடங்க மாட்டா ஆத்திரமெழுந்த
தன் எண்ணத்துடன் போரிட்டுக் கொண்டே
தாடை இறுக முகம் சிவந்த வீரன்
பயத்திலொடுங்கும் எதிரியின்
உடல் உதறி எழுகிறான்

கண்மூடி வான் நோக்கி தலையுயர்த்தி
சிலபல பிரார்த்தனைகளை முணுமுணுத்து
ஓங்கி ஓங்கியடிக்கும் இதயமடக்கி
ஆசுவாசமாகிப் பின்னர் திரும்பி
எதிரிக்கு உத்தரவிடுகிறான் -
ஓடிப் போ - உயிர் பிழைத்தாய் நீ.

இப்பொழுது இப்பொழுதென
எதிர்பார்த்துக் கிடந்த சாவை
விலக்கி வைத்து மன்னித்த வீரனை
வியப்புடன் வினவினான் -
ஆத்திரம் வரவில்லையா என் எச்சில்பட்டு?.

திடமாக திரும்பி
தீர்க்கமாக நோக்கிய வீரனின்
தாடிக்குள் புதைந்திருந்த
கனத்த உதடுகள் அசைந்தது
எனக்கு கோபம் வந்தது -
அடக்கவியலாத கோபம்.
பிழைத்தாய், போ, ஓடிவிடு.

இன்னமும் இன்னமும்
அதிசயித்துப் போன எதிரியோ
மீண்டும் நோக்கினான் கேள்வியோடு.

இந்தக் கணத்தில் உன்னை வெட்டினால்
என் கோபத்தால் மடிந்தவனவாய் நீ.
என் சினம் உன்னைக் கொன்றால்
எனக்கும் உனக்குமான யுத்தமாகிடும்
நான் செய்வது புனிதப் போர்
இந்தப் போர் எனக்கானதல்ல.
என் இனத்தவருக்கானது
என் இறைவனுக்கானது.

வாதிப்பதை நிறுத்தி, விலகிச் செல்ல
வீரன் திரும்புகையில்
கெஞ்சுகிறான் எதிரி
ஐய்யா அழைத்துச் செல்லும்
எம்மையும் உன் பாதையில்...

தன் அகங்காரத்தைக் கட்டிப்போட
தன்னை வருத்தி தன்னோடு போரிடும்
ஜிஹாதைக் கற்றுத் தர
வரலாற்றில் வீரமிக்க அலீ உண்டு.
அமெரிக்காவின் alter ego ஒஸாமாக்களின்
சாத்தானிய வேதங்கள் அல்ல ஜிஹாத்...

(இஸ்லாமிய வரலாற்றில் ஒரு யுத்தத்தில் நடந்த ஒரு சம்பவம்)

Thursday, January 11, 2007

இம்சை அரசன் 23ம் புலிகேசி


இம்சை அரசன் 23ம் புலிகேசி

Wednesday, January 03, 2007

In The Name of Honor - Muktharan Mai

In The Name of Honor - Muktharan Mai

முன்பு தஸ்லிமா நஸ்ரின் ‘லஜ்ஜா’ என்ற நாவல் எழுதினார். அதற்கு முன்னர் சல்மான் ருஷ்டி ‘சாத்தானிக் வெர்ஸஸ்’ என்ற நாவலை எழுதினார். இஸ்லாமிய உலகில் பெரும் எதிர்ப்பை இந்த புத்தகங்கள் எதிர் கொண்டன. அவை புனைந்து எழுதப்பட்டவை.

முக்தரன் மாய் எழுதிய புனைவல்லாத ‘இன் த நேம் ஆஃப் ஹானர்’ என்ற புத்தகம் அத்தகைய எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை. ஆனால் அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கத்தை விட யதார்த்த உலகில் நின்று வலுவான கேள்விக் கணைகளை முக்தரணின் புத்தகம் வாசகனின் மனசாட்சியின் முன் வைக்கிறது.

தஸ்லிமா புனைவு தளத்தில் எழுதிய பொழுது, அது மனதைப் புண்படுத்தியதாக உணர்ந்தவர்கள் - ஒரு வாழ்க்கை சரித்திரம் வந்த பொழுது, அது குறித்து சிறிய அளவில் கூட விவாதம் செய்ய முன்வராதது வியப்பாகத் தான் இருக்கிறது.

The misguided Salman Rushdie அவதூறு எழுதிய பொழுது, கொதித்து எழுந்த மதவாதிகள், முக்தரன் முன்வைக்கும் கேள்விகள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பேச முன்வராதது வருத்தமே.
இந்த புத்தகம் முன் வைக்கும் கேள்வி மிக சிக்கலானது.
‘பெண்கள் தான் ஆண்களின் கௌரவம் என்றால், அந்த கௌரவத்தை பாலியியல் பலாத்காரம் மூலம் சிதைப்பது ஏன்?’ ஒரு கட்டத்தில், ஆண்களை நோக்கி நேரிடையாக வைக்கப்பட்ட கேள்வியாக இது இருந்தாலும் - புத்தகம் முழுக்க இழையோடும் கேள்வி - ‘ஒரு பெண் பாலியியல் கொடூரத்துக்கு ஆளாகி நீதி கேட்டு எவ்வாறு நிரூபிப்பாள் தனக்கு நிகழ்ந்த கொடூரத்தை?’

ஆண்கள் தன்னை வன்புணர்ந்ததைக் கண்ட நான்கு சாட்சிகள் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், திருமண எல்லை தாண்டி உறவாடிய குற்றத்துக்கு ஆளாகி, அவளுடைய புகாரையே ஆதாராமாகக் கொண்டு தண்டிக்கப்படுவாளென்ற விதியினால், பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியியல் கொடூரங்களை வெளியே சொல்ல முடியாத அடிமைகளாக வாழவேண்டிய இக்கட்டான சூழ்நிலை.

ஒரு பெண் மீது அவதூறு குற்றச்சாட்டு வைப்பவர்கள் அதற்கான நான்கு சாட்சிகளை அழைத்து வரவேண்டுமென்ற விதி பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. ஒரு பெண் மீது அபாண்டமாக குற்றச்சாட்டு சுமத்துபவர்கள் அதற்கான நிரூபணத்தையும் தர வேண்டிய பொறுப்பேற்க வேண்டும் என்பதன் மூலம் கண்ணியமான பெண்கள் மீது அவதூறு இழைப்பதை தடுப்பதே அதன் நோக்கம்.

ஆனால் தங்கள் அதிகார வரம்பே நீதியின் வரம்பாக கொண்டு செயல்படும் இனக்குழுக்கள் - தாங்கள் சார்ந்த மதத்தின் மாண்பை விட - தங்கள் சுயநலத்தை முன்னிட்டு - இனப்பெருமை மாயையில் வகுத்த வழிமுறைகளை, வலுவிழந்த இனத்தின் மீது சுமத்தி அவமானப்படுத்தி ஒடுக்குவதற்கு பாதுகாப்பாக மாற்றிக் கொண்டுவிட்டனர்.

இதைக் கொண்டே முக்தரனுக்கு நீதி மறுக்கப்பட்டது. அவர் குஜார் இனத்தைச் சார்ந்த ஒரு ஏழை விவசாயின் மகள். அவர் எதிர் கொண்டவர்களோ வலிமை மிக்க மஸ்டோய் இனத்தைச் சார்ந்த நிலச்சுவன்தார்கள்.

மனித உரிமை அமைப்புகள், பெண்ணியவாதிகள், சர்வதேச பத்திரிக்கைகள், மேற்கத்திய அரசுகள் கொடுத்த அழுத்தம் இவற்றைக் கொண்டே அவர் போராட முடிந்தது. ஆனால், இத்தனை துணைகளும், உதவியும் கிடைத்திராவிட்டால், அவரால் இத்தனை காலம் போராட முடிந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த அழுத்தங்கள் கொடுத்த விளைவு - முஷரப் - ஒரு சிறு திருத்தத்தை முன் வைத்தார் - தனக்கு நிகழ்ந்த பாலியியல் கொடூரத்தை வெளியில் சொல்லும் பெண், அதை நிரூபிக்க இயலாத பட்சத்தில், adultery என்ற குற்றம் சுமத்தப்பட மாட்டாளென்ற திருத்தம் கொண்டு வந்தார். அதன் நோக்கம் - குற்றமிழைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்குள்ளே புழுங்கிப் போய்விடாமல், அதை வெளியில் சொல்லவாவது முன் வருவார்கள் என்பது தான்.

பெண்களால் வெளியில் சொல்ல முடியும் - நீதி கேட்டு வாய் திறக்க முடியும் என்பதே - இந்த பாலியியல் கொடுமை இழைப்பதை தடுக்கும் ஒரு சிறு அரணாக இருக்கும் என்பதனால் தான். It would act as a deterrent to the future rapists.

ஆனால் அதற்கு கிளம்பிய எதிர்ப்பு திகைக்க வைக்கிறது. தங்களது ஆணாதிக்க சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பவர்கள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும் என்று நிர்த்தாட்சண்யமாக நிரூபித்திருக்கின்றனர். இஸ்லாமிய சட்ட விதிகளில் காலத்தின் தேவைக்கேற்ப சிறிய ஒத்திசைவுகள் என்று முனைபவர்களை இத்தனை மூர்க்கமாக எதிர்க்கும் இவர்கள் - அதே இஸ்லாத்தில் அங்கம் வகிக்கும் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகளைக் கண்மூடி பாராதிருப்பது - அதுவும் தன் பாதுகாப்பிற்காக தான் வாசிக்கும் குரானை மார்போடு அணைத்து வந்த ஒரு பெண்ணை வன்புணர்ந்தது - இது அநியாயம் - இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய இடமில்லை என்று அறிவுறுத்திய பள்ளி இமாமை புறக்கணித்து வெளியேற்றியது - இவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்ட அக்கறையை விட, தாங்கள் வலுவிழந்த சமுதாயத்தை ஒடுக்குவதற்கு உபயோகப்படுத்தும் ஒரு வழிமுறையை இழக்கப் போகிறோமே என்ற ஆத்திரமும், தங்களின் போகப்பொருளாகவே மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட பெண்களின் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான எழுச்சிக்காவது இது வித்திட்டு விடுமே என்ற அச்சமும் கூட காரணமாக இருக்கலாம்.

உதாரணமாக, கற்பழிப்புக்கு ஆளான, டாக்டர் ஷாஸியா காலித், தன்னை பாலியியல் பலாத்காரம் புனைந்தவனை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மாறாக, கணவனுடன் நாடு துறந்து லண்டன் சென்று விட்டார். காரணம், அரசின் நேரிடையான, எதிர்மறையான மிரட்டல்கள். நாடு விட்டுச் செல்வதற்கு, கணவனுக்கும், மனைவிக்கும் தான் அனுமதி கிடைத்தது. பள்ளியில் படிக்கும் அவர்களது மகனை பாக்கிஸ்தான் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவன் தான் அரசின் துருப்புச் சீட்டு. ஷாஸியா, தன் துயரத்தை சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்கு சொல்வாராயின், அவரது மகனுக்குப் பாதுகாப்பில்லை. இது ஒரு அரசு செய்யும் பயங்கரவாதம். வன்புணர்ந்தவன் ஒரு ராணுவ வீரன்.

சமூகத்தில் ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும் - படித்திருந்தாலும், பாமரச்சியாக இருந்தாலும், ஒரு ஆண் விரும்பினால், அந்தப் பெண்ணை பலாத்காரப்படுத்தி விட்டு, எந்த வித தண்டனையுமின்றி போய்விடலாம் என்பதே நிலைமை.

இந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றி, அப்படி கூட இருக்குமா என்று சந்தேகப்படுபவர்களுக்கு - முஷரப் நேரிடையாக உத்தரவிட்டார் - to keep Mukhtharan under state exit control list. அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளியான செய்தி. கூடுதலாக பாதுகாப்பு என்ற பெயரில் கண்காணாத இடத்தில் சிறை வைப்பு வேறு. சர்வதேச பத்திரிக்கைகள் கூக்குரல் எழுப்பியதும் தான் விடுதலை செய்தனர். இல்லையென்றால் பாக்கிஸ்தான் என்பது ஒரு காட்டுமிராண்டி நாடு என்ற பெயர் வந்து விடும். சர்வதேச உதவிகள் தடைபடும் என்ற இக்கட்டான சூழல் தான் காரணம் - முக்தரண் விடுவிக்கப்பட.

முக்தரனுக்குப் போராட இயன்றது. காரணம் - அவரிடத்தில் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் மற்ற பெண்களுக்கு...???

இந்த இடத்தில் Khaleej Timesல் டிசம்பர் 26 அன்று, 34 பக்கத்தில் வெளியான ஒரு செய்தியையும் சொல்ல வேண்டும். அது, கணவனையன்றி பிற ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்ணைத் தண்டிப்பதற்காக இந்திய அரசு, ஒரு பிரேரணையை முன் வைத்தது. சட்டப் பிரிவு 497ல் திருத்தம் கொண்டு வர தேசிய பெண்கள் சம்மேளனம் மறுத்து விட்டது. (The National Commission for Women). அந்தப் பெண் மோசம் செய்யப்பட்டவளாக - வஞ்சிக்கப்பட்டவளாக மட்டுமே கருதப்பட வேண்டும் - குற்றம் செய்தவளாக அல்ல என்று பரிந்துரைத்திருக்கின்றது. It has stated that the law has to consider the relatively socially disempowered position of women and not to prosecute her.

இந்தியப் பெண்களை விட பாக்கிஸ்தானியப் பெண்கள் ஒன்றும் - socially empowered creatures அல்ல. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பெண்களுக்கும் சட்டம் ஒரு பாதுகாப்பைத் தரவேண்டும். ஒரு பெண்ணின் மீது பிறர் அவதூறு சொல்வதைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்ட விதியைக் கொண்டு, அந்தப் பெண்ணே தன் சுயகௌரவம், நற்பெயர் இவற்றிற்கு உண்டாக்கும் களங்கம் பற்றிய அச்சத்தை மீறி ஒரு புகார் கொடுக்கும் பொழுது, நான்கு சாட்சிகளைக் கூப்பிடுவதை விட, அறிவியலைத் துணைக்கழைப்பது நன்றாகும். மருத்துவப் பரிசோதனை நிரூபித்து விடும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாளா, இல்லையா என்பதை. மரபணு பரிசோதனை மூலம், உடலுறவு கொண்ட ஆணை அடையாளம் காண இயலும். ஆனால், இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம்பிடிப்பதும், இந்தப் பரிசோதனைகள் நடந்தாலும் நான்கு சாட்சிகள் அவசியம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புத்தகம் முன் வைக்கும் இத்தகைய கேள்விகள், மனசாட்சியுள்ள மனிதனின் மனதைக் குடையும்.

Yes, This would haunt forever the conscience of the man following the faith - atleast me.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்