"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, December 30, 2007

பே நசீரின் மரணம் இட்டுச் செல்லும் பாதைகள்....


"உங்களுக்குப் பாக்கிஸ்தான் செல்வதற்கு அச்சம் இல்லையா?"

" இல்லை "

"உங்கள் உயிருக்கு ஆபத்து என்று தோன்றவில்லையா?"

"இல்லை. வாழ்வதும், இறப்பதுவும் இறைவனின் கையில் இருக்கிறது. இறைவன் என்னை அழைக்கும் வரை, இறப்பைப் பற்றிய அச்சமின்றி இருப்பேன்"

தீர்க்கதரிசனம் என்பது இதுதானா?

NDTVயின் பர்கா தத் பேநசீரின் உரையாடிய பொழுது, பேநசீர் இவ்வாறு குறிப்பிட்டார். "என் சொந்த மண்ணிற்குத் திரும்ப, நாட்களை, மணிகளை, நிமிடங்களை, நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தேன்" என்று பூரிப்புடன் சொன்னார். அவர் முகத்தில் எப்போதுமில்லாத அசாத்திய நம்பிக்கை.

ஆனால், இவை எவற்றையும் இறைவன் கேட்கவில்லை போலிருக்கிறது. அழைத்துக் கொண்டான். அவ்வாறு சொல்லி நடந்த விஷயங்களை ஜீரணித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால், இந்த மரணத்தை செரித்துக் கொண்டால் போதுமா? பாக்கிஸ்தானில் நிகழ்பவை இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும். தீவிரவாதிகளை எதிர்த்துப் போர் புரிய இந்தியா, தனது ஒத்துழைப்பை அமெரிக்காவுக்கு நல்கிய பொழுது, அதை அமெரிக்கா நிராகரித்தது. பாக்கிஸ்தானையே தேர்ந்தெடுத்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை முஷரஃப் ஒழித்து விட்டாரா?

முஷரஃப் தீவிரவாதிகளை ஒடுக்கி விட்டாரா என்ற கேள்விக்கு, உதடு பிதுக்கி இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் தீவிரவாதிகள் பற்றிய புரிதலே இல்லையோ என நினைக்கும் படியாகத் தான் செயல்பாடுகள் இருக்கின்றன. அமெரிக்காவின் வற்புறுத்தலுக்காகவே, தீவிரவாத எதிர்ப்பைக் கடைபிடிக்கிறார் போலும் தோன்றுகிறது. பே நசீர் புட்டோவின் மரணத்துக்குக் கூட ஒருவிதத்தில் அவர் காரணமாகி விட்டார் என்றே கூற வேண்டும்.


அமெரிக்காவின் தொடர்பில் இருக்கும் எவரையும் மலைக்குகைகளில் ஒளிந்து வாழும் தீவிரவாதிகள் மன்னிக்கத் தயாரக இல்லை. பேநசீர் பாக்கிஸ்தான் திரும்பும் முன், முஷ்ரஃப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் - அதிகார பகிர்வு ஒப்பந்தம் மிகத் தவறானது. இந்த ஒப்பந்தத்தை முன்னின்று நிகழ்த்தியது அமெரிக்கா என்பது வெளிப்படையாகத் தெரியும் அனைவருக்கும். அப்படி இருக்கையில், வெகு அலட்சியமாக அவரது பாதுகாப்பைக் கையாண்டது மிகத் தவறானது.

இம்ரான் கான் பேட்டியை NDTVயில் காண நேர்ந்தது. அப்பொழுது அவர் சொன்ன சிலவை சிந்திக்க உகந்தது. எல்லாவற்றிற்கும் அல்கொய்தா பெயரையே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதற்கான நீதிவிசாரணை நடத்தப்பட்டு, அவர்களது குற்றங்கள் நிரூபிக்கப்படவேண்டும் என்றார். முடக்கிப்போடப்பட்ட நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

பேநசீரின் மரணத்திற்கு மெஹ்சூத் என்ற தாலிபான் தலைவர் தான் காரணம் என்று ஒரு டேப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உடனே அல்கொய்தா அதை மறுத்திருக்கிறது. தன்னுடைய செயல்களுக்கு எப்போதுமே உரிமை கொண்டாடும் ஒரு இயக்கம் வெளிப்படையாக மறுத்தது - புட்டோவின் கொலையில் புதிய சந்தேகங்களை உருவாக்குகிறது. குண்டு பாய்ந்து இறக்கவில்லை. வண்டியின் மேற்கூரையில் தலை மோதிய அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்ற தகவலை இப்பொழுது கூறுகிறார்கள். பேநசீரின் உதவியாளர் அதை மறுத்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை. குடும்பத்தினரின் வேண்டுகோள் ஏற்று செய்யவில்லை என்கிறார்கள். ஆக, தீவிரவாத சதி என்பது பெரும் குழப்பத்திற்குத் தான் இட்டுச் செல்கிறது. அரச சதியாகக் கூட இருக்கலாம் என்ற ஊகமும் பலரால் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவரின் வாகனம் அருகே அத்தனை அநாயசமாக ஒருவரால் நெருங்க முடிகிறது என்பதே எத்தனை தீவிரமாக தீவிரவாதம் எதிர்க்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும். பின் எங்கிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படுகிறது என்ற கோஷத்தை நம்புவது?

தீவிரவாதம் என்பது ஒரு ideology. அதை ஒழிக்க வழமையான ஆய்தங்கள் ஏந்திய ராணுவத்தால் முடியாது. இது உலகெங்கிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போர் புரிந்த அரசுகளின் அனுபவமாக இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தை மற்றொரு சித்தாந்தத்தின் மூலமாகத் தான் எதிர்க்க முடியுமே தவிர, ஆய்தப் பலப்பிரயோகம் அடக்கி விடாது. ஆகையால் ஆய்த வலிமை கொண்டு, தீவிரவாதத்தை எதிர் நோக்குவதை விட, தீவிரவாதிகளின் இயங்குதளமாக அமையும் மக்கள் வாழுமிடங்களை அணுகி, அவர்களை வென்றெடுப்பதின் மூலமே தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

ராணுவ ஆக்கிரமிப்பால், எல்லா இடங்களையும் நிரப்பிவிட்டால், தீவிரவாதிகள் இருக்க இடமில்லாமல் ஓடி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புத் தான் அரசு எந்திரங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறது. எந்திரத் தனமாக செயல்படும் அரசுகள் இருக்கும் வரை, மக்கள் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக் கிடக்க நேரிடும். தங்களுடைய தேவைகளை மக்களின் அதிருப்தியில் எளிதாக ஊடுருவச் செய்து, தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள தீவிரவாதிகளால் எளிதாக முடிகிறது.

முதலில் தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகத் தான் அடையாளம் காணவேண்டுமே தவிர, அவர்களை மக்களின் மதத்தோடு இணைத்துப் பேசி, மக்களை அன்னியப்படுத்தி, தீவிரவாதிகளை நோக்கி நெட்டித் தள்ள முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமானால், அத்தகைய செயல்களைச் செய்யலாம். ஆனால், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் அதை அவ்வாறு செய்ய முடியாது. அது தேவையற்ற மூர்க்கத் தனத்தில் தான் கொண்டு போய்விடும். மக்களின் எந்த ஒரு கலாச்சார கூறுகளோடும் தீவிரவாதிகளை இணைத்துப் பேசுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பின் இயங்கக் கூடிய ஒரு நிர்வாகத்தை மக்களுக்கு அரசு தரவேண்டும். வடமகாணங்களில், இன்றளவும் அரசு என்று ஒன்றில்லாமல், பழங்குடி இனத்தலைவர்கள் தயவில் தான் அரசு இயங்குகிறது. இந்தத் தலைவர்களை, மதத்தின் பெயரால், தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது தீவிரவாதிகளுக்கொன்றும் பெரிய சித்து வேலை கிடையாது. அரசு நிர்வாகம் நடக்க வேண்டுமென்றால், அங்கு முதலில் மக்கள் பங்குபெறக் கூடிய ஆட்சி தேவை. முறையான தேர்தல்கள் மூலம் மக்களை பங்கு பெற வைக்க முடியும்.

இதெல்லாம் இல்லாமல், முஷ்ரஃப் தன் ராணுவத்தின் பலத்தையும், அமெரிக்காவின் ஆய்த சப்ளையையும் மனதில் கொண்டு, தீவிரவாதிகளுடன் போர் தொடுத்தால், நாட்டை அழிவுப் பாதையில் தான் நடத்திச் செல்ல முடியுமே தவிர, நேர்வழியில் அல்ல. பாக்கிஸ்தானில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால், பாக்கிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்பட்டு, அவர்கள் முழுமனதுடன் தீவிரவாதத்தை மக்கள் ஆதரவுடன் எதிர்த்துப் போரிட வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வெட்டி சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு மனப்பூர்வமாக போரிட முன்வர வேண்டும்.

பாக்கிஸ்தான், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சீரிய சூழ்நிலையில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள, முஷ்ரஃப் உதவ வேண்டும். தன் பதவியைத் துறந்து விட்டு, மக்கள் அரசு அமைய உதவ வேண்டும். முஷரஃபிற்குத் தேவையான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அமையக் கூடிய அரசு செய்ய வேண்டும். அவரின் உயிருக்கும் எந்நேரமும் ஆபத்துகள் விளையக் கூடுமென்பதால், அவரது பாதுகாப்பிற்குப் அமையவிருக்கும் அரசுகள் உத்தரவாதம் தரவேண்டும். அத்துடன் மக்களை அரவணைக்கும் வேலையில் - மக்களை ஒன்றிணைக்கும் வேலையில் அரசு ஈடுபட வேண்டும்.

இல்லையென்றால், பாக்கிஸ்தான் தோற்கும். சிதறிப்போகும். சிதறிப்போகும் பாக்கிஸ்தானால் தான் இந்தியாவுக்கு அதிக ஆபத்துகள் விளையக் கூடும்.

பேநசீரின் மரணம், தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு வலுவான கதவைத் திறந்து வைத்திருக்கிறது. மக்களின் ஆதரவை தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமுகப்படுத்த பாக்கிஸ்தானில் நல்ல சூழ்நிலை நிலவுகிறது.

இதை பயன்படுத்துவார்களா?

Tuesday, December 25, 2007

வணக்கமும் வந்தே மாதரமும்

நல்லடியாரின் வணக்கம் வணக்கம் வணக்கம் பதிவில் பின்னூட்டமிட்டது.

வணக்கம் என்ற சொல்லின் பயன்பாட்டை, இத்தனை தூரத்திற்கு ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் பொழுது, வியப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு செயலையும், எந்த நோக்கோடு செய்யப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டே, அந்தச் செயல் அங்கீகரிக்கப்படுகிறது. எந்த உள்நோக்கமுமின்றி, இயல்பாக ஒரு மொழியைப் பயன்படுத்துவதால், எந்தப் பாதகமும் நிகழ்ந்து விடுவதில்லை.

நோன்பு வைப்பவர்கள், அதற்கான 'நிய்யத்' செய்து கொள்ள வேண்டும். அதாவது தனது நோக்கம் குறித்த உறுதிபாடு. இவ்வாறு 'நிய்யத்' செய்யாமல், சும்மா பட்டினி கிடப்பதெல்லாம், நோன்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதே போல், தொழுகையின் போது, 'இந்தத் தொழுகையை தொழுகிறேன்' என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது தொழுகையாக ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆக, இறைவனை வணங்கும் பொழுது, 'நான் உன்னை வணங்குகிறேன்' என்ற உறுதியில்லாதவற்றை இறைவணக்கமாக ஏற்பதில்லை என்ற கோட்பாட்டை இஸ்லாம் உருவாக்கியதே இணைவைத்தல் என்ற பாவத்தை செய்து விட கூடாது என்ற காரணத்தால் தான்.

இணைவைத்தல் நிகழ்வதற்கு - 'நான் இன்னதை வணங்குகிறேன் - இறைஞ்சுகிறேன்' என்ற 'நிய்யத்'தை செய்து கொண்டாக வேண்டும். இன்றும் பலர் தர்காவில் அடக்கமாகி இருக்கும் அறிஞர்களிடத்தில் 'நேர்ச்சையாக' வேண்டிக் கொள்வார்கள் - எனக்கு நீ இதைக் கொடுத்தால், நான் உன் தர்காவில் வந்து இன்னின்ன செய்கிறேன் என்று. அதாவது ஒரு உறுதிபாடை உண்டாக்கிக் கொள்கிறார்கள். 'நிய்யத்' செய்கிறார்கள். அதுவே தவறாகிறது. ஆனால், எந்த ஒரு 'நிய்யத்'துமின்றி, ஒரு சுற்றுலா போன்று அங்கு சென்று வருவதற்கு தடையேது?

இங்கு 'வணக்கம்' என்று சொல்வது, எதிரில் இருப்பவரை நான் இறைவனாகக் கருதி வணங்குகிறேன் என்பதாகக் கருதக் கூடாது. மரியாதை செலுத்துவதைக் குறிக்கும் ஒரு மொழியின் சொல். அந்த சொல்லைப் பயன்படுத்தினால், அது இறைவனுக்கு இணைவைத்ததாகிவிடும் என்பது மூளையின் சிந்தனைச் ஜவ்வுகளை வலுக்கட்டாயமாக இழுத்து சிதைப்பதாகும் - வதைப்பதாகும். சிந்தனையாகாது.

வந்தே மாதரம் என்ற பாடலில் மண்ணின் பெருமையைத் தான் சொல்வதாகக் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, அதை இறைவனாக உயர்த்தி, மனதில் 'நிய்யத்' செய்து கொண்டு வணங்குவதாகக் கருதக் கூடாது. இத்தகைய மனத் தடைகளைக் களைவதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும். மொழியைக் கையாள்கையில், அநாவசியமாக நோக்கங்கள் கற்பித்துக் கொண்டு, தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக் கொண்டு, தனித்தீவாக ஆவது சரியல்ல என்பது எனது கருத்து. இதை நான் எங்கும் படித்துச் சொல்லவில்லை. எனது சிந்தனையாகத் தான் முன்வைக்கிறேன்.

மொழிகளின் பயன்பாடு குறித்து இத்தனை மனத்தடைகளை எழுப்பிக் கொண்டது நாம் தானே தவிர, மொழிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மொழி பெயர்த்தவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள். அப்படியும் மனதில் சஞ்சலமிருந்தால், அழகப்பன் சொல்லியது போல, வணக்கத்திற்குரியவன் என்பதை வழிபடுதலுக்குரியவன் என்ற சரியான பதத்தை இனி நாம் கையாள வேண்டுமே தவிர, 'வணக்கம்' என்று சொல்ல மாட்டேன் என்று விலகி நிற்பது சரியல்ல.

நாம் பேசும் தாய்மொழியைத் தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக, நாம் இருவருக்குமே அந்நியமான மொழியில், 'அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்லிக் கொள்வோம் என்று அழைப்பு விடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதை அறிந்த இரு முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும். ஆனால், அரபி மொழி அறியாத ஒரு பிற மதத்தினருக்கு அவ்வாறு செய்யலாமே என்று பரிந்துரைப்பது தவறு.

'நோக்கங்கள்' தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது - ஒரு மொழியைக் கையாள்வதால்.

வணக்கம் என்று சொல்வதினாலும், வந்தே மாதரம் என்று பாடுவதினாலும் நாம் இறைவனுக்கு எந்த விதத்திலும் குற்றமிழைத்தவர்களாக மாட்டோம்.

As long as the intentions are clear, everything is fine.

இதை வாசித்து கருத்து சொன்ன நண்பர் ஒருவர் சொன்னார் - வணக்கம் என்பது தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் எழுந்த முகமன் அல்ல. தமிழர் பண்பாட்டின் வழியாக முகமன் சொல்வது "வாழ்க...." என்ற வாழ்த்துதலுடன் தான். எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். (வாழ்க வாழ்க என்பது போல..)

இந்த வணக்கம் என்பது ஆர்யர்கள் தமிழர்களிடையே புகுத்தியது. அடிமைப்படுதலைக் குறிக்கும் வகையில் வணக்கம் என்பதை புகுத்தி விட்டனர். பல பண்பாட்டு மயக்கங்களில் இதுவும் ஒன்று. இதை கைவிட வேண்டும். அதற்குப் பதில், 'வாழ்க..' என்று வரவேற்பதுவும், பதில் மொழியாக 'வாழ்க வாழ்க..' என்றும் கூறிக் கொள்வது, நம்மை அடிமைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும் என்று சொன்னார். (என்ன ஒன்று, வாழ்க வாழ்க என்று தகுதியற்ற தலைவர்களையெல்லாம் வாழ்த்துக் கொண்டிருக்கும் பண்பாட்டை நினைத்தால் தான், அந்த வார்த்தையை நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் பலமாக எழுகிறது. தகுதியற்றவர்களை கூட்டம் போட்டு, கோஷம் போட்டு, வாழ்க வாழ்க என்று கூவுவதை விட்டு விட்டால், வாழ்க என்பது வணக்கம் என்ற சொல்லிற்கு நல்ல மாற்றாக அமையக் கூடும்...)

ஆக, இனி, நாம் வாழ்க என்று சொல்லியே ஒருவரை ஒருவர் வரவேற்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

என்றாலும், 'இணைவைத்தலை' அதன் நோக்கம் கருதியே இணைவைத்தலா அல்லது இல்லையா என்று வரையறுக்க வேண்டுமென்பதைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நண்பர்கள் அனைவரும் வாழ்க என்று வாழ்த்தப் பழகும் வரையிலும் வணக்கத்தைத் தாராளாமாகச் சொல்லலாம்.

மோடிக்கு வாழ்த்துகள் சொல்வோம்

குஜராத் ஒளிர்கிறது என்று ஆரம்பித்து, பின்னர், ஒரு புள்ளியில் அதன் மீதான அவநம்பிக்கை கொண்டு, கொலை குற்றங்களை நியாயப்படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்த முனைந்த பொழுதே, தெரிந்து விட்டது மோடி வெற்றி பெறுவார் என்று.

மக்களின் ஏகோபித்த ஆதரவு - நேர்மையான ஆட்சியும், மக்களின் அன்றாடத்தேவைகளை சிரமேற்கொண்டு செய்வது என்ற முனைப்பினாலும் வந்தது என்பதே உண்மை. இது அனைத்து அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் மோடியின் சிறப்புகள் இத்துடன் முடிவடைந்து விட்டன.

அப்பட்டமாக, சிறுபான்மை இனத்தவரின் மீது தன் பரிவாரங்களை ஏவிவிட்டது - அந்தக் குற்றச் செயல்களை மூடி மறைப்பதில் முன் நின்றது, எல்லாவற்றிற்கும் மேலாக, தன் வாயாலே அரச கொலைகளை நியாயப்படுத்தியது என தலைமைக்குத் தகுதியற்ற பல பண்புகளைக் கொண்டிருக்கும் அவரை - என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவரது பாவச் செயல்கள்.

பின் எப்படி இத்தனை ஆதரவு?

கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைக் கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அதனாலேயே, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் சிறந்த தலைவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

ஆனால்,

முதலில் அதிகாரம் கைக்கு வரட்டும் - எல்லாரையும் அச்சுறுத்தி அடக்கி வைப்போம். பின்னர், நல்வழிகளைத் தேடும் என்ற 'anti-hero' கதையின் நாயகனாக மோடி இருக்கும் பட்சத்தில், இப்பொழுது அவர் நல்வழியைத் தேடும் கட்டாயத்தில் இருக்கிறார்.

இன்று குஜராத்தில், தனித்தீவாக சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தங்கள் பிழைப்புக்காக, தங்களது இயற்பெயரையே மறைத்துக் கொண்டு, ஹிந்துப் பெயர்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு சிறுபான்மையினர் தள்ளப் பட்டிருக்கின்றனர்.

இந்த சூழலையெல்லாம், எவ்வாறு மோடி மாற்றப் போகிறாரென்று தெரியவில்லை. இனி அவரே முயற்சித்தாலும், மக்களிடையே அவர் தோற்றுவித்த பிளவுகளை இணைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். அவ்வாறு இணைக்க முடியுமென்றால் - அதற்கான விலை அவருக்கு மிகப்பெரியதாக இருக்கும் - சொந்த சகாக்கள் சிலரையே அவர் பலி கொடுக்க வேண்டியதிருக்கும். அவ்வாறு இணைக்க முடியுமென்றால், அவர் தோற்றுவித்த பிளவுகளை அவரால் கடக்க முடியுமென்றால் - சந்தேகமேயில்லை - அவர் நிச்சயமாக ஒரு சிறந்த தலைவராக வர முடியும்.

இனி வருங்காலத்தில், மோடி கவனிக்கப்படுவார் -

எவ்வாறு அவர் மக்களிடையே தோற்றுவித்த அச்சத்தையும், வெறுப்பையும் போக்கப் போகிறார் என்று. அவர் அந்த வழியில் செல்வாரா, இல்லை மீண்டும் மீண்டும், மக்களை பிளவு படுத்தி அதன் மீது தனது பிம்பத்தை எழுப்பிக்கொள்வாரா என்பதை அனைவருமே கவனிப்பர்.

சிறுபான்மை இனத்தவர்கள் சொல்கின்றனர் - 2002 கடந்து செல்ல விரும்புகிறோம். இது ஒரு நியாயமான ஆவல். நேர்மையான எதிர்பார்ப்பு.

அதற்காக மோடி மெனக்கெடுத்து, அவர்களுக்கு கரம் கொடுத்து உதவப் போகிறாரா, அல்லது, அவர்களை 2002 கடக்கவே முடியாத அச்சத்தில் உறைய வைக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்து, காலம் அவரைப் பற்றி எழுதும் -

அவர் சிறந்த தலைவரா, அல்லது ஹிட்லரை விட மோசமான பாசிஸ்டா என்று.

அவர் 2002 கடந்து தன் மக்களை அழைத்துச் செல்வாரென்றே நம்புவோம். தன் தனிமனித ஆகிருதியில் அவர் பெற்ற வெற்றி, பிஜேபியையும் விட அவர் பெரிதாகிக் கொண்டே போகிறார் என்ற செய்தியை தெளிவாக்குகிறது. குஜராத்தையும் தாண்டி அவர் தேசிய அளவில் வருவதற்கு அவர் முதலில் 2002ஐக் கடக்கட்டும்.

கடப்பார் வெற்றிகரமாக என்று வாழ்த்துச் சொல்வோம்.



பாலாவின் இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டது.

Saturday, December 22, 2007

தியாகப் பெருநாள் செய்தியின் தொடர் சிந்தனைகள்.

தியாகப் பெருநாள் செய்தி யின் தொடர் சிந்தனைகள்.

வலிமையான செய்தி.

நேர்மையுடன் தன் தரப்பு வாதங்களைக் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் எடுத்து வைக்கும் அழைப்பிற்கு ஒரு பாராட்டு.

ஓட்டுகள் குத்தி ஆதரவு காட்டிய சகோதரர்கள், ஏனோ கருத்து தெரிவிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. தங்கள் அடையாளங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டாம் என்று நினைக்கிறார்களா, என்ன?

சகோதரர்கள் மனமுவந்து நியாயத்திற்கப்பாற்பட்ட விமர்சனங்களை எதிர்த்து எழுத வேண்டும் - நியாயாமான நேர்மையான மொழி நடையில் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கு ஆக்கப் பூர்வமான பதில் தரவேண்டும்.

ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களது அடையாளங்களை மொத்த இந்திய சமூகத்தின் மீதும் சாட்டி, மற்ற சகோதரர்களைப் புண்படுத்தா நடையில் எழுத வரவேண்டும்.

நியாயமான நேர்மையான எழுத்துககளை மக்கள் என்றும் மதிப்பார்கள்.

வெளியிலிருந்து வலிந்து திணிக்கப்படும் இழிவுகளைக் களைய முனையும் அதே வேளையில், 'நீ பெரியவனா, நான் பெரியவனா?' என்ற ரீதியில் அணி பிரிந்து அடித்துக் கொண்டிருக்கும் செய்திகளும் கண்ணில் படுகின்றன. தங்கள் சுய நலனை சமுதாய நலனைக் காட்டிலும் மேலானதாக நினைப்பவர்களையும் குறித்து கண்டித்து எழுத முன்வரவேண்டும்.

எழுத்தாளர்களைக் குறித்தான மாற்றுக் கருத்துகள் என்னிடம் உண்டு. உள் விசாரணைகளாக எழும் அவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வைக்க வேண்டியதில்லை. அவர்களது, 'ஆராய்ச்சிகள்' நல்ல பலன் கொடுக்கக் கூடும் - அறியப்படாத விஷயங்களைப் பற்றிய ஒரு விவாதத்தைத் தொடங்க உதவலாம். அவற்றைப் பற்றிய கருத்தாக்கங்கள் எவ்வாறிருப்பினும்.

சுயநலம் கொண்டு, இளைஞ்ர்களைத் தூண்டி, மோதவிட்டு, தங்கள் மேலாண்மையை, ஊர்தோறும் நிருவ நினைக்கும் சகோதரனை விட, ஒரு பழக்கம் குறித்து, தீவிர சிந்தனையுடனும், ஆர்வத்துடனும், கேள்வி எழுப்புபவர்கள் மோசமானவர்கள் அல்ல.

ஒரு சில 'மேதாவிகளுக்கு' நடுவே மட்டும் இயங்கும் இவர்களது செயல்பாடுகளை விமர்சித்து, ஒரு தீர்வு கிட்டும் முன்னே, தண்டனை வழங்கி, சுயசிந்தனைகளை முடக்கிப் போட நினைப்பது நல்லதல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய அறிஞர்கள் அந்தக் காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப - தேவைக்கேற்ப மறுவாசிப்புக்கு இஸ்லாமிய விதிகளை உட்படுத்தியே வந்திருக்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில், இந்த மறுவாசிப்பும், விசாரணையும் நின்று போய்விட்டது.

அதன் பின், தங்களது விருப்பத்திற்கேற்ப வாசித்துக் கொள்ளும் நபர்கள் பெருகிவிட்டதனால், இஸ்லாத்தின் எளிமை களையப்பட்டு, இறுக்கம் நிறைந்த ஒரு மார்க்கமாக இவர்களால் பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது. இதன் மூல காரணம் - பொது நீரோட்டத்திலிருந்து விலகி, தனித்தீவாக சமுதாயத்தை மாற்றி, அதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டை இறுக்கமாக சமூகத்தின் மீது ஏற்றிவிடலாம் என்ற சிலரின் நப்பாசை தான்.

இந்தியாவின் முகல், துருக்கியின் ஓட்டமான் பேரரசுகள் தேயத் தொடங்கியதும், இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள் அதன் எதிரிகள் என்ற பயங்கரத்தை முன்நிறுத்தி, அதன் மூலம் எழும் உணர்வுகளை தங்கள் ஆதரவுத் தளமாக மாற்றிக்கொள்ள முற்பட்டனர் சிலர். அத்தகைய போக்கு இன்றும் எங்கெங்கும் காண முடிகிறது. உதாரணமாக, கொமெய்னி, பின்லேடன், மற்றும் ஹமாஸ் இயக்கங்கள். இந்த மாதிரியான மதவாதத்தை முறியடிக்காத வரையிலும், நாம் வெளியிலிருந்து எழும் கருத்துகளை மட்டுமே சாடிக் கொண்டிருந்து விட்டு எதையும் சாதிக்கப் போவதில்லை.

இன்று உலகின் பெரும் சிந்தனை தளங்கள் இயங்கக் கூடிய மொழிகளை அனைவரும் கற்றுக் கொள்வது நல்லது. அதில் பரிச்சியம் ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம், ஒரு இடத்தில் நிகழ்பவைக்கு மட்டுமே எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பேன் என்றில்லாமல், ஒரு விரிந்த தளத்தில் தேவையான கருத்துப் பரிமாற்றங்களை ஏறிட்டுக் கொள்ளலாம்.

இது குறித்து மேலும் தெளிவு பெற விரும்புபவர்கள் - The Struggle within Islam என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அந்தப் புத்தகம் ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல. ஆனால், அது ஒரு உள்முக விசாரணை. ஏன், இஸ்லாம் தன் பெருமைகளை இழந்தது என்ற கேள்வியோடு, இஸ்லாமிய ஆட்சியாளார்கள் குறித்து - நபிகளின் மரணம் தொட்டு ஆரம்பித்து, முகல் பேரரசின் வீழ்ச்சி, ஓட்டமான் பேரரசின் வீழ்ச்சி, மூர் இனத்தவர் ஸ்பெயினில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது என முழு வரலாற்றையுமே ஒரு கூரிய விமர்சனப் பார்வையுடன் எழுதி இருக்கிறார் Dr, Rafique Zakaria.

எழுத வாருங்கள் என்ற அழைப்பு எத்தனை முக்கியமானதோ, அத்தனை முக்கியம் எதை எழுதுவது என்று. இந்த எதை எழுதுவது என்பதில், பலத்த சர்ச்சைகளும், மனத்தாபங்களும் எழலாம். ஆனால், இனியும் குறைபாடுகள் என்று இஸ்லாத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து வைப்பதிலோ, அல்லது அது குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் - நாங்கள் இருக்கிறோம் என்ற சில சுயநலமிகளின் வார்த்தைகளை ஏற்று, பெரும்பான்மையானவர்கள் மௌனமாக இருப்பதுவோ சரியல்ல.

ஒவ்வொருவரும் தங்கள் சக்தியைக் கொண்டு, சுயமாக சிந்திப்பதுவும், தங்களுக்குச் சொல்லப்படும் செய்திகள் சரிதானா, நேர்மையானதா என்று எடை போட்டுப் பார்க்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதுவும் தான், வலிமையான ஆயுதமாக பேனாவின் முனையை மாற்றும்.

இல்லையென்றால், மேலும், மேலும் சாதரணனைக் குழப்பவும், திகைக்க வைக்கவும் தான் செய்யும்.

அனைவரும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

Thursday, December 20, 2007

இணையத் தளங்களில் இஸ்லாம் - இறுதிப் பகுதி.

இணையத் தளங்களில் இஸ்லாம் - இறுதிப் பகுதி.

பகுதி 1: இங்கே வாசியுங்கள்.

பகுதி 2: இங்கே வாசியுங்கள்.


பகுதி 3: இங்கே வாசியுங்கள்.




Coffee House: வலைப்பூக்கள்.


இணையப் பயன்பாட்டில் வெகுவேகமாக முக்கியத்துவம் பெற்று வரும் இந்த வலைப்பூக்கள், நாளைய வெகுஜன பத்திரிக்கைகளுக்குப் போட்டியாக கருத்தாக்கங்களை உருவாக்க முடியும். தகவல்களை அதிவேகத்துடன் பகிர்ந்து கொள்ள இயலும். இந்த வலைப்பூக்களை "Coffee House" என்றே குறிப்பிடுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இயங்கிய காப்பி கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் முக்கிய செயல்பாடு, காபி குடிப்பதுடன், அன்றைய தினசரிகளை வாசித்து, அவற்றில் வந்திருக்கும் செய்திகளை விலாவாரியாக விமர்சிப்பது.


பல வலைப்பூக்களும் அதைப் போலவே, அன்றைய பரபரப்பூட்டும் செய்திகளை, தகவல்களை விமர்சித்து விவாதத்திற்குட்படுத்துகின்றனர். செய்தி விமர்சனம் மட்டுமன்றி, மேலும் பல ஆக்கப்பூர்வமான படைப்புகளும் இங்கு வருகின்றன. அவற்றை விடுத்து இஸ்லாத்தின் மீதான தாக்கம் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.


இஸ்லாத்தின் மீதான விஷமப்பிரச்சாரம், இந்த வலைப்பூக்களில் தான் கொடி கட்டிப் பறக்கிறது எனலாம். இத்தகையவர்களின் போலிப் பிரச்சாரத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என முனைந்து பல இஸ்லாமிய சகோதரர்கள் எழுத முன்வந்ததும், ஆரம்ப கால தயக்கங்களுக்குப் பின் இப்பொழுது சரளமாக எழுதப் பழகிக் கொண்டனர் என்பதும் உற்சாகம் தரும் விஷயங்கள். சிலர் விஷமப் பிரச்சாரத்திற்குப் பதில் தருவது மட்டுமன்றி, குரான் விளக்கவுரைகள், மற்ற இஸ்லாமிய இலக்கிய வடிவங்களைப் பற்றிய எழுத்துகள் என விரிவான வழியிலும் தடம் பதித்திருக்கின்றனர். இத்தகைய நேர்மறை ஆக்கங்கள் இருந்தாலும், இன்னமும் இஸ்லாத்தின் மீதான ஆதாரமற்ற நேர்மையற்ற விஷமப்பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய விஷமப்பிரச்சாரர்களில் பலரும் தங்கள் அடையாளங்களை மறைத்து, போலியான உருவங்களுடன் இயங்குபவர்கள்.


இவர்களின் முதல் தாக்குதலே, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது தான். முகம் தெரியாத, தனக்கென அடையாளமற்ற யாரோ ஒருவரை அல்ல - நட்பு ரீதியாக ஒரு விவாதத்திற்கு வருகை தர விரும்பும், அனைவராலும் அறியப்பட்ட இஸ்லாமியர்களைத் தான் இவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர். வெகுஜன ஊடகங்கள் எழுப்ப விளையும் பொதுத்துவமான இஸ்லாமிய பிம்பத்தை ஒட்டி, அதன் நீட்சியாக இங்கும் செயல்பட விழைபவர்கள். எந்த ஒரு நட்பையும் நாங்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்ட இவர்களின் மற்ற விமர்சனங்களின் லட்சணம் எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி கூற வேண்டிய அவசியம் உண்டா, என்ன? இவர்களின் கூற்றுகளை விமர்சனம் என்று கூட வகைப்படுத்த இயலாது. அறிவின்மையால் எழுந்த அவதூறுகள்.


நீங்கள் இறைவனையே அவன், இவன் என்றழைக்கும் பொழுது, நபிகளுக்கு மாத்திரம் என்ன மரியாதை கிடக்கிறது என்று கூறிக்கொண்டு, நபிகளைப் பற்றி ஒருமையில் இழிவாக எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற இவர்கள், இறைவனின் ஒருமையைக் குறிப்பதற்காக, தமிழ் மொழி இலக்கணப்படி, இறைவன் அவ்வாறு விளிக்கப்படுகிறான். ஆனால், நபி அவர்களை - கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தலைவரை, சற்று மரியாதையுடன் குறிப்பிடுங்கள் என்று குறிப்பிட்டே கேட்டுக் கொண்டும், அதை மீறியும் அவதூறாகப் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றனர். அத்துடன் நபிகளின் திருமணங்களை இழிவாக விமர்சிப்பது - அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை இங்கு குறிப்பிட இயலாது, இஸ்லாமியர்களின் அன்னையர்கள் என்று குறிப்பிடப்படும் நபிகளின் மனைவியர்களைப் பற்றி இழிவாக எழுதுவது என பல வகைகளிலும் எழுதி வருகின்றனர். மேலும் ஜனநாயகப் பண்பைப் பேணுகிறோம் என்னும் பெயரில், மிகக் கேவலமான மொழியில் எழுதப்படும் பின்னூட்டங்களை / விமர்சனங்களை அனுமதிக்கின்றனர் - அவற்றைத் தடுத்து நிறுத்த வழிகள் இருந்தும். இந்த விமர்சனங்களில் பல தாங்களே எழுதி தங்கள் பதிவில் இட்டுக் கொள்கின்றனர். காரணம் - நியாயமான மன சாட்சி உள்ள பலரும், அவர்கள் எழுத்தை குப்பை என ஒதுக்கி வாசிப்பதில்லை.


இவர்களில் ஒருவர், தான் இஸ்லாத்தின் கொள்கை பிடிக்காமல் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டதாக குறிப்பிட்டு கொள்கிறார். இது போலவே மற்றொரு தளத்திற்கு, ஒரு இஸ்லாமியப் பெண் பெயரிட்டு, அவர் இஸ்லாத்தை விமர்சிப்பதாக எழுதி மோசடி செய்து கொண்டிருந்தனர். அதன் உச்ச கட்டமாக, அந்த இஸ்லாமியப் பெண் காமக் கதைகளை எழுதுவதாக போலியாக இவர்களே எழுத முனைந்த பொழுது, இந்த மோசடியை சில மாற்று மத நண்பர்களே கண்டு பிடித்து, அம்பலப்படுத்தினர். மாற்று மத சகோதரர்களாலாயே சகிக்க முடியாத இந்த கொடுஞ்செயலை நாம் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது?


இஸ்லாமியர்கள், அதன் அமைப்புகள், தலைவர்கள், இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களைக் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும். இது குறித்தப் புரிதலை மற்றவர்களிடத்திலும் எடுத்துச் செல்ல வேண்டும். இத்தகைய விஷமிகளை அமைப்பு ரீதியாகச் செயல்பட்டால் மட்டுமே கண்காணிப்பதும், களைந்தெடுக்கும் முயற்சியாக காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை அணுக இயலும். இல்லையென்றால், நாளை இந்த இணைய உலகத்தில் இஸ்லாம் பற்றிய தவறான அவதூறும் இழிவும் நிறைந்த செய்திகள் மிக அதிகமாக நடமாடும்.


எப்பொழுதுமே, இஸ்லாமிய உலகம் தன்னைச் சுற்றி நிகழும் செயல்களுக்குச் சற்று தாமதமாகவே எதிர்வினை புரியும். இங்கும் அவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் தாமதிக்காமல், இணையம் என்ற இந்த மின்னணு உலகில் என்ன நிகழ்கிறது என்பதைக் குறித்து அக்கறையுடன் இஸ்லாமிய உலகம் நோக்க வேண்டும். இல்லையென்றால், தலைக்கு மேல் வெள்ளம் போகும் பொழுது, ஒரு சாண் என்ன, ஒரு முழம் என்ன என்று துயில் கொண்டிருக்கலாம் - எதிர்கால சந்ததிகள் இஸ்லாம் பற்றி அறியக் கூடிய தவறான செய்திகளைத் தலையணையாகக் கொண்டு.



முற்றுப் பெற்றது.

இணையத்தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல் பகுதி 3

இணையத்தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல் பகுதி 3

பகுதி 1: இங்கே வாசியுங்கள்.

பகுதி 2: இங்கே வாசியுங்கள்.



இணையம்: மின்னணு ஊடகம்:



மின்னணு ஊடகம் பன்முனைப் பார்வைகளை சாத்தியப்படுத்துகிறது. இலக்கியம், அசை சித்திரம், ஓசை, கிராபிக்ஸ், என பன்முகப்படுத்தப்பட்ட நுட்பம் ஊடகவியலில் புது எல்லைகளைத் திறந்து வைத்தது. இந்த எல்லைகளைத் தொட்டு, ஒருவரால், எங்கும் பயணிக்க முடியும் - தகவல்களைப் பெற முடியும் - மேலும் தகவல்களைத் தர இயலும் என்ற நிலைமை ஜனநாயகப் பண்புகளை இன்னும் பொதுவாக்கியது. உபயோகிப்பாளனும், உற்பத்தியாளனும் என ஒரே சமயத்தில் நுகர்வோருக்கு சந்தர்ப்பம் வழங்கியது.



இதன் தொழில்நுட்பம் மற்ற ஊடகங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டது. தலைமை அதிகாரமற்ற எல்லோரும் சமம் என்ற தளத்தில் இயங்கவல்லது. பல்வேறு சம அந்தஸ்துடைய முடிச்சுகள் கொண்ட வலை போன்ற இணைப்பில், தகவல்கள் சிறு சிறு பொட்டலங்களாக, பல முடிச்சுகளின் வழியாக வந்தடைகிறது. அல்லது செல்கிறது. ஒரு முடிச்சு பழுதுபட்டாலும், வேறொன்றின் வழியாகத் தகவல்களைப் பெற முடியும். அவற்றைப் பெறுவதற்கோ அல்லது தருவதற்கோ தேவை ஒரு கணிணியும் இணைய சேவையினரின் ஒரு இணைப்பு மாத்திரமே. மின்னஞ்சல், குழுமங்கள், விவாதக் களங்கள், வலைத்தளங்கள் போன்ற பல்வகை பயன்பாடுகளையும் உள்ளடக்கிய இணையம் தரும் வசதி, எழுதுபவர் அல்லது பயணாளர், தங்களைப் பற்றிய தகவல்களைத் தராமலே கூட தங்கள் கருத்துகளையும் பதிய வைக்க முடியும் - எல்லோரையும் வாசிக்கச் செய்ய இயலும். உங்கள் கருத்தின் மீதான மற்றவர்களின் கருத்தையும் அறியச் செய்ய முடியும்.



தொழில்நுட்பத்தில் மற்ற ஊடகங்களை மிஞ்சும் இந்த இணையம் தனது செயல்பாட்டில் எவ்வாறிருக்கின்றது? இதைச் சொல்வதென்றால் மிகச் சிறப்பாக இருக்கின்றது. மிக மோசமாக இருக்கின்றது. ஆம். இரண்டும் இணைந்தது தான். இங்கும் மற்ற ஊடகங்கள் தங்களுக்கான தளங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். அது போன்றே தனியார் அமைப்புகள், ஆர்வலர்கள், தனி நபர்கள் என எல்லோருமே ஒரு சிறிய அளவிலான தொகையைச் செலவு செய்து தங்கள் குரலுக்கான, கருத்திற்கான, பார்வைகளுக்கான தளம் அமைத்துக் கொண்டுள்ளனர். உலகின் பல லட்சக்கணக்கான தகவல் தளங்களிடையே, தங்கள் தளத்திற்கான வருகை தருவோரை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தங்கள் கருத்துகளை விரிவாகக் கொண்டு செல்ல முடியும். பிரபலமானவர்களின் தளங்களுக்குக் கிடைக்கும் வருகை மற்ற சாமான்யர்களின் தளங்களுக்குக் கிடைப்பதில்லை. ஒரு செய்தியை, ஒரு தகவலை முன் எடுத்துச் செல்ல வேண்டுமெனில், பிரபலங்களின் பங்கேற்பும் அவசியமாகிறது. இல்லையென்றால், அந்த கருத்துகள் முடங்கிப் போக வாய்ப்புகளுண்டு. சாமான்யர்கள் தங்கள் தளத்திற்கு வருகை தருபவர்களை அதிகரிக்கச் செய்ய பலப்பல தளங்களுடன் தங்கள் தளங்களையும் இணைத்துக் கொண்டு, நுகர்வோரின் பார்வைகளில் படுமாறு செய்வது தேவையாயிருக்கின்றது. இவ்வாறு ஒரு சங்கிலித் தொடராக இணைப்புகளைப் பார்வையில் படச் செய்ய முயல்கையில், அதுவும் ஒரு எல்லையாக அமைகின்றது - எத்தகையத் தகவல்களைத் தரலாம் - அல்லது எத்தகையத் தகவல்களைப் பெறலாம் என்பதில். ஆக, இங்கும் நிறுவன பலம், பணபலம் ஆட்சி புரிய இயல்கிறது.



வேடிக்கை விநோதங்கள், கல்வி போதிக்கும் தளங்கள், கேளிக்கைகள் போன்றவற்றைத் தரும் தளங்களைத் தவிர்த்து, செய்திகள் தகவல்கள் தரும் தளங்களின் செயல்பாடுகள் மற்ற ஊடகங்களிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை என்றாலும், ஒரு செய்தியைப் பற்றிய பன்முகப் பார்வை, அதைத் தரும் தளத்தைப் பொறுத்து கிடைக்கிறது. தளத்தின் உரிமையாளரைப் பொறுத்து, கிடைக்கும் தகவல்களின் உள்ளடக்கம் அமைகின்றது. தளங்களின் உரிமையாளாராக இருப்பதற்கென்று எந்த நியதிகளும் இல்லாத பொழுது, எவர் வேண்டுமென்றாலும் தளம் அமைத்துக் கொண்டு, தனக்கு உகந்த கருத்துகளைப் பிரச்சாரம் செய்யலாம் என்ற நிலைமையில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பலரும் உள்நோக்குடன் அவதூறு செய்வதற்கு மிகுந்த வாய்ப்புகளையும் தருகிறது. அதிலும், கணிணி தரும் அநாமதேய அந்தஸ்தைப் பலரும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு செய்யவும் செய்கின்றனர். இந்தப் பின்னணியிலிருந்து ஆய்வு செய்கையிலே, மற்ற ஊடகங்கள் தராத சில சௌகரியங்களையும் இணையம் தருகிறது.



இஸ்லாத்தின் மீதான இணையத் தாக்கம்:



பிற ஊடகங்கள், நிறுவனமாக அரசிடம் பதிவு செய்யப்படவேண்டிய கட்டாயமிருக்கிறது. ஒரு தேசத்தின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு தனது செய்திகளை அல்லது தகவல்களைப் பிரசுரிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், இணையப் பிரசுரங்களுக்கென, பல நாடுகளும் இன்னமும் முழுமையான சட்ட திட்டங்களை இயற்றாத நிலைமையில், எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொண்டு, தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, ஒருவரால் செயல்பட இயலும் என்ற நிலை கிடைக்கும் பொழுது, விஷமிகள் அதைப் பயன்படுத்தாமல் இருப்பார்களா? நிச்சயமாகப் பயன்படுத்தத் தான் செய்வார்கள். மற்றைய ஊடகங்களுண்டான தணிக்கைகளிலிருந்து, தப்பித்துக் கொள்ளவும் இயலும். மனசாட்சிக்குட்பட்ட சுய தணிக்கை ஒன்றே இங்கு இருக்கின்றது. மனசாட்சியின் எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளும் கயமைத் தனத்தை இங்கு சிலரால் வெகு எளிதாக செய்து கொள்ள முடிகிறது.



சேமிப்பதும், அதைத் தேடுவதும் மிக எளிது இணையத்தில் என்னும் பொழுது, இந்த விஷமிகள், இஸ்லாம் பற்றித் தரும் போலித் தகவல்களும் சேமிக்கப்பட்டு விடுகின்றது. இஸ்லாம் பற்றிய செய்திகளுக்காக இணையத் தேடுதலில் ஒருவர் ஈடுபடும் பொழுது, அவர் தான் விரும்பாமலே இத்தகைய தளங்களுக்குள் சென்று தவறான கருத்தாக்கத்திற்கு ஆட்படுத்தப்படலாம். இத்தகைய தளங்கள் அனைத்து மொழிகளிலும் சேமிக்கப்படுகின்றது.


இஸ்லாத்தின் மீதான இந்த தாக்குதல்கள் பலவகைப்பட்டதாக இருக்கின்றன. பிற மத தளங்கள், ஒப்பீட்டு முறையில், மதங்களைப் பற்றிய வாதங்களை வைத்தல் அவற்றில் ஒன்று. இதையே சில இஸ்லாமிய தளங்களும் செய்கின்றன என்பதும் வருத்தமளிக்கக் கூடிய நடைமுறை தான். இத்தகையத் தளங்களில், ஆன்மீக நுணுக்கங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல், தவறான விளக்கங்களையும், மொழி பெயர்ப்புகளையும் முன் வைக்கின்றனர். ஆனால், இத்தகைய தளங்கள், தங்கள் முகவரியை தங்கள் மதத்தின் பெயராலேயே வைத்திருப்பதால், அதைக் கண்டு விலகிக் கொள்ள முடியும் அல்லது ஒரு அறிதலுக்காக வாசிப்புடன் நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால், சில தளங்கள் தவறுதலான வழிகாட்டியாக மெனக்கெடுத்து, உள்நோக்குடன் தங்கள் தளங்களை இஸ்லாமிய தளங்கள் போன்று வடிவமைத்துக் கொண்டு, நவீன வடிவ இஸ்லாத்தைப் போன்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன.



இஸ்லாத்தின் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களும் நடைபெறத்தான் செய்கின்றன. பல்வேறு நுணுக்கங்களைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன. அவற்றின் மீதான எதிர் வினைகளும் பதிலுக்குத் தரப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில், இந்த விவாதங்கள் ஒருவர் மீது மற்றவருக்கான அவநம்பிக்கைகளாகக் கூட மாறி விடுகின்றன. ஒரு கருத்தாக்கம் என்ற அளவில் கூட, சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க மனமில்லாத இஸ்லாமியர்களும் இருக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது. இத்தகைய உள்விமர்சனங்களை எதிர்ப்பது, நாம் பின் தங்கி இருக்கின்றோம் என்பதையே உணர்த்துகிறது.



இஸ்லாம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கும் இஸ்லாமியர்கள் இரு வகையான கண்ணோட்டங்களை சமாளிக்க வேண்டியதிருக்கிறது - ஒன்று, விமர்சனங்களை, விவாதங்களை ஏற்க விரும்பாத இஸ்லாமிய சகோதரர்கள். மற்றொன்று, இத்தகைய விமர்சனங்களை மாற்று மத விஷமிகள் தங்களுடைய உள்நோக்கத்திற்காகப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வதை எதிர்த்து நிற்பது.



இத்தகைய விவாதத் தளங்கள் போக, சமீப கால வரவான ப்ளாக்கர்ஸ் எனப்படும் வலைப் பூக்களின் செயல்பாடும் அனைவராலும் கவனிக்கத் தக்கது.



இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் படியுங்கள்.

இணையத் தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல் (பகுதி 2)

முதல் பகுதியை இங்கே வாசியுங்கள்

இணையத்தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல் - பகுதி 2

1. ஊடக உரிமையாளர்:


வெகுஜன ஊடகங்கள் ஒரு பெறும் நிறுவனமாகவோ அல்லது பெரும் குழுமங்களின் அங்கமாகவோ இருப்பதால், இந்த ஊடகங்கள் மூலம் நுகரும் மக்களுக்குத் தரப்படும் தகவல்கள் பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் அல்லது குழுமங்களின் நலனைப் பாதிக்காத வகையில், சார்புத் தன்மையுடன் தணிக்கைச் செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. உதாரணமாக, அமெரிக்கப் பத்திரிக்கைகள், இராக் யுத்தத்திற்கு முன்னர் எவ்வாறு செயல்பட்டன என்று அலசிப் பார்த்தால் தெரியும் அவற்றின் சார்புத் தன்மை. இராக்கில், வேதியியல் மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதாக, அரசு கூறியதை இந்த ஊடகங்கள் எந்தக் கேள்வியுமின்றி, மக்களின் நுகர்வுக்கு எடுத்துச் சென்றன. அரசின் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட்ட அமெரிக்கப் பத்திரிக்கைகளை நிர்வகிக்கும் உடைமையாளர்களில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. உம்- ஜெனரல் எலக்டிரிக்.


2. ஊடக நிதி வருவாய்:


வெகுஜன ஊடகங்களின் வருவாய் ஆதாரம் பெரும்பாலும் விளம்பரங்களிலிருந்தே பெறப்படுகிறது என்பதால், விளம்பரதாரர்களின் நலன், செய்திகளைத் தருவதை விட முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு பொருளை வாங்க விழையும் மனநிலையிலுள்ள நுகர்வோரை, அப்பொருளை வாங்குவதினின்றும் பிறழச் செய்யும் வகையிலான செய்திகளைத் தருவதில் தயக்கம் அல்லது முக்கியத்துவமில்லாது செய்யவும் ஊடகங்களால் இயலும்.


3. தகவல்களின் மூலம்


தங்களது நித்திய தேவையான செய்திகளைப் பெறுவதற்காக ஊடகங்கள் அரசையோ, செய்தி நிறுவனங்களையோ சார்ந்திருக்க வேண்டியதிருக்கிறது. ஒரே நேரத்தில், உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பலதரப்பட்ட நிகழ்வுகளைக் குறித்த செய்திகளைத் திரட்டித் தருவதற்கு பெரும் நிறுவனங்களின் தயவு தேவையாயிருக்கின்றது. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், அரசு அல்லது இந்த நிறுவனங்கள் தரும் செய்திகளை, புகைப்படங்களைப் பத்திரிக்கையாளர்கள், எந்த மறுப்புமின்றி, அப்படியே ஏற்றுக் கொண்டு, அதையே செய்திகளாக வெளியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் புஷ், தன் முதல் நான்கு வருட ஆட்சிக்காலத்தில், வெகு ஜன தொடர்பு நிறுவனங்களுக்காக செலவிட்ட தொகை 254 மில்லியன் டாலர்கள் என்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் செய்திகள் உருவாக்கத்திற்காக எத்தனை முக்கியத்துவம் அரசினால் தரப்படுகிறது என்பதற்காக.


4. மதிப்பிழக்கச் செய்தல்


ஊடகத்தில் தரப்படும் ஒரு செய்திக்கோ அல்லது நிகழ்ச்சிக்கோ எதிராக எழுப்பப்படும் எதிர்வினைகளை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி. நடைமுறையில் இருக்கும் அரசு எந்திரத்திற்கு சாதகமான முன்முடிவுகளைக் குறித்து எதிர்வினையாற்றும் அமைப்புகளையோ அல்லது தனிமனிதனையோ அச்சுறுத்துவது அல்லது மதிப்பிழக்கச் செய்யும் வகையில் பிரச்சார செய்திகளை, மெனக்கெடுத்து, உள்நோக்கத்துடன் பொதுமக்களின் நுகர்விற்குத் தருவது. இவற்றை அதிகார மையத்தில் இருப்பவர்கள், ஊடகங்களைக் கொண்டு செயல்படுத்துவதும் ஒருவகையிலான திரித்தலே ஆகும்.

முதல் மூன்று வகையான வடிகட்டிகள், பொருளாதார காரணங்கள் என்றால், இந்த நான்காவது வடிகட்டி, உள்நோக்கம் கொண்டதாகும்.


5. சித்தாந்த எதிர்ப்புகள்:


பொதுமக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் உண்டுபண்ணி, அதை தொடர்ந்து நிலை பெறச் செய்யும் வகையில் செய்திகளை வடிவமைத்தல். அதன் மூலம் தங்களது கொள்கைகளுக்கும் அதன் பொருட்டு செய்யப்படும் செலவீனங்களுக்கும் ஒரு பாதுகாப்பு கவசம் அமைத்துக் கொள்ளும் வகையில் செய்திகளை வடிகட்டி, திரித்து, வெளியிடுதல்.


ஆரம்பத்தில், கம்யூனிஸத்தை பொதுமக்களின் அச்சத்திற்குரிய காரணமாக முன்நிறுத்தினர். கம்யூனிஸம் வலுவிழந்தபொழுது, இப்பொழுது தீவிரவாத ஒழிப்பு என்ற பயங்கரத்தை முன்நிறுத்துகின்றனர்.


இஸ்லாமும், ஊடகங்களும்:


ஒரு செய்தி, செய்தியாக மட்டுமின்றி, அது எத்தகைய உருமாற்றங்களுக்குட்படுத்தப்படுகின்றது என்பதைத் தெளிவாக்கிக் கொண்ட பின்னர், இந்த ஊடகங்கள் இஸ்லாத்தின் மீது எத்தகைய தாக்குதல்கள் நிகழ்த்துகின்றனர் என்பதைக் கொஞ்சம் கவனிக்கலாம். Covering Islam என்ற புத்தகத்தில், ஊடகங்கள் எத்தகைய இரட்டை நிலையைக் கையாள்கின்றன என்பது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார் எட்வர்ட்.w.சையத். இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்புகளை, அது செய்யும் படுகொலைகளையும் " நாட்டின் பாதுகாப்பு" என்ற பெயரில் பெரிய அளவில் விமர்சனத்திற்குட்படுத்தாது, செய்திகளை வழங்கும் இந்த ஊடகங்கள் "இஸ்லாம்" "முஸ்லிம்" என்றதுமே அவற்றின் அனைத்து செயல்பாடுகளையும் அடிப்படைவாதத்துடன் இணைத்து செய்தி வெளியிட்டு, ஒரு பொதுத்துவமான கருத்தாக்கத்தை நிலை நிறுத்த முனைகின்றனர். இந்த அடிப்படைவாதம் இஸ்லாத்தில் எந்த அளவில் இருக்கிறதோ, அதே அளவில் அல்லது அதற்கும் சற்று அதிகமாகவே, கிறித்துவத்திலும், இந்துமதத்திலும், யூதத்திலும் இருக்கின்றது என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.


அடிப்படைவாதம் என்பதற்கு எங்காவது விளக்கம் இருக்கிறதா? அடிப்படைவாதம் குறித்த விரிவான ஆராய்ச்சி ஒன்றிற்கு, American Academy of Arts and Sciences என்ற குழுமம் 1991ல் பல ஆய்வாளர்களை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த குழு, இறுதியாக தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பொழுது, அது அளித்த விளக்கம் - "No workable definition of fundamentalism emerges" தகுந்த விளக்கம் அளிக்க இயலவில்லை என்பது தான் அந்த குழுவின் இறுதி அறிக்கை.


ஆக, தகுந்த நிபுணர்களாலும் கூட விளக்கமளிக்க இயலாத சொற்றோடர் அடிப்படைவாதம் என்றால், இந்த ஊடகங்கள் எத்தனை எளிதாக இஸ்லாமியர்கள் மீது இந்த சொற்றோடரைப் பிரயோகப்படுத்தி விடுகின்றனர்.? உண்மையில், இந்த ஊடகங்கள், பொருள் விளங்காது, ஆனால், அதன் எதிர்மறையான கருத்தாக்கத்தை மட்டும் மனதில் கொண்டு, அவற்றை இஸ்லாத்தின் மீது பிரயோகிக்கின்றனர்.


இத்தகைய கருத்தாக்கத்தை முன்வைத்து தொடர்ந்து ஊடகமாடி வருகையிலே - இந்த ஊடகங்களின் மோசடிக்குப் பதிலாக, அல்-ஜசீரா என்ற கத்தார் நாட்டு நிறுவனம், மேலை நாட்டு வெகுஜன ஊடகங்களின் போலித்தனத்தையும் செய்தி திரிபையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய பொழுது, அமெரிக்க அதிபர் புஷ்-ஷிற்கு வந்த கோபம் - அந்த நிறுவனத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்தும் படி உத்திரவிடும் அளவிற்குப் போய்விட்டதென்றால், இஸ்லாத்தின் மீதான ஊடக வன்முறைகளின் எல்லைகளை எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.


வெகுஜன ஊடகங்களின் செயல்பாடுகள் இத்தகையதாக இருக்கும் பொழுது, இந்த ஊடக வரிசையில் வந்து இணைந்து கொண்ட மற்றொரு தொழில்நுட்பம் தான் இணையம்.


இதன் மூன்றாவது பகுதியை இங்கே வாசியுங்கள்.

இணையத் தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல்

இணையத் தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல்



செப்டம்பர் 11 அன்று, சில தீவிரவாதிகள், அமெரிக்காவின் சில முக்கிய அடையாளங்களின் மீது தாக்குதல் நடத்திய பொழுது, உலகமே அதிர்ச்சியடைந்தது. அது வரையிலும் தங்களுக்குக் கற்றுத் தரப்பட்ட பிம்பமான தீயவற்றை எதிர்த்துப் போராடி வெல்லும் அமெரிக்கர்கள் வெறும் கற்பனைப் பாத்திரங்கள் தான்; நடைமுறையில் இந்த சாகசர்கள் மற்றவர்களைப் போல சாதாரணமானவர்கள் தான்; இவர்களையும் மிஞ்சி விடும் எதிரிகளும் இருக்கிறார்கள் என்ற அறிவைப் பெற்ற பொழுது, அனைத்து மக்களின் பார்வையும் இஸ்லாத்தின் மீது திரும்பியது.


சிலருக்கு அச்சம் நிறைந்திருந்தது.

சிலரிடத்தில் வெறுப்பு மிகுந்திருந்தது.

மற்றவர்களுக்கு ஒரு ஆர்வம்.


அதுவரையிலும், அரசியல் அரங்கில் அல்லது மத ஆராய்ச்சியாளர்களிடத்தில் மட்டுமே விவாதப் பொருளாக மேலை நாட்டில் இருந்து வந்த இஸ்லாம், அந்த எல்லைகளைத் தாண்டி, வெகுஜன மக்களைச் சென்றடைந்தது - நல்ல வகையிலோ அல்லது வெறுப்பு நிறைந்த வகையிலோ.

இந்த சென்றடையும் வழிமுறைகளைத் தந்தவை தான் ஊடகம். வெள்ளைதோல் படைத்த மேலை நாட்டினரைப் பெரும் தீரர்களாகவும், ஏனைய மக்களை சோம்பேறிகளாகவும், திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும், தீவிரவாதிகளாகவும் ஒரு உருமயக்கத்தையும் மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தித் தந்தவையும் இந்த ஊடகங்கள் தான். இந்த ஊடகங்களின் வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவற்றை விடுத்து, ஊடகங்களின் செயல்பாடுகளைப் பற்றியும், பின்னர் இணையமும் அது இஸ்லாத்தின் மீது உண்டாக்கும் தாக்கம் மற்றும் தாக்குதல் பற்றியும் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஊடகம் வெகுஜன நுகர்பொருளாக மாறத்தொடங்கியது. ஊடகத்தின் பிறவடிவங்களாகிய வானொலி, தொலைகாட்சி, திரைப்படங்கள் ஆகியவற்றிற்கும் ஆய்வு நிலை வடிவங்கள் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், இணையம் என்று வழங்கப்படும் internet பயன்பாட்டிற்கு வந்த பொழுது, ஊடக தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு வடிவம் அறிமுகமாயிற்று. இந்த ஊடக கருவிகளிடையே வடிவ வேறுபாடுகளும், நுகர்வோருக்கு புத்தி புகட்டும் வீச்சில், குறிப்பிடத்தக்க வேக வித்தியாசங்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி செய்திகள், தகவல்கள் தருவோரிடையில், குறிப்பிடத்தக்க இசைவுகளும் உண்டு.

இணையத்தின் தாக்கத்தைப் பற்றிப் பேசுமுன், பொதுவாக ஊடகங்கள் மனிதனைப் பாதிக்கும் வகைகளையும், அவற்றை மனிதன் எவ்வாறு கையாளுகின்றான் என்ற தெளிவும் இருந்தால் மட்டுமே, இணையத்தின் ஆக்கங்களையும் / பாதிப்புகளையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஊடகங்களின் பொதுத் தன்மை:


1830ல், கார்லைல் குறிப்பிட்டார் - அச்சு ஊடகம் நிலப்பிரபுத்துவமுறையை உடைத்துக் கொண்டு, நவீன உலகம் தோன்ற அடிகோலியதென்று. அதன் அடிப்படையான கொள்கை, பியரி பொர்தியு குறிப்பிடுவது போல் - மனிதன் அவன் வாழும் சமூகப் பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையில், தட்டி, குழைத்து, கட்டமைக்கப்படும் பண்பைக் கொண்டிருப்பது தான்.


1859ல், சார்ல்ஸ் டார்வின் தனது, "On the Origin of Species" புத்தகத்தை வெளியிட்ட பொழுது, அது முன் வைத்த ஆய்வுக் கொள்கைகளின் புதுமையினால், ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தது. இறைபயத்தைக் கொண்டு வாழ்ந்த விக்டோரிய காலத்தவர்களிடையில், டார்வினின் புதிய கொள்கைகள் அவனது பயத்தைப் போக்கி, ஒரு பெருவீச்சில், புதிய பார்வைகளைக் கொண்டு வந்தது - ஆன்மீகம், அரசியல், நீதி என்று அனைத்து துறைகளிலும். அத்துடன், தேவாலயங்கள் அதன் எல்கைகளுக்குள் ஒடுக்கப்பட்டு, மேலை உலகம் என்று இன்று சொல்லப்படும் பொருளாதாய சமூகம் உருவாகியது. இன்றைய உலகின் பல மோதல்களும் இதன் அடிப்படையிலே எழ ஆரம்பித்தன. அரசியல் தத்துவவியலாளரான, சாமுவேல். பி. ஹண்டிங்க்டன், தனது புத்தகமான "Clashes of Civilisation"ல் குறிப்பிடுகிறார் - பல்வேறு சமூகங்கள் தங்கள் நாகரீகம்/பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் மற்ற சமூகத்தின் மீதான மோதல்கள் உடையவாக இருக்கும் என்கிறார். இஸ்லாமிய உலகினுடனான மேலை நாட்டினரின் மோதல், கிறித்துவத்தினால் எழுந்ததல்ல, மாறாக, இறைமறுப்பைக் கொண்டு, கட்டமைக்கப்பட்ட மேலை நாட்டுத் தத்துவங்களால் விழைந்தது என்கிறார்.


இந்த மோதல்களை முன்னெடுத்துச் செல்வதில், தொடர்ந்து, ஒரு வகை எதிர்மறை பிம்பத்தை மற்றைய சமூகத்தின் மீது நிறுவுவதற்கு இன்று அனைத்து இனங்களும் ஊடகங்களைக் கொண்டு தான் இயங்குகின்றன. காரணம் ஊடகங்கள் ஒரு தகவலுக்குத் தரும் வசீகரத் தன்மை. ஊடக நியதிகளில் பல ஆய்வுகளை மேற்கொண்ட மார்ஷல் மெக்லுஹான், ஊடகங்களை, மனிதனின் நீட்சி என்றே குறிப்பிடுகிறார். அவரது கூற்றின்படி, கருத்தின் உள்ளடக்கம் பெருமளவில் வடிவத்தைச் சார்ந்திருக்கிறது. ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, உணர்ச்சிகளுக்கும், சிந்தனைகளுக்கும், புதிய வடிவங்களை வழங்கி, அவற்றைப் பற்றிய கண்ணோட்டங்களை மாற்றியமைக்கின்றது. வசியப்படுத்துகின்றது. ஊடக நுகர்வில், பங்கேற்கும் மனிதனை அவன் உணராது உள்ளிழுத்துக்கொள்கிறது. ஊடக தொழில்நுட்பத்தின் தாக்கம் நிகழும் தளம் - கருத்துகள், கொள்கைகள் என்ற அளவில் அல்லாது, புலன் உணர்வுகளின் விகிதம் அல்லது கண்ணோட்டத்தின் சக்தியினைத் தொடர்ந்து தாக்கி, எதிர்ப்பின்றி மாற்றமடையச் செய்யும் தளத்தில் இருக்கின்றது.


இந்நிலையில், ஊடகமே தகவல் - " the medium is the message" என்ற கொள்கை உருப்பெறுகிறது. நிஜம் என்று இந்த ஊடகங்கள் வடிவமைப்பதெல்லாம், நிஜத்தினை அவர்கள் விரும்பியவடிவில் உருமாற்றம் செய்யப்பட்டு தரப்படுபவை தான். காட்சியகப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன. இந்தக் காட்சிகளின் வழியாக அர்த்தப்படுத்திக் கொள்வதே செய்திகளாகின்றன. இவைகள் நிஜத்தின் வடிவத்தினை ஏறக்குறைய ஒத்திருக்கும் வரையில், உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இல்லையென்றால், குப்பையாக ஒதுக்கப்படுகிறது. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மையை அல்லது சார்புத்தன்மையை விளங்கிக் கொள்வது பல பொழுதுகளில் ஒரு தனிமனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.


ஊடகங்களின் சார்புத்தன்மை:


வெகுஜன ஊடகங்களின் சார்புத்தன்மையை ஆராய்ந்து, அதன் செயல்பாடுகளின் பின்னணியைக் குறித்து நோம் சோம்ஸ்கி / எட்வர்ட் ஹெர்மான் தங்களது Manufacturing Consent: The Political Economy of the Mass Media, என்ற புத்தகத்தில் தரும் தகவல்கள் இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளத் தக்கது. ஊடகங்கள் தகவல்களைத் தரும் பின்னணியைக் குறித்து அவர்கள் முன் வைத்த The propaganda model என்ற நியதியின் அடிப்படை, ஐந்து வகை வடிகட்டிகளினுள் ஏதாவது ஒன்றுக்கு உட்படுத்தித் தேர்வு செய்யப்பட்டவையே
ஊடகச் செய்தியாகின்றது என்பதுவே.


அந்த வடிகட்டிகள் வருமாறு:


1. Ownership of the medium - ஊடக உடமையாளர் ( நலன் )

2. Medium's funding sources - ஊடக நிதி வருவாய்

3. Sourcing - தகவல்களின் மூலம்

4. Flak - அச்சுறுத்தல் அல்லது மதிப்பிழக்கச் செய்தல்

5. Anti - ideology - சித்தாந்த எதிர்ப்புகள்

இந்தப் பதிவின் தொடர்ச்சியை அடுத்தப் பதிவில் வாசியுங்கள்

Wednesday, December 19, 2007

வாங்க முடிந்ததற்கும் வாங்க முடியாமல் போனதற்குமுண்டான

'பாந்தான்' வந்து விடுவானோவென்ற அச்சத்துடன் பெரிய விழிகளால், அமர்ந்திருந்த இடத்தின் சகல கோணங்களையும் கலவரத்துடன் அலசிக்கொண்டிருந்தான் பப்ளு. இரவின் அமைதியைக் கலைத்தெழச் செய்யும் பார்வைக்குப் பிடிபடாத உயிரினங்களின் பெரும்சப்தங்கள் நிறைந்திருந்தன. நிசப்தங்கள் உடைந்து விலகும் பொழுதெல்லாம் ஒண்ணுக்குப் போக வேண்டிய
தேவையை பெரும்திகிலுடன் நடுங்கும் தொடை அறிவித்துக் கொண்டேயிருந்தது. வண்ணங்கள் நிறைந்த பகல் வெளியேறிய முன்னிரவில் அவன் வீட்டை விட்டு இறக்கி விடப்பட்டிருந்தான் தந்தையால். இறுக மூடிக்கிடந்த கனத்த கதவு வீடென்னும் பாதுகாப்பை விழுங்கிக்கொண்டது.


எவ்வித அமைதிப்படுத்தலுக்கும் உடன்பட மறுத்து அழுது அடம் பிடித்த ஒரு நாளில், அவன் தந்தை பாந்தானிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாக அறிவித்தார். அன்று தான் பாந்தான் அறிமுகம் ஆனான்.


''பாந்தான் ஆரு?'' அடம்பிடித்தலின் நடுவே ஆர்வம் ஓர் இடைவெளி உண்டாக்கி கேள்வியெழுப்பியது. தற்காலிகமாக உருவான ஆர்வத்தினை அவன் தந்தை மேலும் வளர்த்தினார். ஒழுங்கமைவுகளை உண்டாக்க, புரிந்து கொள்ளத் தக்க அச்சங்கள் தேவையாயிருக்கத்தான் செய்கிறது. அவை வடிவமைக்கப்பட வேண்டும் - அடக்கிப்போட வேண்டியவனின் புரிதல் சக்தியின் வீச்சுக்கேற்ப. தானாக வந்து வாய்த்துவிடுவதில்லை. வளர்ந்தவர்களுக்கு சட்டதிட்டங்கள். குழந்தைகளுக்கு அமானிட பிசாச வடிவங்கள்.

சிறு கணலை ஊதிப் பெரிதாக்கினார். பாந்தானுக்கு தொடர்ந்து வடிவம் படைத்தார். ஒற்றைக் கால். நெற்றியில் ஒற்றைக் கண். அசையாத பார்வை. வாய் கிடையாது. சப்தம் கிடையாது. பளீரென வெட்டும் பார்வையை தப்பு செய்யும் பொழுது வீசுவான். அந்தப் பார்வையின் மூலம் உயிரை உறிஞ்சி விடுவான். நகாராது, இருந்த இடத்திலிருந்து, கண் வழியாக உறிஞ்சி...


அன்றிலிருந்து, பாந்தான் பெயரைக் கேட்டதும் சகல பரப்புகளிலும் திகிலும் பீதியும் விரவிப் பரவி, அடிபணிதலை ஒரு தற்காலிக ஏற்பாடாகவேனும் வரவழைத்து விடும். காலப்புறக்கணிப்பில் அடைத்து கிடக்கும் இருண்ட மூலைகளில் அரவமற்றுப் படியும் தூசு போல மனதின் வெளிச்சமறியா திசுக்களில் அச்சம் தன்னை மெல்லப் படர்த்திக் கொண்டது பாந்தான் என்ற பெயரில். அந்தப் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம், கலைக்கப்படும் தூசுக்கள் எழும்பியடங்குவது போல் தன்னை உயர்த்தி கலவரப்படுத்தியடங்கும் அச்சம்.


ஒரு பெரும்வெளிச்சத்துண்டு தன் மீது விழுந்து உறிஞ்சிக் கொள்ளப்போகும் அந்த அச்சக் கணத்தைத் தேடிக்கொண்டிருந்த சிறிய புரிதலின் பின்னே கதவுகளுக்கப்பால் உரத்த சப்தங்கள் உராய்ந்து பொறிமூட்டிக் கொண்டிருந்தன.


''நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்ல'' அம்மாவின் குரல்.


''எது நல்லதில்ல? தெரியாம பர்ஸைத் திறந்து பணத்தை எடுத்ததா?'' பர்ஸிலிருந்து எடுக்கப் பட்டது பணம் என்பதை விட, தனது பிரத்யேக எல்லைக்குள் அத்துமீறல் நடக்கக் கூடுமென்ற அறிதலின் அதிர்ச்சியே உக்கிரம் கொள்ள வைத்தது தந்தையை. மூத்திரம் பெய்து நிர்ணயித்த எல்கைக்குள் அத்துமீறும் சக மிருகத்துடன் யுத்தம் செய்யும் மிருக மூர்க்கத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது குரல். அத்துமீறியதைக் காயப்படுத்தி செயலிழக்கச் செய்யும் ஆக்ரோஷம்.


''அப்படியென்ன பெரிய தப்பு செஞ்சுட்டான்? ஏதோ ஆசையா சாக்லெட் வாங்க
எடுத்திருக்கான்... மீதி பணம் அத்தனையும் மேஜை மீது வச்சுட்டானே... கவனிக்கலயா?''


''பர்ஸிலிருந்து எடுக்கனும்னு தோன்றியிருக்குதே, அதான் தப்பு. தொகை சின்னதா, பெரியதா என்பதல்ல கணக்கு.." தன் நிலைபாட்டின் நியாயம் பற்றி அவருக்குக் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. மேஜையின் மீது கிடந்த மீதியை காலைநேர அவசரங்களில் தவறவிட்டிருக்கலாம்.

''கணக்கு, கணக்கு... எல்லாத்துக்கும் ஒரு கணக்கு... அவனுக்கு வாங்கி வச்ச சாக்லெட் தீந்து போய் ஒரு வாரமாகிப்போச்சுதே.., வாங்கி வைக்கணும்னு ஒரு வாரமா சொன்னதை மறந்துட்டீங்க, அப்போ என்னாவாச்சு உங்க கணக்கு?'' மகனுக்கான வாதாட்டம் கணவனின் தவறுகளையும் இடித்துக் காட்டும் தடங்களைப் பற்றியது.

''நேரம் வேண்டாமா, என்ன?. இது மட்டுமே தான் மனுஷனுக்கு வேலையா?''


''இது மட்டுமே வேலையாக நினைக்க உங்களுக்கு முடியாது. உங்க நேரத்தை கணக்கா வச்சுக்க முடியாது. அது தப்பில்ல. ஆனா பிறரது தேவைகள மட்டும் கணக்கில் இருக்கா, இல்லையான்னு பாப்பீங்க, இல்ல?'' எப்படியும் கணவனைப் பதிலுக்குத் தாக்கிக் காயப்படுத்தி விடுவதென்ற ஆவேசம் அம்மாவுக்குள்ளும் திரண்டது.


''ஆமா. அப்படித்தான். உனக்கு சகிக்கலன்னா, நீயும் வெளியே போ...'' சமன்நிலைக்கு மீள இயலாது தொடர்ந்து தடுமாறும் அவரது கோபம் பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

அவர் மீண்டும் தன்னியல்புக்கு மீளும் வரையிலும் தனிமையில் விடுவதே சாத்வீகமானது. பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டு, வாயில் திறந்து வெளியில் இறங்கி மகனைத் தேடினாள்.


''அம்மா...'' ஓடி வந்து கட்டிக் கொண்டான், பாந்தான் பிசாசிடமிருந்து மீட்டுச்செல்ல வந்த தேவதை. ''வாம்மா, சீக்கிரம் வீட்டுக்குள்ள போய்டலாம்...'' பதைபதைப்புடன் அவசரத்தையும் கலந்து கைகளைப் பற்றி இழுத்தான்.



''பப்ளு... நாம வீட்டுக்குள்ள போகப்போறதில்ல...'' அம்மா அமைதியாகச் சொன்னாள்.

பாதுகாப்பான பரப்பில், திரையிட்ட சன்னல் சாத்தி, பாந்தானின் ஒற்றைக் கண் வெளிச்சத்தை வெளியில் நிறுத்திய பத்திரத்தில் போர்த்திக் கொண்டு தூங்கலாமென்ற நினைப்பிருந்தது பப்ளுவிற்கு. ஆனால், இந்த அம்மா என்ன சொல்கிறாள்?


''அம்மா பாந்தான் வந்திருவான். வாம்மா, போய்டலாம்'' துரிதப்படுத்துதலில் பப்ளுவின் பயம், தன் பரிமாணங்களின் மூடுதிரைகளைக் களைந்தது. அவனது பயங்களின் நிர்வாணம் அவளுக்குத் திகிலூட்டியது. அடம் பிடித்தழும் அந்தக் கணத்தைத் தள்ளிப்போட எளிதான வழி கிட்டிய ஆசுவாசத்தில் அதன் மறுபுறத்தைக் கவனியாது விட்டிருப்பதன் விபரீதம் விடியத் தொடங்கிற்று அம்மாவிற்கு.


''பப்ளு, வீட்டிற்குள்ளே போவப்போறதில்ல. பாந்தானும் வரப்போவதில்லை. பார்த்துக் கொண்டேயிரு...'' அம்மா கதவின் வெளிப்புறத்தை தாளிட்டாள். அவனருகில் அமர்ந்தாள். அவன் தலைமுடிகளைக் கைகளால் கோதிவிட்டாள். பாதுகாப்பற்ற பதட்டங்கள் விலகத் தொடங்கிற்று அவனுள்.


''ஏம்மா, வரமாட்டான்?''

''அப்படி யாருமில்லடா..''

''நெஜம்மாவாம்மா?'' பெருத்த நிம்மதி அவனுள்ளே அமைதியைப் படைத்துக் கொண்டிருந்தது.


''ஆமாம் - இந்த ராத்திரி முழுக்க நாம இரண்டு பேரும் இங்கே உட்கார்ந்து பாப்போம். பாந்தான் வரமாட்டான்னு நீ தெரிஞ்சுப்ப.''

அம்மா சொன்னால் அப்படித் தானிருக்கும். உண்டென்று சொன்னபோது, உண்டு. இல்லை யென்றால், இல்லை. அவனுக்கு வேறெந்த ருசுவும் வேண்டியிருக்கவில்லை.


இரவின் ஆளுமை கரிய இருளுடன் குளிரையும் கனமாகப் படர்த்திய பொழுது, அம்மாவின் அடிமடிக்குள் தன்னை சுருட்டிக் கொண்டான். அங்கிருந்து கொண்டு, எதைப் பார்த்தாலும் பயமற்றிருந்தது. அலட்சியமாக சுற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

''அப்பா, எங்கம்மா?''

''வீட்டுக்குள்ள...''

''நீ வெளியில பூட்டிட்டீயே?''

''காலைல திறப்போம். அதுவரையிலும் பூட்டிய வீட்டிற்குள்ள கிடக்கட்டும்...''

''ஜெயிலாம்மா?''

''உ..ம்... அது மாதிரித் தான்னு வச்சுக்கோயேன்..''

அவனுக்குச் சிரிப்பு வந்தது. அம்மாவிற்கும் தான். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே கதைகள் பேசினர். வீட்டினுள் சிறைப்பட்டுக் கிடக்கும் தந்தையை மறந்து போனது. சிறிது சிறிதாக மூச்சிரைப்பு நிறுத்தி, எழுந்து நின்றாடிய விடைத்த படம் சுருக்கி, பெட்டிக்குள் ஒடுங்கும் நாகமாக தந்தை சுருங்கிக் கொண்டிருந்த பொழுது, தன் தவறுகள் படம் காட்டத் தொடங்கியிருந்தது. மனைவியும், மகனும் தன்னைப் பிரிந்து வெளியில் நிற்பது உரைத்தது.

அவர்களை உள்ளே அழைக்க கதவை திறக்க எத்தனித்த பொழுது, வெளியிலிருந்து
சாத்தப்பட்டிருப்பது தெரிந்தது.

தொட்டாற்சிணுங்கி தீப்பற்றிக் கொள்ளவில்லை.

'கையிலே காசில்லாமல், வந்துட்டான்க...' இளக்காராமாக பேசிக் கொண்டேயிருக்கும் நண்பர்களுக்கிடையில் தன் பிம்பத்தைத் தூக்கி நிறுத்த, உற்ற தோழன் ஒருவனின் பலத்த தூண்டுதலில், இந்த அனுபவத்திற்காக அலைந்த நாளிலே பர்ஸை முகத்தில் விட்டெறிந்து, இழுத்து அறைந்து தனனைக் குவித்து சாத்திக் கொண்ட கதவு தன் அழுக்குக் குரலில் விரட்டியது. ஒரு சிறு கவனப்பிசகில், கீழே விழுந்தது அவமானமாகத் தோன்றவில்லை.

'வாளிப்பான சாக்லெட் மாதிரிடா...' ரசித்து சிலாகித்துச் சொல்லி அனுப்பிய சிநேகிதனின் வார்த்தைகள் அவமானப்படுத்திக் கொண்டேயிருந்தது.

ஒரு சாக்லெட் வாங்க முடிந்ததற்கும் வாங்க முடியாமல் போனதற்குமுண்டான போராட்டங்கள் அழிந்து போயிருந்தன அங்கே.

Friday, December 07, 2007

இணைய தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல்


















இஸ்லாமும் இணையமும்....

இஸ்லாமும் இணையமும் -

கடந்த முறை விடுமுறையில், இந்தியாவுக்குச் சென்றிருந்த பொழுது, இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று சொல்லி இருந்தேன். கலந்து கொண்டேன்.

இஸ்லாத்தின் மீது நேர்மையான விமர்சனங்களுக்கப்பாற்பட்டு, தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் புறவடிவமாக எத்தகைய அவதூறுகளை, இட்டுக்கட்டிய ஆபாசங்களை வாரி இறைக்கிறார்கள் என்பது பற்றி பல்வேறு அமைப்புகளுடன் கலந்து பேசுவேன் என்று சொல்லி இருந்தேன். அதன் எதிர்விளைவுகள் எத்தகையதாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அவ்வாறு செய்வதற்கு ஆதரவு அளித்தவர்களை விட, 'வேண்டாம் - விட்டுவிடுங்கள்' என்று அன்புடன் அறிவுறுத்தியவர்களே ஏராளம். தொலைபேசியின் மூலம் - மின்னஞ்சல் மூலம். மற்றும் நேரில். இந்தியாவிற்கு விமானம் ஏறுமுன்னே என் முடிவுகளை மாற்றிக் கொண்டேன். எந்த ஒரு காரியத்திலும், முடிவு தனதாக இருந்தாலும், சுற்றியிருக்கும் ஆதரவு தளம் முழுமனதுடன் தன் ஆதரவு கரங்களை நீட்டும் பொழுது தான், செயலில் இறங்க முடியும்.

அடையாளமற்று, மறைந்திருந்து மட்டுமே இயங்க இயலும் மனித நேயமற்ற போலிகளுடனும், தகுதியற்ற அற்பர்களுடனும் வீண் போராட்டத்தில் இறங்குவதன் மூலம், நாம் நம் மதிப்பையும், தகுதியையும் குறைத்துக் கொண்டு, கால விரயத்தில் ஈடுபடுவது தேவையற்றது என்ற சில நண்பர்களின் அறிவுறுத்தலால், முடிவுகளை மாற்றிக் கொண்டேன். உண்மை தான். ஆனால், முற்றிலுமாக தவிர்த்து விடவில்லை.

நான் அமைப்பு சார்பாக என்றுமே இயங்கியவன் அல்ல. இணையத்தில் கூட எந்த ஒரு அமைப்பையும் சார்ந்து இயங்குபவன் அல்ல. அமைப்புகளும் என்னைத் தங்களோடு இணைத்துக் கொள்வதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், அமைப்புகளின் கோட்பாடுகளை ஏற்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், நிறைய சமயங்களில் அவற்றோடு முரண்படவும் செய்கிறேன். சுயமாக சிந்திப்பதுவும், எழுதுவதும் மட்டும் தான் என் விருப்பமாக இருந்தது. அமைப்புகளின் செயல்பாடுகளில் பல, சுயசிந்தனைகளை பின் தள்ளி விட்டு, அமைப்பின் சிந்தனையைத் தத்தெடுத்து, அதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்தவையாகத் தானிருக்கின்றனவே தவிர, சுயஆளுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவையாக இருப்பதில்லை. ஆக, அமைப்புகளை அணுகுவதில்லை என்ற முடிவை எடுப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.

அதே வேளை, என் மனநிலையை பொதுவாக வெளியிடுவதற்கும், விவாதிப்பதற்கும் தயங்கியதில்லை. ஆக, அமைப்புகளை அணுகுவதில்லை - அதே சமயம், சுயசிந்தனையுடன் இயங்கும் பிறருடன் பேச தயங்குவதில்லை. அது போன்று தான், இணைய நிகழ்வுகளை எந்த அமைப்பிடமும் முறையிடவில்லை. ஆனால், அதற்கும் மேலான தளத்தில் முறையிடுவது என்று முடிவு செய்தேன். அமைப்புகளற்ற சமதளத்தில் இயங்கும் நண்பர்களின் வாசிப்புக்கு விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன்.

சென்னையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், ஊடகத் துறை பற்றிய ஒரு அமர்வில், அந்தக் கட்டுரையை வாசித்தேன். பெரும்பாலும் பத்திரிக்கைத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமே அமர்ந்திருந்த அன்றைய தினத்தில் எல்லோரும் கவனத்துடன் கேட்டனர். மொத்தம் எட்டு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இறுதியாக தலைமை தாங்கியவர் அன்றைய அரங்கின் பரிந்துரையாக, இஸ்லாத்தின் மீது புனைந்து பரப்பப்படும் அவதூறுகளையும், ஆபாசங்களையும் கண்காணிக்க தேவையான அமைப்பொன்றை ஏற்படுத்த கோரிக்கை வைப்பதாக மாநாட்டு நிர்வாகிக்களுக்கு, ஆய்வரங்கின் முடிவை எழுதி வாசித்தார்.

பின்னர் சமநிலை சமுதாய ஆசிரியருடன் தொடர்பு கொண்டு, கட்டுரையைப் பிரசுரிக்க கேட்டுக் கொண்டேன். கட்டுரையை முழுவதுமாக வாசித்து விட்டு, கண்டிப்பாகப் பிரசுரிக்கிறேன் - அதுவரையிலும் வேறு எங்கும் பிரசுரத்திற்குத் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனாலயே - இதுவரையிலும் வேறெதுவும் எழுதவில்லை. வலைப்பூவில் வெளியிடுவதைக் கூட, பத்திரிக்கையில் வந்த பின் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதினால், நீண்ட இடைவெளிக்குப் பின் இப்பொழுது தான் அது பற்றி பேசுகிறேன். அக்டோபர் மாத இதழில் அந்தக் கட்டுரை வெளிவந்தது. பலரும் வாசித்திருக்கக் கூடும். என்றாலும் எனக்கு அந்த இதழ் கிடைக்கவே இல்லை. அது எப்படி வந்திருக்கிறது - எங்காவது குறைத்திருக்கிறார்களா - நீளம் கருதி என்று பார்த்த பின்னே வெளியிடலாம் என்று காத்திருந்ததில் இத்தனை தாமதம். என்றாலும், ஒரு வார்த்தையைக் கூட ஆசிரியர் குறைத்து விடவில்லை என்பதில் ஒரு திருப்தி. அதை இனி நீங்களும் வாசிக்கலாம்.

இன்றைய ஊடகங்கள் தங்கள் கருத்தியல் பலாத்காரத்தை பிறர் மீது எவ்வாறு திணிக்கின்றார்கள் - ஊடக உரிமையாளார்கள் எவ்வாறு ஒரு செய்தியைப் பார்க்கின்றனர் - எப்படி வடிகட்டுகின்றனர் என்ற பொதுமைத்தன்மையை எழுதி விட்டு, பின்னர் இந்த ஊடக வரிசையில் எப்படி இணைய ஊடகங்கள் இணைந்து கொள்கின்றன என்பது வரையிலும் ஒரு நீண்ட விரிவான கட்டுரை. ஒரு தேவையின் பொருட்டு, இஸ்லாம் என்று எழுதினேனே தவிர, இந்தக் கட்டுரை, அடக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஊடகப் பார்வைகளுக்கும் பொருந்துவதாகவே இருக்கும். தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற குறையுள்ள அனைத்து நண்பர்களும் இதை வாசிக்கலாம்.

இனி கட்டுரை அடுத்த பதிவில் :

Thursday, December 06, 2007

டிசம்பர் 6




























கொடி பிடித்து
சாலைகளில் போகின்றன பேரணிகள்
பக்கம் பக்கமாக எழுதித் தள்ளப்பட்ட
வரலாறுகள் நிறைந்து கிடக்கின்றன
செய்தித் தாள்கள் அனைத்தும்.
விவரமறிந்தவனாகக் காட்சியளிப்பவர்களெல்லாம்
கூடிக் கூடி விவாதிக்கின்றார்கள்
காட்சிப் பெட்டிகளில்
'தலை'களின் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன
பலப்பல உத்தேச கணக்குகளுடன்.


புனித ராஜ்ஜியக் கனவுகளை
விற்றுக் கொண்டிருப்பவன்
புறாக்களின் காப்பாளானாகத்
தன்னை அடையாளப்படுத்துகின்றான்
புறாக்களுக்கானத் தானிய வீச்சின் கரிசனத்துடன்
கனத்த கற்களும் கபடத்தனமாக எறியப்படுகின்றன
வீழ்ந்த புறாக்கள் அடுப்படியில் மணக்கின்றன
தப்பித்துக் கொண்டவைகளில் சில
புனிதனுக்கான குறியீட்டுக் காட்சியாக
எறிந்தவனின் தோளில் நிறுத்தப்பட்டது
புறாவின் அச்சத்தையும் பொருட்படுத்தாது.


கடந்தகால விதைப்புகளின் அறுவடை
மும்முரமாக விரைந்து நடக்கின்றது
முந்தியவனுக்கு நல்ல மகசூல்


எப்பொழுதும் போல்
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே
என்னாலியன்ற அனுசரிப்பாக
கறுப்பு உடை உடுத்துகிறேன்


எந்தவொரு நினைவூட்டலுமின்றி
ஒரு பனிசொறியும் குளிர்காலையில்
தன்னை அறிவித்துக் கொள்கிறது
ஒரு மரணதினத்தின் இயல்பாய்


டிசம்பர் 6.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்