"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, August 24, 2007

காதலைச் சொல்ல வா…

காதலைச் சொல்ல வா…
பிரயாசைப்பட்டு மறைத்துக் கொண்டோம்
ஒருவர் மீதான ஒருவரின் காதலை
வலுவில் சமாதானாம் சொல்லிக் கொண்டோம்
நட்பு தான் இது தானென்று

ஒவ்வொரு நாள் கடத்தலின் போதும்
ஒருவரை ஒருவர் நட்புடன் சிலாகித்துக் கொண்டே
காதலைத் தேடிக் கொண்டிருந்தோம்

வெளியில்

காதல் கிடைத்த பொழுது
மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து கொண்டோம்
நமது புதிய துணைகளை

இவ்வுலகின் எந்தவொரு உயிரும் அறிந்திருக்கவில்லை
நம் மீதான காதலுக்கு மானிட வடிவம் தேடி
நாம் அலைந்து கொண்டிருந்ததை

பிரதிகளும் பிம்பங்களும் அசுவராசியமாய் மாறி
கடிகார சிறுபெரு கரங்கள் நகர மறுத்து
துவளத் துவங்கும் மந்தமான பொழுதுகளில்
தற்காலிகமாக காதலின் குவியத்தை
மாற்றி வைத்துக் கொண்டோம்

பிள்ளைகளின் நலனென்று

கையசைத்து விடைபெற்றுப் போய்விட்டனர்
தங்கள் பாதைகளைத் தேடி பிள்ளைகளும்
வார்த்தைகளை இன்னும் மலடாகவே வைத்திருக்க
உன்னாலும் என்னாலும் மட்டுமே முடியுமென்று
நம் மனதிற்குள் பேசிக் கொள்கின்றன பட்சிகள்.

இந்த உலகின் மீதான அவநம்பிக்கைகளை
தரித்துக் கொண்ட புதுகுடிகளாக வாழ்வதில்
ஒரு பெரும் சலிப்பு அடைந்துவிட்டோமாதலால்
வா, தேடுவோம் காதலை, வெளியில் அல்ல.

உள்ளுக்குள்


நான் உன்னை காதலித்தேன் என்பதை
நீ அறிந்தால் மட்டுமே
புனிதமானதென்று பலரிடமும் சொல்லி வைக்கப்பட்ட
நம் நட்புக்கும் கூட இயல்பான அதன் பொருள் கிடைக்குமென்ற
புரிந்து கொள்தலில் தான் மிச்சமிருக்கிறது வாழ்க்கை.

ஒரு காதலினால் இன்னொரு காதல் அழிவதில்லை.
நம் காதலை நாம் தெரிந்து கொள்வதினால்
யாருக்கும் எந்தப் பிணக்குமிருக்கப் போவதில்லை
அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையையும் கொடுத்த பின்பு
மீதமிருக்கும் கொஞ்ச வாழ்க்கையில் காதலிப்பதினால்
எந்த கடலும் ஆழிப்பேரலைகளை அனுப்பி வைத்து
அழித்து விடப்போவதில்லை இவ்வுலகை.

ஒருவேளை
ஒரு புதிய உலகம் தனது கதவைத் திறக்கக் கூடும்
நீயும் நம்முள் ஒளிந்து கிடக்கும் இந்த காதலை
கண்டு கொண்டு கண் திறக்க முடிந்தால்

இழந்து விட்டதற்காக வருத்தமடையவில்லை தானென்றாலும்
தவிப்புடன் அமர்ந்திருக்கும் இந்தக் காதல் அமைதியடையும்
நீ
அட, ஆமாம், நானும் உன்னைக் காதலித்தேனென்று
சொல்லும் வேளையில்
யாசிக்க உயர்ந்த கரங்களில் ஏந்திய பாத்திரங்கள்
நிரம்பி வழியட்டும், உனது ஆமோதிப்பினால்.வா, காதலைச் சொல்ல வா…
இப்பொழுதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.
வா, காதலைச் சொல்ல வா...

வா, காதலைச் சொல்ல வா…
இப்பொழுதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.
வா, காதலைச் சொல்ல வா...

Thursday, August 02, 2007

பெருந்துயரம் நிகழ்ந்தது: ஆசிப் மீரான் துணைவியார் மரணம்.

வார்த்தைகள் தங்களை மாய்த்துக் கொண்டு, மௌனம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்ட தருணம் அது.

எனக்குக் கிடைத்த செய்தியை உறுதி செய்தி கொள்ள இந்தியாவிற்குச் சென்றிருக்கும் நண்பர், சகோதரர் இசாக்கைத் தொடர்பு கொண்ட பொழுது உடைந்த, அழுகின்ற குரலில் சொன்னார் - செய்தி உண்மை தான் என்று. அருகே ஆசிப் மீரான் இருக்கிறார் - பேசுங்கள் என்று கொடுத்தார். என்ன பேசுவது என்று தெரியவில்லை. எந்த வார்த்தைகளும் துணைக்கு வரவில்லை.

"எப்படி இருக்கிறீர்கள்?" என்ற பொதுவான கேள்வியைத் தான் கேட்க முடிந்தது.

"இந்தத் துயரம் நிகழ்ந்தது என்று இப்பொழுது கூட என்னால் நம்ப முடியவில்லையே" என்று ஆதங்கத்துடன் கூறினார். மேற்கொண்டு என்ன பேசுவது?

"எப்பொழுது நிகழ்ந்தது? வீட்டிலா, மருத்துவமனையிலா?"

"மருத்துவமனையில் தான். ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லையே"

பிறகு மீண்டும் மௌனம். "துபாய் வந்த பின் பேசுவோமே" என்றார். சரி என்று தொலைபேசி தொடர்பைத் துண்டித்து விட்டேன்.

ஆனால், மனதை துயரம் அழுத்த, மீண்டும் உடன் இசாக்கைத் தொடர்பு கொண்டு, "குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

"அமைதியாக இருக்கிறார்கள்" என்றார்.

"விஷயம் தெரியுமா?"

"தெரியும்"

"என்ன நிகழ்ந்தது என்று புரிந்து கொண்டார்களா?"

"தெரியலையே?" என்றார்.

அடக்கம் முடிந்த பின்னர் மீண்டும் கூப்பிடுகிறேன் என்றார்.

எந்த வேலையிலும் நாட்டமில்லாமல், மனம் தவித்துக் கொண்டிருக்க, பணியிடத்திலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அறைக்குத் திரும்பி விட்டேன்.

எந்த ஒரு வார்த்தைகளைக் கூறியும் ஆறுதல் சொல்ல முடியாதவனாகத் தான் இருக்கிறேன்.

எந்த ஒரு பயணத்திலும், சொல்லிக் கொண்டு விடை பெற்றுச் செல்வது தான் மனித இயல்பு. ஆனால், இந்த உலகிலிருந்து மொத்தமாக இனி திரும்பவே இயலாத ஒரு பயணத்திற்குச் செல்பவர்களுக்கு மட்டும் அந்த உரிமையில்லை. பிரியப்பட்டவர்களிடத்தில் சொல்லிக் கொண்டு, குழந்தைகளை உச்சி முகர்ந்து, வாழ்த்தி விட்டு, "சென்று வருகிறேன்" என்று ஒரு ஒற்றை விடை பெறுதலைத் தரக்கூட கால அவகாசமின்றி, அழைத்துக் கொள்வது தான் இறைவனின் வழக்கம் என்றால், மனம் ஆயாசம் அடைகிறது - இந்த இறைவனினால், நாம் பெற்ற பயன் என்ன என்று?

பதினைந்து வருடங்களுக்கு முன்னால், பிரசவத்தின் போது என்னிடம் சொல்லிக் கொள்ளக் கூட சந்தர்ப்பம் கிடைக்காமலே, தனது இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு மரணித்துப் போன என் தங்கையின் நினைவு ஏனோ இந்தக் கணத்தில் வருகிறது. 'எல்லாம் ஆண்டவன் செயல்' என்று எல்லோரும் சொன்ன பொழுது, இது தான் இறைவன் என்றால், அவன் எனக்கு வேண்டாம் என்று விலகிக் கொண்டவன் - பதினைந்து வருடங்களாக. இப்பொழுது தான் இறைவன் மீதான வருத்தங்களும், கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நேரம்.

ஆசிப் மீரானின் துணையின் மரணம் மீண்டும் இறைவனைக் குறித்தான கேள்விகளை எழுப்பத் தான் செய்கின்றன. என்றாலும் என்ன செய்வது, எங்கு சுற்றி, எங்கு போனாலும், மீண்டும் மீண்டும் அவனிடத்திலே தான் வந்து சேர வேண்டும் என்ற புரிதல் ஆறுதல் சொல்கிறது.

இறைவன் துணையிருப்பான் என்று.

எல்லாம் வல்ல அந்த இறைவன், ஆசிப்பிற்கு இந்த நேரத்தில் துணையாக நிற்பான் - இந்த துயரத்தைத் தாங்க வல்ல வலிமையைத் தருவான் - தரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், இந்த துயரச் செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்