"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, September 27, 2005

இறப்பதினால் ஆய பயன்....

நண்பனே நாமிருவரும்
எப்பொழுதாவது
சந்தித்துக் கொண்டிருக்கிறோமா?

நமக்குள்
தீர்க்கவியலாத சிக்கல்கள்
ஏதுமுண்டா?

என்னை கொல்வதற்கு
உனக்கு
என்ன காரணங்கள் உண்டு?

உனக்கென நியாயங்களிருக்கலாம்.

உன் குழந்தைகள்
ஏதோ ஒரு வீதியுத்தத்தில்
என் நாட்டு குண்டுகளில்
வீழ்ந்திருக்கலாம்.

உன் மனைவியை
என் நாட்டின்
யாரோ ஒரு வீரன்
பாழ்பண்ணியிருக்கலாம்.

உன் அழகிய வீட்டின் சுவர்கள் மீது
கரி பூசியிருக்கலாம்
வெடித்துச் சிதறிய குண்டுகள்.

உன் இனிமையான தோழன்
ஒருவனின் கால்களை
என் நாட்டு டாங்கிகளேறி
சிதைத்திருக்கலாம்.

உன் எல்லாத் துயரங்களின்
அடையாளமாக என்னை
இருத்தி வைத்திருக்கிறாய்.

உன் கையிலுள்ள துப்பாக்கியில்
எத்தனை எதிர்பார்ப்புகள்
மரணிக்கப் போகின்றன தெரியுமா?

மகன் திரும்பப்பிரார்த்திக்கும்
ஒரு தாயின் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்துவிடும்

இரவில் குட்டிக் குட்டிக் கதைகள்
கேட்கக் காத்திருக்கும்
என் சிறு குழந்தைகள்
இனி ஒருபோதும்
தேவதைக் கதைகளை
கேட்கவே போவதில்லை.

இரவின் மௌனத்தில்
காதலின் மொழி பேசிய
என் மனைவியின் அன்பு
இனி உறைந்து போய்விடலாம்.

இதெல்லாம் எனது வருத்தமில்லை
நண்பனே.
என் பரிதாபத்தைப் படமெடுத்து
நான் சார்ந்த அனைத்தையும்
அவமானப்படுத்துகிறாயே
அதை மட்டும் நிறுத்திக் கொள்

சுட்டு விடு.
ஒரே குண்டில்
ஒரே துளைத்தலில்
நான் சாகும்படி சுட்டுவிடு.

நண்பனே
எந்தக் கணக்கானாலும்
என் மரணத்துடன்
நீ சமாதானமாகி விடு.
இல்லையெனில் என்ன பயனுனக்கு
நான் சாவதால்?

Thursday, September 22, 2005

என்னைத் தேடி

பல முகங்கள் தேடி
தன் முகம்
இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது

தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்

வைத்த இடத்தில்
கண்ட பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்

சொந்த முகத்திற்கு
பட்டை தீட்ட
சில பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்

சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்

Monday, September 19, 2005

ஓர் இறைவனின் சோகம்

ஓர் இறைவனின் சோகம்.


இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு

இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை

இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்

வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.

புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.

குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு

ஒரே வித்தியாசம்.

ஒரே வித்தியாசம்


அவளை விட
உயர்ந்தவள் தானென்று
நிறுவுவதில்
அதீத கவனம் கொள்கிறாய்.

பூவும் பொட்டும் வைப்பதும்
தாலி கட்டுவதும் கட்டாததும்
அதிக வித்தியாசப்படுத்துவதில்லை.

பணிகள் நிமித்தம்
தேவைகள் நிமித்தம்
எல்லாவிடத்தும் போய்வருவதில்
என்ன பெரிய வித்தியாசமிருக்கப் போகிறது?

ஒன்றில் மட்டும்
உன்னிடம் அவள் தோற்றுப்போவாள் -
பகட்டாகவும் படோடபமாகவும்
மணச்சடங்கு இல்லங்களில்
உனக்குக் கிடைக்கும் வரவேற்பு
அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை தான்.

என்றாலும் உனக்குத் தெரியுமா -
நீ அறியாத
வித்தியாசமொன்று உண்டு என்பதை.

பூசணிக்காயையும் எலிகளையும் கொண்டு
சிந்தெரல்லாவிற்கு
தேர் கொடுத்த தேவதையாக
வருடத்திற்கொரு மாதம்
புலம் பெயர்ந்த உன் புருஷனை
உனக்குத் தருவது போல்
அவளுக்குத் தராத
அந்த இறைவன் தான்
அந்த வித்தியாசமென்று?

Sunday, September 18, 2005

மௌனம் துற.....

மௌனம் துற....

உன் மௌனம் காண்பதற்கு
விலைமதிப்பற்றது தான்
என்னருகே நீயிருக்கையிலேயென்று
என்றோ ஒரு நாள் உன்னிடம்
சொன்னேனென்பதற்காக
இன்று கண்டங்கள் இடைவெளியில்
மீண்டொருமுறை தொலைபேசியில்
மௌனம் காட்டும் உன் முயற்சியை
விலைமதிப்பற்றதென்று
சொல்ல இயலவில்லை அன்பே!

மின்னல் வேகத்தில்
கம்பிகளுக்கிடையே நகர்ந்திடும்
துடிப்புகளில்
விலை நிர்ணயிக்கப்படுகிறது
உன் மௌனத்திற்கு.

ஆதலால் அன்பானவளே
மௌனம் துற
கண்டங்கள் இணையட்டும்.

நிழல்கள்.

நிழல்கள்.
***

1.

உன் தாவணி
பிடித்து
நீ தவிர்க்க நினைத்த
வெய்யில்
உன் கைகளை
மாலையாக்குகிறது
என் நிழலுக்கு....
***

2.
மாலை நேர
இருட்டை விரட்ட
சன்னல் கதவுகளைத் திறந்தேன்.
வெளிச்சமாக உள்ளே
நுழைந்தது
மாடியில் பாடம் படிக்கும்
உன் நிழல்.....
***

3.
நிழல்கள் மெலிந்து போனது -
இலையுதிர் காலத்தில்
மொட்டை மரம்.
***

4.
மழை ஓய்ந்த நேரத்து
வெய்யிலில்
சூடாக என் தேகம்.

எனக்கும் சேர்த்து
நடுங்குகிறது
ஓடும் நீரில்
என் நிழல்....
***

5.
எப்போதும்
என்னை ஒட்டிக் கொண்டிருக்கும்
நிழலே
நீ எங்கே தூங்குவாய்?
என் படுக்கையின் கீழா?
***

6.
என்னைப்
புதைக்க
இருளிலே
தூக்கிச் செல்லுங்கள்.
என் நிழலுக்குத்
தெரிய வேண்டாம்
இனி
ஒருபோதும் பிறப்பில்லை
அதற்கென்று.........
***

7.
விறகு கட்டைகள்
அடுக்கி
துணி போர்த்து
நீயும் நானும்
கட்டிய வீட்டின்
நிழல்
மொட்டை மாடியில்
இன்னமும் இருக்கிறது -
ஒதுங்க ஆள் இல்லாமல்.
***

8.
நீயும் நானும்
தட்டுத் தடுமாறி
ஒரு குடையினுள்
ஒட்டிக் கொள்ள
தடுமாறுகையில்
பிணக்கில்லாமல்
ஒன்றாகிப் போயிருந்தது
நம் நிழல்கள்.....
***

9.
முட்டாள் நிழலே!
எனக்கே இடமில்லாத
அவள் பிடிக்கும்
குடையினுள்
நீ ஏன் நுழைய
முயற்சிக்கிறாய்?
***

10.
எழுந்து நிற்கும்
ஒவ்வொரு பொருளோடும்
ஒட்டுதல்.

ஆன்மாவோடு
அலையும்
மனிதனை மட்டுமல்ல -
ஜடத்தையும் கூட
அண்டி நிற்றல்.

எஜமானனின்
அத்தனை பராக்கிரமத்துக்கும்
கொடுப்பது,
எல்லோருக்கும் போல
ஒரு புறகோட்டு வடிவம்.

ஒரு துண்டு வெளிச்சம் -
தீக்குச்சி முனை
அண்ட வெளியின்
அணு உமிழல்
ஒரு கீற்று வெளிச்சம் -
ஒரு துண்டு வெளிச்சம்
வழி மறிக்கும்
ஒரு வடிவம் போதும் -
நிழலாக.

Thursday, September 01, 2005

அன்பானவளுக்காக

1.
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுக்குள்
மற்றவர்
உற்று நோக்குவதல்ல........

அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே

காதல்........


2.
என்
மிகச்சிறந்த
கவிதைகளை
நான் என்றுமே
வெளியிடப் போவதில்லை...

அவை
உனக்காக எழுதப்பட்ட
காதல் கடிதங்கள்....


3.
பல ஆண்டுகளாக
எனக்காக
கவிதையே எழுதவில்லையே
என்று அங்கலாய்க்கிறாய் நீ...

இத்தனை நாட்களும்
உன்னோடு
நான் பேசிய பேச்சுக்களையெல்லாம்
என்னவாக நினைத்தாய்?


4.
உனக்கு
கொலுசு அணிந்து
அழகு பார்க்க
மனம் துடிக்கிறது.

பின்னர்
நீ பேசுவதில்
கவனம் கொள்ள
இயலாதென்பதால்
வாங்கிய கொலுசுகள்
இன்றும் சிணுங்குகின்றன
என் மனதினுள்...

5.

சொற்களில்
புதைந்த காதலை
தேடச் சொல்லி
கவிதை தருவேன்......

நீ
காதலைக் காட்டி
சொற்களை
தேடச் சொல்வாய்......

வழக்கம்போல
இன்றும்
எனக்கு
தோல்வி தான்.....

6.
உன்
காதலுக்கான
காத்திருப்பிற்கு
காலக்கெடுவுகள்
எல்லைகள்
விதிக்க முடியாது...

மரணம் கூட
உன் காதல்முன்
வெறும் அரைப்புள்ளி தான்...

7.
வியப்பாக இருக்கிறது
முக்கடல் கூடும்
சங்கமம்
எத்தனை சிறியதென!!!

நீயும் நானும்
இணைந்து நின்று
கடல் பார்த்தபொழுது

8.
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...

ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...

அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...

ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...

அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...

விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...

காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே இருந்து விடேன் -
உலகின் அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?
9.
உனக்கான
என் காத்திருத்தலில்
காலம் வீணாகியது...

எனக்கான
உன் காத்திருத்தலிலும்
காலம் வீணாகியது...

இன்று
காலம் காத்திருக்கிறது -
நமக்கான காதலை
கையில் வைத்துக் கொண்டு ....

10.
என்றோ எழுதியதை
எடுத்துப் படிக்கும்
இந்தக் கணத்தில் -
இந்த சிறுபிள்ளைத்தனத்தை தாண்டி
எத்தனை தூரம்
வந்து விட்டோமென்றெண்ணி
வியர்க்கையில்

மீண்டும்
அந்த சிறுபிள்ளைகளின்
காலத்திற்குள் பயணப்பட
புகைப்படத் தொகுப்புக்குள்ளே
முகம் புதைத்து கிட ---

அன்பானவளே
தலையில் நரைத்திருக்கும்
அந்த ஒற்றை முடியைப்
பிடுங்கி எறிந்த பின்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்