"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, July 08, 2005

காதலியாகிவிடு மனைவியே.......

எனக்குப் பிடிக்குமென்று
கசங்காத
பருத்திப் புடவைகளையே
எப்பொழுதும் கட்டி வருவாய் -
காதலித்த காலத்தில்.

இன்றுமெனக்கு
பருத்திப் புடவைகளையே
பிடிக்கிறது -
உனக்குத் தான்
வியர்வை படிந்த நைட்டியே
உலகமாகி விட்டது
எப்பொழுதும்.

மனைவியாக
ஏவல் செய்கிறாய் -
தேநீரும், செய்தித்தாளும் தலைமாட்டில்,
இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.
காதலியாக செய்த
கடமைகள் மட்டும்
குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே.

நீ
காலையில் உடுத்திப் போகும் ஆடை
மாலையில் வந்து பார்க்கும் முன்னே
அழகாக மடித்து
அலமாரி உள்ளே போய்விடும்
நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்
நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...

காதலியாக இருந்த பொழுது -
ஒருநாள் மறந்தாலும்
சினந்து காதைத் திருகுவாய்
'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'
சொல்லவில்லையென்று.

இன்று வருடத்திற்கு
ஒருமுறையேனும் சொல்லப் போகையில்
நெற்றிக்கண் திறக்காத குறையாய்
கடிந்து பேசுகிறாய்
'பொறுப்பில்லாத மனுஷ’னென்று.

மனைவியாக
நீ
இருந்தது போதும் -
பருத்திப் புடவை கட்டிய
காதலியாக இன்று மட்டும் வா.

உன் காதோரத்தில்
'நான் உன்னை நேசிக்கிறேன்'
என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
உன் பிறந்த நாளான
இன்று மட்டுமாவாது.....

5 comments:

நண்பன் said...

நன்றி மூர்த்தி...

சில கருத்துகள் உண்மையானவை தான்.

ஆனாலும், காதலிக்கும் பொழுது அப்படி இப்படி இருக்கத் தான் செய்வார்கள். மனைவியான பின்பு, யதார்த்தம் தெரியத்தானே வேண்டும்?

பட்டி மன்றத்தலைப்புகளை கெடுத்து வைத்தவர்களெல்லாம் - இந்த வியாபார நோக்கு கொண்ட தொலைகாட்சிகள் வந்ததினால் தானே?

நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அழகான காதல் உணர்வு..பழைய ஞாபகங்களைத்தூண்டுகிறது

பாராட்டுக்கள்..



இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Anonymous said...

இது ஆனந்த விகடனிலிருந்து காப்பி அடித்ததுதானே?

நண்பன் said...

ஐயா அநாமதேயம்,

முழு விவரத்தையும் கொடுத்தால் யார் எங்கிருந்து காப்பி அடித்தார்கள் என்று விளங்கி விடும்.

நான் ஆனந்த விகடனை படிப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டது.

ஆக அடுத்தமுறை எழுதும் பொழுது முகம் காட்டி ஆதாரங்களுடன் எழுதுங்கள்.

வெறும் பரபரப்பிற்காக எழுதும் இழி பிறவியாக மாறி விடாதீர்கள்.

அன்புடன்

நண்பன்

நண்பன் said...

நிலவு நண்பன்,

மிக்க நன்றி.

நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்