தனிமை
ஒராயிரம் மனிதர்கள் மத்தியிலும்
என்னைத் தனித்தவனாக
வேறாருடனும் ஒட்டச் செய்யாமல்
தான் மட்டும் ஒட்டியிருக்கும் உறவு.
ஆளரவமற்ற பெருஞ்சாலைப் பயணத்தில்
ஆயிரமாயிரம் மனிதர்களை
சுற்றிலும் நிற்கவைத்துப் போகும்
புன்னகையுடன்.
எந்தப் பேரங்களுக்குமிடமில்லாது
தன் போக்குக்கு வந்து போகுமதை
இப்பொழுதெல்லாம்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அருகில் அது வீற்றிருப்பதைக் காணதவர்கள்
சட்டென்று விரைந்து விலகி
தூரப்போய்த் திரும்பி கலவரப்படும் பொழுது
வீற்றிருக்குமோ அருகே இந்தத் தனிமை?