"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, August 26, 2005

அடிமையாய்

விலக்கி வைத்த
கனியை உண்ட பாவம்
எல்லைகளற்று
விரிந்து கிடக்கின்றது

கனியைக் காட்டித் தந்த
சர்ப்பமோ
கால்கள் போனாலும்
ஊர்ந்து பிழைக்கும் வலியை
கழட்டிப் போட
கற்றுக் கொண்டு விட்டது

விழுங்குமுன்னே
மாட்டிக் கொண்ட ஆதாம்
தண்ணீர் குடிக்கும் பொழுதெல்லாம்
தொண்டையில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
ஒரு ஆப்பிளோடு
தப்பிப் பிழைத்துக் கொண்டார்

விலக்கப்பட்ட கனியும் கூட
விமோசனம் பெற்றுவிட்டது
தினம் தினம்
உண்ணச் சொல்லும்
மருத்துவனின் தயவோடு...

விழுங்கித் தொலைத்த
ஏவாள் மட்டும்,
வயிற்றினுள் திணிக்கப்பட்ட
கர்ப்பப் பையிடம்
இன்றளவும் அடிமையாய்...

5 comments:

G.Ragavan said...

அருமையான கவிதை.

கருப்பையைக் கிழித்தெரியுங்கள் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகின்றது. கருப்பைதான் பெண்களை அடிமைப் படுத்துகிறது என்றால் மிகையாகாது.

கவிதையைச் சொன்னவிதம் மிகவும் அழகு.

NambikkaiRAMA said...

அருமையான கவிதை. பாராட்டுக்கள்!

NambikkaiRAMA said...

நீங்க நம்ம ஊரு காரரா?அடடே!

G.Ragavan said...

ஆமாம் ராமா, மேலும் நண்பன் நமது நண்பர்தான்.

நண்பன் said...

மிக்க நன்றி.

குழந்தை பெற்றுத் தருவதையும், அக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பிலிருப்பவள் எப்படியெப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே அவள் அடிமைப்படுத்தப்பட்டாள்.

குழந்தை பெற்றுத் தருவதை அவள் மறுத்து விட்டால் மட்டுமே, அவளைச் சுற்றி எழுப்பப்பட்ட சுவர்கள் தகர்ந்து விழும்.

அவளால் மறுக்கவும் முடியாது - விடுதலையைப் பெறவும் முடியாது என்பது தான் சோகமே....

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்