"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, October 17, 2005

தண்டனை....

தனியாக வந்த பொழுது
நீர் எமக்கு அனுசரணையாயிருந்தீர்
பசி தாகமென்ற தவிப்புகளை
அமைதி கொள்ளச் செய்தீர்
பின் வழிகாட்டியாய்
சிந்தனைகளுக்கு
வண்ணம் பூசும் ஓவியனாய்
பல்வேறு அவதாரமெடுத்தீர்
பல்வேறு தருணங்களில்.

மெல்ல மெல்ல கற்று தேர்ந்து
தனித்தியங்கும் தன்மையுற்றதும்
அறிந்து கொண்டோம் -
நீர் காட்டித்தந்த
வழித்தடங்கள் பலவும்
எங்கும் செல்லாதவையென்று.
நீர் சுற்றி வளைத்து
போட்டுத்தந்த பாதைகளனைத்திற்கும்
நேர்வழி கண்டுகொண்டோம் இன்று.

உன் பிரம்மாண்ட நிழலில்
இருண்மை அப்பிய மலர்த்துளிகளில்
இன்று சூரியம் வழிகிறது
வலிக்க வலிக்க சூல் கொள்கிறது
எம் கர்ப்ப மூளைகள்.
உம்மை கடும்விசாரணை செய்து
வீதியில் நிறுத்தி கேள்விகேட்க
எண்ணிய பொழுதிலே
நீர் விலகிக் கொண்டீர்
மிகைபீடங்களில் -
புன்னகைத்தமர்ந்து
கேள்விகளுக்கப்பாற்பட்ட ஓர் இறைத்தூதனாய்
எமக்கெட்டாத தூரத்தில்.

உம்மை
விசாரிப்பதோ
கேள்விகேட்பதோ
பண்பாடற்ற செயலியாய்
பதிவு செய்யப்படும்
வரலாற்றில்.

எம்மால் முடிந்த
எளிய தண்டனைவொன்றை செய்வோம்
உமக்கு
பீடங்களற்ற சிலையொன்றை வைப்போம்
மிக அதிகமாக மாசுபடும் வீதியொன்றில்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்