"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, November 11, 2005

சிறுவட்டம் தாண்டி

குண்டுச்சட்டியில்
குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த
நண்பர்கள்
விழிகளை வீசித் தேடினர்
சக குண்டு சட்டிகளை

குண்டுச்சட்டி சிறுவட்டம் வழி
வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது
மல்லாந்து கிடந்த நண்பர்களை

விண்வெளியின் விரிவே
ஒரு துண்டு வட்டமென்ற புரிதலில்
வாழ்வின் இன்பங்களைத் தேடி
வட்டமடி தொழிலில்
மீண்டும்
குதிரைகள் மீதேறி வலம்

முகமறியா ராசகுமாரன் வருகை தவத்தில்
துதிபாடலுடன் ஒருவர் பின் ஒருவராக
குண்டுச்சட்டியின் விரிந்த வயிற்றில்
பழகிய வட்டப்பாதையின்
வரிசைக் கிரம சுற்றுதலில்
நண்பர்கள்

குண்டுச் சட்டி தொப்பையடியில்
குருதிப் பிதுக்கி வெளியேற்றும்
இந்திரியநாற்ற முகர்வில் முகஞ்சுளித்து
வலம் வந்த நண்பனுக்கு மட்டும்
வானம் தன் இருப்பை அறிவித்தது
சிறுவட்டமருகே வந்த பறவையொன்றினால்
குத்தித் தூக்கி வானில் மிதக்க வைத்து

வானின் விரிவுகளில்
பறவை சவாரி பிரும்மாண்டத்தில்
மீண்டுமொரு வட்டப்பாதை வாழ்க்கை
விரும்பா நண்பனோ
பறவையிடம் கூக்குரலிட்டான் -
சிறகுகள் தா
என்னைத் தூக்கிச் சுமக்காதே

தோளில் துளைத்த அலகில்
வலிக்க வலிக்க
பிய்ந்து தொங்கும் சதைகள்
வடிந்து உறையும் குருதியோட்டம்
உயிர் பிய்க்கும் பிரசவம்
தோள் கிழித்து வந்ததொரு உறுப்பு

கண்மூடி வலி தாங்கிக் கிடந்த மனம்
உலுப்பி விட்டது
பற பற
இறக்கை வீசி வீசி
பற பற

விட்டுப் போன இடத்திலிருந்து பற
பிறந்ததன் பொருளறிந்து பற

பற பற
இறக்கை வீசி வீசி
பற பற

அடிவானம் தொட விரியும் இறக்கை
துருவங்கள் தொட நீளும் இறக்கை
பிரபஞ்ச வெடிப்பு தேடும் இறக்கை

வீசி வீசி
பற
வீசி வீசி
பற

புதிதாய் வந்த விடுதலை கொண்டு
பறந்து பறந்தே மரணம் வரை
பற

புவியீர்ப்பு விசைக்கு
உடல் பணியும் வரை
பற.

பறந்து திரியும் வாழ்வறியா
குண்டுசட்டி குதிரையோட்டிகள்
தலைவன் துதியோதி
அதே
வட்ட பாதையில்
அதே
வாழ்க்கையில்.

அறிந்திருக்கவில்லை
அந்த அவர்கள்
குண்டுசட்டியின் சிறுவட்டம் தாண்டி
விரிந்திருக்கும்
பிறிதொரு வாழ்தலின் உன்னதம்.

அவர்கள்

என்றும் போல்
என்றும் போல்
என்றும் போல்

மூடராய்.

6 comments:

முத்துகுமரன் said...

கவிதையின் வடிவம் புதியதாக உணர்கிறேன். உலகில் தங்களை மட்டும் அறிவுஜீவிகளாக நினைத்து வாழும் அறிவீலிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது கவிதை. உலகம் பரந்தது தேடல் உள்ள அனைவருக்கும் பொதுவானது. தேடலில்லா வாழ்க்கை என்பது மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மட்டுமே.....

விரிவான கருத்துகளோடு பிறகு வருகிறேன்

நண்பன் said...

நன்றி முத்து.

விரிவான கருத்துகளை எழுதுங்கள்.

b said...

மிகவும் நல்ல கவிதை என்று மட்டும் தெரிகிறது. ஆனால் பகுத்தறிந்து பொருள் புரியத் தெரியவில்லை.

(எங்க அப்பத்தா தமிழபடி தமிழபடின்னு தலை தலையா அடிச்சுகிச்சு. நான் கேட்டாதானே?!)

நண்பன் said...

நன்றி மூர்த்தி.

இந்தக் கவிதை யாரைப் பற்றி எதைப் பற்றி பேசுகிறது என்று உங்களுக்குப் புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது?

சிற்றிதழ்களே உலகம் என்றும், அதன் நிறுவனர்களே தங்களை மீட்டெடுக்கும் ராசகுமாரன் என்றும் நம்பிக் கொண்டு வாழும் படைப்பாளிகளைத் தான் சொல்லி இருக்கிறேன் - சிறு வட்டங்களை விட்டு வெளியேறி வானத்தில் இறக்கை வீசி பறக்கச் சொல்லி....

இது இணைய தளங்களுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப் போனால் எங்கெங்கு படைப்புகள் பிரசவிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இது பொருந்தும்.

இப்பொழுது படித்துப் பாருங்கள் - விளங்காத பொருளெல்லாம் விளங்கும்....

அன்புடன்
நண்பன்

இ.இசாக் said...

தோழர் நண்பன்
கவிதைகள் சிறப்பான வடிவில் உள்ளது.
பெசு பொருள் சித்தனைக்குரியது வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
எழுதப்படுபவைகளே பதிவு பெறும்.. நம் சிந்தனைகள் பதியப்பட வேண்டும்

நண்பன் said...

நன்றி இசாக்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்