சாலையோரம்
கழிவோடு கழிவாக
அமர்ந்திருக்கிறான் -
அங்கு வந்து செல்லும்
பல கால்களையும்
பார்த்துக் கொண்டே.....
வளர்ச்சியை முடித்ததும்,
இன்னும் வளருகின்றதும்,
வளராமல் சூம்பிப் போனதும்
எனப் பலப்பல
கால்கள்
அவன் கவனம் கருகின்றன.....
சாதியைத் தேடாத
பார்வையால்
கால்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சில கால்களின்
வசீகர அழகு
அவன் உத்தேசத்தை
மறக்கடிக்கும் -
பசியை மறக்க வைக்கும்
புகை வலிப்பைப் போன்று...
எல்லாக் கால்களையும்
கவனிப்பது
அவன் உத்தேசமில்லை -
நீர் வற்றிய குளத்து
கொக்கைப் போல
அவன் கவனமெல்லாம்
அணி செய்யப்பட்ட
கால்களைத்
தேடிக் கொண்டிருக்கும்....
இன்றைய
இரவுப் பொழுதிற்கு
இரை கிடைக்குமா -
இந்தக் கால்களில்
ஒன்றிலிருந்து?
அரக்கப் பசியுடன்
கால்களை
கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் -
பக்கத்தில்
வேலையற்றுக் கிடந்தன
ஊசியும், நூலும்.....