நேசக்குமாரும் முஸ்லிம் இனத்துரோகிகளும்!
வலைத்தளத்தில் இயங்குவதையும், எழுதுவதையும் விட்டு - கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஒரு தனிமை தேவைப்பட்டது என்பதற்காக நிறுத்தியது - பின்னர் அதுவே தொடரவும் செய்தது.
ஆனால். இப்பொழுது இந்த மௌனம் கலையும் நேரம் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் இந்தப் பதிவு.
நேசக்குமாரும் முஸ்லிம் இனத்துரோகிகளும்!
http://tmpolitics.blogspot.com/2006/11/blog-post_116385801610657478.html#comments
இஸ்லாமிய அன்பர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வலைப்பதிவில், கொஞ்சம் விசாரித்து விட்டு எழுதி இருக்கலாம். இத்தனைக்கும் இங்கிருந்து இஸ்லாமிய அமைப்புகளில் செயல்படும் அன்பர்களையும் அறிவோம். அல்லது, வலைப்பதிவில் எழுதப்பட்ட விஷயங்களையாவது கொஞ்சம் வாசித்து விட்டு எழுதி இருக்கலாம்.
இது எதுவுமே செய்யாது, நேசக்குமாரைத் திட்டி ஒருவர் எழுதி விட்டார் என்பதால், அதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, இங்கு அப்படியே மறுபதிவிட்டதன் மூலம், உங்கள் வலைப்பதிவின் நம்பகத் தன்மையைத் தான் குறைத்துக் கொண்டீர்களே தவிர, எங்கள் தரத்தைப் பற்றியது அல்ல.
உங்கள் தகவல்களுக்காக -
இதுவரையிலும் இந்தியாவில் இருந்து வந்த எந்த ஒரு நபருக்கும் உதவி புரிந்ததில்லை. அந்த எண்ணமும் இல்லை. இங்கு வந்து நிதி திரட்டுவதை - அவர்கள் எத்தகைய நோக்கம் கொண்டுள்ளவர்களாக இருந்தாலும் - கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறோம். சிரமப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்ப நலனுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பதுடன், மற்றவர்களிடத்தில் அத்தகைய பிரச்சாரத்தையும் செய்து கொண்டிருக்கிறோம்.
நேசக்குமாரையோ அல்லது அவர் போன்ற பிறரையோ இணையத்தில் பதிலுக்கு பதில் மல்லுக்கட்டிக் கொண்டு திட்டவில்லை என்பதால் இனத்துரோகி என்று குறிப்பிடுகிறாரா என்று புரியவில்லை.
முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் - ஒருவனுக்கு தான் சார்ந்தவற்றின் மீதான நம்பிக்கைகள் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டுமே தவிர, பிறரின் நம்பிக்கையின்மையின் மீது போர் தொடுக்க வேண்டும் என்பது அவசியமற்றது.
இதையே குரானில், சூரா 109ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு - என் மார்க்கம் எனக்கு.
Unto you your religion, and unto me my religion
.....lakkum theenukkum valiyaththeen.
இதை விட எளிமையாக மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகள் இருக்க முடியாது.
அவ்வாறாயின், இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியுடையவர்கள் அவர்கள் பாதையில் அவர்கள் விரும்பியவற்றை எழுதுகிறார்கள். அதற்காக அவர்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவ்வாறு பதில் சொல்லாததே - அவர்கள் கருத்தின் மீது கொண்ட மறுப்பாகும்.
மற்றபடிக்கு - என் நம்பிக்கைகளும் - நான் வாசிக்கும் குரானை புரிந்து கொள்ள நேரிடையாக நான் எடுக்கும் முயற்சிகளும் மட்டுமே முக்கியமாகப் படுகிறது எனக்கு. பிறர் சொல்லி என் மீது திணிக்க முற்படும் கருத்துகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.
அது போலவே, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விஞ்ஞான ஆய்வுகளையும், நிரூபணம் செய்யப்பட்ட உண்மைகளையும் மறுக்கப் போவதுமில்லை. தன் படைப்பின் பேரதிசயங்களையும், எல்லைகளையும், அதன் விஸ்தீரணங்களையும் மனிதன் ஆராய்வதை இறைவன் மறுக்கப்போவதில்லை.
மேலும், இந்த ஆய்வுகள், அந்த ஆய்வுகள் தரும் புதிய தோற்றங்கள் எண்ணங்கள் மூலமே இறைவனின் பிரம்மாண்டத்தை மனிதனால் உணர முடியுமே தவிர, நம்பிக்கைகள் மட்டும் கொண்டு, இறைவனின் பிரம்மாண்டத்தை உணர இயலாது.
நம்பிக்கைகள் இறைவனின் இருப்பை மட்டுமே உறுதி செய்கிறதே தவிர, இறைவனின் இயல்பையோ, அவனின் படைப்பின் விரிவையோ உணர்ந்து கொள்ள துணை நிற்பதில்லை. இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.
இந்தப் புரிதல்கள் இருப்பதினாலயே, இஸ்லாம் பற்றி எழுதுபவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால், அது என்னைப் பாதிப்பதில்லை.
மாறாக, சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தளங்களிலிருக்கும் தவறான அணுகுமுறைகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
இதன் தொடர்ச்சியாக, சமூக அரசியல் தளங்களில் எழுச்சி பெற முனைய வேண்டியது அவசியம் - அதன் ஆரம்ப கட்டம் - கல்வி. பெண்கள் உட்பட. பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். உடைகள் உட்பட. கண்ணியமான உடைகள் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Muslims should adopt a modern outlook and acquire a scientific temper.
இது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை.
இந்தக் கருத்துகளை வெளிப்படையாக பேசவில்லையென்றாலும், துபாயில் சந்தித்த சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது உண்டு.
இத்தகைய கருத்துகள் சிலருக்கு இனத்துரோகமாகப்பட்டால், என் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது - நீங்களும் அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறீர்கள்.
நல்லது -
புகைப்படம் வெளியிடுவோம் என்ற மிரட்டல் வேண்டாம். முதன் முதலில் புகைப்படம் வைத்து வலைப்பூ அமைத்த சிலருள் நானும் ஒருவன்.
இன்னமும் வேண்டுமென்றால் தருகிறேன்.
ஆப்பு போன்ற ஒருவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்தளத்தை முஸ்லிம்கள் பலரும் வாசிக்கக் கூடும் என்பதால் விளக்கமும் என் எண்ணங்களும்.
என் நம்பிக்கைகளை உங்களிடத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. மேலும் என்னைக் குறித்து விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.