நேசக்குமாரும் முஸ்லிம் இனத்துரோகிகளும்!
வலைத்தளத்தில் இயங்குவதையும், எழுதுவதையும் விட்டு - கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஒரு தனிமை தேவைப்பட்டது என்பதற்காக நிறுத்தியது - பின்னர் அதுவே தொடரவும் செய்தது.
ஆனால். இப்பொழுது இந்த மௌனம் கலையும் நேரம் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் இந்தப் பதிவு.
நேசக்குமாரும் முஸ்லிம் இனத்துரோகிகளும்!
http://tmpolitics.blogspot.com/2006/11/blog-post_116385801610657478.html#comments
இஸ்லாமிய அன்பர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வலைப்பதிவில், கொஞ்சம் விசாரித்து விட்டு எழுதி இருக்கலாம். இத்தனைக்கும் இங்கிருந்து இஸ்லாமிய அமைப்புகளில் செயல்படும் அன்பர்களையும் அறிவோம். அல்லது, வலைப்பதிவில் எழுதப்பட்ட விஷயங்களையாவது கொஞ்சம் வாசித்து விட்டு எழுதி இருக்கலாம்.
இது எதுவுமே செய்யாது, நேசக்குமாரைத் திட்டி ஒருவர் எழுதி விட்டார் என்பதால், அதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, இங்கு அப்படியே மறுபதிவிட்டதன் மூலம், உங்கள் வலைப்பதிவின் நம்பகத் தன்மையைத் தான் குறைத்துக் கொண்டீர்களே தவிர, எங்கள் தரத்தைப் பற்றியது அல்ல.
உங்கள் தகவல்களுக்காக -
இதுவரையிலும் இந்தியாவில் இருந்து வந்த எந்த ஒரு நபருக்கும் உதவி புரிந்ததில்லை. அந்த எண்ணமும் இல்லை. இங்கு வந்து நிதி திரட்டுவதை - அவர்கள் எத்தகைய நோக்கம் கொண்டுள்ளவர்களாக இருந்தாலும் - கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறோம். சிரமப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்ப நலனுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பதுடன், மற்றவர்களிடத்தில் அத்தகைய பிரச்சாரத்தையும் செய்து கொண்டிருக்கிறோம்.
நேசக்குமாரையோ அல்லது அவர் போன்ற பிறரையோ இணையத்தில் பதிலுக்கு பதில் மல்லுக்கட்டிக் கொண்டு திட்டவில்லை என்பதால் இனத்துரோகி என்று குறிப்பிடுகிறாரா என்று புரியவில்லை.
முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் - ஒருவனுக்கு தான் சார்ந்தவற்றின் மீதான நம்பிக்கைகள் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டுமே தவிர, பிறரின் நம்பிக்கையின்மையின் மீது போர் தொடுக்க வேண்டும் என்பது அவசியமற்றது.
இதையே குரானில், சூரா 109ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு - என் மார்க்கம் எனக்கு.
Unto you your religion, and unto me my religion
.....lakkum theenukkum valiyaththeen.
இதை விட எளிமையாக மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகள் இருக்க முடியாது.
அவ்வாறாயின், இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியுடையவர்கள் அவர்கள் பாதையில் அவர்கள் விரும்பியவற்றை எழுதுகிறார்கள். அதற்காக அவர்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவ்வாறு பதில் சொல்லாததே - அவர்கள் கருத்தின் மீது கொண்ட மறுப்பாகும்.
மற்றபடிக்கு - என் நம்பிக்கைகளும் - நான் வாசிக்கும் குரானை புரிந்து கொள்ள நேரிடையாக நான் எடுக்கும் முயற்சிகளும் மட்டுமே முக்கியமாகப் படுகிறது எனக்கு. பிறர் சொல்லி என் மீது திணிக்க முற்படும் கருத்துகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.
அது போலவே, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விஞ்ஞான ஆய்வுகளையும், நிரூபணம் செய்யப்பட்ட உண்மைகளையும் மறுக்கப் போவதுமில்லை. தன் படைப்பின் பேரதிசயங்களையும், எல்லைகளையும், அதன் விஸ்தீரணங்களையும் மனிதன் ஆராய்வதை இறைவன் மறுக்கப்போவதில்லை.
மேலும், இந்த ஆய்வுகள், அந்த ஆய்வுகள் தரும் புதிய தோற்றங்கள் எண்ணங்கள் மூலமே இறைவனின் பிரம்மாண்டத்தை மனிதனால் உணர முடியுமே தவிர, நம்பிக்கைகள் மட்டும் கொண்டு, இறைவனின் பிரம்மாண்டத்தை உணர இயலாது.
நம்பிக்கைகள் இறைவனின் இருப்பை மட்டுமே உறுதி செய்கிறதே தவிர, இறைவனின் இயல்பையோ, அவனின் படைப்பின் விரிவையோ உணர்ந்து கொள்ள துணை நிற்பதில்லை. இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.
இந்தப் புரிதல்கள் இருப்பதினாலயே, இஸ்லாம் பற்றி எழுதுபவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால், அது என்னைப் பாதிப்பதில்லை.
மாறாக, சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தளங்களிலிருக்கும் தவறான அணுகுமுறைகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
இதன் தொடர்ச்சியாக, சமூக அரசியல் தளங்களில் எழுச்சி பெற முனைய வேண்டியது அவசியம் - அதன் ஆரம்ப கட்டம் - கல்வி. பெண்கள் உட்பட. பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். உடைகள் உட்பட. கண்ணியமான உடைகள் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Muslims should adopt a modern outlook and acquire a scientific temper.
இது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை.
இந்தக் கருத்துகளை வெளிப்படையாக பேசவில்லையென்றாலும், துபாயில் சந்தித்த சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது உண்டு.
இத்தகைய கருத்துகள் சிலருக்கு இனத்துரோகமாகப்பட்டால், என் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது - நீங்களும் அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறீர்கள்.
நல்லது -
புகைப்படம் வெளியிடுவோம் என்ற மிரட்டல் வேண்டாம். முதன் முதலில் புகைப்படம் வைத்து வலைப்பூ அமைத்த சிலருள் நானும் ஒருவன்.
இன்னமும் வேண்டுமென்றால் தருகிறேன்.
ஆப்பு போன்ற ஒருவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்தளத்தை முஸ்லிம்கள் பலரும் வாசிக்கக் கூடும் என்பதால் விளக்கமும் என் எண்ணங்களும்.
என் நம்பிக்கைகளை உங்களிடத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. மேலும் என்னைக் குறித்து விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
28 comments:
நல்ல தெளிவான சிந்தனை.....வாழ்த்துக்கள்...உங்களை போல் எல்லா மததினரும் (நேச குமார் உள்ப்பட) இருந்தால் இந்த பிரச்சனைகளே இல்லை....நான் இந்து மதத்தவன், உங்கள் கொள்கைகளூடன் ஓத்து போகிறேன்....நன்றி.
மனமார உங்களைப் பாராட்டுகிறேன். நண்பன் அவர்களே? (புதுக் கல்லூரி ஷாஜஹான் அல்லவா நீங்கள்?)
அன்புடன்,
டோண்டு ராகவன்
(புதுக்கல்லூரி முன்னாள் மாணவன்)
முதல் பின்னூட்டமிட்டவரையே நானும் வழி மொழிகிறேன். அருமையான, தெளிவான சிந்தனையுடன் எழுதி இருக்கிறீர்கள். இந்த இணையத் தளத்தில் சிலர் மதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வதையும், தன்னுடைய மதத்தில் இருக்கும் நல்லவற்றை வெளீச்சம் போட்டுக் காட்டுவதை விட்டுவிட்டு, அடுத்தவர் மதத்தில் இருக்கும் குறைகளை தேடிக் கண்டு பிடித்து எழுதுவதையும், சரி அப்படியே செய்தாலும், தன் மதத்திலுள்ள குறைகளையும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தலாமே என்ற சிந்தனையற்று இருப்பதையும், யதார்த்தத்துடன் ஒட்டிய, தற்போதைய வாழ்வுடன் ஒத்துப் போகக்கூடிய விஷயங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதையும் பார்த்து மனம் நொந்த சமயங்கள் பல. இதில் உள்ள முக்கிய விஷயமே, இப்படி செய்பவர்கள் எல்லா மதத்திலும் இருப்பதுவும், தத்தமது மதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதும்தான். இதைத்தான் ஒவ்வொருவரது மதங்களும் அவர்களுக்கு போதிக்கிறதா என்று வியந்திருக்கிறேன். அப்படியானால் இந்த மதங்கள்தான் எதற்கு?
நல்ல பதிவு...உங்களை போன்றோரிடமிருந்து வரும் இந்த மாதிரி பதிவுகள் நம்பிக்கையளிக்கிறது.தொடர்ந்து எழுதவும்.வாழ்த்துக்கள்.
அவர்களைப் பொருட்படுத்த வேண்டுமா?
சல்மா மீது அவர்கள் செய்த அவதூறுப் பிரச்சாரத்தைப் பார்த்தபின் அவர்கள் அரைவேக்காடுகள் என்று புரிந்துவிட்டது.
இஸ்லாமிய வலைப்பதிவு என்ற பேரில் இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதைத்தான் அவர்கள் செய்துவருகிறார்கள்.
உங்களின் துணிந்த, தெளிந்த சிந்தனைக்கு நன்றியும் வாழ்த்தும்.
//மாறாக, சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தளங்களிலிருக்கும் தவறான அணுகுமுறைகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
இதன் தொடர்ச்சியாக, சமூக அரசியல் தளங்களில் எழுச்சி பெற முனைய வேண்டியது அவசியம் - அதன் ஆரம்ப கட்டம் - கல்வி. பெண்கள் உட்பட. பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். உடைகள் உட்பட. கண்ணியமான உடைகள் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Muslims should adopt a modern outlook and acquire a scientific temper.
இது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை//
தமிழக மற்றும் இந்திய இசுலாமிய தலைவர்கள் மீது நான் கடுமையாக வைக்கும் விமர்சனம் நீங்கள் மேலே சொன்ன இது தான், உங்கள் மதத்திற்கு தரம் முக்கியத்துவத்தைவிட உங்கள் மக்களின் வாழ்க்கை, சமூக உயர்வுக்கு தரவேண்டிய முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும், உங்களைப் போன்றோர்களை பார்க்கும் போது புதிய நம்பிக்கை பிறக்கின்றது.
நன்றி
நண்பன்,
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
எனக்கு முழு விவரம் தெரியவில்லை என்றாலும் உங்களது அணுகுமுறை பாராட்டுக்குரியது.
குழலியை வழிமொழிந்து பாராட்டுகிறேன்.
அப்ப நீங்க சொக்கன்(நேசக்குமாரை) சந்திக்கவே இல்லியா?
நண்பன், உங்களை மீண்டும் வலைப்பூவில் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நண்பன் என்று உங்கள் பெயரைத் தமிழ் மணத்தின் முகப்பில் பார்த்தேன். பிறகு நீங்களோ இல்லையோ என்று ஐயம். ஆனாலும் போய்ப் பார்க்கலாம் என்று வந்தால் நீங்கள்தான். நீங்கள் விரும்பிய எல்லாம் செவ்வனே செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நண்பன், இந்தக் குறை இஸ்லாமில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் இப்பொழுது இருக்கிறது. அதை விரும்பாத அந்தந்த மதத்துக்காரர்களே அதை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல எடுத்துக்காட்டை நீங்கள் துவக்கியிருப்பதாகக் கருதுகிறேன்.
//அது போலவே, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விஞ்ஞான ஆய்வுகளையும், நிரூபணம் செய்யப்பட்ட உண்மைகளையும் மறுக்கப் போவதுமில்லை...//
நன்று நண்பன் அவர்களே. இதைத்தான் தலாய்லாமாவும் சொல்கிறார். மதங்களின் மேல் நம்பிக்கை வைத்திருப்போரிடமிருந்து வரும் இத்தகைய கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டும்.
//இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.//
முற்றிலும் சரி. இடைக்காலத்தில், ஐரோப்பிய தொழிற்புரட்சிக்குமுன்பு, இஸ்லாமிய அறிவு ஜீவிகளே மருத்துவம், இலக்கியம் மற்றும் இன்னபிற கலை, அறிவியல் துறைகளில் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். உலகம் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது. இஸ்லாம் அடிப்படையிலேயே ஒரு வன்முறை மதம் என்று அவதூறு பேசுபவர்கள், வரலாற்றை அறியாதவர்கள் (அ) வேண்டுமென்றே அதைத் திரிப்பவர்கள்.
அசந்துவிட்டேன்.முஸ்லிம் என்றால் இப்படிதான் சிந்திப்பார் என்று ஒரு stereotype இருக்கிறது. அதை உடைத்திருக்கிறீர்கள். உங்களை போன்றவர்கள் உங்கள் சமுதாயத்தின் தலைவர்களாக வரவேண்டும்.
நல்லப் பதிவு ..
எல்லா மத்தித்திலும் சிலர் முட்டாள்தனமாய் இருந்து கொண்டு அவர்கள் vocal யாக இருப்பதால் வரும் பிரச்சினை இது ,தமிழ்மணத்தில் திண்ணையில் இப்போதல்லாம் இதுவே அதிகம் என்றாகி விட்டது..
உங்களின் கருத்துக்கள் சரியானதே .
இந்திய இஸ்லாம் சமூகத்துக்கு தேவையென நீங்கள் சொல்வதை நோக்கி சமுதாய ஆர்வலர்களும் ,இஸ்லாமிய அறிவு ஜீவிகளும் சாதாரண மக்களிடம் எடுத்துச் சொல்ல முன் வர வேண்டும் ..அதுவே சரியானதும் தேவையானதுமாகும் ..
அன்புடன்
கூத்தாடி
Excellent behaviour. Keep it up.
மீண்டும் வருகை தந்த நண்பனுக்கு என் வாழ்த்துகள்.
தெளிவான சிந்தனைகள்.
திறந்த மனம்.
வாழ்வியலுக்குத் தேவையான கருத்துக்கள்.
நன்று.
மனம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
நண்பர் "நண்பன் ஷாஜி" அவர்களே,
தங்கள் கருத்துக்களும், சிந்தனையும் போற்றத்தக்கவை, யதார்த்தத்திற்கு அருகில் இருப்பவை ! பதிவிட்டமைக்கு நன்றியும் பாராட்டுக்களும். தங்களைப் போன்ற தெளிவான சிந்தனை கொண்டவர்கள் நம்பிக்கை அளிக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*********************
மேலே குமரன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருப்பவர் நான் இல்லை. ஆனால் அவர் சொன்னதையே நானும் சொல்கிறேன்.
நண்பர் ஷாஜஹான்,
இஸ்லாத்தின் மீதான அவதூறுகளைச் மறுக்காதவர்களெல்லாம், அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்பதில்லை. மேற்படி தமிழ்முஸ்லிம்பாலிடிக்ஸ் வலைப்பதிவரின் நீங்கள் உள்ளிட்ட சில சகமுஸ்லிம் வலைப்பதிவர்களை சந்தேக வளையத்தினுள் கொண்டு வந்திருப்பது துரதிஷ்டம். உங்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்காது என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். உண்மைக்குப் புறம்பானதை கூறி இருந்தால் அவதூறு செய்த குற்றத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட வலைப்பதிவர் நினைவில் கொள்ள வேண்டும்.
/ஒருவனுக்கு தான் சார்ந்தவற்றின் மீதான நம்பிக்கைகள் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டுமே தவிர, பிறரின் நம்பிக்கையின்மையின் மீது போர் தொடுக்க வேண்டும் என்பது அவசியமற்றது/
மிகச்சரியான வார்த்தைகள். இதை இஸ்லாத்தின் மீதான அவதூறுகளை வைக்கும் நேசகுமாராகட்டும் அல்லது இஸ்லாத்தின் இறைத்தூதர் என்பதே மாயை என்று வலியுறுத்த முனையும் எழிலாகட்டும்,இவர்கள் உணர்ந்திருந்தால் சுமூகமான கருத்துப் பரிமாற்றக்களம் களங்கப்பட்டிருக்காது.
ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு சரியானதா? என்ற சந்தேகம் சாப்பிடுபவருக்கு வந்தால் நியாயமிருக்கிறது. உன் உணவு சரியல்ல என்று அடுத்தவர் விரும்பி புசித்துக் கொண்டிருப்பதை விமர்சிப்பவரின் நோக்கம் என்னவாக இருக்கும்?
/இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது. /
ஆராய்ந்து பார்க்கமாட்டீர்களா? என்ற அறைகூவலுடன் சிந்திப்பவர்களை தேடியழைக்கும் கொள்கை உலகில் இஸ்லாம் மட்டுமே. தற்போதைய முஸ்லிம்கள் வேண்டுமானால் இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்தக் காரணத்தால் முஸ்லிமாக இருக்கலாம். ஆனால் தங்கள் முன்னோர்களின் மூடக்கொள்கைகளைக் கைவிட்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள் அப்படியல்ல. முஹம்மது நபியைக் குரூரமாக எதிர்த்தவர்களே, இஸ்லாத்தை ஏற்றார்கள். நியாயமாக முஹம்மது நபியின் நபித்துவத்தை சந்தேககிக்க அவர்களுக்கு முழு உரிமை இருந்தது. ஐயுற்றும் ஆய்வுக்குட்படுத்தியும்தான் இஸ்லாம் வளர்ந்தது.
இஸ்லாத்தை விமர்சிக்கும் உரிமை முஸ்லிம்களைவிட முஸ்லிம் அல்லாதவருக்கு அதிகம் உள்ளது. வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தகுந்த விளக்கமளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் விமர்சிக்க வேண்டும் அல்லது இஸ்லாத்திற்கு மாற்றாக தன் நம்பிக்கையே சிறந்தது என்றாவது நிருவ வேண்டும். அன்றி, உலகின் சீரழிவுகளுக்கெல்லாம் இஸ்லாம் மார்க்கமே காரணம் என்பவர்களை என்னவென்று சொல்வது?
உலகின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட எவருக்கும் இல்லாத சிறப்பு முஹமது நபிக்கு உண்டு. அவரின் பிறப்பு முதல், மறைத்திருகக் கூடிய அந்தரங்கம் முதல் அனைத்தும் திறந்த புத்தகமாக இருக்கிறது. அதில், அவதூறுகளைப் புகுத்தி சிந்தனைக் கற்பழிப்புச் செய்யும் கயவர்களின் உள்நோக்கத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்ற வகையில்தான் எந்தவித எழுத்து முன்னனுபவமும் இல்லாத எம்போன்றவர்கள் எதிர்வினையாக எழுத ஆரம்பித்தோம்.
இஸ்லாத்தை எடுத்துச் சொல்பவர்கள், நவீன சிந்தனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் அளவுக்கு ஊடக மற்றும் கணினி அறிவில் பின்தங்கி இருப்பது நம் துரதிஷ்டம். இரண்டிலும் ஓரளவு பரிச்சயமுள்ளவர்கள் அத்தகைய அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது நம் நம்பிக்கைக்கும் அறிவிற்கும் செய்யும் துரோகம் என்ற வகையில் உங்கள் போன்றவர்கள் முடிந்தவரை இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதையும் தொடர வேண்டும்.
அன்புடன்,
அன்பு நண்பர் ஷாஜஹான்,
உங்கள் மன வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன். 'தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை' என்ற அந்த வலைப்பதிவில் எழுதப்பட்டவற்றில் எனக்கும் உடன்பாடு இல்லை. இதை அந்தப் பதிவிலேயே நான் எழுதிய பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.
நீங்கள் மற்றும் ஆசாத், ஆசிப் மீரான் போன்ற முஸ்லிம் வலைப்பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் குறித்த விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்ற போதிலும், விமரிசனம் என்ற பெயரில் நாகரீகமற்ற முறையில் கண்டதையும் எழுதும் சில நபர்களுக்கு சூடான பதில் கொடுத்த தருணங்களும் உண்டு என்பதை நான் அறிவேன்.
அரசியல் மேடை பதிவில் எழுதிய சகோதரர் அவசரப்பட்டு விட்டார் என்பதுதான் எனது கருத்து. அவர் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்திருக்கலாம்.
இது போன்று சில முஸ்லிம் சகோதரர்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுவதும், தங்களுக்குள் கருத்து வேறுபட்டுக் கொள்வதையும் பார்த்து நேசக்குமார் போன்ற போலிகள் சந்தோசமடைவர். அரசியல் மேடை பதிவர் இதை கவனத்தில் கொள்வது நல்லது.
welcome back nanban.,
நண்பர் ஷாஜஹான் அவர்களுக்கு
சீரிய சிந்தனைப் பதிவு. வாழ்த்துக்கள். tmpolitics தளத்தில் அவசரகோலத்தில் தங்களின் மீது ஆதாரமில்லா அவதூறு கற்பிக்கப் பட்டுள்ளது. நேசகுமார் போன்றவர்கள் செய்யும் அநாகரிகக் காழ்ப்புகளை எதிர்க்காமல் இருப்பவர்கள் அந்த நபரது கருத்துகளுக்கு உடன்பட்டவர்கள் என்ற போக்கில் எழுதப்பட்டுள்ளது வருந்தத் தக்கதே.
தங்களின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது, tmpolitics போல எழுதப்படும் கருத்துக்கள் வேசம் போடும் ஆசாமிகளுக்கு உள்ளூர மகிழ்ச்சியே அளிக்கும் என்பதை சம்பந்தப்பட்ட பதிவர்கள் புரிந்து இனியாவது பொறுப்புடன் பதிவார்களாக.
நண்பன்,Welcome Back.
வலைப்பதிவுகளில் நீங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும்.
உங்கள் மவுனத்தை திரிக்கவும் ஆராயாமல் சந்தேகிக்கவும் ஒரு 'மேடை' காத்திருந்ததைப் போல
உங்கள் வார்த்தைகளைத் திரித்து சுயலாபம் காணவும் வலையுலகில் ஒரு பரிவாரம் மும்முரமாயிருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும்.
அன்பின் சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு ''ஸலாமுன் அலைக்கும்''
எந்தச் செய்தியையும் தீர்க்க ஆராயாமல் பொடு போக்காக நம்பி அதைப் பரப்புபவர்கள் ''வீணான எண்ணத்தையும், தங்கள் மனம் விரும்புபவற்றையுமே'' பின்பற்றுகிறார்கள். எவ்வித நிரூபணமும் இல்லாமல் உங்கள் மீதும், மற்ற சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட அவதூறு கண்டு வேதனைப்படுகிறேன்.
அவதூறு சுமத்தப்பட்ட உங்களில், என் மதிப்பிற்குரிய ஒரு சகோதரரை நான் நன்கு அறிவேன். அவர் மீதும்
''இனத்துரோகி'' என்ற முத்திரைக் குத்தியிருப்பது இது கலப்படமற்ற 'பொய்' என்பதற்கு போதிய சான்றாகும். அவதூறு கூடாது என இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது, ஆனாலும் இப்படியும் சில முஸ்லிம்கள் என்ன
செய்வது? இவர்களை இறைவனிடம் சாட்டிப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை ஆம், இவர்களைப் புறக்கணித்து விடுங்கள்!
அன்புடன்,
அபூ முஹை
//இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
//
// அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.
//
//Muslims should adopt a modern outlook and acquire a scientific temper.//
தெளிவான, ஆழமான, நேர்மையான, நம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துக்கள்...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... தொடருங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது வலைப்பதிவில் குறிப்பிட்ட சர்ச்சைக்குறிய பதிவில் என்னால் இடப்பட்டிருந்த 'குறிப்பு' என்ற பத்தி நீக்கப்பட்டுள்ளது.
நன்றி
முகவைத்தமிழன்
நண்பன் -
- சில சமுதாயப் புல்லுருவிகளால் அவதூறு குற்றம் வாசிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான் சொல்லும் ஆறுதல்கள் எந்த வகையில் பலனளிக்கும் என்று தெரியவில்லை. விமர்சனத்துக்கு கலங்கி நிற்பது முஸ்லிம்களுக்கு அழகல்ல என்பதை மட்டும் குறிப்பிட விரும்கிறேன்.
// அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.//
வரவேற்கிறேன், மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
- முஸ்லிம்
சிறப்பான பதிவு
இஸ்லாமிய நவீனத்துவத்துக்கு முன்னோடியான வார்த்தைகள்.
இஸ்லாமில் ஒரு மறுமலர்ச்சிகாலகட்டம் துவங்க இருக்கிறது என்பது உங்களது வார்த்தைகளில் தெரிகிறது.
Post a Comment