"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, March 05, 2006

மீண்டொருமுறை அடங்க மறு....

அனைவருக்கும்,


என் கவிதையில் என்ன புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது - ஆனால், என் கவிதை எல்லா நேரத்திற்கும் பொருந்துமாறு எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவு - முகமூடி எடுத்துக் கையாண்டமையே அதற்கு சாட்சி.

இந்தக் கவிதை திருமாவிடம் அதிமுக பக்கம் போகவேண்டாம் என்று சிலர் துபாயில் வைத்து வாதாட முனைந்த பொழுது எழுதப்பட்டது. அதாவது 23-2-06 அன்று. அப்பொழுது பரவலான பேச்சு - பாமக தங்களுக்குக் கிடைத்த தொகுதியில் சிலவற்றை விட்டுக் கொடுத்தாவது விடுதலைச் சிறுத்தைகளை தங்கள் பக்கம் நிறுத்திக் கொள்வார்கள் என்ற பேச்சிருந்தது. வன்னியர் - தலித் நல்லுறவு எக்காரணத்தைக் கொண்டும் முறிந்து விடக்கூடாது - அந்த நட்பு தொடர வேண்டும் என்ற ரீதியில் எல்லோர் சிந்தனையும் இயங்கிக் கொண்டிருக்க, அந்த நட்பைப் பாதுகாக்க திருமா என்ன விலை கொடுக்க வேண்டும்?

பாமக சின்னத்தில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், பாமகவின் தலித் பிரிவு தலைவராக வேண்டுமானால் திருமாவினால் மின்ன முடியுமே தவிர, விடுதலை சிறுத்தைகள் ஒரு தனி சக்தியாக வலுவாக வடிவெடுக்க முடியாது.

விடுதலைச் சிறுத்தைகளை ஒரு மக்கள் சக்தியாக, அமைப்பாக, அரசியல் கட்சியாக ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கென அங்கீகாரமும் இட ஒதுக்கீடும் செய்து - அதுவும் வென்றாலும் தோற்றாலும் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டு வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக மலர சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும் ஒரு கூட்டணியாக இருந்தால் மட்டுமே இணைய வேண்டும் - இது தான் அவர்களது குறிக்கோளாக இருந்தது.

எத்தனை காத்திருந்தாலும், திமுக விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடங்கொடாது என்பது தெளிவானதும், (பாமக - சிறுத்தைகளைப் பிரித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணமாக இருக்கலாம்) பின்னர் தயங்கி நிற்பதில் எந்தப் புண்ணியமும் இல்லை. சமூக தளத்தில் வேண்டுமானால், தீண்டாமை இருக்கலாமே தவிர, அரசியல் களத்தில் தீண்டாமை கிடையாது.

திருமாவிற்கு இருந்த ஒரே நெருடல் - பாமக தலைவர் மருத்துவர் தான். இறுதியில் பாமக தலைவர் பிரியா விடை கொடுத்தே திருமாவை அனுப்பி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. (ஊகம் தானோ?)

இது, 24.2.06 அன்று திருமா - ஆற்றிய உரையிலும் தெளிவாகியது. மருத்துவர் தங்களுக்காகப் பேசியதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், எப்பாடுபட்டாவது, இந்த இரு சமூகங்களின் நல்லுறவைப் பேணி காப்பேன் என்று உறுதி மொழியே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அதிமுக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது துபாய் நண்பர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது - பாமகவை விட்டுப் பிரியாமல் இருப்போம் என்ற எதிர்பார்ப்பு. (இது திமுகவிற்கான ஆதரவு இல்லை) இந்தப் பின்னணி தெரிந்து தான் கவிதை எழுதினேன்.

சிலபல இலவசங்களைத் தந்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமைகளிடமும்
அடங்க மறு, அத்து மீறு.

- இந்த வரிகளில் நான் குறிப்பிட்ட தலைவர் கருணாநிதி. பாமகவிற்கு ஒதுக்கிய சில இடங்களைக் கொடுத்து, உங்களை சரிக்கட்ட முனைந்தால், ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்பது தான் இந்த கவிதையின் கோரிக்கையாக இருந்தது.

இறுதியில், அதுவே நிகழவும் செய்தது.

திருமா திமுகவை விட்டு விலக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும்.
அது போலவே - வைகோவின் நண்பருடன் ஒரு சந்திப்பு என்ற பேட்டியிலும், நான் குறிப்பிட்டிருந்தேன் - திரு. வா.மா.குலேந்திரன் என்ற லண்டன் நகர வழக்கறிஞர் - ஒரு புத்தகம் அச்சடித்து எடுத்துச் செல்கிறார். கூட்டணி பற்றி முடிவாக அறிவிப்பு வந்ததும் தான் அந்த புத்தகம் வெளியாகும் என்று.

அது வைகோவின் மனநிலை எப்படி செயல்படுகிறது என்ற கணிப்பு. இனி அந்தப் புத்தகம் லண்டனிலிருந்து எங்களுக்கு வரும். வந்ததும் முழு தகவல்.

முஸ்லிம் லீகும் அம்மாவுடன் இணைகிறது. திருப்தி தான். இதயம் கிழிகிற அளவிற்கு எல்லோருக்கும் இடம் கொடுத்து, அங்கு ஒரே நாற்றம். இதயத்திலிருந்து வெளியேறி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த அரசியல் கூட்டணியால் சில நன்மைகள் கூட விளையக் கூடும். அம்மா தமிழ் மீது சற்றே அதிக அளவு அக்கறை காட்டக் கூடும். என்றாலும் ஜெவின் கடந்த கால செயல்பாடுகள் - தனக்குக் கிடைத்த ஆதாயம் நிறைவு பெற்றதும், மற்றவர்களை கை கழுவி விடும் - அந்த அகம்பாவத்திலிருந்து விடுபட்டு, முழுமையடைந்த தலைவராக மாறிவிட்டாரா என்பது இந்தத் தேர்தலின் முடிவின் போது தான் தெரிய வரும்.

அதுசரி, தமிழ் ஆர்வலர்கள் கருணாநிதிக்கு எதிராக திரும்பி விட்டார்களா என்ற கேள்வி எழுகிறதா? என்றுமே, கருணாநிதியை தமிழ் ஆர்வலர்கள் நம்பியதே இல்லை. தமிழைப் பயன்படுத்தி, ஆசியக் கண்டத்தின் செல்வந்தர் குடும்பங்களில் ஒன்றாக தன் குடும்பத்தை முன்னேற்றி விட்டார் என்பது ஒன்று தான் அவரது சாதனை. அது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமே உதவுமே தவிர, தமிழ் நாட்டிற்கல்ல. இன்னும் சொல்லப் போனால், மிகுந்த பணபலத்தைக் கொண்டு, ஊடக வன்முறையையும், அநாகரீகத்தையும் அவர்களால் அரங்கேற்ற முடியும்.

கருணாநிதியின் பேனா முனையில் வந்து விழும் நளினமான தமிழுக்கு மயங்கிக் கிடந்த சிலர் - மதிப்பு கொண்டிருந்த சிலர், இன்று அந்த பேனாவின் முனை சிறிது சிறிதாக ஒளி மங்கி, வலுவிழந்து வருவதை சற்று வருத்தத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது. தன் மகன் என்ற பாசத்தினால் அறிவுக் கண்ணையும் இழந்த திருதராட்டிரன் போலத் தான் கருணாநிதியின் இன்றைய நிலைமையும் இருக்கிறது. தன் மகனுக்குப் போட்டியாக வருபவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து அழிக்க முற்படுகிறார் அவர். பாவம் - அதுவே திமுகவின் அழிவாகவும் அமைந்து விடப் போகிறது என்பதை அவருக்குச் சொல்ல அருகில் யாருமில்லை.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்