"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, June 12, 2007

இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர், அஸாருத்தீன்?

ஒரு புகைவண்டிப் பயணத்தின் போது, நேரம் போக்க, வாசிப்பதற்காக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஹெரால்ட் ரோபின்ஸ், ஸிட்னி ஷெல்டன் இவர்களின் நாவல் ஒன்றைக் கையில் எடுத்துப் போவது வழக்கம். ஆனால், இனி, ஒரு தொலைக்காட்சி பெட்டியை - சிறிய ஒன்றைக் கையில் எடுத்துப் போக முடிந்தால் நல்லது. அதில், இந்திய பயிற்சியாளர் தேர்வை வேடிக்கைப் பார்த்தால் போதுமானது - நேரம் வெகு எளிதாக ஓடிப் போய் விடும். மேலும், அது எந்த ஒரு நாவலாசிரியரும் எழுதுவதை விடவும் அதிக சுவராஸ்யமும் திருப்பங்களும் நிறைந்திருக்கும்.

உலகின் பணக்கார விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றான BCCI தனது அணியின் வீரர்களுக்காக - அதுவும் வேறெந்த நாட்டிற்கும் இல்லாத கவர்ச்சிகரமான பெயர் Team India என்று - ஒரு பயிற்சியாளாரைத் தேர்ந்தெடுப்பதில் இத்தனை தடுமாற்றம் அடையும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அணியின் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதிலே இத்தனை தடுமாற்றம் கொண்ட ஒரு அமைப்பு, தன் வீரர்களை மட்டும் எப்படி கேட்க முடியும் - ஏன் சிறப்பாக விளையாடவில்லை என்று. ஒரு பழமொழி சொல்வார்கள் - தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்று. அமைப்பைப் போலவே, அதன் வீரர்களும்.

பங்களாதேஷ் இந்தியாவைப் புரட்டி எடுத்து, வெளியேற்றியதும், வாட்மோர் என்றார்கள். அதுவும், சாப்பல் இருக்கும் பொழுதே. அவரை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் முன்னே அடுத்து யார் என்ற தேடுதலில் இறங்கியதும், குடும்ப காரணங்களுக்காக அவர் விலகிக் கொள்கிறேன் என்று சொன்னதும் இன்னும் இந்த பயிற்சியாளர் வேட்டை சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. சாப்பல் விலகிக் கொள்ளும் பொழுது, கூறியவற்றை யாரும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அணியின் மூத்த வீரர்கள் ஒரு மா·பியா போல நடந்து கொண்டனர் என்று சொன்னார். யாரும் அதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அந்த மூத்த வீரர்கள், யார் என்று அவர் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், தெண்டுல்கர் ஓய்வெடுக்கச் சரியாண தருணம் வந்து விட்டதாகக் கூறிய பொழுது, அணியிலிருக்கும் மா·பியா யார் என்று தெரிந்து விட்டது. இந்திய வீரர்களில் பலரும், கவாஸ்கர் தொட்டு, அணியின் வெற்றி வாய்ப்பை விட, தங்கள் சொந்த ரெக்கார்டுகளைத் தூக்கி நிறுத்தவே முனைவர் என்பது தெரிந்தது. தெண்டுல்கர், கங்குலியின் மோதல்கள் வெளிப்படையாக தெருவிற்கே வந்த பொழுது கூட, அதைக் களையும் விதமாக, பழைய வீரர்களை ஒதுக்கி விட்டு, புது வீரர்களை அணியில் கொண்டு வருவதற்குப் பதிலாக, கங்குலியையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு, ஒரு சமரசத்தை முன் வைத்து அணியைப் பலப்படுத்தி விடலாம் என்றே BCCI நினைத்தது. இவர்களின் சண்டை சச்சரவுக்கிடையில், ஒரு நாள் ஆட்டத்தில் நன்றாக விளையாடக் கூடிய கை·ப் போன்றவர்களை ஒதுக்கினார்கள் - சவுரவ் அறிமுகம் செய்த வீரர்கள் எல்லாம் அம்பேல்.

இப்படி பிளவு பட்டுக் கிடந்த அணியின் தலைமை வலுவில்லாததாக அமைந்தது மற்றொரு துரதிர்ஷ்டம். பயிற்சியாளருடன் மோதல்கள். விளம்பர வருமானம், ஆட்டத்திற்குக் கிடைக்கும் வருவாயை விட பல மடங்கு அதிகமாகிப் போனதால், எல்லா வீரர்களின் கனவும், வலுவான புளியங்கொம்பு ஒப்பந்தங்களைத் தட்டி விட வேண்டுமென்பதில் போக, மொத்தமாகக் குழம்பிப் போன அணி, அவமானப்படுத்தப்பட்டு வெளியேறியது. அந்த அவமானத்திற்குக் காரணமான பங்களாதேஷின் பயிற்சியாளாரை தட்டிப் பறித்து விட வேண்டும் என்ற நோக்கில் வாட்மோரை ஆசை காட்டினார். ஒரு கட்டத்தில், அவர் கூட தயாராகி விட்டார். ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை - தேசபக்தி தலை தூக்க, இந்தியாவைச் சார்ந்தவர் தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் முட்டி மோத, குண்டப்பா விஷ்வநாத் பெயர் பலமாக அடிபட்டது. அவர் கவாஸ்கரின் மச்சினராக வேறு இருந்ததால், ஆதரவும் கூடிப் போனது. இடையே, அர்ஜுனா ரணதுங்காவின் பெயரும் விவாதிக்கப்பட்டது. ஆனால், பெருமதிப்பு மிக்க 'வெள்ளைத் தோல் மோகம்' மீண்டும் தலைதூக்கியது. மீண்டும் வெள்ளை வெளிநாட்டினரிடத்தில் ஒரு தேடுதல்.

இறுதியாக இருவரை இறுதி பரீட்சை எழுத வரச் சொன்னார்கள் - எம்புரே,


·போர்ட். எம்புரே வந்த முதல் நாளே அலுத்துக் கொண்டார் - 'என்னப்பா இது, பவர் பாயிண்ட் பிர்சண்டேஷன் எல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறதே' ஆனால், மனிதர் தேர்வாகாமல் திரும்பும் பொழுது கொடுத்த பேட்டியில், தேர்வைப் பற்றி மிக உயர்வாக பேசியிருந்தார். இந்த நேர்முகத் தேர்வின் மூலம் தான் நிறையக் கற்றுக் கொண்டதாகவும், தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் உயர்ந்திருப்பதாகவும், இனி, இது மாதிரி எந்த ஒரு தேர்வையும் தன்னால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ள முடியும் என்று கூறினார். இந்தியர்கள் தன்னை மிக மரியாதையுடனும், உற்சாகத்துடனும் அணுகினார்கள் என்றும், தான் நன்றி கூறுவதாகக் கூறிச் சென்றார். இருவரில் ஒருவர் விலக்கப்பட்டதும், மற்றவர் உறுதியானார். கிரஹாம் ·போர்ட்.


அவருக்கு ஒப்பந்தப் பத்திரமெல்லாம் கொடுத்து அனுப்பி விட்டு காத்திருந்த பொழுது, அவர் சாவகாசமாகப் பதில் எழுதினார் - 'மிக்க நன்றி. குடும்ப சூழ்நிலை காரணமாக உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.' BCCIயின் அதிகார மையத்தின் முகமெல்லாம் ரத்தமாக சிவந்திருக்க வேண்டும். ஒப்புதல் இல்லாமலே, இவர் தான் பயிற்சியாளார் என்று ஊடகங்களில்லெல்லாம் ஊடாடி விட்டிருந்தனர். இப்பொழுது முக்காடு போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. BCCI Treasurer திரு N. ஸ்ரீனிவாசன், ·போர்டின் அறிக்கையை வாசித்து நாளை (12.06.07) கூடுகிறோம் - விவாதிக்கப்படும் என்று கூறி முடித்துக் கொண்டார். பின்னால் ரவி சாஸ்திரி தாடை இறுக நின்று கொண்டிருந்தார். தெண்டுல்கர் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு சிவப்பு T Shirt அணிந்திருந்தார். வேறு தெரிந்த முகங்களைக் காணவில்லை. குறிப்பாக - அணித் தலைவர் திராவிட்.

·போர்டை பரிந்துரைத்தவர் திராவிட். அதாவது ஒரு மாணவன் தன் ஆசிரியனைத் தேர்ந்தெடுப்பது போல் தான் இதுவும். ஆனால், ஆசிரியருக்கும் ஒரு கனவு இருக்கும் - மக்குப் பையன்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து காலத்தை விரயம் செய்ய விருப்பமில்லாது இருக்கும். இதெல்லாம் நடக்கக் கூடியது தான். ஆனால், ·போர்ட் தன் ஒப்புதலைக் கொடுக்கு முன்னே, ஊடகத்தில் நாடகமாடியது யார்? ·போர்ட் அத்தனை தூரம் வந்து, மெனக்கெட்டு நேர்முகம் எல்லாம் தந்து விட்டு, ஊருக்குப் போனதும், பொண்டாட்டி பிள்ளைகளைப் பாத்துக்கணும்னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன், வருவதற்கு முன்னரே அவருக்குத் தெரியாதா, குடும்பம் என்று ஒன்று இருக்கிறது என.

ஊடக ஊகம் -

1. அவருக்கு ஒரு வருடம் தான் ஒப்பந்தம் தந்தார்கள்
2. Kent கவுண்டியின் மீதமுள்ள ஒப்பந்தத்திற்கான பணத்தைத் திருப்பித் தருவதற்கு BCCI ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டையும் ஒப்புக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாம். இதுகுறித்து Headlines Today இருவரிடம் கருத்து கேட்டது.

ஒருவர் அருண் லால். முன்னாள் வீரர். அவர் சொன்னது - 'இந்தியாவில் கிரிக்கெட் என்பது இப்பொழுது தொல்லை மிகுந்தது. பொது மக்களின் எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது. ஊடகங்கள் எதையும் செய்தியாக்க முனைகின்றன. சிறு சிறு உரசல்களைக் கூட மிகப் பெரிதாக ஊதி விடுகின்றன. இந்த அணியின் பயிற்சியாளராக இருப்பதன் மன அழுத்தம் வேறெங்கும் காண முடியாது' என்றார்.

மற்றவர் - ராஜன் பாலா. கிரிக்கெட்டை நுணுக்கமாக கவனித்து எழுதுவதில் அவருக்கு நிகர் எவருமில்லை. அவர் கொஞ்சம் காட்டமாகவேப் பேசினார். பயிற்சியாளர்களின் இடர்பாடுகளைப் பற்றி பேசினாலும் ஒரு கட்டத்தில், 'வெள்ளைத் தோல்'களை நாடும் மனப்பான்மைமைய்ச் சாடினார். 'We never feel ashamed of being insulted' என்றவர், ·போர்டின் இந்த செய்கை மிக அவமானகரமானது என்றார். இத்தனைக்கும் சாப்பலுடன் ஒப்பிடும் பொழுது, ·போர்ட் ஒன்றும் அத்தனை பெரிய ஆளில்லை. பத்திற்கு ஒன்று தான் தேறுவார் சாப்பலின் முன் என்றார். அத்தகைய சாப்பலே, இந்தியாவிற்கு பயிற்சியாளராக இருப்பது இயலாது என திரும்பி விட்ட பொழுது, நாம் உள்ளூர் திறமைகளைக் கவனிக்கத் தவறி விட்டோம் என்றார். ஹீரோக்களை உருவாக்குகிறோம். பின்னர் அவர்களைக் கொண்டு மேலும் ஹீரோக்களை உருவாக்க முனையாமல், புதிய ஆட்களைத் தேடுகிறோம் ஹீரோக்களை உருவாக்க என்னும் தொனியில் பேசினார். இறுதியாக அவர் சொன்னது - BCCI should be magnanimous in resurrecting Azhar and make him the coach for the betterment of the Team India. ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.

அஸாருத்தீன்?

அவர் மீது இன்னமும் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லையென்றாலும், தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்டு விட்டவர் அவர். அவர் பெயரை, எல்லோரும் மதிக்கக் கூடிய ஒரு விமர்சகர் குறிப்பிடுகிறாரா? ஆனால் சந்தேகமே இல்லை. அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னார் - Azharuddin fits the bill very much. இன்னமும் அவர் தன் fitnessஐக் குறையாது பார்த்து வருகிறார். சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும், நிருபிக்கப்படாத குற்றச் சாட்டுகளுக்காக ஒரு திறமையாளரை வீணடிப்பது தவறு. என்ற ராஜன் பாலா, மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒரு சொல் - BCCI should be magnanimous.

காதுகளை நம்ப இயலவில்லை. அஸாருத்தீன் பெயரை ஒருவர் துணிச்சலாகப் பரிந்துரைக்கிறார் என்பதைக் கேட்கும் பொழுது.

அது சரி, உங்கள் கருத்தென்ன? அஸாருத்தீனை ஆதரிக்கிறீர்களா?

12 comments:

Anonymous said...

//அவர் மீது இன்னமும் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லையென்றாலும், தீண்டத்தகாதவராக ஒதுக்கப்பட்டு விட்டவர் அவர்.//

Azar is better than bowling coach and etc(including SMG and KD ) .but he linked his religion to defend him in betting case is only against him

-L-L-D-a-s-u said...

அஸாருதீனா!! தப்பில்லையே!! சரியான தேர்வு..கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சரியான ஆள்தான் ;)

சிவபாலன் said...

I think Azar fits well.

But his previous conduct was not satisfying. So, Azar may not be the right option.

For that matter, no ex-player(indian) comes to my mind upfront!

Naufal MQ said...

நண்பன்,
உங்களிடமிருந்து மீண்டும் ஒரு அருமையான கிரிக்கெட் இடுகை.

இந்திய கிரிக்கெட் வாரியம் அடிக்கும் கூத்துக்கள் சகிக்கமுடியாதவையாக இருந்தாலும், ஃபோர்ட் நடந்து கொண்டது மிகவும் மோசம். அவர் கூறும் காரணங்கள் முன்னமே யோசிக்காமல் இந்தியா வரை வந்து போனது சிறுபிள்ளைத்தனமானது.

அஸாருத்தீன் கோச்சா? நானும் ஒரு காலத்தில் (ஏன் இன்னும் கூட அவருடைய பழைய ஆட்டங்களில் யூ டியூபில் தேடிப்பிடித்து பார்த்து வருகிறேன்) அஸாருத்தீனை வெகுவாக ரசித்தேன். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. நிரூபிக்கபடாமல் தண்டனை! சரி, ஒருவேளை ராஜன் பாலா விருப்பம் போல அவர் பயிற்சியாளராக நிரூபிக்கப்பட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிரூபிக்க்கப்பட்டுவிட்டால்? வேண்டாம் நண்பா, அஸாரை விட்டு விடுவோம். அவர் ஏற்கனவே மிகுந்த அவமானப்பட்டுவிட்டார்.

நண்பன் said...

// he linked his religion to defend him in betting case is only against him //

ஆமாம்.

சில சமயங்களில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முட்டாள்தனமான காரியங்களில் இறங்க முயற்சிக்கத் தான் செய்வார்கள். அது மனித இயல்பு. அவர் பிஜ்லானியின் தொடர்பு கொண்டதிலிருந்தே தவறான உறவுகள் ஆரம்பித்து விட்டன.

ஆனால், ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் பொழுதே அவரை குற்றவாளியாக்கி விடுவதும், அதிலும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்றால் எந்த வித விசாரணையும், இறுதித் தீர்ப்பும் அவசியமே இல்லை என்ற போக்கு பொதுவாக நிலவும் பொழுது, அதையே அவர் தற்காப்பிற்காக எடுத்துக் கொண்டார். அது தேவையில்லாதது. மாறாக, அவர் குற்றச்சாட்டுகளை வேறு வழிகளில் மறுத்திருக்கலாம்.

மதத்தை தவறாகப் பயன்படுத்தியதில் அவருடைய பங்கு கண்டிக்கத் தக்கது தான்.

ஆனாலும், வெறும் வாய் வழியிலான குற்றச்சாட்டு மாத்திரமே போதாது ஒருவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்க.

வாசகன் said...

நண்பன்,

அஸ்ஹருத்தீன் தன்னைப் பாதுகாக்க மதத்தை கேடயமாகக் கையாண்டது மிகவும் தவறான செயல் என்பது ஒரு புறமிருக்க., தனிப்பட்ட வாழ்வில், பிஜ்லானியுடனான தொடர்புக்கு முன்வரை அவர் சிறந்த முஸ்லிமாகவே இருந்தார். (நம் ஸ்ரீகாந்தின் ஒரு பேட்டியில் அவரை மிகவும் சிலாகித்துச் சொல்லியிருப்பார்). அவர் அளவுக்கு மற்ற மூத்த மாஃபியாக்கள் பி ஜே பி ஆட்சியில் குறி வைக்கப்பட்டார்களா என்றெல்லாம் கேள்விகள் எழும். அது போகட்டும்,

இப்போது உள்ள பிரச்னை, அஸ்ஹருத்தீன் திறமையானவர் என்பதால் சிறப்பான பயிற்சியாளராகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை, ஆனால் மேட்ச் ஃபிக்ஸிங் கும்பலின் நெட்வொர்க்கில் மறுபடி வீழமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

selventhiran said...

வாட்மோர், அர்ஜீனரணதுங்கா எல்லாம் நம்மூர் ஜோல்னா பத்திரிக்கைகாரங்க கிளப்பிவிட்டதுங்க.. அப்புறம் பேச்சுவாக்குல முகமது கைப் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட்டர்னிங்களே... சிரிச்சு முடியலீங்க!

நண்பன் said...

அஸாருதீனா!! தப்பில்லையே!! சரியான தேர்வு..கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சரியான ஆள்தான் ;)

l-l-d-a-s-u,

கோடிகள் புரளும் BCCIஐ தங்கள் பிடிக்குள் வைத்திருக்க அரசியல்வாதிகள் போட்டி போடுவதும், மும்பை ஆட்டக்காரர்கள் அந்த அரசியல்வாதிகளுக்குக் காவடி தூக்கி அலைவது மட்டும் என்ன சும்மாவா? எல்லோருக்கும் ஒரு நோக்கம் இருக்கும் பொழுது, ஒருவரை மட்டும் பழிப்பானேன்?

ஏமாந்தவங்க, டிக்கெட் வாங்கிப் போய் பார்க்கிற முட்டாள்ங்க மட்டும் தான்.

நண்பன் said...

// வாட்மோர், அர்ஜீனரணதுங்கா எல்லாம் நம்மூர் ஜோல்னா பத்திரிக்கைகாரங்க கிளப்பிவிட்டதுங்க.. அப்புறம் பேச்சுவாக்குல முகமது கைப் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட்டர்னிங்களே... சிரிச்சு முடியலீங்க!
//

ஜோல்னா பத்திரிக்கைக்காரங்க? Times of India?
கை·ப்புக்கு ஆடத் தெரியாது??

செல்வேந்திரன், உங்களுடைய பொது அறிவு புல்லரிக்க வைக்குதுங்க!!!!

கொஞ்சம், பத்திரிக்கைகளை வாசிங்க!!!

நண்பன் said...

வாசகன்

//ஆனால் மேட்ச் ஃபிக்ஸிங் கும்பலின் நெட்வொர்க்கில் மறுபடி வீழமாட்டார் என்பது என்ன நிச்சயம்? //

சிவபாலன்

// But his previous conduct was not satisfying //

Fast Bowler

// அவர் பயிற்சியாளராக நிரூபிக்கப்பட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிரூபிக்க்கப்பட்டுவிட்டால்? //

அஸாருத்தீன் மீதும் மட்டும் குற்றச்சாட்டு சொல்லப்படவில்லை. அவருடைய மைத்துனர்கள், அதாவது சங்கீதா பிஜ்லானியின் சகோதரர்கள் மூலம் தான் பெட்டிங் கட்டும் மா·பியா கும்பலுடன் தொடர்பு வந்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மீண்டும் அவர் மீது அதே குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்புகளுண்டு. மறுப்பதற்கில்லை. அவர் மீது குற்றமே இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அல்லது BCCI பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், மக்கள் மனதிலிருந்து இந்த 'நினைவுகள்' விலகுமா என்று தெரியவில்லை. அவருக்குத் தகுதி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கம் பொது வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் செய்த தவறுகள் அவரைத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Anonymous said...

அசருதீன் எல்லாம் கோச்சாக வந்து என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார் ?


எப்படி பணம் வாங்கித் தோற்பது. எப்படி மனைவியை மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு மார்கெட்டில்லாத நடிகைகளைக் கணக்குப் போடுவது தானா ?


அவரை விட்டால் வேறு ஆளா இல்லை ?

நண்பன் said...

ரமீஸ் ராஜா

//அசருதீன் எல்லாம் கோச்சாக வந்து என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார் ?


எப்படி பணம் வாங்கித் தோற்பது. எப்படி மனைவியை மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு மார்கெட்டில்லாத நடிகைகளைக் கணக்குப் போடுவது தானா ?


அவரை விட்டால் வேறு ஆளா இல்லை ? //

ரமீஸ் ராஜா,

இங்கே நாங்க பேசிக்கிட்டிருக்கிறது கிரிக்கெட்.

பிஜ்லானிக்கள், நக்மாக்கள் எல்லாம் ஒரு கிரிக்கெட்டரின் தனிப்பட்ட ரசனை, விருப்பம். ஏதோ கிரிக்கெட் விளையாட வந்து விட்டதனால், நீங்கள் எதிர்பார்க்கும் 'நல்ல முஸ்லிமாக' இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையெல்லாம் அவர்கள்
மீது திணிக்க முடியாது. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்கள். அதற்காக உங்கள் ஆத்திரத்தை
யெல்லாம் காட்டி, ஒருவரின் திறமையைத் தரக்குறைவாகப் பேசுவது உங்களின் பக்குவமின்மையே தவிர, கிரிக்கெட்டிற்கு தேவையற்றது.

தலாக் சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அது தவறு - வ்¢வாகரத்தை Common civil code மூலம் வழக்கு மன்றங்களில் தீர்த்துக் கொள்ளலாம் என்ற வாதத்திற்கு நீங்கள் தயாரா, சரியான, அடையாளங்கள், முகவரிகளுடன் வாருங்கள். மற்ற முஸ்லிம்களுக்கு ஒரு நியதி, அஸாருத்தீனுக்கு ஒரு நியதி என்று வாதிட முடியாது.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்