காதலைச் சொல்ல வா…
காதலைச் சொல்ல வா…
பிரயாசைப்பட்டு மறைத்துக் கொண்டோம்
ஒருவர் மீதான ஒருவரின் காதலை
வலுவில் சமாதானாம் சொல்லிக் கொண்டோம்
நட்பு தான் இது தானென்று
ஒவ்வொரு நாள் கடத்தலின் போதும்
ஒருவரை ஒருவர் நட்புடன் சிலாகித்துக் கொண்டே
காதலைத் தேடிக் கொண்டிருந்தோம்
வெளியில்
காதல் கிடைத்த பொழுது
மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து கொண்டோம்
நமது புதிய துணைகளை
இவ்வுலகின் எந்தவொரு உயிரும் அறிந்திருக்கவில்லை
நம் மீதான காதலுக்கு மானிட வடிவம் தேடி
நாம் அலைந்து கொண்டிருந்ததை
பிரதிகளும் பிம்பங்களும் அசுவராசியமாய் மாறி
கடிகார சிறுபெரு கரங்கள் நகர மறுத்து
துவளத் துவங்கும் மந்தமான பொழுதுகளில்
தற்காலிகமாக காதலின் குவியத்தை
மாற்றி வைத்துக் கொண்டோம்
பிள்ளைகளின் நலனென்று
கையசைத்து விடைபெற்றுப் போய்விட்டனர்
தங்கள் பாதைகளைத் தேடி பிள்ளைகளும்
வார்த்தைகளை இன்னும் மலடாகவே வைத்திருக்க
உன்னாலும் என்னாலும் மட்டுமே முடியுமென்று
நம் மனதிற்குள் பேசிக் கொள்கின்றன பட்சிகள்.
இந்த உலகின் மீதான அவநம்பிக்கைகளை
தரித்துக் கொண்ட புதுகுடிகளாக வாழ்வதில்
ஒரு பெரும் சலிப்பு அடைந்துவிட்டோமாதலால்
வா, தேடுவோம் காதலை, வெளியில் அல்ல.
உள்ளுக்குள்
நான் உன்னை காதலித்தேன் என்பதை
நீ அறிந்தால் மட்டுமே
புனிதமானதென்று பலரிடமும் சொல்லி வைக்கப்பட்ட
நம் நட்புக்கும் கூட இயல்பான அதன் பொருள் கிடைக்குமென்ற
புரிந்து கொள்தலில் தான் மிச்சமிருக்கிறது வாழ்க்கை.
ஒரு காதலினால் இன்னொரு காதல் அழிவதில்லை.
நம் காதலை நாம் தெரிந்து கொள்வதினால்
யாருக்கும் எந்தப் பிணக்குமிருக்கப் போவதில்லை
அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையையும் கொடுத்த பின்பு
மீதமிருக்கும் கொஞ்ச வாழ்க்கையில் காதலிப்பதினால்
எந்த கடலும் ஆழிப்பேரலைகளை அனுப்பி வைத்து
அழித்து விடப்போவதில்லை இவ்வுலகை.
ஒருவேளை
ஒரு புதிய உலகம் தனது கதவைத் திறக்கக் கூடும்
நீயும் நம்முள் ஒளிந்து கிடக்கும் இந்த காதலை
கண்டு கொண்டு கண் திறக்க முடிந்தால்
இழந்து விட்டதற்காக வருத்தமடையவில்லை தானென்றாலும்
தவிப்புடன் அமர்ந்திருக்கும் இந்தக் காதல் அமைதியடையும்
நீ
அட, ஆமாம், நானும் உன்னைக் காதலித்தேனென்று
சொல்லும் வேளையில்
யாசிக்க உயர்ந்த கரங்களில் ஏந்திய பாத்திரங்கள்
நிரம்பி வழியட்டும், உனது ஆமோதிப்பினால்.
வா, காதலைச் சொல்ல வா…
இப்பொழுதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.
வா, காதலைச் சொல்ல வா...
வா, காதலைச் சொல்ல வா…
இப்பொழுதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.
வா, காதலைச் சொல்ல வா...