பெருந்துயரம் நிகழ்ந்தது: ஆசிப் மீரான் துணைவியார் மரணம்.
வார்த்தைகள் தங்களை மாய்த்துக் கொண்டு, மௌனம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்ட தருணம் அது.
எனக்குக் கிடைத்த செய்தியை உறுதி செய்தி கொள்ள இந்தியாவிற்குச் சென்றிருக்கும் நண்பர், சகோதரர் இசாக்கைத் தொடர்பு கொண்ட பொழுது உடைந்த, அழுகின்ற குரலில் சொன்னார் - செய்தி உண்மை தான் என்று. அருகே ஆசிப் மீரான் இருக்கிறார் - பேசுங்கள் என்று கொடுத்தார். என்ன பேசுவது என்று தெரியவில்லை. எந்த வார்த்தைகளும் துணைக்கு வரவில்லை.
"எப்படி இருக்கிறீர்கள்?" என்ற பொதுவான கேள்வியைத் தான் கேட்க முடிந்தது.
"இந்தத் துயரம் நிகழ்ந்தது என்று இப்பொழுது கூட என்னால் நம்ப முடியவில்லையே" என்று ஆதங்கத்துடன் கூறினார். மேற்கொண்டு என்ன பேசுவது?
"எப்பொழுது நிகழ்ந்தது? வீட்டிலா, மருத்துவமனையிலா?"
"மருத்துவமனையில் தான். ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லையே"
பிறகு மீண்டும் மௌனம். "துபாய் வந்த பின் பேசுவோமே" என்றார். சரி என்று தொலைபேசி தொடர்பைத் துண்டித்து விட்டேன்.
ஆனால், மனதை துயரம் அழுத்த, மீண்டும் உடன் இசாக்கைத் தொடர்பு கொண்டு, "குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.
"அமைதியாக இருக்கிறார்கள்" என்றார்.
"விஷயம் தெரியுமா?"
"தெரியும்"
"என்ன நிகழ்ந்தது என்று புரிந்து கொண்டார்களா?"
"தெரியலையே?" என்றார்.
அடக்கம் முடிந்த பின்னர் மீண்டும் கூப்பிடுகிறேன் என்றார்.
எந்த வேலையிலும் நாட்டமில்லாமல், மனம் தவித்துக் கொண்டிருக்க, பணியிடத்திலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அறைக்குத் திரும்பி விட்டேன்.
எந்த ஒரு வார்த்தைகளைக் கூறியும் ஆறுதல் சொல்ல முடியாதவனாகத் தான் இருக்கிறேன்.
எந்த ஒரு பயணத்திலும், சொல்லிக் கொண்டு விடை பெற்றுச் செல்வது தான் மனித இயல்பு. ஆனால், இந்த உலகிலிருந்து மொத்தமாக இனி திரும்பவே இயலாத ஒரு பயணத்திற்குச் செல்பவர்களுக்கு மட்டும் அந்த உரிமையில்லை. பிரியப்பட்டவர்களிடத்தில் சொல்லிக் கொண்டு, குழந்தைகளை உச்சி முகர்ந்து, வாழ்த்தி விட்டு, "சென்று வருகிறேன்" என்று ஒரு ஒற்றை விடை பெறுதலைத் தரக்கூட கால அவகாசமின்றி, அழைத்துக் கொள்வது தான் இறைவனின் வழக்கம் என்றால், மனம் ஆயாசம் அடைகிறது - இந்த இறைவனினால், நாம் பெற்ற பயன் என்ன என்று?
பதினைந்து வருடங்களுக்கு முன்னால், பிரசவத்தின் போது என்னிடம் சொல்லிக் கொள்ளக் கூட சந்தர்ப்பம் கிடைக்காமலே, தனது இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு மரணித்துப் போன என் தங்கையின் நினைவு ஏனோ இந்தக் கணத்தில் வருகிறது. 'எல்லாம் ஆண்டவன் செயல்' என்று எல்லோரும் சொன்ன பொழுது, இது தான் இறைவன் என்றால், அவன் எனக்கு வேண்டாம் என்று விலகிக் கொண்டவன் - பதினைந்து வருடங்களாக. இப்பொழுது தான் இறைவன் மீதான வருத்தங்களும், கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நேரம்.
ஆசிப் மீரானின் துணையின் மரணம் மீண்டும் இறைவனைக் குறித்தான கேள்விகளை எழுப்பத் தான் செய்கின்றன. என்றாலும் என்ன செய்வது, எங்கு சுற்றி, எங்கு போனாலும், மீண்டும் மீண்டும் அவனிடத்திலே தான் வந்து சேர வேண்டும் என்ற புரிதல் ஆறுதல் சொல்கிறது.
இறைவன் துணையிருப்பான் என்று.
எல்லாம் வல்ல அந்த இறைவன், ஆசிப்பிற்கு இந்த நேரத்தில் துணையாக நிற்பான் - இந்த துயரத்தைத் தாங்க வல்ல வலிமையைத் தருவான் - தரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், இந்த துயரச் செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
20 comments:
My heartfelt condolences.
May her soul rest in peace.
//என்ன பேசுவது என்று தெரியவில்லை. எந்த வார்த்தைகளும் துணைக்கு வரவில்லை.
"எப்படி இருக்கிறீர்கள்?" என்ற பொதுவான கேள்வியைத் தான் கேட்க முடிந்தது.
/////
போன மாதம் தான் திரு.ஆசிப் மீரானை பங்களூர் பதிவர் சந்திப்பில் பார்த்தேன்..
முத்துலெசுமி சொல்லிதான் எனக்கு இந்த துயர சம்பவம் தெரிய வந்தது... நீங்கள் சொல்லுவது ரொம்ப சரி... என்ன பேசன்னு தெரியலை.. எதுவுமெ பேசாமலும் இருக்க முடியவில்லை..
பிள்ளைகளை நினைத்தால்தான் கவலையாய் இருக்கு... அப்பா ஊருக்கு போய்.. அம்மாவுடன் இருந்து பழகி விட்டார்கள்.. உறவினர்கள் போனபிர்ப்பாடு அந்த கண்கள் அம்மாவை தேடுமே...ஐய்யோ.. என்ன கொடுமை
Let us pray for her soul to rest in peace :-(
//உறவினர்கள் போனபிர்ப்பாடு அந்த கண்கள் அம்மாவை தேடுமே...ஐய்யோ.. என்ன கொடுமை//
இந்த வரிகளை படித்தபோது என் மனம் கனத்துப்போனது.
எனக்கும் உங்களைப்போலவே செய்தி வந்ததும் நம்ப முடியவில்லை. தொலைபேசிதான் உறுதிசெய்துகொண்டேன்.
மிகவும் வருந்தச்செய்யும் செய்தி. அஞ்சலியில் நானும் பங்குகொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகவும் துயரமான நிகழ்வு.
வருத்தத்தில் பங்கேற்கிறோம்.
அன்புடன்,
முகு
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
ஏற்கனவே உடைந்து போயிருந்த என் மனம் உங்கள் பதிவை படிச்ச பின்னாடி கண் கலங்க வெச்சுருச்சு. எல்லாம் வல்ல ஆண்டவன் அண்ணாச்சி மன தைரியத்தை தர வேணும்.
ஆண்டவா... அவரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம்.
நண்பர் ஆசிப் மீரானுக்கும் அவரது குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
இழப்பு இழப்புதான். அந்த இழப்பைத் தாங்க மனவலியை இறைவன் அருளட்டும்.
// உறவினர்கள் போனபிர்ப்பாடு அந்த கண்கள் அம்மாவை தேடுமே...ஐய்யோ.. என்ன கொடுமை//
ஆம். கண்கள் தேடும். எந்தப் பதிலும், சமாதானமாகாது. இயல்பான தாயன்போடு எழுதப்பட்ட இந்த வரிகள் மனதைப் பிசையத் தான் செய்கின்றது. இந்த வரிகளின் வலியை ஏற்கனவே அனுபவித்தவன் ஆயிற்றே!!!
//ஆசிப் மீரானின் துணையின் மரணம் மீண்டும் இறைவனைக் குறித்தான கேள்விகளை எழுப்பத் தான் செய்கின்றன. என்றாலும் என்ன செய்வது, எங்கு சுற்றி, எங்கு போனாலும், மீண்டும் மீண்டும் அவனிடத்திலே தான் வந்து சேர வேண்டும் என்ற புரிதல் ஆறுதல் சொல்கிறது.//
துயரத்தில் இருக்கும் ஆசிப் மீரானின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
துணைவியாரை இழந்து வாடும் நண்பர் ஆசீபுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
:-((
It's really shocking to hear the news. My heart goes out to the kids.
நண்பர்களின் துயரத்தில் பங்குகொள்கிறேன்
நன்பர் ஆசிப்மீரான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நம்பவே முடியாத ஆனால் நம்பியே தீர வேண்டிய துயர நிகழ்வு இது. நேற்று ஏசியாநெட் வானொலி செய்திகளில் இதை தெரிவித்த போது நம்பாமல் ஹரன்ப்ரசன்னாவை தொடர்பு கொண்டு அவரும் அதை உறுதிப்படுதியபோது எனது நல்ல நன்பனுக்காக மனம் கனத்துப்போனது. எல்லாம் வல்ல இறைவனை ஆசிப்ஜிக்கு மன தைரியம் தர வேண்டுகிறேன். ஜெயக்குமார் - தோஹா.
பதிவுலகம் மூலம் ஆசிப் மீரானின் எழுத்துக்களை அறிந்திருந்த எனக்கு இந்த துயரச் செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தை
தருகிறது. இவருக்காகவும் இவர் குழந்தைகளுக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
சாம்
மிகவும் வருத்தத்திற்குறிய செய்தி. ஆசிப் மீரான் அவர்களுக்கு இறைவன் மனதைரியத்தை அருளவும், அவரது துணைவியாரின் மறுவுலக வாழ்வு சிறப்பாக அமையவும் வேண்டுகிறேன்.
அய்யோ கடவுளே!
என்ன கொடுமையான செய்தி. என்னால் நம்ப முடியவில்லை, இப்போ தான் ஒரு அன்பர் சொல்ல இணையத்தில் தேடினேன்.
ஆசிப் எத்தனை அருமையான மனிதர், சகோதரியை பற்றியும் அந்த அன்பு உள்ளம் சொன்னதை கேட்டு கண்ணிர் வருகிறது.
சகோதரியின் ஆத்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்.
Post a Comment