"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, July 31, 2007

நர்கீஸின் மகனுக்கு ஆறு வருட தண்டனை.




ஒவ்வொரு நாளும் வரச் சொல்லி, காத்திருக்க வைத்து, பின்னர் திருப்பி அனுப்பி - ஒரு வழியாக சஞ்சய் தத்துக்கு நீதி மன்றங்கள் வழங்கிய torture நிறைவு பெறுகிறது.





எப்பொழுதும் பாதுகாப்பின்மையென்ற அச்ச உணர்விலே வாழ்ந்து வந்தவர், சஞ்சய் தத். நடிகராக தொழிலில் அதீத கவனம் செலுத்திய தந்தை, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் தாய், அதீத பணம், எளிதாகக் கிடைக்கும் போதைவஸ்துகள் என அவருக்கு நிகழ்ந்தவை அனைத்துமே தவறானவை. பின்னர் தந்தை தன் காதல் மனைவியை மீட்க புற்று நோயுடன் ஒரு அதீத போராட்டம் நடத்தி தோல்வியுற்று, தன் மகன் பக்கமாக தன் கவனத்தைத் திருப்பிய பொழுது காலம் மிகக் கடந்து போய்விட்டிருந்தது. போதைப் பொருளின் பிடியிலிருந்து மீட்க மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்குச் சென்று திரும்பியவர் வாழ்வில், மீண்டும் புயல். நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை.




இத்தகைய பாதுகாபின்மை என்ற அச்ச உணர்வு குடைந்து கொண்டே இருந்த பொழுது தான் அவரைத் தவறான வழியில் நடத்தும் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். நர்கீஸ் என்ற முஸ்லிம் பெண்ணின் புதல்வனான உனக்கு பாதுகாப்பில்லை என்று தவறான உபதேசங்களுடன், பாதுகாப்புக்காக வைத்துக் கொள் என்று சொல்லி, ஆயுதங்களை வைத்துக் கொள் என்று அவர் தலையில் கட்டி விட்டனர். அந்த ஆய்தங்களால் எந்தப் பாதுகாப்புமில்லை. மாறாக, மனவலிமையும், நேர்மையும் மட்டுமே வலிய ஆயுதங்கள் என்பதை அவரும் விளங்கிக் கொள்ளவில்லை. என்றாலும் மும்பை வெடிகுண்டு வழக்கும், அதிலிருந்து மகனைக் காப்பாற்ற ஒரு தந்தையாக சுனில் தத் நடத்திய போராட்டங்களும், பின்னர் தந்தையின் மரணமும், இடையில் கொஞ்ச நாள் சிறை வாழ்க்கையும் அவரை நிறையவே மாற்றி இருந்தன. சிறை தண்டனை என்பது ஒரு மனிதனை திருத்தவும் நல்வழிப்படுத்தவும் தான் என்றால், அவர் அந்த நல்வழிக்கு வந்து விட்டவர் தான்.




தீர்ப்பைப் பற்றிய வானொலி செய்தியில் குறிப்பிட்ட சில வரிகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. மும்பை குண்டு வெடிப்பின் காரணகர்த்தா அனீஸ் இப்ராஹீமுடன் நட்பாக இருந்தார், அனீஸின் அண்ணன் தாவூத் இப்ராஹீமை துபாயில் சந்தித்துப் பேசினார், அத்துடன் ஆயுதங்கள் வைத்திருந்தார் - இத்தகைய காரணங்களுக்காக, அவருக்கு சிறை தண்டனை விதிக்கிறேனென்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.




ஒருவரை நண்பராகக் கொண்டு, பின்னர் அந்த நண்பர் தீயவர் என்றால், அவரிடம் நட்பாக இருந்தவர்கள் அனைவரும் தீயவர் - தண்டிக்கப்பட வேண்டியவர் என நீதி மன்றங்கள் கருதத் தொடங்கினால், நாம் என்ன செய்வது. நம்முடன் நட்புடன் இருப்பவர்களைப் பற்றி துப்பறியும் நிறுவனங்கள் மூலம் ஆய்வறிக்கைப் பெற்று, பின்னர் தான் தீர்மானிக்க வேண்டுமா? அது எல்லோருக்கும் இயலுமா? ஒருவரை - சந்திப்பது ஒன்று மட்டுமே குற்றம் புரிந்தவராகக் கருத இடம் கொடுக்கும் என்றால், தாவூத்தை எத்தனை எத்தனை மும்பை திரையுலகப் பிரமுகர்கள் சந்தித்திருக்கின்றனர்? எத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அவரை சந்தித்திருக்கின்றனர்? அவரிடம் கொடை பெற்றிருக்கின்றனர் என்ற கணக்கை அரசும், காவல்துறையும் நீதிமன்றங்களும், அரசும் ஆராயுமா? மாட்டிக் கொண்டவனுக்குத் தர்ம அடி போடுகிறார்கள் அவ்வளவு தான்?




சஞ்சய்யின் தாயார் - நர்கீஸ் தத் நடித்த ஆவாரா படத்தின் இறுதிக் காட்சியில், ராஜ்கபூரைப் பார்த்து சொல்வார் - இந்த சிறை தண்டனை, இன்னும் உன்னை, நல்லவனாக மாற்றும். ஆகையால் இந்தத் தண்டனையை ஏற்றுக் கொள் என்று. திரை உலகையும் தாண்டி, ராஜ் கபூரை நேசித்தவர், காதலித்தவர். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், அன்று காதலனிடம் பேசிய அந்த 'டயாலாக்கை' மகனிடமும் ஆத்மார்த்தமாகச் சொல்லி இருப்பார் - 'இன்னமும் நல்லவனாக மாறு' என்று.




Sanjay, Don't let your heart sink. No one has got any grudge against you. Come back as a man, the son of Nargis.




No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்