நரியின் ஞாநம்
நிலமெங்கும் படர்ந்த சிறகொடுக்கி
மரயுச்சியில் கண்மூடியமர்ந்தது
அறிவின் மேலோடுடைத்து வேர் முடுக்கி
புதிய வானம் திறந்து வைத்த பறவை
வாய்ப்பமைகையில் வஞ்சக ஞாநம் பாடும் நரி
எட்டாக் கனி கண்டு ஏங்கிய நரி
எட்டப்பன் காக்கையை ஏமாற்றிய கதையை
இன்னமும் வெற்றியாக விழாவெடுக்கும் நரி
ஞாநம் பெருக்க்க்க்க்க்க்க்கெடுக்க ஊளையூட்டியது
தன் இறப்பு வரையிலும் பயப்படுத்தும் பறவை
விடியல் தொட்டு அந்தி வரை
தன்னை வேட்டையாடித் திரியும் பறவை
இரையாக வீழும் தருணம் வந்ததாக
நளின அசைவுகளுடன் சிவப்புத் துணி வீசாது
நஞ்சு தோய்த்தலங்கரிக்கப்பட்ட
கத்தியொன்றை மறைத்துக் கொண்டு
காளையடக்கும் வீரன் போல துள்ளிப்பாடியழைக்கிறது
எச்சில் வடிக்கும் சக ஞாநமடைந்த நரிகளை
மரத்தின் அருகே தன்னைத் தூக்கிப் போக
நடுங்கும் தொடையின் தசையிறுக்கிப் பிடிக்க
மந்தையாக மந்திரமொலித்து அச்சம் போக்க
முரசறைந்து போர் அறிவிக்க
ஒருமித்த குரலில் ஓங்கியிட்ட ஊளைகள்
உளறலாகித் தொலைக்கிறது
அக்கறையுடன் ஓய்வெடுக்கச் சொல்வதாக
சிறகு விரித்து தலை நிமிர்ந்தெழுந்து
காற்றில் மிதக்கையில்
சிதறியோடுகின்றது ஞாநக்கூட்டம்
ஒவ்வொரு சிறகிலும் ஒரு சிறகின் பிரதியாக
ஆயிரமாயிரம் கழுகுகள் கண் சிவப்பேறி
தன்னை வேட்டையாடும் தகிப்புடன்
பெரும்பறவையை தூக்கி மிதக்கும்
வேட்கைப் பெருக்கத்தில் சிதறியோடுகின்றன
மொத்த நரிகளும்
கத்தியொன்று தங்களிடமிருப்பதையும் மறந்து
இனியுமொரு எட்டாக் கனி கதையும்
எழுதப்படலாம் இங்கே…
No comments:
Post a Comment