"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, January 23, 2007

ஜிஹாத் வழிகாட்டி...

அவனது கரங்களில்
கதிரவன் மோதி சிதறும்
கனத்த வாள்.

காலடியில் வீழ்ந்து திமிறும்
ஆக்கிரமிப்பாளனின்
மார்பின் மீதேறியமர்ந்து
கழுத்தை மையமாக்கி
வானுயருகிறது வாள்
வலுவாக வீழ்வதற்கு.

சாவோமென்ற அச்சத்தில்
எச்சில் கூட்டி உமிழ்கிறான்
கோழையாகிப் போனவன்.

ஓங்கிய வாள்
உயரத்தில் உறைந்து போக
அடங்க மாட்டா ஆத்திரமெழுந்த
தன் எண்ணத்துடன் போரிட்டுக் கொண்டே
தாடை இறுக முகம் சிவந்த வீரன்
பயத்திலொடுங்கும் எதிரியின்
உடல் உதறி எழுகிறான்

கண்மூடி வான் நோக்கி தலையுயர்த்தி
சிலபல பிரார்த்தனைகளை முணுமுணுத்து
ஓங்கி ஓங்கியடிக்கும் இதயமடக்கி
ஆசுவாசமாகிப் பின்னர் திரும்பி
எதிரிக்கு உத்தரவிடுகிறான் -
ஓடிப் போ - உயிர் பிழைத்தாய் நீ.

இப்பொழுது இப்பொழுதென
எதிர்பார்த்துக் கிடந்த சாவை
விலக்கி வைத்து மன்னித்த வீரனை
வியப்புடன் வினவினான் -
ஆத்திரம் வரவில்லையா என் எச்சில்பட்டு?.

திடமாக திரும்பி
தீர்க்கமாக நோக்கிய வீரனின்
தாடிக்குள் புதைந்திருந்த
கனத்த உதடுகள் அசைந்தது
எனக்கு கோபம் வந்தது -
அடக்கவியலாத கோபம்.
பிழைத்தாய், போ, ஓடிவிடு.

இன்னமும் இன்னமும்
அதிசயித்துப் போன எதிரியோ
மீண்டும் நோக்கினான் கேள்வியோடு.

இந்தக் கணத்தில் உன்னை வெட்டினால்
என் கோபத்தால் மடிந்தவனவாய் நீ.
என் சினம் உன்னைக் கொன்றால்
எனக்கும் உனக்குமான யுத்தமாகிடும்
நான் செய்வது புனிதப் போர்
இந்தப் போர் எனக்கானதல்ல.
என் இனத்தவருக்கானது
என் இறைவனுக்கானது.

வாதிப்பதை நிறுத்தி, விலகிச் செல்ல
வீரன் திரும்புகையில்
கெஞ்சுகிறான் எதிரி
ஐய்யா அழைத்துச் செல்லும்
எம்மையும் உன் பாதையில்...

தன் அகங்காரத்தைக் கட்டிப்போட
தன்னை வருத்தி தன்னோடு போரிடும்
ஜிஹாதைக் கற்றுத் தர
வரலாற்றில் வீரமிக்க அலீ உண்டு.
அமெரிக்காவின் alter ego ஒஸாமாக்களின்
சாத்தானிய வேதங்கள் அல்ல ஜிஹாத்...

(இஸ்லாமிய வரலாற்றில் ஒரு யுத்தத்தில் நடந்த ஒரு சம்பவம்)

4 comments:

Anonymous said...

அருமையான பதிவு நண்பர்... வரலாற்றுச் சுவடியை கவிதையாய் வடித்திருக்குறீர்கள்...

சல்மான் said...

A memorable event in Companions' disciplined history.

Arumai!!

Anonymous said...

சீரிய சிந்தனையைத் தூண்டும் சம்பவத்தை சிறப்பான கவிதையாக்கி இருக்கிறீர்கள்.

எச்சில் துப்பிய
எதிரிக்கும்
காழ்ப்பு காட்டாத
கொள்கையின் கம்பீரத்தில்
பட்டொளி வீசும்
பேறுயர் வீரம்
போர்க்களத்திலும் அன்று!!

ஏகப்பட்ட இரத்தம்
சுவைத்த இச்சையில்
எச்சில் தேடி நீளும்
ஏகாதிபத்திய நாவுகளை
வெற்று உணர்ச்சியில் அமிழ்த்தி
உலர்ந்துப் போகும்
உதவாத ஜிகாது இன்று!!

(என்னுடைய இக்கவிதைப் பின்னூட்டத்தில் சொல், பொருள் குற்றமிருப்பின் தெரிவியுங்கள்).

நண்பன் said...

ஜி, சல்மான், வாசகன் - மிக்க நன்றி.

வாசகன், கவிதை நன்றாக உள்ளது.

நீண்ட நாளைக்கப்புறம் பின்னூட்டத்தில் ஒரு கவிதை.

நன்றி.

அன்புடன்
நண்பன்...

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்