"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, November 12, 2007

அழிபடும் சார்பின்மைகள்


சிக்கலாகப் பின்னிக்கிடக்கும் வீடுகளினுள்ளிருந்து
தெருவில் விழுந்து கொண்டேயிருக்கிறது இரைச்சல்
மழைக்காலத்து நதிநீரைப் போன்று.

எத்தனை விரட்டியடித்தாலும் பசிக்குத் தானியம் பொறுக்க
திரும்பி விடும் சிட்டுக்குருவிகள் போன்று
கள்ளன் போலிஸ் ஆட்டத்தில்
குழந்தைகள் எதிர்பாராத கோணத்திலிருந்து
குதித்து வெளியேறியோடுகிறார்கள் அயர்ச்சியின்றி

ஒவ்வொரு கதவிடுக்கின் வழியாகவும்
கசிந்து கொண்டிருக்கிறது வானொலிப் பாடலொன்று
அல்லது தொலைத்தொடரின் முடிவற்ற ஒப்பாரியொன்று

வேறெந்த கவனமுமின்றி வாகன எந்திரம் உசுப்பி
உறுமலின் சத்தத்தையும் புகையையும்
பரிசோதித்துக் கொண்டிருக்கிறான் பழுது பார்ப்பவன்

தள்ளுவண்டிக்காரனைச் சுற்றி நிற்கும் பெண்களில் சிலருக்கு
காய்கறி வாங்குமெண்ணத்தைக் காட்டிலும்
அங்கில்லாத பெண்ணொருத்தியின்
ஒழுக்கத்தைப் பற்றி பேசுவது சுவையாயிருக்கிறது.

சகலவிதத்திலும் அமைதியிழந்து கிடக்கும் தெருவில்
ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் விசாரித்துக் கொண்டே
சாந்தமாக நடந்து கொண்டிருக்கிறான்
நீண்டதாடி வைத்து தொப்பியணிந்த ஒருவன்

வீடுகளின் வாசல்கள் அனைத்திலும் ஏறுகிறான்
இந்த வீடமைந்து விடுமென்ற நம்பிக்கைப் பெருக்குடன்

பேச்சுவார்த்தைகளென்றெதுவும் தொடங்கப்பட
வாய்திறவும் அவகாசங்கள் கூட அமையவிடாது
திறந்த கதவுகள் பெருங்கலவரத்துடன் மூடி மௌனியாகின்றன

நடந்து நடந்து களைத்துப் போனவனின் தாடி
சவரக்கத்தியினால் தங்களை அறுத்துக் கொள்கின்றன
ஒரு நாளின் வெம்மை மிகுந்த பகலொன்றில்

மீண்டும் அலைந்து திரியுமவனுக்கு
இரைச்சல்மிகும் தெருவின் வாடகை வெளிகள் திறக்கின்றன

தன்னியல்புகளை மழித்துவிட்ட அவனிடம்
ஒர் உரையாடல் நிகழ்த்தும் அவகாச அளவிற்கோ
அல்லது அவன் பெயர் என்னவென கேட்டுத் தெரியுமளவிற்கோ
இரைச்சல்மிகும் தெருவின் வாடகை வெளிகள் திறக்கின்றன

Tuesday, November 06, 2007

ஒரு புல்லாங்குழலின் மரணம் - தமிழ்ச்செல்வனுக்கொரு கவிதை



கூராயுத வீச்சில் முறிக்கப்பட்ட

மூங்கில் துளைகள் வழியூதப்பட்டு

காற்றில் மிதக்கிறது

பிரிவாற்றாமையின் துயரம்





ஒரு குச்சியின்

துளையாகக் கண்களும்

உயிர் சுண்டும்

ஒலியாக காதுகளும்

புலன் சுவைக்கின்றன

மூங்கிலை





காட்டு வாழ்விடங்களில்

திமிறியொலித்து முட்டி மோதி

வெடித்துச் சிதறிப் பற்றியெழும்

தீயுள் காத்திருக்கும் மரணத்தை

தேடித்திரியும் சிற்றுயிரென்பர்

இருளின் வெளிச்சமறியாதவர்கள்.




புல்லாங்குழல்

முறையீடுகளின் கூச்சலோடு

இணைந்தரற்றுகின்றனர்

உடைந்து சிதறிய உள்ளத்தினர்



புலப்பெயர்ச்சியில் மறக்கடிக்கப்பட்ட

வேர்களைத் தேடியலையும் ஏக்கத்துடிப்பில்

உயிர் அரற்றிக் கொண்டிருக்கிறது



தூரிலிருந்து

முளைத்துக் கொண்டிருக்கும் புதுப்புல்

காற்று வாங்கி ஒலியெழுப்பி

காடெங்கும் தேடித் திரிகிறது

வெட்டி முறித்தெறியப்பட்ட

ஒரு சகோதரனின் குரலை.

Sunday, November 04, 2007

பெண் பார்த்தல்


உன் மீதான ஈர்ப்பு
என்னிடத்தில் தோன்றிய காலத்தை
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவில்லை
அக்காலத்தை நினைவு கொள்வதும்
அவசியமற்றதாகவேத் தோன்றுகிறதெனக்கு
உன்னைக் கண்டுவிடனுமென்ற அவா மட்டும்
என்றுமே குறைவதில்லை என்னிடத்தில்

எப்படியுனைக் காண்பதென்பது குறித்தும்
குழப்பங்கள் எதுவுமில்லை என்னிடத்தில்
உன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட
ஓவியங்களும் சிலைகளும் அல்ல நீ
அழகிய பட்டுகளும் நவீன ஜீன்களுமல்ல நீ

மலரின் அருகே மிதக்கும்
வண்ணத்துப் பூச்சியைப் போல்
நீ நீயாகவிருப்பதைத் தேடுகிறேன்
நீயறியாவண்ணம்
இயல்பைத் தேடுகிறேன் உன்னிடத்தில்
ஒரு சிறு துளை வழி பார்வைப் புகுத்தி

வெளிகளற்ற வெளிகளினின்றும்
சுவர்களற்ற அடைப்புகளினின்றும்
வாயில் திறந்து ஒளி பாய்கிறது
தசைகள் கிழித்து கர்ப்பப்பையினுள்
அடைக்கப்பட்ட ஆப்பிள் காட்டி

எப்பொழுதும் போல் உயிர்ச்சக்தி வடிக்கும்
உன் மார்புச் சுனைகள் மறைக்கப்பட்டன
பாலையில் நீரூற்றுகளை
எவருக்கும் அறிவிக்காது பாதுகாக்கும்
பழங்குடிகளின் பெரும் ரகசியம் போன்று

உன் நிர்வாணம் காணும்
எவருக்கும் கவனமிருப்பதில்லை
மூடவிரும்பாத திறந்திருக்கும்
உன் வாயெழுப்பும் ஓலங்களின்
அலைவரிசைகளையும்,
அவற்றின் மொழிகளையும்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்