"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, November 12, 2007

அழிபடும் சார்பின்மைகள்


சிக்கலாகப் பின்னிக்கிடக்கும் வீடுகளினுள்ளிருந்து
தெருவில் விழுந்து கொண்டேயிருக்கிறது இரைச்சல்
மழைக்காலத்து நதிநீரைப் போன்று.

எத்தனை விரட்டியடித்தாலும் பசிக்குத் தானியம் பொறுக்க
திரும்பி விடும் சிட்டுக்குருவிகள் போன்று
கள்ளன் போலிஸ் ஆட்டத்தில்
குழந்தைகள் எதிர்பாராத கோணத்திலிருந்து
குதித்து வெளியேறியோடுகிறார்கள் அயர்ச்சியின்றி

ஒவ்வொரு கதவிடுக்கின் வழியாகவும்
கசிந்து கொண்டிருக்கிறது வானொலிப் பாடலொன்று
அல்லது தொலைத்தொடரின் முடிவற்ற ஒப்பாரியொன்று

வேறெந்த கவனமுமின்றி வாகன எந்திரம் உசுப்பி
உறுமலின் சத்தத்தையும் புகையையும்
பரிசோதித்துக் கொண்டிருக்கிறான் பழுது பார்ப்பவன்

தள்ளுவண்டிக்காரனைச் சுற்றி நிற்கும் பெண்களில் சிலருக்கு
காய்கறி வாங்குமெண்ணத்தைக் காட்டிலும்
அங்கில்லாத பெண்ணொருத்தியின்
ஒழுக்கத்தைப் பற்றி பேசுவது சுவையாயிருக்கிறது.

சகலவிதத்திலும் அமைதியிழந்து கிடக்கும் தெருவில்
ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் விசாரித்துக் கொண்டே
சாந்தமாக நடந்து கொண்டிருக்கிறான்
நீண்டதாடி வைத்து தொப்பியணிந்த ஒருவன்

வீடுகளின் வாசல்கள் அனைத்திலும் ஏறுகிறான்
இந்த வீடமைந்து விடுமென்ற நம்பிக்கைப் பெருக்குடன்

பேச்சுவார்த்தைகளென்றெதுவும் தொடங்கப்பட
வாய்திறவும் அவகாசங்கள் கூட அமையவிடாது
திறந்த கதவுகள் பெருங்கலவரத்துடன் மூடி மௌனியாகின்றன

நடந்து நடந்து களைத்துப் போனவனின் தாடி
சவரக்கத்தியினால் தங்களை அறுத்துக் கொள்கின்றன
ஒரு நாளின் வெம்மை மிகுந்த பகலொன்றில்

மீண்டும் அலைந்து திரியுமவனுக்கு
இரைச்சல்மிகும் தெருவின் வாடகை வெளிகள் திறக்கின்றன

தன்னியல்புகளை மழித்துவிட்ட அவனிடம்
ஒர் உரையாடல் நிகழ்த்தும் அவகாச அளவிற்கோ
அல்லது அவன் பெயர் என்னவென கேட்டுத் தெரியுமளவிற்கோ
இரைச்சல்மிகும் தெருவின் வாடகை வெளிகள் திறக்கின்றன

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்