ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...
ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை
நியாயத் தீர்ப்பு நாள் இன்று
வயற்சதுப்பு வெளியெங்கும்
தம்மைச் சேகரித்துக் கொள்கிறது
ஆராவாரப் பெருங்கூட்டம்
குற்றச்சாட்டு இதுதான்:
நான் உன்னை நேசித்தேன்.
இவ்வுலகின் தங்குமிடமெங்கும்
ஒருதுளி மதுகூட மிச்சம் வைக்கப்படவில்லை.
பேருவகையின் மீதெவர் ஆணையிடுகின்றனரோ
அவர்களின் விழித்திருத்தல் உறுதிபடுத்திக் கொள்கிறது
சும்மா வேடிக்கைப் பார்க்கும் தாகத்துடன்
தங்களது போதைகள் இன்று விலக்கி வைக்கப்படாதென்பதை
இந்த வாளேந்திய கொலையாளி எவரைத் தேடுகிறான்?
தன் மக்களெல்லோரையும் துரத்திவிட்ட
அல்லது இறுதிமனிதனையும் தீர்த்துக் கட்டிவிட்ட
மௌனத்தின் நகரிலிருந்து வந்திருக்கின்றான்
ரத்தம் உண்டு சிவந்த வாளுடன்
கொலையாளிகளுக்கும் கொலைக்கருவிகளுக்குமிடையே
மர்மம் நீண்டுக்கிடக்கையில்
பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
யாருடைய சாவு?
அடுத்த முறை யாருடையது?
அந்தப் பந்தயம் இக்கணத்தில் என்மீது
ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...
யாருடைய முத்திரைகளினால்
அதன் மூலைகள் மூடப்பட்டிருக்கிறதென்பதை
நான் கண்டேயாக வேண்டும்
அந்த ஆணைச்சுருளின் மீதிருக்கும் கையொப்பத்தை
நான் அறிந்து கொண்டேயாக வேண்டும்
ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...
- faiz ahmed faiz