"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, October 16, 2008

ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...

ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை









நியாயத் தீர்ப்பு நாள் இன்று
வயற்சதுப்பு வெளியெங்கும்
தம்மைச் சேகரித்துக் கொள்கிறது
ஆராவாரப் பெருங்கூட்டம்
குற்றச்சாட்டு இதுதான்:
நான் உன்னை நேசித்தேன்.


இவ்வுலகின் தங்குமிடமெங்கும்
ஒருதுளி மதுகூட மிச்சம் வைக்கப்படவில்லை.
பேருவகையின் மீதெவர் ஆணையிடுகின்றனரோ
அவர்களின் விழித்திருத்தல் உறுதிபடுத்திக் கொள்கிறது
சும்மா வேடிக்கைப் பார்க்கும் தாகத்துடன்
தங்களது போதைகள் இன்று விலக்கி வைக்கப்படாதென்பதை


இந்த வாளேந்திய கொலையாளி எவரைத் தேடுகிறான்?
தன் மக்களெல்லோரையும் துரத்திவிட்ட
அல்லது இறுதிமனிதனையும் தீர்த்துக் கட்டிவிட்ட
மௌனத்தின் நகரிலிருந்து வந்திருக்கின்றான்
ரத்தம் உண்டு சிவந்த வாளுடன்


கொலையாளிகளுக்கும் கொலைக்கருவிகளுக்குமிடையே
மர்மம் நீண்டுக்கிடக்கையில்
பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
யாருடைய சாவு?
அடுத்த முறை யாருடையது?
அந்தப் பந்தயம் இக்கணத்தில் என்மீது


ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...
யாருடைய முத்திரைகளினால்
அதன் மூலைகள் மூடப்பட்டிருக்கிறதென்பதை
நான் கண்டேயாக வேண்டும்
அந்த ஆணைச்சுருளின் மீதிருக்கும் கையொப்பத்தை
நான் அறிந்து கொண்டேயாக வேண்டும்
ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...

- faiz ahmed faiz

12 comments:

M.Rishan Shareef said...

அன்பின் நண்பன்,
பைஸ் அஹமத் பைஸுடைய கவிதையின் பொருளுணர்த்தும் படமெனினும் கவிதையைப் போலவே உயிர்ப்பிச்சை கேட்டழும் ஓர் உயிரின் இறுதி நேர மன்றாட்டத்தை உரைக்கும் படமும் மனதை ஏதோ செய்கிறது.

Unknown said...

தனது உயிருக்கோ அல்லது தமது சொந்தங்களின் உயிருக்காக கொலைகாரர்களிடம் மன்றாடும் அவரது கண்ணில் தெரியும் அந்த மரண பயம்,
கவிதையை ஊடுருவி பொருளுணரும் மனதைக் கலைத்து, எண்ணத்தை சிதறடித்து விடுகிறது.
மீண்டும் மீண்டும் தோற்கிறேன்.

Anonymous said...

Understand QURAN - the Easy Way - For FREE

Learn Quranic Arabic, word by word translation of Quran, Quranic Grammar.

Take up the short course -last for less than 20 mins a day.
(We have spent more time on worldly education)

www.understandQuran.com - click => courses => short course => Language

Only English language course have full set.
Available in many languages.

Download slides (PPS/PPT) files and the respective audio (mp3)/video (wmv) files. - Listen audio while viewing slides.

For Children:
www.understandQuran.com – Click =>courses =>children => language.

ISR Selvakumar said...

ரிஷான் ஷெரீப் சொல்லியிருப்பது போல, கவிதைக்கேற்ற படம்.

அன்புடன் அருணா said...

உயிர் உருக்கும் கவிதை.
அன்புடன் அருணா

நண்பன் said...

அன்பின் ரிஷான்,

ஃபைஸ் அஹ்மட் ஃபைஸின் வாழ்க்கையே அவ்வாறு தான், ரிஷான். உங்களுக்குத் தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன்.

கொண்டாடப்படுதலும், தூக்கியெறியப்படுதலும், மாறி மாறித் தொடர்ந்தன - அவரது வாழ்க்கையில்.

மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டவர். தனிமைச் சிறையில் காலம் கழித்தவர். நாடு கடத்தப்பட்டவர்.

அவரது கவிதைகளில் உருதுவின் பாரம்பரியம் பளிச்சிடும். ஆனால், ஒன்று, அவர் காதலியாக நினைத்துக் கொண்டது, எதிராளிகளைத் தான். என்றாலும் எதிராளிகள் அவரை நிராகரிக்கவே செய்தனர்.

முதலில் காதல் கவிதை மாதிரியே விட்டு விடலாமென்று தான் நினைத்தேன். ஆனால், அது ஒரூ மகா கவிஞனுக்குச் செய்யும் அவமரியாதையாகி விடும். அவர் எழுதிய மனநிலையின் உத்வேகத்தை விட்டு விட்டு, அவர் உருவகித்த சமாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவது நியாயமாகாது.

குஜராத் கலவரத்தின் போது, உயிருக்கு மன்றாடி நின்ற அந்த மனிதனை எவருமே மறக்க முடியாது. சில புகைப்படங்கள் என்றுமே தாங்கள் ஏந்தி நின்ற பொருளை இழப்பதில்லை.

கவிதையும், புகைப்படமும் மிகக் கச்சிதமாகப் பொருந்திக் கொண்டது. என்ன, கவிதையில் இருந்த கம்பீரத்திற்கு, உயிருக்கு மன்றாடும் தன்மை - கையேந்தி பிச்சை கேட்டது கொஞ்சம் நெருடல் தான். என்றாலும், இன்று யாருமே கம்பீரமாக மரணத்தை எதிர் கொள்ள இயலாது. கோழைகளால் கொல்லப்படும் உயிர், எப்படியாவது தப்பிக்கத் தான் முனையும். எதிராளி நேர்மை மிக்கவனாக இருந்தால் மட்டுமே, மரணத்தைக் கம்பீரமாக நேர் கொள்ள இயலும்.

மிக்க நன்றி, ரிஷான். உங்கள் பின்னூட்டத்திற்கு. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்...

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அன்பின் சுல்தான்,

கவிதையை விட, அதன் பொருளுணர்ந்து அனுபவிப்பதை விட, அந்தப் புகைப்படம் பலவற்றைச் சொல்கிறது - அல்லது ஞாபகப்படுத்துகிறது என்பது வரையிலும் உண்மை தான்.

முதலில் கவிதையை மொழி பெயர்ப்பது என்பதே அபத்தம். என்றாலும் செய்தே ஆக வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடிவதில்லை. கவிதையின் ஆத்ம தரிசனமென்பது, அது எழுதப்படும் மொழியில் தான் அறிய முடியும்.

இங்கு, அதன் ஜீவதார மொழியில், கொடுத்த பொருளைப் பாதியேனும் தொட முடிந்தாலே, அந்தக் கவிதை வெற்றி என்று அர்த்தம்.

உருது மொழி அறியாததினால், நானும் கூட தோற்கிறேன் - இன்னமும் வலிமை மிக்க உணர்வுகளை வெளிக் கொண்டு வர முடியாமையால்.

நன்றி, சுல்தான்.

பின்னர், நலம் தானே? நீண்ட நாட்களாயிற்றுப் பார்த்து. ஆசிப் வீட்டில் சந்தித்தது தானே?

நண்பன் said...

அன்பின் அநாநி,

அநாநி பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை தான். ஆனால், நீங்கள் அனுப்பி வைத்த தொடுப்பு இருக்கிறதே - அற்புதம்!!!

ஆமாம், இதை ஏன் அநாநியாக அனுப்ப வேண்டும்?

உங்கள் தகவலுக்கு பல கோடி நன்றிகள். நிச்சயமாக பலருக்குப் பயன்படும்.

மிக்க நன்றி...

நண்பன் said...

அன்பின் ஆர்.செல்வகுமார்,

மிக்க நன்றி.

படத்திற்கு அது எத்தனை தூரம் பொருந்துகிறது என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன்.

நல்ல கவிதைகளை வாசிப்பதற்கு, எதுவுமே தடையாக நிற்பதில்லை.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்...

நண்பன் said...

அன்பின் அருணா,

உயிர் உருக்கும் கவிதை தான் - நிச்சயமாக.

உயிருக்கான போராட்டத்தை வைத்து, எழுதப்பட்ட கோபமான கவிதை. உயிருக்கான போராட்டத்தில் கையேந்தி உயிர் பிச்சை கேட்கும் அவலம்...

உயிரை உருக்கத் தான் செய்கிறது...

உண்மையிலே..

மிக்க நன்றி, அருணா...

Anonymous said...

மனதைக் கனக்க வைக்கும் துயரம் மிகுந்த கவிதை. பொருத்தமான படமும் மனதில் துயரை நிரந்தரமாக்கிவிட்டுச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

- சாந்தி -

நண்பன் said...

அன்பின் சாந்தி,

உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

ஒரு படைப்பு வாழ்வைப் பிரதிபலிக்கவில்லையென்றால், அது படைப்பாக இருப்பதற்கான பொருள் இல்லை.

அத்தகைய கவிதைகளில் இதுவும் ஒன்று....

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்