நண்பனாக அறிமுகப்படுத்து.....
என் தோழியே
என்ன கோபம் உனக்கு?
ஒன்றிரண்டு மின்னஞ்சல்
தவறியதால்
மௌனப் புறக்கணிப்புகள்.
நீ அறியாததா -
மௌனத்திலே
நேசம் வளர்ப்பவன்
நானென்பதை?
சீண்டி விளையாடும்
சிறுபிள்ளை நட்பல்ல
நமது நட்பு.
இந்த மௌனச் சீண்டல்
புதிது தான்;
புரியவில்லை தான்.
இந்த கோபம் வடிந்து
வண்டல் தங்கும்
நிலங்களில்
புதிதாகப் பயிரிடுவேன்
நமது நட்பை.
எத்தனை
கூட்டத்தின் நடுவேயும்
என் மீது
ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல்
அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக
இருக்கிறேனென்று.
உன் மௌனம் நடுக்குகிறது -
கரை தொடும் சமுத்திரம்
மௌனம் காப்பதில்லையே..?
உன்னைப் பார்த்த இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.
மௌனம் உடை -
என் மௌனங்களோடு
நான் நானாக இருப்பதற்கு.
நட்பாகிய காதலா..
காதலாகிய நட்பா..
குழம்பித் தவிக்கும் கூட்டத்தில்
உன் இணைப் பிறாவும்
ஒன்றென்பதால்
முகவரி அற்றுப் போன
இந்த நட்பை
இனி நான் என்ன செய்வேன்?
இன்று வளர்ந்து நிற்கும்
உன் நிழலுக்கு
சொல்லியிருப்பாயா -
உனக்கு ஒரு அன்பான
தோழன் ஒருவன் உண்டென்று?
அந்தப் பிள்ளை அறியுமா -
பேசி பேசி அறுக்காத
இந்த நண்பனை?
எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?
எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே அறிமுகப்படுத்து.
ஒரு குழந்தையோடு
என் அறிவாற்றல்
ஒத்துப் போகுமாவென
கவலைப்படாதே -
அறிவாற்றல் அற்றுப்போன
நிலையைத் தான்
தேடியலைகிறேன்.
மௌனத்தைப் பேசுபவனிடம்
அறிவின் உச்சம்
அமைதியாகத் தான்
இருக்கும்.
உன்னிடத்தில் வாங்கிய கடன்
நிறைய உண்டு
திருப்பித் தருவதற்கு -
நட்பு, மதிப்பு, மரியாதையுடன்
நீ குழைத்து தந்த
தயிர்சாதமும் தான்.
வாங்கிய கடனின் முதல்
திருப்பப்படாமலே
போய்விடக்கூடாதென்பதால்
உன் மகளிடம் சொல்லிப் போ -
இந்த நண்பனைப் பற்றி;
இந்த நட்பைப் பற்றி.
வாங்கியதை
திருப்பித் தருவானென்று.
4 comments:
அருமையான கவிதை நண்பன்.
நன்றி சிபி.
தொடர்ந்து வாசித்து வாருங்கள்
அன்புடன்
நண்பன்
அருமையான கவிதை. தொடருங்கள் நண்பன்.
நன்றி
சிறில் அலெக்ஸ்...
தொடர்வேன் சிறில். அடிக்கடி வாருங்கள்.
அன்புடன்
நண்பன்
Post a Comment