"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, February 13, 2006

முகமூடி

முகமூடிஅப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை

அன்றொருநாள்
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
ஒரு மிருகம் உறுமிக் கொண்டே
ஜன்னல் கம்பிகளினூடாக
அப்பாவின் அறையில் நுழைந்தது.

முடிநிறைந்த தேகம்.
தள்ளாடும் கால்கள்.
மாமிசமும் புகையும் நாறும் வாய்.
கடுகடுக்கும் சிவப்பு கண்கள்.

அன்றிலிருந்து
அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை.

வாசனைமிக்க சோப்பால்
உடல் நாற்றம் போக்கும்.
நறுமணத் தூவாளையை பீச்சியடிக்கும்
நாகரீக உடையின் மேலே.
பின் எடுத்து மாட்டும்
அப்பாவின் முகத்தை.

சீறி சீறிப் பாயும் -
அம்மாவின் மீது.
என்னை மட்டும் பார்த்து புன்னகைக்கும்
நான் அப்பாவின் அறைக்கு
வெளியே நிற்கும் வரைக்கும்
காலையில் போகும் வேட்டைக்கு -
அலுவலகத்தில் புள்ளிமான்கள்
உண்டாம் ஏராளம்.
எதிர்க்க திராணியற்ற பிராணிகள்..

இரவில் வரும் நேரம்
எனக்குத் தெரியும்
என்னை அணைத்துப் படுத்திருக்கும்
அம்மா
தன் ஆத்மாவை என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள் -
முகமூடியை கழற்றி வைத்த
அப்பாவின் அறைக்கு.

6 comments:

அழகு said...

கரும் புகை வெளித்தெரியாது
கனன்று கொண்டிருக்கிறது.
வெடிக்கும் ஒருநாள்
சிறு எரிமலை.

***

உள்ளத்தை உலுக்கும் பதிவு.

நண்பன் said...

பிரதீப் has left a new comment on your post "முகமூடி":

உலுக்கி விட்ட பார்வை.
சின்னஞ்சிறு வயதில் உலகறிவிக்கும் தந்தை இப்படியாக இருந்தால் பின்னாளில் குழந்தையின் மனநிலை காலமுள்ள வரை கசப்புத்தான்.

பாலகுமாரனின் சில சுயகுறிப்புகள் (அம்மாவும் பத்து கட்டுரைகளும்) மட்டுமே என்னிடம் உங்கள் கவிதை போன்ற பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

(ஏனோ, பிரச்சினை பண்ணுகிறது. அதனால் தான் இந்த வெட்டி ஒட்டுதல். பிரதீப் மன்னிக்கவும். அன்புடன் நண்பன்)

நண்பன் said...

நன்றி அழகு,

முதன்முதலாக உங்களுடன் உண்டான இந்த சந்திப்பு இனிதாகத் தொடரட்டும்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

பிரதீப்,

இந்தக் கவிதையை முன்னரே - அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னரே நான் எழுதி தமிழ் மன்றத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

உங்களுக்கு மிக்க நன்றி.

முன்னர் ஒருமுறை, ஒருவர் - இறந்த காலத்திற்கு வயதில்லை..என்ற என் கதையை மாலன் எழுதிய ஒரு கதையுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார்.

இப்பொழுது மீண்டும் ஒரு ஒப்பீடு - பாலகுமாரனுடன்.

நன்றி.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்குப் பாத்திரமாக என்றுமே இருக்க வேண்டுமே என்பது தான் என்னுடைய கவலை...

இளவஞ்சி said...

நண்பன்,

//அம்மா
தன் ஆத்மாவை என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள்//

அற்புதம்!!!

நண்பன் said...

மிக்க நன்றி

இளவஞ்சி.

சில சமயங்களில் இந்த மாதிரியான அற்புதமான வரிகள் அமைந்து விடுகின்றன.

நன்றி,

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்