"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, February 28, 2006

அடங்க மறு:::

அடங்க மறு:::
***
திருமா துபாய்க்கு வந்த பொழுது ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் (24/2/06) வாசிக்கப்பட்ட கவிதை.
***
பிச்சைப் பாத்திரத்தில்
பிச்சையிட குனிந்தவன்
இன்னமும் நிமிரவேயில்லை
பிச்சையெடுத்தவன்
ஏறிவிட்டான் முதுகில்.

சுமையென தெரியாமல்
சுமப்பதையே வாழ்வாக்கி
ஒவ்வொரு குழந்தையுடனும்
பிறப்பிக்கிறோம் இன்றும்
சுமைகளை.

எலும்புக் குருத்துகளில்
துளையிட்டு
ரத்த நாளங்களில்
அட்டையாய் ஒட்டி
சிந்தனை செல்களில்
எண்ணங்களாய் மாறி
அடிமையானதை அறிந்தோமா?

நம் எண்ணங்களைக் கொண்டே
நம்மை சொல்ல வைக்க முயற்சிப்பான்
அடிமையென்று.
எதிர்ப்பவர்களுக்குக் காட்டுவான்
காலம் கடந்த சில வேதங்களின்
அர்த்தமற்ற வசனங்களை.

கொஞ்சம் மொழி பெயர்த்தால்
கிழிகிறது நாகரீகம்
நால்வரிடம் கெஞ்சிக் கூத்தாடி
கேட்டுப் பெற வேண்டியிருக்கிறது
தன் மனைவியைக் கூட.
ஒதுக்கி வைப்பதில்
வாழ்வின் பாதி அங்கம்
கூட தப்பவில்லை

ஆண்டவன் பெயரினால்
ஆட்டிப் படைக்க
அவன் படைத்த பிதற்றல்களை
எளிதாக ஏற்றுக் கொண்டார்கள்
தூரதூரமாய் நின்று வணங்கி.
நடுகற்களில் சுமை இறக்கி
இளைப்பாறும் பொழுது கூட
நினைவிற்கு வருவதில்லை
முன்னால் வாழ்ந்து போன
மனிதர்கள் மட்டுமல்ல -
தானமளித்த வாழ்க்கையும் தான்.

நல்லவேளையாக
எழுதப்படாத விதிகளில்
முடங்கிக் கிடந்த மனிதர்கள்
மறக்கவில்லை
தாய் புகட்டிய மொழியை.

சாம்பலினின்றும்
உயிர்த்தெழும் பறவையாக
இன்று
எழுந்து நிற்கிறதொரு குரல்
உரத்து -

அடங்க மறு, அத்து மீறு.

இன்று அடங்க மறுப்பதால்
இன்று அத்து மீற முடிவதால்
அஞ்சியவர்கள் மாற்றுகின்றனர்
யுத்தவிதிகளை.

எதிரே நிற்பவன் எதிரியல்ல
சகோதரனே.
அற்ப அங்கீகாரத்திற்கு
ஆசைப்பட்டவன் கைகளில்
அடுத்தவர் மீது
வாரி வீச மீண்டும் சேறு.
தொழில் அதே தான் -
பெயர் மட்டும்
மாற்றப்பட்டிருக்கிறது
அறிவுஜீவியென.

இந்த அறிவுகொழுந்துகளைத்
தூண்டி விடுபவன்
அறிவித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே நடுவனாக.

தன் நச்சுத்தலையை
நடுநிலையாகப் பாசாங்கு செய்யும்
நரம்பையே நூலாய் அணிந்த
நண்பர்களுக்குப் பதில் சொல் -
இப்படி -

அடங்க மறு அத்து மீறு

எங்கும் யாரிடமும்
படுத்தெழும் உரிமை கோரும்
கருத்து சுதந்திரத்திடம்.
அடங்க மறு அத்து மீறு

பிறப்பினால் தகுதி குறித்து
கேள்வி எழுப்பும்
தகுதியற்றவனிடத்தில்.
அடங்க மறு அத்து மீறு

அடுத்தவர் கணக்கில்
சிலபல இலவசங்களைத் தந்து
கடமை முடித்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமையிடம் கூடத் தான்
அடங்க மறு அத்து மீறு.

6 comments:

Anonymous said...

நல்ல கவிதை நன்றி.

Pot"tea" kadai said...

திருமாவிடம் எனக்கு பிடித்ததே இவ்வரிகள் தாம்!

அடங்க மறு, அத்து மீறு, புரட்சி செய்...

உங்களது கவிதையும் எழுச்சியாக உள்ளது...

பின்குறிப்பு:
கடைப் பக்கம் வாங்க...உங்களை கோர்த்து விட்டிருக்கிறேன்! :-)

நண்பன் said...

செல்வன்,

மிக்க நன்றி தங்கள் அழைப்பிற்கு.

என்றாலும் காலம் கடந்த தங்கள் அழைப்பை என்ன செய்வது?

அது போகட்டும். நேரத்தே கேட்டிருந்தாலும் நான் நடுநிலைமை தான் வகித்திருப்பேன்.

என்றாலும், இது என்ன விளையாட்டு என்று சொல்லாமலே ஓட்டு கேட்டால் எப்படி?

வெற்றி பெற வாழ்த்துகள்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அப்படிப் போடு,

மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

pot''tea''kadai,

மிக்க நன்றி.

திருமா கூறிய முழு வரிகள்::

அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி.

இந்த வரிகள் தான் தலித்துகளை இன்று ஓரளவிற்காவது வலிமை உடையவர்களாக ஆக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

அன்புடன்
நண்பன்

Anonymous said...

அன்புள்ள நண்பனுக்கு,
இன்றுதான் வேறு எதையோ தேடப்போக, மூலிகைசெடியாய் உங்கள் பக்க்த்தை பார்க்க நேர்ந்தேன். சுதந்திர இந்தியாவில் எத்தனையோ தேர்தல்கள் வந்தாலும், எத்தனையோ தலித் இயக்கங்கள் இருந்தாலும், முதல் முறையாக அரசியல் (இவ்வளவு தொகுதியில்) அங்கீகாரம் கிடைத்ததற்கு திருமாவிற்கு தலித் சமுதாயமே நன்றி கடன் பட்டிருக்கிறது. இதற்கு பின்னால் அவரின் கடுமையான உழைப்பு தெரிகிறது. திருமாவை அழைத்து முதல் கூட்டணி கட்சியாக சேர்த்து கொடுத்த ஒரே காரணத்திற்காக செயலலிதாவிற்கும் நன்றி. (ஆனால் இன்னமும் சில இடங்களில் மற்ற சாதி இந்துக்கள் ஒட்டு விழாதென்பதால், திருமாவை மேடையேற்றவேண்டாமென்று செய்தி).
மேலும் சந்திக்கலாம் வரும் காலங்க்ளில்,
அன்புடன்
பூமி

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்