தொலைந்த கனவு
தொலைந்த கனவு
தூக்கம் சிதைகின்றதொரு
அதிகாலைப் பொழுதில்
இருப்பு நடுக்கமுறுகிறது.
நீரில் விழுந்த மசி கரைதலில்
வண்ணக் கோலங்கள்
மேல் கீழ் நீள அகலமாகி
முப்பரிமாண சித்திரமாக
மௌனமாய் கரைந்து
சிதைகிறது - கனவும்
வடிவமற்ற பிம்ப சிதைதலில்
மிரண்டொடுங்கும் விழித்தல்
தொலைந்த கனவைத் தேடுகிறது
பரிகாரம் செய்துகொள்ள
இருண்ட குகையில் வாழும்
அரூப சொப்பனம் பிடிக்க
ஏறுகிறது சிறகுகள் முளைத்த
மீனின் முதுகில்.
தூக்கம் தொலைத்த கனவு
தேடப்படுகிறது
பகலின் விழிப்புகளில்
கை கழுத்து இடுப்புகளில்
ஏறிக்கொண்டேயிருக்கும் கயிறுகளில்
அச்சமின்மை
அடகுவைக்கப்பட்ட பின்பு.
காயம் நிறைந்து கிடக்கும்
கருமேகம்
தொடர்ந்த உருமாற்றத்தில்
வாய் பிளந்து அலைகிறது
இவனது சிறகு முளைத்த
மீனை விழுங்கி
அடிவயிற்றில் குளிர்ந்திருக்கும்
நீரோடையில் விட்டுக் கொள்ள
இதேதுமறியா கனவுகளற்றவனுக்கோ
நேற்றைப் போல நகர்கிறது
இன்றைய தினம்.
No comments:
Post a Comment