"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, July 27, 2007

நானும் மாறிக் கொண்டு தானிருக்கிறேன்.
தேய்ந்து நீளும் காலம் தந்த
நீண்ட இடைவெளிக்குள்
வீழ்ந்து விட்டது
பரிசாக நீ தந்த காதல்.


உன்னிடத்தில் பரிமாறிக் கொண்ட
உனக்கான மொழியும்
தடுமாற்றத்தில் மறந்துவிட்டது.


சட்டங்களில் மாட்டி
ஆணி அடித்து சுவரில் தொங்கவிட்டிருந்தால்
பாதுகாப்பாகவிருந்திருக்கும்.


அவ்வப்பொழுது பார்த்துப் பார்த்து
நினைவூட்டிக் கொண்டிருந்தால்
நீயும் நினைவில் நீங்காதிருந்திருப்பாய்.


இன்று பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட
உணவுச் சிதறலாய்
நெருடிக் கொண்டிருந்திருக்க மாட்டாய்.

என்றுமே விடுதலையற்று
உன்னைத் தழுவிக் கிடப்பது
சுகமாகத் தானிருக்குமென்றெண்ணி
இன்னொருத்தியின் உடல்வடிவினுள்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கும்
அவலம் தந்திருக்கமாட்டாய்.

என்ன செய்ய?

உன் படத்தைக் காட்டி வைத்தால்
உன்னைப் போலாக முயற்சித்து
தன் சுயம் அழித்துக் கொள்பவளாக
இன்னொருத்தி வந்துவிட்டாள்.என்னைப் போலவே
என்னுள்ளே யாரையாவது
தேடிக் கொண்டிருப்பாளோ என்னவோ
சுயம் அழித்தொழித்து
காக்கப்படவேண்டியது தான் கற்பென்றால்,
விடுங்கள், சனியன் - தொலைந்து ஒழியட்டும்.


நானும் மாறிக் கொண்டு தானிருக்கிறேன்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்