"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, September 01, 2007

ஓவியம்
வண்ணங்கள் இறைக்கப்பட்ட ஓவியத்தில்
உன்னை அமர்த்தியிருக்கிறான் அவன்
எந்த வண்ணத்தில் உன்னை வரைவதென
ஒரு பெரும்யுத்தம் நிகழ்த்தியிருக்க வேண்டும்

வண்ணங்கள் காயாத தூரிகையும்
ஆடைகளற்ற முதுகில் பூசப்படக் காத்திருக்கும்
நிறக்கலவைகளும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன
இன்னமுமெந்த முடிவாக்கத்தையும்
அவன் எய்திருக்கவில்லையென

வண்ணக்கலவைகளில் பரிட்சார்த்தங்களை
முயற்சித்துக் கொண்டேயிருப்பவனுக்காகக் காத்திருக்கிறது
எந்த உத்தேசங்களுமற்று
முதுகில் இழுக்கப்பட்ட முடிவற்ற கோடுகளுடன்
ஒவியமொன்றின் தொடக்கம்

கோடுகள் படர்ந்து பரவி
தோளின் மீதாக திரும்பி நோக்கும் முகத்துடன்
பிம்பமாயெழுந்து ஓவியனின் கலையாக
நீ நிறுவப்படுகையில்
உனதான அடையாளங்கள் மறக்கப்படும்

பல வேளைகளில் ஆடை களைந்து
தூரிகையோட்டங்களுக்குக் காத்திருந்து களைத்துப் போன
உனது நிர்வாணத்திற்கு கூலி தரப்பட்டு
உனது அடையாளங்கள் பதியப்படாமலே திருப்பப்படலாம்.

தூரிகையும் இயக்கிய கைகளும் எதுவுமற்று
முடங்கிக் கிடக்கையில்
ஓவியம் உயிருறுவது
உன்னில் எதைக் காண்பதென்ற
உக்கிரத் தேடுதலுக்கிடையில் நிகழும்
ஒரு கண பொறியில் வெடிக்கலாம்

காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்
தீ நாவுகளின் வீச்சைப் போன்று
அங்குமிங்கும் விரைந்தோடும் தூரிகையினின்று வழியும்
வண்ணங்களில் வரையப்பட்ட உன்னுடல்
ஓவியமாக பேசப்படலாம் ஓவியனுடன்

ஆடை மூடிய நீ மட்டும் யாராலும் அறியப்படாதவளாய்
எங்கேனுமொரு வெளியில் அலைந்து கொண்டிருக்கலாம்
ஓவியம் நீ என்றுன்னை உணரா மனிதர்கள் மத்தியில்

2 comments:

ஜோதிரானலிங்கம் said...

அற்புதமான கவிதை

நண்பன் said...

நன்றி, ஜோதிரானலிங்கம்...

அன்புடன்

நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்