"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, November 04, 2008

ஒபாமா Vs கெய்ன் - The Great Little White Lies Will Decide

ஒபாமாவும், கெய்னும்...
ஒரு வழியாக தேர்தல் நாளைத் தொட்டு விட்டார்கள்.

எங்கெங்கும் யுத்தங்கள், பொருளாதார வீழ்ச்சி, இன்னமும் புதிய யுத்தத்திற்கு முயற்சிகள் என எட்டு ஆண்டுகள் தொடர்ந்து அவநம்பிக்கை கொண்டலையும் ஒரு அரசையே புஷ்ஷினால் மக்களுக்குத் தர முடிந்தது.

தீவிரவாத ஒழிப்பு என்று உலகெங்கும் வேட்டையாடுதலை ஒரு வெறியுடன் தனது மற்றைய மேலை நாட்டு சகாக்களுடன் தொடர்ந்து நடத்தினார். இராக்கின் மீதான யுத்தத்திற்காக தனது பத்திரிக்கையுலக நண்பர்களுடன், பல பொய்களை பிரச்சாரம் செய்தார். இப்பொழுது கூலிப்படைகளை அனுப்பி, அங்கு அமைதியை நிலைநாட்டுகிறேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார். அணுகுண்டு தயாரிக்கப் போகிறார்கள் என அடுத்து வடகொரியா, இரான் என தனது பார்வைகளை விரிவு படுத்தினார்.

ஆக தனது மொத்த ஆட்சிக்காலத்தையும், அமெரிக்கர்களின் நலனை விட, சில நிறுவன ஆதாயங்களுக்காக அர்ப்பணித்தார். பொருளாதார வீழ்ச்சியின் அவலத்தில் நாட்டை மொத்தமாக சிக்க வைத்த பின்னர், அவரது காலமும் முடிவடைகிறது.

புதிதாக அதிபர்கள் தேர்தல்.

மிக்க எதிர்பார்ப்புள்ள தேர்தல்.

மாற்றங்கள் வேண்டும் என தனது வாதங்களை முன் வைக்கிறார் - ஒபாமா.

மாற்றங்கள் தேவை தான் என்பதை கெய்ன் ஆதரிக்கிறார்.

ஒபாமாவின் கோஷம் - புஷ் காலத்தைய தவறுதல்களிலிருந்து ஒரு மாற்றம் என்ற வகையில், பொருள் பொதிந்தது. ஆனால், கெய்ன் எதைக் கொண்டு கோஷம் போடுகிறார்? புஷ்ஷின் பக்கம் இருந்தவர். அவரது ஆதரவாளார். இன்று மாற்றங்கள் தேவை என்று குரல் எழுப்புவதை அன்றே செய்திருக்கலாமே? அவரது போதாத காலம், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தினால், பாதிப்படைந்த, வீட்டு உடைமையாளர்களுக்காக எதையும் செய்யவில்லை புஷ் என்ற கருத்தை ஆமோதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

கெய்ன் பேசும் மாற்றங்கள் அர்த்தமற்றவை.

இன்றைய சூழலில் - வெற்றி பெறக் கூடிய சாத்தியம் ஒபாமாவிற்கே இருக்கிறது. ஆனாலும், வெற்றி பெறுவாரா? கணிப்பில் 51% ஒபாமாவிற்கு ஆதரவாக உள்ளது.

தீவிரவாதம் ஒன்றே தனது இலக்கு என ஆட்சிபுரிந்த புஷ், அதற்கான தீர்வு எதுவுமின்றியே அழித்து ஒழித்து விட முடியும் என நம்பினார். அவரால், முஷாரஃப் கெட்டது தான் மிச்சம். புஷ் தனது இருண்ட ஆட்சிக்காலம் முடிந்து வெளியேறும் சமயத்தில், எது முக்கியமான பிரச்சினை, எதை மனதில் கொண்டு ஓட்டளிப்பீர்கள் என வாக்கெடுத்ததில், முதலில் இருப்பது - பொருளாதாரம் - 51%. அடுத்து இராக், health care, தீவிரவாதம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் நான்காவது இடத்தில் தான் இருக்கிறது. 11% முக்கியத்துவம் மட்டுமே பெற்று. இறுதியாக, புஷ்ஷின் மொத்த ஆட்சியையும் எடை போட இந்தக் கணிப்பே போதுமானது. தீவிரவாதம் குறித்த புஷ்ஷின் போக்கு மொத்த ஆதரவையுமே இழந்திருக்கிறது. சரியான கவனம் கொண்டு, புஷ், தனது வெளியுறவு கொள்கைகளை அமைத்துக் கொண்டிருந்தாலே, பாதி தீவிரவாதம் ஒழிந்து போயிருந்திருக்கும். ஆனால், பாவம், அவர் யுத்தங்கள் நடத்தி சில நண்பர்களின் பணப்பெட்டியை நிரப்பினாலே போதுமென்று நினைத்து விட்டார் போலும்.

எல்லாமும் சாதகமாக இருந்த போதிலும், ஏன் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக் கணை எழுகிறது?

ஒபாமா is a radical என்று கிட்டத்தட்ட அவரை ஒரு தீவிரவாதியாகவே சித்தரிக்க முனைந்தனர். எதிர் அணியினர் மட்டுமல்ல - அவ்ரது அணியிலிருந்தே ஹில்லாரி க்ளிண்டன் தரப்பிலிருந்து, அவர் பாரம்பரிய ஆடைகள் அணிந்த புகைப்படங்களை கசிய விட்டனர். அவரது தந்தை ஒரு இஸ்லாமியர் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.


கெய்ன் தனது துணையாளாராக சாரா பாலினைத் தேர்ந்தெடுத்த பொழுது, ஒரு கவர்ச்சிப் புயலே சுழன்றாடியது. ஆனால், தனது தேர்தல் பிரச்சாரங்களில் பலமுறை சறுக்கினார். அவர் பலமா, சுமையா கெய்னுக்கு என விவாதம் போகக் கூடிய அளவிற்கு பின்னர் கீழிறங்கி விட்டார்.

இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி - ஒபாமாவின் அத்தை (?) அல்லது சித்தி (?) சட்டத்திற்குப் புறம்பாக தங்கி இருக்கிறார் என ஊடக ஜல்லிகள். ஒபாமாவைப் பற்றிய எதிர்மறை தகவல்களும் செய்திகளும் தான் எங்கும் ஊடக்த்தால் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் கூட ஒபாமா எளிதாக தாண்டிவிட்டார். பலவற்றை மௌனமாக ஒதுக்கித் தள்ளினார். மக்களும் அவற்றை ஏற்றுக் கொண்டனர். கணிப்பில் அவர் 51 விகிதத்திலே இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். அனைத்து கணிப்புகளிலும்.

எவராலும் எளிதாகச் சொல்ல முடியும் - ஒபாமா வென்று விடுவார் என்று.

என்றாலும், சில 'surprises' இருக்கக்கூடும் என்கிறார் கெய்ன். அமெரிக்கத் தேர்தலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் - ஒன்றைச் சொல்கின்றனர். The little White lies. இது தான் இறுதியாக முடிவைத் தீர்மானிக்கும் என்கின்றனர்.

அதென்ன white lies?

வேறொன்றுமில்லை. வெள்ளையர்கள் சொல்லும் சின்ன, குட்டிப் பொய். அவ்வளவே. கருத்துக் கணிப்பில், தங்கள் கட்சி சார்பாக ஓட்டளிப்போம் என்று கூறுபவர்கள், ஓட்டைக் குத்தும் பொழுது, தங்களது பாசப்பிணைப்பினால், வெள்ளையர்களுக்கே குத்தி விடுவார்கள். கறுப்பு நிறத்தவரை அங்கீகரிக்க மாட்டார்கள். அதனால், ஒபாமாவின் வெற்றியை சில 'surprise'கள் தகர்த்து விடக் கூடுமென்கின்றனர்.

இருக்கக் கூடும். தங்களது மனசாட்சிக்கு ஆறுதல் சொல்ல வாகாக அவர்கள் சுட்டிக் காட்டக் கூடும் - சாரா பாலினை.

'என்ன பண்றதுப்பா, ஒரு பெண்ணுக்கும் வாய்ப்பு கொடுக்கனுமில்லையா, அதனால், சாரா பாலினுக்கு ஓட்டு போடுவதற்காக, கெய்னுக்கும் போட வேண்டியதாயிற்று' என சொல்லி, தங்களை சமாதானப்படுத்திக் கொண்டே, தங்கள் வெள்ளைப் பொய்களை அரங்கேற்றுவர் என்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஒபாமா கூட, ஹில்லாரியை தனது துணையாளாராக வைத்திருக்க வேண்டும் - அவர் தவறு செய்து விட்டார் என்கின்றனர் சில பார்வையாளர்கள்.

எந்த அளவிற்கு இது உண்மையாகப் போகிறது என்பதை தேர்தல் கழிந்த நாளன்று தான் சொல்ல முடியும்.

வெற்றி பெறுவதற்குரிய அனைத்து தகுதிகளும், காரணிகளும் நிரம்பி வழிகிறது - ஒபாமாவிடம். அவர் தோற்பதாக இருந்தால், ஒன்றே தான் காரணமாக அமைய முடியும் - The Great Little Lies.

அதையும் மீறி அவர் வெற்றி பெற வாழ்த்துவோம் - ஒரு முழுமையான மாற்றத்தைத் தருவார் என்ற நம்பிக்கையினால்...

2 comments:

சுல்தான் said...

தற்போதைய நிலையில் அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மற்ற நாடுகளை சுரண்டித்தான் வாழ முடியும் இல்லையா?.
இவர்களில் யார் வந்தால் இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

நண்பன் said...

அன்பின் சுல்தான்,

மாற்றங்களைத் தருவேன் என்று சொல்லித் தான் ஒபாமா, தேர்தலை எதிர் கொண்டார். கெய்ன் கூட, மாற்றங்களைப் பற்றித் தான் பேசினார்.

மாற்றங்கள் என்று இருவருமே கிட்டத்தட்ட புஷ்ஷின் உதவாக்கரை அரசிலிருந்து ஒரு மாற்றம் தேவை என்பதையே குறிப்பிட்டனர் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.

இந்த தேர்தலின் பயன்பாடு - புஷ்ஷின் கேவலமான அணுகுமுறையை மக்கள் எத்தனை வெறுத்திருக்கின்றனர் என்பதை உலகிற்குப் புரிய வைத்தது.

மற்றபடி, எந்த ஒரு நாடும் தன் நலனைத் தான் முன்னிறுத்தும். அந்த வகையில், ஒபாமாவும் அதைச் செய்தே தீர வேண்டும். ஆனால், அவ்வாறு தான் முன்னிறுத்தும் நலன், பிற இனங்களின் நலனை அழித்தொழித்து, அதிலிருந்து பெறப்படுவதாக அல்லாமல், நியாயமான அணுகு முறையில் அமைவதாக இருக்க வேண்டும்.

இத்தனை செய்ய முடிந்தாலே, ஒபாமா வெற்றி பெற்றுவிட்டார் என்றே அர்த்தமாகும்.

இன்று தீர்மானிக்கப்பட்டது - கறுப்பர், வெள்ளையர் என்ற பேதங்களைவிட, தங்களுக்கு நல்ல அரசைத் தரக்கூடிய சாத்தியதை உள்ள ஒரு வேட்பாளரே முக்கியம் என்று.

வெள்ளைப் பொய்கள் நிகழவில்லை என்பது மிக்க மகிழ்ச்சியே.

நன்றி, சுல்தான்...

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்