அன்பானவளுக்காக
1.
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுக்குள்
மற்றவர்
உற்று நோக்குவதல்ல........
அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே
காதல்........
2.
என்
மிகச்சிறந்த
கவிதைகளை
நான் என்றுமே
வெளியிடப் போவதில்லை...
அவை
உனக்காக எழுதப்பட்ட
காதல் கடிதங்கள்....
3.
பல ஆண்டுகளாக
எனக்காக
கவிதையே எழுதவில்லையே
என்று அங்கலாய்க்கிறாய் நீ...
இத்தனை நாட்களும்
உன்னோடு
நான் பேசிய பேச்சுக்களையெல்லாம்
என்னவாக நினைத்தாய்?
4.
உனக்கு
கொலுசு அணிந்து
அழகு பார்க்க
மனம் துடிக்கிறது.
பின்னர்
நீ பேசுவதில்
கவனம் கொள்ள
இயலாதென்பதால்
வாங்கிய கொலுசுகள்
இன்றும் சிணுங்குகின்றன
என் மனதினுள்...
5.
சொற்களில்
புதைந்த காதலை
தேடச் சொல்லி
கவிதை தருவேன்......
நீ
காதலைக் காட்டி
சொற்களை
தேடச் சொல்வாய்......
வழக்கம்போல
இன்றும்
எனக்கு
தோல்வி தான்.....
6.
உன்
காதலுக்கான
காத்திருப்பிற்கு
காலக்கெடுவுகள்
எல்லைகள்
விதிக்க முடியாது...
மரணம் கூட
உன் காதல்முன்
வெறும் அரைப்புள்ளி தான்...
7.
வியப்பாக இருக்கிறது
முக்கடல் கூடும்
சங்கமம்
எத்தனை சிறியதென!!!
நீயும் நானும்
இணைந்து நின்று
கடல் பார்த்தபொழுது
8.
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...
ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...
அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...
ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...
அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...
விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...
காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே இருந்து விடேன் -
உலகின் அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?
9.
உனக்கான
என் காத்திருத்தலில்
காலம் வீணாகியது...
எனக்கான
உன் காத்திருத்தலிலும்
காலம் வீணாகியது...
இன்று
காலம் காத்திருக்கிறது -
நமக்கான காதலை
கையில் வைத்துக் கொண்டு ....
10.
என்றோ எழுதியதை
எடுத்துப் படிக்கும்
இந்தக் கணத்தில் -
இந்த சிறுபிள்ளைத்தனத்தை தாண்டி
எத்தனை தூரம்
வந்து விட்டோமென்றெண்ணி
வியர்க்கையில்
மீண்டும்
அந்த சிறுபிள்ளைகளின்
காலத்திற்குள் பயணப்பட
புகைப்படத் தொகுப்புக்குள்ளே
முகம் புதைத்து கிட ---
அன்பானவளே
தலையில் நரைத்திருக்கும்
அந்த ஒற்றை முடியைப்
பிடுங்கி எறிந்த பின்.
4 comments:
என்றும் எந்தன் இன்பத் தமிழினமே!
எழுச்சி கொண்டே நீபுறப் படுவாய்!
இன்றுவரை ஈழத்தில் எம்மினம் ஆற்றுகின்ற
ஏற்றமிகு புரட்சிதனை எண்ணிப் பார்த்திடுவாய்!
தென்றலாள் தமிழன்னை தரணியிலே தலைநிமிர
தேன்தமிழ் மக்கள் திக்கெலாம் கூடிநின்று
ஒன்றிணைந்து ஒரேகுரலில் உறுதிமொழி எடுத்தே
உலகே வியந்திட அலையெனத் திரண்டார்!
காலையிற் கண்விழித்துக் கைத்தொலை பேசியில்
கடல்கடந்த விடயங்கள் கலந்துரை யாடியே
நாலுவேளை நாவினுக்கு நல்சுவை விருந்தொடு
நளினமா யுடையணிந்து தளர்நடை பயின்று
சாலையோரம் மகிழுந்தில் சற்றே பவனிவந்து
சந்திகளிற் கூடிநின்று தர்க்கம் புரியும்நாம்
காலநேரம் கருதியெம் கவனத்தைத் திசைதிருப்பிக்
கண்மணியாம் திருநாட்டில் செலுத்த விழைந்திடுவோம்!
ஏடுகளைப் புரட்டிப்பார் எழில்மிகு காட்சிகள்
இணையிலா எம்மினத்தின் எழில்மிகு தோற்றங்கள்
கூடியே திரண்டுளார் குவலயத்தில் யார்க்குமிலா
குணம்படைத் தோரிவர் குன்றேறி நின்றோர்பார்!
பேடொன்று முட்டைதனை இட்டவுடன் தானங்கு
பெரிதாகக் குரலிட்டு கூவுதல் போல்நாமும்
சாடையாய்ச் சிறுதொகை தாமிங்கு வழங்கிச்
சாதித்தோம் என்றே சாற்றுதல்தான் நன்றோ?
தமிழன்னை சிறைமீட்கத் தன்னுயிர் நீத்த
தன்னிகரில் திலீபனின் தூய திங்களிது!
உமிழ்நீர் வற்றியே உலர்ந்து உலகறிய
உயிர்நீத்த அளப்பரிய கொடைதனை அறிவாயே!
தமக்கென வாழாத் தமிழுக்காய் நாட்டிற்காய்த்
தம்முயி ரைத்தற் கொடையாய்த் தானீந்தும்
எமக்காய் இவ்வுலக இன்பங்கள் துறந்த
எண்ணிலா மாவீரர் தீரர்கள் எத்தனைபேர்?
பொங்குதமிழ் நிகழ்ச்சிதனிற் பூங்காவிற் கூடினோம்
பொய்க்கவில்லை தம்பிபார்த் தீபன் புகன்றவுரை!
எங்குமுள்ள தமிழரெலாம் ஒன்றிணைந்து கூவுகின்றாh
எதிரியின் முகத்திரை அழித்திட முனைகின்றார்!
கங்குலது கழிந்திட வேண்டுமெனச் சீறியே
கடல்கடந்த நாட்டினிலும் நம்தமிழன் கூடுகின்றான்
சங்கமித்துச் சாடுகின்றான் சிங்களத்தின் சீரற்ற
செயல்களைத் தேசங்கள் தாமறிந் திடவே!
செந்தமிழர் நாட்டினிலே சேனையென ஒன்றிணைந்தார்
சேதிதா னறிவாயோ துணைப்படை யெழுச்சி!
பைந்தமிழர் பயில்கின்றார் பகைதனை விரட்டவே
பாசறை புகுந்திடப் பண்புசால் பெண்களும்
வந்தோரை வரவேற்கும் வண்டமிழ் ஈழத்தில்
வளமான மண்ணதிலே வானம திர்ந்திட
முந்தி விழுந்து முதியோரும் இளையோரும்
மூச்சாய்ப் பயிற்சிதனில் முனைந்து நிற்கின்றார்!
யாழ்நகரில் நேற்றிருந்த பொங்குதமிழ் அறிவாயா?
யாப்புறுத்தி முழங்கினார்! யாதுமே செய்யிலாக்
காழ்ப்புடன் சிங்களம் கலங்குதல் காண்பாயவர்
கைகட்டி வாய்பொத்தும் காலம் தூரமில்லை!.
சூழ்ச்சிதான் புரிந்தார் சூதினாலவர் தொலைந்தார்
சூரியத் தலைவனின் சுடரினிற் சாய்வார்!
தாழ்ச்சியுமவர்க் கேயன்றித் தமிழனுக் கல்லவே
தங்கத் தமிழன்னை தவவலிமை அறிவாயே!
ஆதலின் புறப்படுவாய் அன்புடைத் தமிழா!
அன்னிய நாடுகளின் அறியாமை நீக்கிடவே
ஈதலில் ஒப்பிலா எம்தலைவன் உள்ளவரை
எம்மினம் அஞ்சாது இம்மியும் அசையாது
மோதலில், வென்றவர்நாம் மூத்த இனமெனவும்
முன்மொழிந்து நிற்போம். முட்டுக்கள் நீக்கெனச்
சாதலிலும் இறுதியாய்த் தமிழீழமே மூச்செனச்
சாற்றியே அவர்பால் சத்தியம் செய்வோம்!
ஐப்பசித் திங்களிது அளவான குளிர்காலம்
ஐ.நா சபைக்கோர் அன்பான வேண்டுகோள்
கைப்பட எழுதிநாம் கடுகியே அனுப்புவோம்!
காரணம் தடைக் கெதுவெனக் கேட்போம்!
எப்பகையும் எமக்கில்லை எவருக்கும் தீயரில்லை
உட்பகை தாம்புரிந்த உண்மைதனைப் புரியாது
தப்பாக எம்மீது சாற்றிடும் பொய்யுரையைத்
தகர்த்திடக் கூடுவோம் பூங்காவிற் பேசுவோம்!
பி.இரயாகரன்
எத்தனை இனிய நீண்ட கவிதை..
ஆனால் இதை எதற்காக முகவரி தராமல் எழுதிச் சென்றீர்கள் என்று புரியவில்லை.
என்றாலும் உங்கள் போராட்டங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும் என்று மனதார விரும்பும், வாழ்த்தும்,
நண்பன்.
Kavithaikal mazaith thodarnthu pozhiyattum!
மிக்க நன்றி - ஹமீத் அப்துல்லா....
Post a Comment