நிழல்கள்.
நிழல்கள்.
***
1.
உன் தாவணி
பிடித்து
நீ தவிர்க்க நினைத்த
வெய்யில்
உன் கைகளை
மாலையாக்குகிறது
என் நிழலுக்கு....
***
2.
மாலை நேர
இருட்டை விரட்ட
சன்னல் கதவுகளைத் திறந்தேன்.
வெளிச்சமாக உள்ளே
நுழைந்தது
மாடியில் பாடம் படிக்கும்
உன் நிழல்.....
***
3.
நிழல்கள் மெலிந்து போனது -
இலையுதிர் காலத்தில்
மொட்டை மரம்.
***
4.
மழை ஓய்ந்த நேரத்து
வெய்யிலில்
சூடாக என் தேகம்.
எனக்கும் சேர்த்து
நடுங்குகிறது
ஓடும் நீரில்
என் நிழல்....
***
5.
எப்போதும்
என்னை ஒட்டிக் கொண்டிருக்கும்
நிழலே
நீ எங்கே தூங்குவாய்?
என் படுக்கையின் கீழா?
***
6.
என்னைப்
புதைக்க
இருளிலே
தூக்கிச் செல்லுங்கள்.
என் நிழலுக்குத்
தெரிய வேண்டாம்
இனி
ஒருபோதும் பிறப்பில்லை
அதற்கென்று.........
***
7.
விறகு கட்டைகள்
அடுக்கி
துணி போர்த்து
நீயும் நானும்
கட்டிய வீட்டின்
நிழல்
மொட்டை மாடியில்
இன்னமும் இருக்கிறது -
ஒதுங்க ஆள் இல்லாமல்.
***
8.
நீயும் நானும்
தட்டுத் தடுமாறி
ஒரு குடையினுள்
ஒட்டிக் கொள்ள
தடுமாறுகையில்
பிணக்கில்லாமல்
ஒன்றாகிப் போயிருந்தது
நம் நிழல்கள்.....
***
9.
முட்டாள் நிழலே!
எனக்கே இடமில்லாத
அவள் பிடிக்கும்
குடையினுள்
நீ ஏன் நுழைய
முயற்சிக்கிறாய்?
***
10.
எழுந்து நிற்கும்
ஒவ்வொரு பொருளோடும்
ஒட்டுதல்.
ஆன்மாவோடு
அலையும்
மனிதனை மட்டுமல்ல -
ஜடத்தையும் கூட
அண்டி நிற்றல்.
எஜமானனின்
அத்தனை பராக்கிரமத்துக்கும்
கொடுப்பது,
எல்லோருக்கும் போல
ஒரு புறகோட்டு வடிவம்.
ஒரு துண்டு வெளிச்சம் -
தீக்குச்சி முனை
அண்ட வெளியின்
அணு உமிழல்
ஒரு கீற்று வெளிச்சம் -
ஒரு துண்டு வெளிச்சம்
வழி மறிக்கும்
ஒரு வடிவம் போதும் -
நிழலாக.
1 comment:
This is why I read this blog...it's so interesting. It's the reason I decided to put a blog of my own together regarding prefab steel buildings. Since I helped my old man put up a steel building kit 20 years ago. So yea, steel buildings are a weird hobby of mine now.
Post a Comment