அன்புடன் நண்பர் ஜோவிற்கு - நண்பன் எழுதிக் கொள்வது,
இறைநேசன் பதிவில் உங்கள் ஆதங்கம் மிகுந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. கவலைப்படாதீர்கள். இறைத்தூதர் நபிகளை எத்தனை மதிக்கிறோமோ அத்தனை மதிப்பும் மரியாதையும் இயேசுவின் மீதும் உண்டு.
இறைவனாக மட்டும் இயேசுவை ஏற்பதில்லை. மற்றபடிக்கு, அவருக்கு ஒரு உரிய இடத்தை முஸ்லிம்கள் எப்பொழுதும் கொடுத்தே வந்துள்ளனர். நவீன காலத்தில் கூட, இயேசுவின் மீது கிறித்துவர்களாலயே இழைக்கப்படும் அவதூறுகளை எத்தனை கிறித்துவ கவிஞர்கள் தட்டிக் கேட்டார்கள் என்று தெரியாது. ஆனால், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் - இயேசுவின் மீது இரைக்கப்படும் அவதூறுகளைக் குறித்து மனக்குமுறலுடன் அவர் எழுதிய கவிதையை சடையன் அமானுல்லா, மரத்தடி விவாதக்குழுமத்தில் நண்பர்கள் கவனத்திற்கு எடுத்து வைக்க, வழக்கம் போல, அதை புரிந்து கொள்ள இயலாமல் அவசரகதியில் விமர்சனத்தில் இறங்கிய சில நண்பர்களுக்காக விளக்கம் சொல்லி பதில் எழுத வேண்டியதாயிற்று - படித்துப் பாருங்கள் - இஸ்லாமிய நண்பர்களின் உள்ளம் புரியும்.
அந்தக் கட்டுரைக்குக் கீழே, ஒரு இறைவனின் சோகம் என்ற பெயரில், இயேசு பேசுவது போல நான் எழுதிய கவிதையையும் தந்திருக்கிறேன் - எப்படி ஒரு மனிதனான தன்னை இவர்கள் இறைவனாக்கி, தனிமைப்படுத்தி, துயரத்தில் ஆழ்த்தினார்கள் என்பது. இயேசுவை இறைவனாக மட்டும் தான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தவிர, அவரை ஒரு இறைதூதுவராக, வழிகாட்டியாக, பின்பற்றக் கூடிய மனிதராக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், எங்களின் இதே கொள்கையைத் தான் Orthodox Christians - பின் பற்றி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிறித்துவமும், இஸ்லாமும் முரண்படுவது இந்த உருவ வழிபாட்டில் தான்.
//
இதே கோணத்தில் எனது மனதுக்குள் இருக்கும் ஒரு சிறு சந்தேகத்தை சகோதரர் என்ற முறையில் உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன்.
அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ? //
கன்னி மேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...
(ஜூன் 11, 2005.)
சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, மரத்தடி யாஹு மடலாடற் குழுவில் நடக்கும் சில விவாதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் கவிக்கோ அவர்கள் எழுதிய கஜல் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து சடையன் சாபு மரத்தடி நண்பர்களின் இலக்கிய ரசனைக்கு வைக்க, விளைவு எதிர்பார்த்ததற்கு நேரிடையானது.
அந்தக் கவிதையை சொற்குவை என்றும், ஆபாசமானது என்றும், ரசனையற்றது என்றும் விமர்சித்தனர் மரத்தடி நண்பர்களுள் சிலர். கவிதையைப் புரிந்து கொள்ள மறுத்து அல்லது இயலாது - குறுகிய உள்நோக்கோடும், நேர்மையற்ற முறையிலும் விவரித்து எழுதிய நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பது தமிழ்க் கவிதைகளின் ஆர்வலன் என்ற முறையில் எனது மற்றும் கவிதை நேச நெஞ்சங்களின் கடமையும் ஆகிறது.
மரத்தடி நண்பர்களுக்காக எழுதிய விரிவான விளக்கம், மரத்தடியிலே முடங்கிப் போய்விடக் கூடாது என்பதனால், துவக்கு வாசகர்களுக்காக கீழே தருகிறோம்...
(துவக்கு இதழ் ஆசிரியரின் அனுமதியோடு.....)
ஐயா! ஆணி, முள்
ஏதாவது பிச்சை போடுங்கள்
கர்ப்பமாயிருக்கிறேன்
என்ற குரல் கேட்டது
வெளியே வந்து பார்த்தேன்
கன்னி மேரி !
*******************
இது தான் அந்தக் கவிதை....
இனி இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது...
இயேசுவை கட்டி வைத்து அடிக்கிறார்கள். தடுக்க முடியவில்லை. கண்ணீர் பெருகுகிறது. கை வலித்து காவலர்களே ஓய்ந்து, சோர்ந்து போகும் நேரம். ரோம் கவர்னரின் மனைவி இரக்கத்துடன் ஒரு துண்டை கொடுக்க அதனைக் கொண்டு சிந்திக்கிடக்கும் ரத்தம் முழுவதையும் துடைத்து எடுக்கிறார். அந்த கணத்தில், அந்தத் தாயின் மனம், பிரார்த்தனையில் ஈடுபடாமலா போயிருக்கும்? நிச்சயமாக ஈடுபட்டிருக்கும். அது போலவே, சிலுவையில் அறையப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட போதும், சோகமே வடிவமாக, காலடியில் நிற்கின்றார். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் மனதில் ஓடியிருக்கும்?
இது பழையது.
அந்தக் கால மனிதர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் - நாகரீகமற்றவர்கள். அவர்களிடையே, இயேசு போன்ற ஒரு இறைத்தூதர் மாட்டிக் கொண்டது அவஸ்தை தான். ஆனால், இப்பொழுது இயேசு பிறந்திருந்தால், நாமெல்லாம் எப்படி எப்படி நல்லத் தனமாக நடந்து கொண்டிருப்போம்? எத்தனை இனிமையாக நடந்து கொண்டிருப்போம்?
பார்க்கலாமா ?
ஓர் ஓவியர் இயேசு கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்டினார் - ஆமாம் - நவீன யுகத்து ‘ஹிப்பி’ மாதிரி தலை முடியை பரப்பிக் கொண்டு, சிகரெட் புகைப்பது போன்று, ஒரு குறுநகையுடன் சித்தரிந்திருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பிய பொழுது, அது எனது கருத்து சுதந்திரம் - இதில் தலையிட உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார். கன்னி மேரி இதைக் கண்டிருந்தால், அவர் நினைத்திருப்பார் முட்கிரீடம் சூட்டிய யூதாக்கள் ஆயிரம் மடங்கு மேல் என்று.
விஞ்ஞானிகள் என்ன சும்மா இருப்பார்களா? Reconstruction of Christ என்று பெயரிட்டு, ஒரு தலையை வடிவமைத்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் கண்களைத் தூக்கி தூரப்போட்டு விட்டு, அலை அலையான நீண்ட கேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மந்தமான, பிரகாசமில்லாத ஒரு மனித முகத்தைக் காட்டி, இது தான் இயேசு என்றார்கள். எல்லோர் மனதிலும் அன்பு ததும்பும் கண்களைக் கொண்டு நீங்கா இடம் பெற்ற அந்த நம்பிக்கைச் சித்திரத்தை சிதைக்கும் வன்முறையில் இறங்கியது - விஞ்ஞானம். உண்மையைத் தெளிவிக்கிறோம் (!!??) என்ற பெயரில் நம்பிக்கைகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஆனாலும், அதில் ஒரு உற்சாகம் - ஆனந்தம். குரூர திருப்தி.
கன்னி மேரி என்ன நினைத்திருப்பார்? சிலுவையில் அடிபட்டு சிதைந்தது உடல் மட்டும் தானே என்று...
Dan Brown எழுதிய ‘The Da Vinci Code’ என்ற புனை நாவலின் கதைக்கருவே - இயேசு மரிக்கவில்லை. தப்பிப் பிழைத்தார். மணந்து கொண்டார். சந்ததிகள் உண்டாக்கினார். இன்றளவும் அந்த சந்ததிகள் வாழ்கின்றனர் என்ற ரீதியில் கதை போகும். திகைத்துப் போயின தேவாலயங்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு அறிக்கை வெளியிட்டனர் - புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. எழுத்து சுதந்திரம் எந்த மட்டுக்கும் நீளலாம் என்று தங்களுக்கென எந்த ஒரு வரைமுறையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கதை புனைபவர்கள் ஒரு புறமென்றால், அதை மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவாலயங்கள் நீண்ட மௌனம் காத்தது பலரது மனதை புண்படுத்தியிருக்கிறதென்றால், பெற்றெடுத்த ஒரு அன்னையின் மனம் எத்தனை தூரம் வேதனைப்பட்டிருக்கும்?
இது இப்படி என்றால், கிறிஸ்துவை அடித்து துவைத்து இம்சப்படுத்துவதை தரமான ஒளி-ஒலி பதிவோடு காட்டி, மக்களின் மனதை உருகச் செய்து, காசு பார்த்தது அதை விட கொடுமையல்லவா? இயேசுவின் வாழ்க்கை சித்திரவதை செய்யப்படுவது மட்டுமா? தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக எல்லா மக்களும் மதிக்கும் ஒரு இறை தூதரையா அப்படிக் காட்ட வேண்டும்?
பலபேரால், அடித்து அவமானப்படுத்தப்படும் காட்சியை கண்டு மனம் களிக்கவா செய்யும் - ஒரு தாய்க்கு.? துடிக்க அல்லவா செய்யும்? ஆணி அடித்த வேதனையை விட இது கொடூரம் அல்லவா?
இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது - Is Jesus Lived in India என்று. கதையல்ல - நாவலல்ல - ஆராய்ச்சிப் புத்தகம். இயேசு இறக்கவில்லை. கொலைகார பாதகர்களின் கண்ணில் மண்ணைத்தூவி, தன் சீடர்களின் உதவியோடு, இந்தியாவின் காஷ்மீரத்திற்கு ஓடிப்போனார் என்றும், அங்கேயே மரித்துப் போனார் என்றும் அங்கு அவருக்கு கல்லறை இருக்கிறது என்றும் எழுதியுள்ளார். எல்லாம் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு, ஊகம் செய்யப்பட்டவை.
என்ன அவசியம் வந்து விட்டது - ஆராய்ச்சியை உறுதியாக செய்து, இறுதியான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு முன்பே அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து காசு பார்த்து விட வேண்டும் என்று?
இதையெல்லாம் பார்த்த மேரி அன்னை முடிவே கட்டி விட்டார் - அன்று மரண தண்டனை விதித்த யூதர்கள் எத்தனையோ மேல் என்று. இந்த நவீன யுகத்தைக் கண்டு கோபமுற்று இந்த உலகின் அநாகரிகத்தைக் கண்டிக்க முயன்று, கவிதை எழுதியவர் - ஆபாசமாக எழுதுகிறார் என்று சொன்னால், அது அதிசயமாகத் தான் இருக்கிறது.
கவிதையின் சின்ன சின்ன நெளிவுகளைக் கூட காண மறுக்கச் செய்தது எது என்று தான் !? கவிக்கோவின் உண்மை பெயரும் அது சார்ந்த மதமுமா? அப்படி இருக்காது, இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறேன். அது உண்மையென்றால், அதனால் சிறுமை கவிக்கோவிற்கு அல்ல.
இதையே வாலி எழுதியிருந்தால் - என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது - வாலி என்ன, யார் எழுதியிருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் மதிக்கபெறும் ஒரு நபரை, நாகரீக உலகின் அனுகூலங்களைக் கொண்டு, அநாகரீகமாக விமர்சித்து அதன் மூலம் சம்பாதனை செய்யும் அவலத்தை சாடுவதற்கு சாதி, மதம் இதெல்லாம் தேவையில்லை அன்பரே...
ஆம், அன்று முட்களாலும் ஆணியாலும் இம்சித்து சிலுவையில் அடித்தார்கள். இன்று நாம் நாகரீகமாக கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வியாபார உரிமை என்றெல்லாம் கூறி, அவர் நினைவுகளை கண்டம் துண்டமாக வெட்டி கூறு போட்டு விற்கிறோம்.
கன்னி மேரி இன்று நம்மிடையே பிச்சை கேட்டு நிற்கிறார் - தன் கருவிலிருக்கும் இயேசு மிகக் குறந்த துன்பத்துடன் சிலுவையிலே அறையப்படட்டும் - ஆணி , முள் கொடுங்கள் என்று.
நியாயந்தானே?
நட்புடன் நண்பன்
(நன்றி - துவக்கு மின்னிதழ் - http://www.thuvakku.da.ru/)
*********
இனி டா வின்சி கோட் படித்து விட்டு, நான் எழுதிய கவிதை.
ஓர் இறைவனின் சோகம்.(செப்டம்பர் 22, 2005)
இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு
இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை
இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்
வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.
புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.
குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு
****
சில சில வித்தியாசங்களில் தான் வேறுபடுகிறார்களே தவிர, ஈசா நபி என்று அழைத்து அன்பொழுக அவரை மதிக்க வேண்டும் என்றே அறிவுறுத்தப்பட்டே வளர்க்கப்படுகின்றனர் - இஸ்லாமியர்கள்.
இனி டென்மார்க் பற்றி சற்று பார்த்து விடலாம்....
டென்மார்க்ல் நிகழ்ந்தது கருத்துச் சுதந்திரம் அல்ல - கலாச்சார தீவிரவாதம்.
அந்த சமயத்திலும் - சுதந்திரம் உரிமை என பொறுப்பின்றி பேசிய டென்மார்க் பிரதமரையும் அந்த பத்திரிக்கையாளர்களையும் வன்மையாக கண்டிக்க வேண்டும். அதே சமயம் இஸ்லாமிய மக்கள் எந்த வன்முறையும் இன்றி, எந்த ஒரு இமாமிடமிருந்தும் எந்த ஒரு பத்வாமுமின்றி, எந்த ஒரு அரசிடமிருந்தும் எந்த ஒரு ஆனையுமின்றி, தாங்களாகவே அமைதியான முறையில் முன் வந்து அந்நாட்டு பொருட்களைப் புறக்கணித்து மிகப் பெரிய அடியைக் கொடுத்துள்ளனர். மக்கள் சக்தியை எளிமையான முறையில் எல்லோருக்கும் காட்டி உள்ளனர். ஜனநாயகம் என்று போலி கூக்குரலிடும் மேலை நாட்டின் பிரதிநிதியான டென்மார்க் பிரதமர் WTO வில் புகார் செய்வோம் சவுதியின் மீது என்று கூறியிருக்கிறார் - அதற்குக் காரணம் - அவர்கள் நாட்டு பொருட்களைப் புறக்கணிக்கிறார்களளென்று... தெருவில் வாழும் ஒரு சாதாரண குடிமகன் - வாங்க மறுத்தால், அது அரசாங்கத்தின் குற்றமா? அரபு நாடுகளில் ஜனநாயகத்தை மக்கள் தானாக திரண்டெழுந்து காட்டியதை உங்களால் தாங்க முடியவில்லை அல்லவா? ஒரு நாளைக்கு இழப்பு - 250 மில்லியன் திர்ஹம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 300 கோடி ருபாய் ஒரு நாளைக்கு. இது தொடர்ந்தால் - டென்மார்க் நாட்டின் கதி அதோ கதி தான்.
இதில் சிலர் வேறுவகையான மிரட்டல்களை முன் வைக்கின்றனர். இஸ்லாமிய நாடுகளின் பொருட்களை அவர்கள் பகிஷ்கரிப்பார்கள் என்று.
ரொம்ப நல்லது.
செய்யட்டும்.
வெத்து வேட்டு மிரட்டல்கள் இன்னும் எத்தனை நாட்கள்?
இங்கே கவனிக்கப்பட வேண்டிய செய்தி - மக்கள் நடத்திய காட்டிய இந்த அமைதிப் புரட்சி - எந்த ஒரு இயக்கமும் அறை கூவல் விடுத்து நடத்தப்பட்டதில்லை. எந்த ஒரு தீவிரவாதமும் இங்கு நடைபெறவில்லை. வியாபார நிறுவனங்கள் தாங்களாக முன் வந்து, டென்மார்க் பொருட்களைத் தூக்கி கடாசியதோடு மட்டுமல்ல, அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள் - எங்கள் கடைகளில் டென்மார்க் பொருட்கள் எதுவுமில்லை என்று. மக்கள் கருத்தோடு தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பியதனால் அவர்களே அந்தப் பொருட்களை நீக்கிக் கொண்டார்கள்.
தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் நபியின் மாண்பையும், இஸ்லாத்தின் கௌரவத்தையும் காக்க வேண்டுமென்றால் - அதற்கு எந்த தீவிரவாதமும் தேவையில்லை - தங்களின் அமைதியான, சாத்வீகமான எதிர்ப்பே போதும் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் - ஒரே நாளில். இது தான் இஸ்லாம்.
இஸ்லாமிய தீவிரவாதம் என்று பேசியவர்கள் எல்லாம் இனி, முக்காடும், முகமூடியும் போட்டுக் கொண்டு திரியட்டும்.