வீடு
வீடு கட்டிய அனுபவத்தைப் பற்றியது...
வீடு
உணவிற்கும்
உயிர்பிழைத்தலுக்குமிடையேயான
துரத்தலும், விரைதலுமான ஓட்டமாக
தூக்கமும், நானும் நடத்தும்
ஒர் இடையறா போராட்டத்திற்கிடையே
நிகழ்கிறது
வீட்டுச் சுவர்களிடம்
விரல்கள் நடத்தும் விசாரணை....
அடிவாரத்தில் மூழ்கப்போகும்
ஒரு கல்லே
குங்குமம் சார்த்தப்பட்டு
மாலை போடப்பட்டு
பொரிகடலை, தேங்காய், வாழைப்பழம் தரப்பட்டு
தற்காலிகத் தெய்வமாகி
துவங்கி வைத்த வீடு அது...
அதுவரையிலும்
அறியப்படாத வாஸ்துவும்
விலாவரியாக விசாரணைக்குள்ளாகி
சகல சம்பத்துகளுக்குமிடமின்றி
கொஞ்சமே கொஞ்சமாக மாற்றி வைத்தும்
நீங்காத சிற்சில மனசஞ்சலங்களுக்கு
சமாதான சாந்திகள் பல செய்யப்பட்டு
வளர்த்தி நிற்கவைக்கப்பட்ட வீடு அது....
வகைவகை காய்கறி
இனிப்புகளுடன் தந்த விருந்தை
உண்டு களித்த சிலர்
'அப்படி இருந்திர்க்கணும்
இப்படி இருந்திர்க்கணு'மென்ற
விமர்சனங்களைப் புறந்தள்ளி
பின்னும்
என் நேசத்திற்குரிய வீடு அது....
உயிர் மூச்சைத் தவிர
மற்றவை அனைத்தையும்
மூடிக்கொண்ட உலகம் துயிலும்
இரவின் மௌனத்தில்
வீட்டுச் சுவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
என் விரல்கள் -
"கீறல்கள் ஏதும் விழுந்து
காயம்பட்டாயா" என்று...
என் அன்பில் நெக்குருகி நிற்கும்
அந்த சுவற்றிடம் சொல்லவில்லை -
ஒருமுறை இழந்து விட்டால்
மீண்டொருமுறை
அதனைப் போல மற்றொன்றை
கட்டித்தரும் தெம்பில்லாத
எனதிந்த இயலாமை தான்
இந்தப் பாசமென்று.....
4 comments:
ஒரு வீடு கட்டும் சிரமம் என்னவென்று நன்றாக அறிந்தவன் நான்.
கவிதை வீடு மட்டும் கட்டவில்லை. அதன் பின் உண்டான பாசமான விசாரணைகளை மற்றவைகளுக்கும் நீட்டிக் கொண்டு போகலாம் – மனைவி, மக்கள் என்று.
பலபேரின் பாசம், சமயங்களில், இயலாமையினால் தான் தோன்றுகிறது.
நல்ல கவிதை நண்பரே...
அன்பு நண்பர் முத்துவிற்கு,
ந்ன்றி...
உங்களின் எழுத்துரு பிரச்னையால், வாசிக்க இயலாத இரண்டு பதிவுகளை நீக்கி விட்டேன்...
நன்றி...
Post a Comment