இறப்பதினால் ஆய பயன்....
நண்பனே நாமிருவரும்
எப்பொழுதாவது
சந்தித்துக் கொண்டிருக்கிறோமா?
நமக்குள்
தீர்க்கவியலாத சிக்கல்கள்
ஏதுமுண்டா?
என்னை கொல்வதற்கு
உனக்கு
என்ன காரணங்கள் உண்டு?
உனக்கென நியாயங்களிருக்கலாம்.
உன் குழந்தைகள்
ஏதோ ஒரு வீதியுத்தத்தில்
என் நாட்டு குண்டுகளில்
வீழ்ந்திருக்கலாம்.
உன் மனைவியை
என் நாட்டின்
யாரோ ஒரு வீரன்
பாழ்பண்ணியிருக்கலாம்.
உன் அழகிய வீட்டின் சுவர்கள் மீது
கரி பூசியிருக்கலாம்
வெடித்துச் சிதறிய குண்டுகள்.
உன் இனிமையான தோழன்
ஒருவனின் கால்களை
என் நாட்டு டாங்கிகளேறி
சிதைத்திருக்கலாம்.
உன் எல்லாத் துயரங்களின்
அடையாளமாக என்னை
இருத்தி வைத்திருக்கிறாய்.
உன் கையிலுள்ள துப்பாக்கியில்
எத்தனை எதிர்பார்ப்புகள்
மரணிக்கப் போகின்றன தெரியுமா?
மகன் திரும்பப்பிரார்த்திக்கும்
ஒரு தாயின் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்துவிடும்
இரவில் குட்டிக் குட்டிக் கதைகள்
கேட்கக் காத்திருக்கும்
என் சிறு குழந்தைகள்
இனி ஒருபோதும்
தேவதைக் கதைகளை
கேட்கவே போவதில்லை.
இரவின் மௌனத்தில்
காதலின் மொழி பேசிய
என் மனைவியின் அன்பு
இனி உறைந்து போய்விடலாம்.
இதெல்லாம் எனது வருத்தமில்லை
நண்பனே.
என் பரிதாபத்தைப் படமெடுத்து
நான் சார்ந்த அனைத்தையும்
அவமானப்படுத்துகிறாயே
அதை மட்டும் நிறுத்திக் கொள்
சுட்டு விடு.
ஒரே குண்டில்
ஒரே துளைத்தலில்
நான் சாகும்படி சுட்டுவிடு.
நண்பனே
எந்தக் கணக்கானாலும்
என் மரணத்துடன்
நீ சமாதானமாகி விடு.
இல்லையெனில் என்ன பயனுனக்கு
நான் சாவதால்?