"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, April 23, 2007

தஸ்லிமா நஸ்ரின்

இந்தப் பதிவு இங்கு
பின்னூட்டமாக இடப்பட்டது. ஒரு தனி பதிவு என்பதால், கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். படியுங்கள்.

தஸ்லிமா நஸ்ரின் புத்தகம் வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டதா? இப்பொழுது போலிருக்கிறது - அவருடைய லஜ்ஜா என்ற புத்தகத்தை வாங்கி. பின்னர் அது தடை செய்யப்பட்டு விட்டது.



அந்தப் புத்தகத்தில் அவர் இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் எழுதவில்லை. அதில், அயோத்திய மசூதி இடிப்பு ஒட்டி, நடந்த இனக்கலவரத்தில், அதன் உணர்ச்சி மேலீட்டில் இருந்த

இஸ்லாமியர்கள், நடத்திய வன்முறை தான் அது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளான போது, அந்நிய நாட்டில், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் வங்காளதேசத்தில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் தொடுத்த பதில் தாக்குதல் தான் அது.

வங்க தேசம், எல்லைக் கோடுகளை அகற்றி விட்டால், இந்தியாவின் மற்றொரு மகாணமாகத் தான் இருக்கும். அந்த வகையில் தான் அவர்கள் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவத்திற்கு எதிர்வினை புரிந்தனர்.

இந்த சம்பவத்தை தஸ்லிமா நஸ்ரின் தன் நாவலில் விலாவாரியாக எழுதி இருக்கிறார். இது ஒரு செய்திப் பதிவு மாதிரி.

ஆனால், வங்க முஸ்லிம்கள் அதை அவ்வாறு எடுத்துக் கொள்ளத் தயாராகவில்லை. தஸ்லிமா தங்களுக்குத் துரோகம் செய்தார் என்றே எடுத்துக் கொண்டனர். இது அவர் ஒரு பெண் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதினார் என்ற குற்றச்சாட்டு. (இஸ்லாத்திற்கு எதிராக அல்ல)

ஆனால், பெண்களுக்கு எதிராக இணக்கமாக நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்று சான்றிதழ் வழங்க இயலாது. இன்றும் கூட அவர்கள் பெண்களை அடக்கி ஆள விரும்பவே செய்கின்றனர். இஸ்லாத்தின் பெயரால், இவர்கள் செய்யும் அடக்குமுறை மிகத் தவறானது. ஆனால் அதை இஸ்லாத்தின் மீது ஏற்றிக் கூறுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.

இப்பொழுது பாருங்கள் ஹாலிதா ஜியா-வை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். ஷேக் ஹஸினா நாடு திரும்புவதை தடுக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் - அரசியல். இந்த இரு பெண்மணிகளும் தங்களுக்கிடையே இருந்த அகங்காரத்தைக் கொண்டு, வங்க தேசத்தையே அங்கஹீனம் செய்தனர். அதற்கு எதிர்வினையாக, இடைக்கால அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி வற்புறுத்துகிறது. நாளை இதையே இஸ்லாம் இந்தப் பெண்களை நாடு கடத்தினர் என்ற குற்றம் சாட்டினால் அது தவறில்லையா?

அதுபோல தான் - இதுவும். இஸ்லாமியர்கள் என்றால் உடனே அவர்கள் அனைவரும் உணர்ச்சிகளைக் கடந்த தெய்வீக ஆத்மாக்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகளை அளவு கோலாக வைத்துக் கொண்டால், அது அளவெடுப்பவரின் தவறே அன்றி, இஸ்லாமியர்களின் தவறோ அல்லது இஸ்லாத்தின் தவறோ அல்ல. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் தவறான கருத்தாக்கங்களுக்கு இஸ்லாமும் இஸ்லாமியர்களும் பலி இடப்படுகின்றனர் என்பதே உண்மை.

தஸ்லிமா நஸ்ரினுக்கு எழுந்த எதிர்ப்பு, இஸ்லாம் வகுத்த வழிமுறைகளால் எழுந்ததன்று. மாறாக, தாங்கள் இந்துக்களுக்கு எதிராக தொடுத்த தாக்குதலை - அனைவரும் மூடி மறைத்த பொழுது, பத்திரிக்கைகள், ஊடகங்கள், என்ற அனைத்தும் மௌனம் காத்த பொழுது, இந்தப் பெண் அவற்றை நாவலாக எழுதி ஊரறியச் செய்து விட்டாளே என்ற ஆத்திரம் தானே தவிர, இஸ்லாத்திற்கு எதிராக எழுதினார் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல.


நான் இறை நம்பிக்கையற்றவள் என்று சொன்னது - ஓட ஓட விரட்டிய மக்களுடன் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ள இயலாத மனநிலையில், எழுந்த சலிப்பாகத் தான் இருக்கும். அதுபோலவே, அவருடைய சில விமர்சனங்களும் - ஒரு பெண்ணியவாதியாக எழுப்பப்பட்டதே - அவரை மாதிரியே பல பெண்கள் இன்று குரல் எழுப்புகின்றனர். சில இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர். இது காலகாலமாக இஸ்லாத்தினுள் நடைபெற்று வரும் தர்க்கங்கள் தான். எல்லா மதங்களிலும் இருக்கும் ஆணாதிக்க வர்க்க சிந்தனை இஸ்லாமியர்களிடம் - அதுவும் குறிப்பாக முல்லாக்களிடம் இருக்கக் கூடாதா என்ன? இன்றும் மற்ற மத ஆண்கள் தங்கள் ஆணாதிக்கத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் பொழுது எழாத விமர்சனம் இஸ்லாமியர்கள் என்னும் பொழுது, பன்மடங்கு பெருக்கப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. இதை வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற அளவில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இஸ்லாத்துடன் இணைத்து பேசுவது எப்படி முறையாகும்?

பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தின் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன என்ன?
பர்தா, கல்வி.. அப்புறம்?

பர்தா இன்று தமிழகத்தில் கேரளாவிலும் கூட. துபாயிலும் தான். (நான் பார்க்கின்ற பெரும்பான்மையான பெண்களின் உடைகள் - ஒருவேளை பாரீஸ் நகரம் இங்கு வந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு அத்தனை நவநாகரீகம் - போங்கள்.) பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.

கல்வி - இது வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம். வசதி இருக்கிறவர்கள் ஓரளவிற்கேனும் படிக்க வைக்கிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்வது. நீங்கள் சர்ச்சார் அறிக்கையைப் படித்திருந்தால், உண்மை நிலவரம் புரியும்.

தஸ்லிமா தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பெண் என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி அவருடைய கவிதைகளையும், எழுத்துகளையும் எல்லோரையும் போல நானும் கூடத்தான் விரும்பிப்படிக்கிறேன்.

சுயமாக சொந்தக் காலில் நிற்கும் தஸ்லிமாவால், பேச முடிந்த விஷயங்களைப் பீடி சுற்றி தன் குடும்ப வருவாய்க்குக் கொடுத்து உதவும் பெண்களால் பேச முடியாது என்பதனால், பெண்கள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பது சரியான தர்க்கமாக இருக்க முடியாது.

பெண்களுக்கும் விடுதலை வரும். கொண்டு வருவோம். தூரம் அதிகமில்லை.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்