சுனாமி பொங்கிய கடலின் கரையாய் மனதினுள்; சிதைந்த எண்ணங்கள் எழுந்தது அவனுள். வருடங்கள் கடந்த பின்பும், அவளைப் பார்க்கும் ஆசையில் புறப்பட்ட இந்த பயணம் குடைந்து கொண்டே இருந்தது.
பையில் முகவரி எழுதிய தாள் கனத்தது.
“எவிடயானு சாரே?”
தன்னை யாரும் கவனித்தார்களா என்ற முனைப்பில் அவன் இயங்கிக் கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை கேட்டு கவனம் கவர்ந்தான் வாகன ஓட்டி.
பதில் சொல்வதை விட எளிதான வழியாக முகவரி தாளை அவனிடம் கொடுத்து விட்டு இன்னும் சரிவாக தன்னை இருக்கையில் பதித்துக் கொண்டான். உடலைத் தளர்த்தி சாய்ந்து கொண்ட தருணத்தில், மனம் கிளர்ந்தெழுந்து தன் போக்கில் பிரயாணப்படத் தலைப்பட்டது.
‘நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயனற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு...
நீ பூப்பறித்த தோட்டங்கள்
இன்று,
வாகனங்களுக்கு எரிபொருள்
ஊற்றும் நிலையமாக
புன்முறுவலுடன் நிற்கிறது.. ..
நீ சிலாகித்து பரவசப்பட்ட
கர்த்தரின் சிலையோ
மறைந்து விட்டது -
பலமாடி வணிக வளாகத்தின்
பின்னே. . . .
நீ குதூகலித்துப் பார்த்த
தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியே
பேருந்துகள் பயணிப்பதில்லை
இப்பொழுதெல்லாம்...
அவை மாற்றுப் பாதையில்
வழுக்கிக்கொண்டு
விலகிப் போகின்றன. .
நீ கவிதை எழுதிய
காய்ந்துபோன மரம்
வெட்டப்பட்டு விட்டது. .. .. ..’
“சாரே, ஸ்தலம் வந்நூ”
ஒரு கவிதை மனதினுள் புரண்டெழுவதற்குள் அவள் வீடு வந்துவிட்டதா?
புறப்பட்ட வேகம் இப்பொழுது தளர்ந்து, தான் செய்வது சரியா என்ற மறுவிசாரணையில் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டதாக சொல்லிக் கொண்டே, வெண்சுருட்டைத் தேடினான்.
“சாரே, வேறெந்து வேண்ட?”
வெண்சுருட்டைப் பற்ற வைக்க நெருப்பு கொடுத்துக் கொண்டே, பெட்டிக்கடைக்காரன் பேச்சுக் கொடுத்தான். மீண்டும் முகவரித் தாள் சட்டைப்பை விட்டு விடுதலையடைந்தது தற்காலிகமாக.
‘பேசாமல் செல்வியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்...’ முகவரி விசாரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் - மனைவியை அழைத்து வந்திருந்தால். இத்தனைக்கும் அவர்கள் நெருங்கிய தோழிகள். அதுவே கூட காரணமாக இருக்குமோ, அவளைத் தவிர்த்தது?
“இங்க பாருங்க, எங்காயாச்சும் போகணும்னா, சொல்லுங்க, மாமா பையனைக் கூட்டிக்கிட்டுப் போச்சொல்றன்”
“எனக்கெங்கயும் போவேண்டியதில்லை. ஆளை கொஞ்சம் தனியா வி;டறீயா?” காரணமற்ற எரிச்சல். எதனால்?
கேள்விகளுக்கு எப்பொழுதும் விடைதேடுவது வழக்கமல்ல என்பதால் கோபங்களைச் சுமந்து திரிவதில்லை. அவ்வப்பொழுது ஒரு கத்தலோடு கரைந்து போய்விடும். முதுகிற்க்குப் பின்னால் குசுகுசுவென இயங்கிக் கொண்டிருப்பார்கள் மனைவியும் பிள்ளைகளும். சட்டென்று திரும்பினால் நாக்கை கன்னத்தினுள் திணித்து இளக்காரப் புன்னகையை மறைப்பார்கள். அது தான் எல்லை. தாண்டக்கூடாது.
மனைவியையும் அழைத்து வந்திருக்கலாம். கொஞ்சம் இளக்காரப் பேர்வழிதான் என்றாலும், நேராக இந்நேரம் அவளுடைய வீட்டிற்கே கூட்டிட்டுப் போயிருப்பாள். ஓருவேளை அவளுடைய கணவன் இருந்திருந்தால் கூட தவறாகப் பட்டிருக்காது. தவறாக நினைக்கக் கூடுமோ? இத்தனை காலத்திற்குப் பின்னும் மனம் புகைமூட்டம் நீங்கி ஒளி பெற்றிருக்காதா?
இருக்காது.
இத்தனை வருடங்களுக்குப் பின்னும், அவள் எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆவல் தன்னிடத்திலே தோன்றும் பொழுது, அவன் மட்டும் தன் சந்தேகங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா?
‘உன்னை எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நீ என் மகளைத் தொடர்பு கொள்ளாதே - எந்த வகையிலும்...’
அவளின் அம்மாவின் கடிதம்.... கடிதம் பிரிக்கப்படும் வரை ஒரு படபடப்பு இருந்தது. ஆவல் இருந்தது. படித்த பின் இறுக்கம். என்ன நடக்கிறது? அவள் அம்மா கடிதம் எழுதுகிற அளவிற்கு என்னாயிற்று? நகர மறுத்த சிந்தனைகளைக் கட்டி இழுத்து வந்தவனிடம் “என்னடா திகிலடிச்சு நிக்கற?” என்ற மனைவிக்கு அக்கடிதத்தைப் பதிலாகக் கொடுத்தேன்.
“அடடா, நமக்கு உதவ வந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா?” ஒரு பெருமூச்சோடு முடித்துக் கொண்டாள். திருப்தியோ?
அத்துடன் அந்த உறவிற்கு ஒரு இடைவெளி விடப்பட்டது. கடைசியாக ஒருமுறைப் பார்த்து சொல்லிக் கொண்டுகூட பிரிய முடியவில்லை. திருமண நாளில் விடைபெற்றதே கடைசி சந்திப்பாகிவிட்டது. அப்பொழுது பார்த்த அவள் உருவம் மனதில் நிலைத்து உறைந்து போனது.
பெட்டிக் கடைக்காரன் முனைப்புடன் சொல்லிய வழி காதில், மனதில் உள்வாங்கப் பட்டதா என்ற பிரக்கியம் இல்லாமலே, அந்த இடம் விட்டு நகர்ந்தான். எங்கும் அதிகம் நில்லாதே என்ற மனப்பிராண்டல். இப்பொழுது அவள் வீட்டிற்குப் போகவேண்டும் என்ற ஆவல் பெரிதும் வடிந்து போயிருந்தது.
மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. அவசரமுமில்லை. புகை வலிப்பு தெம்பைக் கூட்ட பழைய நினைவுகள் திமிறிக் கொண்டு நிலத்தகடுகளாய் அசைந்து பொருந்தின.
இப்பொழுதும் அவள் கவிதை எழுதுவாளா?
‘எத்தனை கூட்டத்தின் நடுவேயும்என் மீது ஒரு கண் வைத்திருப்பாய் -என் மௌனங்களோடுநான் பேசாமல் அமர்ந்திருப்பதைக் கண்டுபுன்னகை ப+ப்பாய் -நான் நானாக இருக்கிறேன் என்று..’
கடைசியாகப் படித்தது. அவள் எழுதியது. இப்பொழுது அவளுக்கு இந்த கவிதை எழுதும் சுதந்திரம் இருக்குமா?
அவள் வீடு எதிரே வந்து, வெண்சுருட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தயங்கிய சில விநாடிகளி;ல் இதயம் ஒரு மராத்தான் ஓட்டமே ஓடி முடித்திருக்கும்.
“யார் வேண்டும்?”
தட்டுதலுக்காகவே காத்திருந்தது போல கதவு அவள் குரலில் பேசிக் கொண்டே திறந்தது.
நான் அவளைப் பார்த்த கடைசி தினத்தினின்றும் கூடுதலாக ஒரு தினம் கூட கழிந்திராது போன்று அதே பழைய அவளாக என் முன் நின்றாள்.
இது அறிவு பூர்வமாக சாத்தியமில்லையே என்ற மனதர்க்கத்தை வெட்டிக் கொண்டு, நிதானிக்க அவகாசம் கொடாது கடந்த காலத்தினுள் தூக்கி எறியும் குரலில் கேட்டாள்
“யார் வேண்டும் உங்களுக்கு?”
“அம்மா? ”
“அம்மா இல்லை. அப்பாவை கூப்பிடுகிறேன். ஓரு நிமிடம்...”
அவள் திரும்பி உள்ளே சென்றாள். ஓரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மனம் முடிவெடுத்தது.
திரும்பி நடந்தேன் தயக்கமின்றி. தங்குமிடம் திரும்பியதும், மனைவியின் - கோபமா, ஆதங்கமா என்று இனம் பிரிக்க அவசியமில்லாத - கண்டனக் குரல் எழும்பியது
“எங்க போயிட்ட, சொல்லாம, கொள்ளாம? கொஞ்சம் கூட பொறுப்பில்லையே, வந்த இடத்தில கூட.. இங்க உனக்காக எத்தனை மணி நேரம் அவளை காக்க வைத்திருந்தேன் தெரியுமா?”
அதிக நேரம் அவஸ்தையாக்;காமல் மகனிடமிருந்து விடை கிடைத்தது “கமலா ஆண்ட்டி வந்திருந்தாங்கப்பா...”
நான் ஆடிப் போவேன் என்று எதிர்பார்த்த மனைவி அசந்து போனாள் என் அமைதியைக் கண்டு.
“ மகனே, அவள் அங்கிளைத் தான் பார்த்திருப்பாள், நான் இருந்திருந்தால்;. இப்ப அவள் என்னையேப் பார்த்துப் போயிருப்பர்ள் - நான் அவளைப் பார்த்து வந்த மாதிரி...”
அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படியே இருக்கட்டும்...