"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, June 11, 2005

கன்னிமேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...

கன்னி மேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, மரத்தடி யாஹு மடலாடற் குழுவில் நடக்கும் சில விவாதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் கவிக்கோ அவர்கள் எழுதிய கஜல் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து சடையன் சாபு மரத்தடி நண்பர்களின் இலக்கிய ரசனைக்கு வைக்க, விளைவு எதிர்பார்த்ததற்கு நேரிடையானது. அந்தக் கவிதையை சொற்குவை என்றும், ஆபாசமானது என்றும், ரசனையற்றது என்றும் விமர்சித்தனர் மரத்தடி நண்பர்களுள் சிலர். கவிதையைப் புரிந்து கொள்ள மறுத்து அல்லது இயலாது - குறுகிய உள்நோக்கோடும், நேர்மையற்ற முறையிலும் விவரித்து எழுதிய நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பது தமிழ்க் கவிதைகளின் ஆர்வலன் என்ற முறையில் எனது மற்றும் கவிதை நேச நெஞ்சங்களின் கடமையும் ஆகிறது. மரத்தடி நண்பர்களுக்காக எழுதிய விரிவான விளக்கம், மரத்தடியிலே முடங்கிப் போய்விடக் கூடாது என்பதனால், துவக்கு வாசகர்களுக்காக கீழே தருகிறோம்...

(துவக்கு இதழ் ஆசிரியரின் அனுமதியோடு.....)

ஐயா! ஆணி, முள்
ஏதாவது பிச்சை போடுங்கள்
கர்ப்பமாயிருக்கிறேன்
என்ற குரல் கேட்டது
வெளியே வந்து பார்த்தேன்
கன்னி மேரி !
*******************

இது தான் அந்தக் கவிதை....

இனி இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது...

இயேசுவை கட்டி வைத்து அடிக்கிறார்கள். தடுக்க முடியவில்லை. கண்ணீர் பெருகுகிறது. கை வலித்து காவலர்களே ஓய்ந்து, சோர்ந்து போகும் நேரம். ரோம் கவர்னரின் மனைவி இரக்கத்துடன் ஒரு துண்டை கொடுக்க அதனைக் கொண்டு சிந்திக்கிடக்கும் ரத்தம் முழுவதையும் துடைத்து எடுக்கிறார். அந்த கணத்தில், அந்தத் தாயின் மனம், பிரார்த்தனையில் ஈடுபடாமலா போயிருக்கும்? நிச்சயமாக ஈடுபட்டிருக்கும். அது போலவே, சிலுவையில் அறையப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட போதும், சோகமே வடிவமாக, காலடியில் நிற்கின்றார். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் மனதில் ஓடியிருக்கும்?

இது பழையது.

அந்தக் கால மனிதர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் - நாகரீகமற்றவர்கள். அவர்களிடையே, இயேசு போன்ற ஒரு இறைத்தூதர் மாட்டிக் கொண்டது அவஸ்தை தான். ஆனால், இப்பொழுது இயேசு பிறந்திருந்தால், நாமெல்லாம் எப்படி எப்படி நல்லத் தனமாக நடந்து கொண்டிருப்போம்? எத்தனை இனிமையாக நடந்து கொண்டிருப்போம்?

பார்க்கலாமா ?

ஓர் ஓவியர் இயேசு கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்டினார் - ஆமாம் - நவீன யுகத்து ‘ஹிப்பி’ மாதிரி தலை முடியை பரப்பிக் கொண்டு, சிகரெட் புகைப்பது போன்று, ஒரு குறுநகையுடன் சித்தரிந்திருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பிய பொழுது, அது எனது கருத்து சுதந்திரம் - இதில் தலையிட உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார்.
கன்னி மேரி இதைக் கண்டிருந்தால், அவர் நினைத்திருப்பார் முட்கிரீடம் சூட்டிய யூதாக்கள் ஆயிரம் மடங்கு மேல் என்று.

விஞ்ஞானிகள் என்ன சும்மா இருப்பார்களா? Reconstruction of Christ என்று பெயரிட்டு, ஒரு தலையை வடிவமைத்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் கண்களைத் தூக்கி தூரப்போட்டு விட்டு, அலை அலையான நீண்ட கேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மந்தமான, பிரகாசமில்லாத ஒரு மனித முகத்தைக் காட்டி, இது தான் இயேசு என்றார்கள். எல்லோர் மனதிலும் அன்பு ததும்பும் கண்களைக் கொண்டு நீங்கா இடம் பெற்ற அந்த நம்பிக்கைச் சித்திரத்தை சிதைக்கும் வன்முறையில் இறங்கியது - விஞ்ஞானம். உண்மையைத் தெளிவிக்கிறோம் (!!??) என்ற பெயரில் நம்பிக்கைகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஆனாலும், அதில் ஒரு உற்சாகம் - ஆனந்தம். குரூர திருப்தி.

கன்னி மேரி என்ன நினைத்திருப்பார்? சிலுவையில் அடிபட்டு சிதைந்தது உடல் மட்டும் தானே என்று...

Dan Brown எழுதிய ‘The Da Vinci Code’ என்ற புனை நாவலின் கதைக்கருவே - இயேசு மரிக்கவில்லை. தப்பிப் பிழைத்தார். மணந்து கொண்டார். சந்ததிகள் உண்டாக்கினார். இன்றளவும் அந்த சந்ததிகள் வாழ்கின்றனர் என்ற ரீதியில் கதை போகும். திகைத்துப் போயின தேவாலயங்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு அறிக்கை வெளியிட்டனர் - புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. எழுத்து சுதந்திரம் எந்த மட்டுக்கும் நீளலாம் என்று தங்களுக்கென எந்த ஒரு வரைமுறையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கதை புனைபவர்கள் ஒரு புறமென்றால், அதை மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவாலயங்கள் நீண்ட மௌனம் காத்தது பலரது மனதை புண்படுத்தியிருக்கிறதென்றால், பெற்றெடுத்த ஒரு அன்னையின் மனம் எத்தனை தூரம் வேதனைப்பட்டிருக்கும்?

இது இப்படி என்றால், கிறிஸ்துவை அடித்து துவைத்து இம்சப்படுத்துவதை தரமான ஒளி-ஒலி பதிவோடு காட்டி, மக்களின் மனதை உருகச் செய்து, காசு பார்த்தது அதை விட கொடுமையல்லவா? இயேசுவின் வாழ்க்கை சித்திரவதை செய்யப்படுவது மட்டுமா? தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக எல்லா மக்களும் மதிக்கும் ஒரு இறை தூதரையா அப்படிக் காட்ட வேண்டும்?

பலபேரால், அடித்து அவமானப்படுத்தப்படும் காட்சியை கண்டு மனம் களிக்கவா செய்யும் - ஒரு தாய்க்கு.? துடிக்க அல்லவா செய்யும்? ஆணி அடித்த வேதனையை விட இது கொடூரம் அல்லவா?
இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது - Is Jesus Lived in India என்று. கதையல்ல - நாவலல்ல - ஆராய்ச்சிப் புத்தகம். இயேசு இறக்கவில்லை. கொலைகார பாதகர்களின் கண்ணில் மண்ணைத்தூவி, தன் சீடர்களின் உதவியோடு, இந்தியாவின் காஷ்மீரத்திற்கு ஓடிப்போனார் என்றும், அங்கேயே மரித்துப் போனார் என்றும் அங்கு அவருக்கு கல்லறை இருக்கிறது என்றும் எழுதியுள்ளார். எல்லாம் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு, ஊகம் செய்யப்பட்டவை.

என்ன அவசியம் வந்து விட்டது - ஆராய்ச்சியை உறுதியாக செய்து, இறுதியான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு முன்பே அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து காசு பார்த்து விட வேண்டும் என்று?

இதையெல்லாம் பார்த்த மேரி அன்னை முடிவே கட்டி விட்டார் - அன்று மரண தண்டனை விதித்த யூதர்கள் எத்தனையோ மேல் என்று. இந்த நவீன யுகத்தைக் கண்டு கோபமுற்று இந்த உலகின் அநாகரிகத்தைக் கண்டிக்க முயன்று, கவிதை எழுதியவர் - ஆபாசமாக எழுதுகிறார் என்று சொன்னால், அது அதிசயமாகத் தான் இருக்கிறது. கவிதையின் சின்ன சின்ன நெளிவுகளைக் கூட காண மறுக்கச் செய்தது எது என்று தான் !? கவிக்கோவின் உண்மை பெயரும் அது சார்ந்த மதமுமா? அப்படி இருக்காது, இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறேன். அது உண்மையென்றால், அதனால் சிறுமை கவிக்கோவிற்கு அல்ல.

இ¦தையே வாலி எழுதியிருந்தால் - என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது - வாலி என்ன, யார் எழுதியிருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் மதிக்கபெறும் ஒரு நபரை, நாகரீக உலகின் அனுகூலங்களைக் கொண்டு, அநாகரீகமாக விமர்சித்து அதன் மூலம் சம்பாதனை செய்யும் அவலத்தை சாடுவதற்கு சாதி, மதம் இதெல்லாம் தேவையில்லை அன்பரே...

ஆம், அன்று முட்களாலும் ஆணியாலும் இம்சித்து சிலுவையில் அடித்தார்கள். இன்று நாம் நாகரீகமாக கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வியாபார உரிமை என்றெல்லாம் கூறி, அவர் நினைவுகளை கண்டம் துண்டமாக வெட்டி கூறு போட்டு விற்கிறோம்.

கன்னி மேரி இன்று நம்மிடையே பிச்சை கேட்டு நிற்கிறார் - தன் கருவிலிருக்கும் இயேசு மிகக் குறந்த துன்பத்துடன் சிலுவையிலே அறையப்படட்டும் - ஆணி , முள் கொடுங்கள் என்று.

நியாயந்தானே?

நட்புடன்
நண்பன்

(நன்றி - துவக்கு மின்னிதழ் - www.thuvakku.da.ru)

18 comments:

Jafar ali said...

வாருங்கள் நண்பரே!

நண்பன் said...

நன்றி மூர்த்தி அவர்களே....!

நீங்கள் சொல்வது உண்மைதான். குழுவாக இயங்கி, சுயம் இழந்து, சிந்திக்கும் திறன் தாழ்ந்து போவதில் வருத்தமே...

குழுவாக இயங்குவது கண்டு அச்சப்படவில்லை. ஏனென்றால், எத்தனை குழுக்களாக வந்தாலும், நம் எண்ணத்திலும், நம்பிக்கையிலும் சக்தி இருக்கும் வரை - ஆட்பலத்தைக் கண்டு அசரவோ, அச்சப்படவோ வேண்டியதில்லையே....

தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றிகள்....

ஒரு நாள் உரையாடலாம் - தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்கிறேன்...

அன்புடன்

நண்பன் said...

அன்புடன் ஜாஃபர் அலிக்கு,

மிக்க நன்றி....

உங்கள் வரவேற்பிற்கு....

விரைவில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன் - உற்சாகமாக உரையாடலாம்....

நட்புடன்
நண்பன்

Anonymous said...

அன்புள்ள நண்பன், கவிக்கோவும், கன்னி மேரியும் குறித்தான உங்கள் பார்வையைக் கண்டேன். எனக்கு தோன்றியவற்றை பதிக்கிறேன். அடிப்படையில் கவிதை என்பது ஒரு அழகியல் வடிவம். உரை நடை என்பது சொல்ல வந்த கருத்தை நேரிடையாக எளிமையான மொழியைக் கொண்டு குறிப்பதாகும். ஆனால் கவிதை தன் கருத்தை நேரிடையாக வெளிப்படுத்துவதில்லை. அதை பெற நாம் கவிதையோடு நெருக்கமாக வேண்டும். அதனுள் மறைந்துள்ள விச்சயங்களை தேட வேண்டும். அது சொல்ல வந்த விசயங்கள் என்னவென்று ஆராய வேண்டும். கவிக்கோ ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் - கவிதை என்பது புரிந்து கொள்வதற்காக எழுதப்படுபவை அல்ல அது அனுபவிப்பதற்காக எழுதப்படுவது. கவிஞனுடைய வேலை கவிதைக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதில்லை. அவன் வாசிப்பவர்களுக்கு புதுப் புது அனுபவங்களைத் தர வேண்டும். சிந்திக்க தூண்ட வேண்டும். அந்த வகையில் கவிக்கோ ஏராளமான வாசிப்பு அனுபவங்களை தந்திருக்கிறார்.

இந்தக் கவிதை முதல் முறை பார்ப்பவருக்கு ஒரு அதிர்வை தரும் சொற்களை உடையது. அதிர்வைத் தந்துவிடுவதால் ஆபாசமாகி விடாது. தன் மகன் இன்னொருமுறை இந்த பூமியில் பிறந்து வஞ்சகர் கைகளினால் அணு அணுவாய் சாவதை விட தன் வயிற்றுக்குள்ளே சமாதி அடைவது குறைவான துன்பத்தை தரும் என்ற தாய்மைக் குமுறலை சொல்ல வந்த வார்த்தைகள் அவை. அதை உணர கண்டிப்பாக கவிதையை பற்றிய நேர்மையான பார்வை அவசியம் வேண்டும். அதுவரை டஒரு தாயின் வேதனை ஆபாசமாகத்தான் தெரியும்.
என்ன சொல்ல தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்தாலும் எழுப்ப முடியாது....

வாழ்த்துக்கள் நண்பன்.

அன்புடன்
முத்துகுமரன்

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

அன்புடன் முத்துகுமரனுக்கு,

உங்கள் கருத்து மிக்க சரியே -

கவிதை புரிந்துகொள்வதற்காக எழுதப்படுவதில்லை தான். அது அனுபவிப்பதற்காகவே எழுதப்படுகிறது.

ஒரு கவிதையை எழுதும் பொழுது கவிஞன் எந்த மனநிலையிலிருக்கிறானோ, அந்த மனநிலைக்கு அருகேயாவது நமது மனநிலை செல்லுமானால், அந்தக் கவிதையை எழுதும் பொழுது கவிஞன் பெற்ற அனுபவத்தை நாமும் எய்தி விடுகிறோம்.

எல்லாசமயத்தும், எல்லா கவிதையும் விளங்கிவிடுவதில்லை தான். ஆனால், தொடர்ந்த வாசிப்பு அந்த நடைக்கு நம்மைத் தயார் செய்து விடுகிறது.

தொடர்ந்து வாசியுங்கள்...

கவிதை மொழி புலப்படும்....

நல்ல எழுத்துக்கு முதல் தேவை - நல்ல வாசிப்பு.... தொடர்ந்த வாசிப்பு...

நட்புடன்
நண்பன்...

Muthu said...

நண்பன்,
வாங்க வாங்க. வலைப்பூவுலகுக்கு வரவேற்புக்கள்.

உங்களின் சமீபத்திய (இன்றைய) பதிவுகளில் பின்னூட்டம் இடமுடியவில்லை, அது நீங்களே விரும்பி அவ்வாறு செய்தீர்களா?. ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் இட நீங்கள் அதைப் பதியும்போது அனுமதித்தால்தான் மற்றவர்களால் இடமுடியும்.

நண்பன் said...

அன்புடன் முத்துவிற்கு....

நானாக விரும்பி வைக்கவில்லை. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். முழுமையடைய இன்னமும் சில நாட்கள் ஆகலாம். என்றாலும், இப்பொழுது எல்லா பதிவுகளிலும், யார் வேண்டுமானாலும் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்....

நன்றி முத்து

G.Ragavan said...

வணக்கம் நண்பரே....உங்களை இங்கே காண்பதில் மெத்த மகிழ்ச்சி.

கவிக்கோவின் இந்தக் கவிதையில் பிழையெதுமில்லை என்பது எனது கருத்து. சிறப்பாக பெண்ணியம் பேசியிருக்கிறார். கவிக்கோ மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

நண்பன் said...

நன்றி நண்பர் ராகவன் அவர்களே,

கவிதையில் குறை இருந்து அதை தெரிவிப்பது நல்லதே. ஆனால், இல்லாத குறைகளைக் கண்டுபிடிப்பதே தொழில் என கொண்டிருப்பது நல்லதல்ல. அது கவிதையை வளர்க்காது.

நன்றி

G.Ragavan said...

உண்மைதான் நண்பன். திருவிளையாடல் வசனம் நினைவுக்கு வருகிறது. பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார். குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

கவிதையில் குறைகளைச் சொல்வது என்பது வேறு. குறைகளைத் தேடுவது என்பது வேறு. நல்ல ரசிகனுக்குக் குறை மேலோட்டமாக படித்ததுமே தெரிந்து விடும். தேட வேண்டியதில்லை. பொய்யாச் சமைக்க வேண்டியதில்லை.

இப்னு ஹம்துன் said...

நண்பன்,
கவிக்கோ என் துரோணர்களுள் ஒருவர். இந்த மாதிரி அசட்டுத்தனமாக ஆரம்பத்தில் அவரிடம் கேள்வி கேட்டு 'வாங்கி' கட்டிக்கொண்டுள்ளேன்.

கோ.இராகவன் அவர்களின் கருத்தும் தான் எனதும்.

நண்பன் said...

நன்றி ராகவன், இப்னு ஹம்துன்.

கவிக்கோ அவர்களிடத்தில் நேரிடையாகக் கேள்வி கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்று படிக்கும் பொழுது, நீங்கள் கவிக்கோவிற்கு நெருக்கமானவர் என்று தெரிந்து கொண்டேன்.

இந்த முறை சென்னை சென்ற பொழுது, கவிக்கோவை நேரில் காண ஆவல் கொண்டு, அவருடைய இல்லத்திற்கு தொலைபேசிய பொழுது, அவர் ஒரு திருமண நிகழ்விற்காக, வேலூர் சென்றிருக்கிறார் என்று கூறி விட்டனர். மறு நாள் செல்லலாம் என்று நினைத்தால், அண்ணன் அறிவுமதி அவர்களைச் சந்தித்து பேசி விட்டு விடுபடுவதற்குள் நாள் கழிந்து போய்விட்டது. அடுத்த நாள் நான் பெங்களூர் திரும்ப வேண்டிய கட்டாயம்.

அதுசரி, உங்களுக்கு கவிக்கோவின் மீது பற்றுள்ள மற்ற நண்பர்களைத் தெரியுமா? இசாக்....?

இப்னு ஹம்துன் said...

நண்பன்,

கவிக்கோவுடன் நெருக்கமெல்லாம் அவருடைய கவிதைகளின் வாயிலாகத் தான்.
அவருடைய ஒரு கட்டுரையின் கருத்துப் பற்றி கேள்வி கேட்டு கடிதம் எழுதினேன். மறுமொழி இல்லை. அதன்பின் சில நாட்கள் கழிய, காரைக்காலில் ஒரு சொற்பொழிவுக்கு வந்த அவரிடம் என் கடிதம் பற்றியும் அந்த கேள்வி பற்றியும் நினைவூட்டினேன். சிரித்தப்படி விளக்கம் சொன்னவர் 'நிறைய படிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

அவருடைய பதிலில் திருப்தி அடையாமல் மீண்டும் கடிதம் எழுதினேன். இந்த முறை பதில் கடிதம் வந்தது "இனி என் எழுத்துக்களைப் படிக்காதீர்கள்''. (இதைப் பற்றி காரைக்காலில் ஒரு தமிழ் பேராசிரியரிடம் சொன்னபோது கவிக்கோவிடமிருந்து பதில் வந்ததையே நம்ப முடியவில்லை என்றார்). அது இருக்கும், ஒரு பதினைந்து வருடம்.

கவிக்கோவின் எழுத்துக்களை இன்றளவும் தேடித் தேடி படிக்கிறேன்.

இசாக் அவர்களுடைய சில கவிதைகளைத் தான் தெரியும். அவர் உங்கள் நண்பராக உள்ள பட்சத்தில் பரஸ்பரம் அறிமுகப்படுத்திவையுங்களேன். நன்றி.

நண்பன் said...

இப்னு ஹம்தான்,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நண்பர் இசாக் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். அல்லது உங்களாலே அவரைத் தொடர்பு கொள்ள முடியுமென்றால், அவருடைய மின்னஞ்சல் முகவரி இதோ iishaqi74@yahoo.com

நண்பன் said...

ஹம்தான் -

ஒரு சிறு திருத்தம்.

இசாக்கின் மின்னஞ்சல் முகவரி ishaqi74@yahoo.com

வலைப்பூவின் முகவரி
http://iishaq.blogspot.com/

நளாயினி said...

உண்மையில் எனக்கு முதலில் கவிதை புரியவே இல்லை. உங்களின் விளக்கத்திற்குப்பின் புரிந்தது.

N Suresh said...

அன்புள்ள நண்பரே,

உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்களின் விமர்சனங்களுக்கு பின்னூட்டமிடும் அளவிற்கு நான் வளரவில்லை என்றறிவேன்.

அதனால் என் மனதில் பட்டதை தாழ்மையோடு எழுதுகிறேன். தவறுகள் ஏதாவது இருப்பின் தயவாக மன்னிக்கவும்.

உங்களுடைய இந்த விமர்சனக் கட்டுரை மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். தேவையான எல்லா விவரங்களையும் ஆங்காங்கே பதித்து அழகு படுத்தியுள்ளீர்கள்.

சரி... இப்போது அந்த கவிதை வரிகளுக்கு வருகிறேன். ஆணியும் முள்ளும் அன்னை மறியாள் கேட்டது, வருங்காலத்தில் தனது பிள்ளை சிலுவையில் அறையப்படுவார் என்று முன்னமே அறிந்திருப்பதால் தான்.. என்று கவிஞர் நினைத்திருக்ககூடும் என்று நாம் புரிந்து கொள்வது சரிதானே? - இப்படி நாம் புரிந்துகொள்ளலாமா? வளரும் சிறுவன் ஒருவனின் கேள்வியாக நினைத்து இதற்கு அன்பாக பதிலிடவும்.

அன்புடன்
என் சுரேஷ்
nsureshchennai@gmail.com

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்