"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, April 28, 2007

இஸ்லாமிய இலக்கிய மாநாடு - சென்னை.

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,


இஸ்லாமிய இலக்கிய கழகம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டை சென்னையில் மே மாதம் நடத்தவிருக்கின்றது. தேதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், மாநாட்டு அமைப்பாளர்களைத் தொடர்பு கொண்ட பொழுது, மாநாடு மே 25,26,27 தேதிகளில் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மாநாட்டில் அனைவரையும் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள். மாநாட்டில் கலந்து கொள்ள கட்டணம் ரூ.250/- மட்டுமே. உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இம்மாநாட்டில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்.)கலைஞர் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக, அவருக்கு, ரூ.100,000 பரிசுத்தொகையுடன் 'உமறுப்புலவர்' என்ற விருது வழங்கிக் கௌரவித்தலும் முக்கிய நிகழ்வாக இருக்கும்.


மாநாட்டையொட்டி, கருத்தரங்கங்கள், கவிதைப் போட்டிகள், மலர் வெளியிடுதல், புத்தக வெளியீடுகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. இவை பற்றிய விவரங்கள் அனைத்தும் நாளை தருகிறேன் - scan செய்து.

மொத்தம் பதினொரு கருத்தரங்கள் நடைபெற உள்ளன. இதில் ஐந்தாவது கருத்தரங்காக, ஊடகத்துறை இடம்பெற்றுள்ளது. இதில் பேசுவதற்கு நானும் அனுமதி கேட்டுள்ளேன். ஊடகத்துறை என்று அவர்கள் தந்திருக்கும் ஊடகங்கள் - பத்திரிக்கை, வானொலி, மற்றும் தொலைக்காட்சி மட்டுமே.

அமைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, இதில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அது பற்றி நான் பேசுகிறேன் என்று சொல்லி உள்ளேன். அது இப்பொழுதுக்குப் பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தால், அது பற்றி பேசுங்கள் என்று கூறியுள்ளனர். இல்லையென்றால், ஊடக கட்டமைப்புகள் என்ற பெயரில் பேச வாய்ப்பு தாருங்கள் - அதிலேயே இணையத்தைப் பற்றியும் பேசி விடுகிறேன் என்று கூறியுள்ளேன்.

வாய்ப்பு தரப்பட்டாலும், தரப்படாவிட்டாலும், நான் தயாரித்த உரையை - பல பிரதிகள் எடுத்து, மாநாட்டு அரங்கில் அனைவருக்கும் விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் - இஸ்லாமிய இலக்கிய கழகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

முகவரி -

இஸ்லாமிய இலக்கிய கழகம்
27, உட்ஸ் சாலை, அண்ணா சாலை, சென்னை - 600 002
தொலைபேசி : 044-28460128, தொலைநகல்: 044-28460128
கைபேசி: 9840040067.

மற்ற விபரங்கள் - நாளை தரப்போகும் ஒளிநகலில் முழுவதையும் காணுங்கள்.

அதுவும் போதாது என்றால், தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் - விபரங்களை உரியவர்களிடமிருந்து பெற்றோ அல்லது அவர்களை உங்களுடன் தொடர்பு கொள்ளவோ செய்யச் சொல்கிறேன்.

அன்புடன்

நண்பன்.

Friday, April 27, 2007

காதலைத் தேடி.........

நேற்றிரவு
அகராதியில் தேடியலைந்தேன்
காதலென்ற சொல்லை.

எங்கோ
தொலைந்து போய்விட்டிருந்தது.

இன்றோ
அது மீண்டும் வந்தது
எவ்வுடையும் அணியாது
எந்தப் பம்மாத்துமில்லாது
ஏகாந்த வெளிகளில்
புலரும் ஒளிபோல்

மீண்டும் பிடித்து
அடைத்து வைத்தேன்
அகராதியினுள்.

இப்பொழுது,
அங்கே சொல் இருக்கிறது.
பொருள் தானில்லை.

வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பில்
உதிரா வண்ணம் போல்
அது மட்டும் உன்னிடத்திலே
ஒட்டிக் கொண்டுத் திரிகிறது
அகராதிகளை அர்த்தமற்றதாக்கி.

Monday, April 23, 2007

தஸ்லிமா நஸ்ரின்

இந்தப் பதிவு இங்கு
பின்னூட்டமாக இடப்பட்டது. ஒரு தனி பதிவு என்பதால், கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். படியுங்கள்.

தஸ்லிமா நஸ்ரின் புத்தகம் வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டதா? இப்பொழுது போலிருக்கிறது - அவருடைய லஜ்ஜா என்ற புத்தகத்தை வாங்கி. பின்னர் அது தடை செய்யப்பட்டு விட்டது.



அந்தப் புத்தகத்தில் அவர் இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் எழுதவில்லை. அதில், அயோத்திய மசூதி இடிப்பு ஒட்டி, நடந்த இனக்கலவரத்தில், அதன் உணர்ச்சி மேலீட்டில் இருந்த

இஸ்லாமியர்கள், நடத்திய வன்முறை தான் அது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளான போது, அந்நிய நாட்டில், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றும் வங்காளதேசத்தில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் தொடுத்த பதில் தாக்குதல் தான் அது.

வங்க தேசம், எல்லைக் கோடுகளை அகற்றி விட்டால், இந்தியாவின் மற்றொரு மகாணமாகத் தான் இருக்கும். அந்த வகையில் தான் அவர்கள் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவத்திற்கு எதிர்வினை புரிந்தனர்.

இந்த சம்பவத்தை தஸ்லிமா நஸ்ரின் தன் நாவலில் விலாவாரியாக எழுதி இருக்கிறார். இது ஒரு செய்திப் பதிவு மாதிரி.

ஆனால், வங்க முஸ்லிம்கள் அதை அவ்வாறு எடுத்துக் கொள்ளத் தயாராகவில்லை. தஸ்லிமா தங்களுக்குத் துரோகம் செய்தார் என்றே எடுத்துக் கொண்டனர். இது அவர் ஒரு பெண் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல. மாறாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதினார் என்ற குற்றச்சாட்டு. (இஸ்லாத்திற்கு எதிராக அல்ல)

ஆனால், பெண்களுக்கு எதிராக இணக்கமாக நடந்து கொள்பவர்கள் இவர்கள் என்று சான்றிதழ் வழங்க இயலாது. இன்றும் கூட அவர்கள் பெண்களை அடக்கி ஆள விரும்பவே செய்கின்றனர். இஸ்லாத்தின் பெயரால், இவர்கள் செய்யும் அடக்குமுறை மிகத் தவறானது. ஆனால் அதை இஸ்லாத்தின் மீது ஏற்றிக் கூறுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.

இப்பொழுது பாருங்கள் ஹாலிதா ஜியா-வை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். ஷேக் ஹஸினா நாடு திரும்புவதை தடுக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் - அரசியல். இந்த இரு பெண்மணிகளும் தங்களுக்கிடையே இருந்த அகங்காரத்தைக் கொண்டு, வங்க தேசத்தையே அங்கஹீனம் செய்தனர். அதற்கு எதிர்வினையாக, இடைக்கால அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி வற்புறுத்துகிறது. நாளை இதையே இஸ்லாம் இந்தப் பெண்களை நாடு கடத்தினர் என்ற குற்றம் சாட்டினால் அது தவறில்லையா?

அதுபோல தான் - இதுவும். இஸ்லாமியர்கள் என்றால் உடனே அவர்கள் அனைவரும் உணர்ச்சிகளைக் கடந்த தெய்வீக ஆத்மாக்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகளை அளவு கோலாக வைத்துக் கொண்டால், அது அளவெடுப்பவரின் தவறே அன்றி, இஸ்லாமியர்களின் தவறோ அல்லது இஸ்லாத்தின் தவறோ அல்ல. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் தவறான கருத்தாக்கங்களுக்கு இஸ்லாமும் இஸ்லாமியர்களும் பலி இடப்படுகின்றனர் என்பதே உண்மை.

தஸ்லிமா நஸ்ரினுக்கு எழுந்த எதிர்ப்பு, இஸ்லாம் வகுத்த வழிமுறைகளால் எழுந்ததன்று. மாறாக, தாங்கள் இந்துக்களுக்கு எதிராக தொடுத்த தாக்குதலை - அனைவரும் மூடி மறைத்த பொழுது, பத்திரிக்கைகள், ஊடகங்கள், என்ற அனைத்தும் மௌனம் காத்த பொழுது, இந்தப் பெண் அவற்றை நாவலாக எழுதி ஊரறியச் செய்து விட்டாளே என்ற ஆத்திரம் தானே தவிர, இஸ்லாத்திற்கு எதிராக எழுதினார் என்பதினால் எழுந்த எதிர்வினை அல்ல.


நான் இறை நம்பிக்கையற்றவள் என்று சொன்னது - ஓட ஓட விரட்டிய மக்களுடன் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ள இயலாத மனநிலையில், எழுந்த சலிப்பாகத் தான் இருக்கும். அதுபோலவே, அவருடைய சில விமர்சனங்களும் - ஒரு பெண்ணியவாதியாக எழுப்பப்பட்டதே - அவரை மாதிரியே பல பெண்கள் இன்று குரல் எழுப்புகின்றனர். சில இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் குறித்து குரல் எழுப்புகின்றனர். இது காலகாலமாக இஸ்லாத்தினுள் நடைபெற்று வரும் தர்க்கங்கள் தான். எல்லா மதங்களிலும் இருக்கும் ஆணாதிக்க வர்க்க சிந்தனை இஸ்லாமியர்களிடம் - அதுவும் குறிப்பாக முல்லாக்களிடம் இருக்கக் கூடாதா என்ன? இன்றும் மற்ற மத ஆண்கள் தங்கள் ஆணாதிக்கத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் பொழுது எழாத விமர்சனம் இஸ்லாமியர்கள் என்னும் பொழுது, பன்மடங்கு பெருக்கப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. இதை வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற அளவில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இஸ்லாத்துடன் இணைத்து பேசுவது எப்படி முறையாகும்?

பெண்களுக்கு எதிராக இஸ்லாத்தின் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன என்ன?
பர்தா, கல்வி.. அப்புறம்?

பர்தா இன்று தமிழகத்தில் கேரளாவிலும் கூட. துபாயிலும் தான். (நான் பார்க்கின்ற பெரும்பான்மையான பெண்களின் உடைகள் - ஒருவேளை பாரீஸ் நகரம் இங்கு வந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு அத்தனை நவநாகரீகம் - போங்கள்.) பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை.

கல்வி - இது வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம். வசதி இருக்கிறவர்கள் ஓரளவிற்கேனும் படிக்க வைக்கிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்வது. நீங்கள் சர்ச்சார் அறிக்கையைப் படித்திருந்தால், உண்மை நிலவரம் புரியும்.

தஸ்லிமா தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பெண் என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி அவருடைய கவிதைகளையும், எழுத்துகளையும் எல்லோரையும் போல நானும் கூடத்தான் விரும்பிப்படிக்கிறேன்.

சுயமாக சொந்தக் காலில் நிற்கும் தஸ்லிமாவால், பேச முடிந்த விஷயங்களைப் பீடி சுற்றி தன் குடும்ப வருவாய்க்குக் கொடுத்து உதவும் பெண்களால் பேச முடியாது என்பதனால், பெண்கள் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பது சரியான தர்க்கமாக இருக்க முடியாது.

பெண்களுக்கும் விடுதலை வரும். கொண்டு வருவோம். தூரம் அதிகமில்லை.

Monday, April 16, 2007

அன்புடன் நண்பர் அர்விந்த நீலகண்டனுக்கு

அன்புடன் நண்பர் அர்விந்த நீலகண்டனுக்கு

நண்பனின் திறந்த மடல்,


// TOR is an add on to the firefox browser. By enabling TOR, you can hide your IP address. The IP packets will travel through different computers around the world and will reveal someone else's IP. //

யாருடைய முதுகிலோ சவாரி செய்து வருவேன் - அதைக் கேட்கக் கூடாது - எவனோ மாட்டிக் கொண்டு சாகட்டும் - ஆனால், என்னுடைய கருத்து மட்டும் வாழட்டும் - வசதியான ஒரு சந்தில் இருந்து வரும் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். இது தான் உங்கள் தார்மீகமா?

சில எல்லைகளைக் கடந்தும் சிலரை நண்பர்களாக வரித்துக் கொண்டு, ஒரு மதிப்பு வைத்திருந்தேன் - சிலருடைய பதிவுகளை வாசித்து ஒரு சிநேகப்பூர்வமான தூரத்திலும், மேலும் ஒரு சிலரை வாசித்து கருத்தாட முயன்றும் - ஒரு கண்ணியமான இடைவெளியுடன் மதிப்பு வைத்திருந்தேன்.

அதிலும் நீங்கள் உங்களுடைய கூடுவிட்டு இருந்து வெளிவர தொடங்கி, பிற நண்பர்களைச் சந்திக்க ஆரம்பித்த பொழுது, வெளிப்படையாக நீங்கள் இயங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றே மகிழ்ந்தேன்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களில், வெளியான சில பதிவுகள் அதை சிதைத்துக் கொண்டு வருகின்றன. மேற்கண்ட வரிகளை வாசித்த பின்பு - an intellect on the other bank - என்று உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை சிதையும் பொழுது,

உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது - YOU too Arvind?

உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள் - நான் சொல்வதை எதிரொலிக்கும்.


Google Reader இருப்பதால் நீங்கள் எழுதுபவற்றை வாசிக்க இயலும். சிலர் எழுதுவதை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே வாசித்து வருகிறேன் - அதாவது I hate to Love you or Love to hate you என்ற வகை. எப்படி எடுத்துக் கொள்வது என்பது உங்களது சௌகரியம். ஏனென்றால், தாந்தோன்றித்தனமாகத் திரிந்து கொண்டிருந்த என்னை ஒரே அடியில் மாற்றிப் போட்டு, என் மதத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்க வைத்த நண்பர்கள் நீங்கள் தானே?

தருமியுடனான எனது உரையாடலைப் படித்துப் பாருங்கள் - நண்பன் அடுத்த உரையாடலை எப்போ ஆரம்பிக்கலாம் - I am Game என்று எழுதி ஆவலுடன் காத்திருக்கிறார். ஏன் நீங்கள் ஆதரவளிக்கும் நண்பரால் அது முடியாமற் போயிற்று?

அமைப்பு ரீதியாக இயங்க வேண்டும், காவல் துறை, நீதித் துறையை முறைப்படி அணுக வேண்டும் என்ற வரிகளைப் பற்றியா விமர்சனங்கள் - ஆஹா, எத்தனை அழகு.!!!

இந்த மூன்றும், தங்களுக்கென ஒரு அமைப்பை நிறுவுதல், காவல்துறை, நீதிதுறையை அணுகுதல், இவை எல்லாம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை அல்லவா? அல்லது இந்திய இறையாண்மை இந்த அடிப்படை உரிமைகளை இஸ்லாமியர்களுக்கு மறுக்கிறதா?

நண்பன் ஒரு தீவிரவாதி என்ற ரேஞ்சுக்கு எழுதியவர்கள் - சற்று காலம் பின்னோக்கிப் பார்க்கட்டும் - நேசகுமாரும், இஸ்லாமிய இனதுரோகிகளும் என்ற பதிவை எழுதியதும், என்ன என்ன பேசினீர்கள்? எழில் என் பதிவிற்கு சுட்டி கொடுத்து, நண்பன் ஷாஜஹானின் சிறப்பான பதிவு என்று ஒரு பதிவு போட்டு, அகமகிழ்ந்தீர்களே - அதில், நான் (நேசகுமார்) அங்கு வந்து கருத்து சொன்னால், அது அவருக்கு (நண்பனுக்கு) ஒரு நெருக்கடியைக் கொடுக்கும் அதனால் எழுதவில்லை என்றல்லவா சொன்னார்.

ஆஹா! இதல்லவோ நாடகம்!!!

இன்றும் நான் மாறவில்லை. என் போக்கிற்கு, நியாயம் என்று பட்டதைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆனால், இன்று மட்டும் அடி வயிறு கலங்கிப் போனதேன்?

விடாது கருப்பை எதிர்த்து ஒரு கருத்து சொல்லிவிட்டவுடன், ஒடோடி வந்து, அகமகிழ்ந்தவர்கள் எல்லாம் எங்கே?

ஆக, எனக்கு சாதகமானவற்றை பேசிக் கொண்டு, நாங்கள் வழங்குபவற்றை கையேந்தி வாங்கிக் கொண்டு, இணங்கி நடந்தால் உனக்கும் ஒரு வாழ்வு அளிப்போம். அவ்வாறின்றி என் உரிமை, சுதந்திரம், கருத்து என்றெல்லாம் பேசினால், உன் மீது சகல வித குற்றங்களையும் அள்ளி வீசி, அழிச்சாட்டியம் செய்து அழித்து விடுவோம் என்பது தான் உங்கள் தார்மீகமா?

இது தான் இந்துத்வம் இல்லையா?.

தன்னை அம்மணம்மாக்கிக் கொண்டு, அவலட்சணமாக நிற்கும் அருவெறுக்கத் தக்க இந்துத்வம்.

தங்களுக்கு சௌகரியப்படும் பொழுது தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடுவது - இல்லையென்றால் காலில் போட்டு மிதிப்பது

இதைத்தானே அனைவரும் எதிர்க்கின்றனர்!

சிந்தியுங்கள். தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவது தற்காலிகமாக ஒரு பாதுகாப்பு என உணர்ந்தீர்கள் என்றால், செய்யுங்கள். இல்லையேல், இந்த முடிவை தவிர்த்து விட்டு, வெளிப்படையாக இயங்குங்கள்.

எதை வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால், குறைந்தபட்ச மனித மாண்புகளை மீறாமல் செய்யுங்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு என்றுமே பதில் சொல்வோம் - பதிலை தேடுவோம் - தேடுவதில் கற்றுக் கொள்ளுவோம்.

மற்றவை உங்கள் விருப்பத்திற்கு,

அன்புடன்,
நண்பன்

Friday, April 13, 2007

மன்னிக்கலாமா ராமனை?

இந்த வார தமிழ் மணமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது - ராமன் போன்ற உத்தமன் தான் என்ற தோல் போர்த்திய ஒரு வலைப்பதிவர் செய்த அயோக்கியத்தனத்தால். He proved that the intellectual giants of the byegone era are fast turning into pygmies.

ஒரு பதிவில் மன்னிப்பு கேட்டு, குரு என வணங்கி விட்டு, பின்னர் தனிமையில் அமர்ந்து கொண்டு, அந்த குரு எழுதிய மாதிரி ஆபாசங்களை அரங்கேற்றிய அந்த வலைப்பதிவரின் வக்கிரத்தைத் தெரிந்து கொண்டும் அவருக்கு மேலும் ஒரு மன்னிப்பை வழங்கி இருக்கிறார்கள் அமுக அன்பர்கள்.

பெருந்தன்மையானவர்கள்.

ஆனால் இந்த வலைப்பதிவரின் மோசடித்தனத்தால் பாதிக்கப்பட்ட, மனம் வருத்தப்பட்ட மற்ற பல வலைத் தள அன்பர்கள் மன்னித்து விட்டார்களா? இல்லை அமுக அவர்களையெல்லாம் மறந்து விட்டார்களா?

இந்த நபர் தான் சல்மா அயூப் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது ஒரு இஸ்லாமியப் பெண் தன்னை ஒரு சீர்திருத்தவாதியாகவும், இஸ்லாத்தைத் தட்டி கேட்பதாகவும் பொய்யாகவும், புனைவாகவும் ஒளிந்திருந்து விமர்சனங்களை எழுப்பி இஸ்லாமிய பதிவர்களின் மன உளைச்சலுக்குக் காரணமானவர். அப்பொழுதே இவ்வாறு எழுதுபவர் ஒரு உண்மையான இஸ்லாமிய பெண் அல்ல என்று உறுதியாகத் தெரிந்ததால், அந்த போலியின் வலைத்தளத்தில் எந்தப் பின்னூட்டங்களும் நான் இடவில்லை. ஆனால், அந்தப் போலிக்கும் மாய்ந்து மாய்ந்து விளக்கம் எழுதிக் கொண்டிருந்த அன்பர்களும் நண்பர்களும் உண்டு. மற்றும் அந்தப் போலியை உண்மை என நம்பி, இஸ்லாம் இப்படித்தான் என தங்கள் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொண்ட நண்பர்களால் இஸ்லாமியர்கள் அடைந்த வருத்தத்திற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்பொழுது அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் - இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்தவர்களின் யோக்கியதைப் பற்றி.

உண்மையான விமர்சனங்கள் வேறு - காழ்ப்புணர்ச்சியில் எழுப்பப்பெறும் விமர்சனங்கள் வேறு என்பது.

தங்கள் கொள்கையில் - நம்பிக்கையில் - எத்தனை ஏளனத்திற்கும், இடர்பாட்டிற்கும் ஆளானாலும் மாறாது உறுதியாக இருப்போம் என்று நிருவிக் காட்டிய இஸ்லாமிய வலைப்பதிவர்களைக் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் - அடிப்படைவாதிகள் என்று.

இப்பொழுது அனைத்து வலைப்பதிவர்களின் மனசாட்சியின் முன் நான் வைக்கும் கேள்வி:::

சொல்லுங்கள்,

யார் அடிப்படைவாதி என்று?

தங்கள் மதத்தைப் பற்றிய செய்திகளை மட்டும் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டு, நட்புடன் எழுதிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துவிட்டு, பின்னர் அவர்கள் பதில் எழுதத் தொடங்கியதும், அய்யோ, அம்மா இவன் அடிப்படைவாதி என புலம்புவது எந்த வகையில் நியாயம்?

இந்த நபர் குறித்து பல செய்திகளும் வெளி வருகின்றன.

இவர் எழுதிய போலி பெயர்களில் மேலும் சில

ஆரோக்கியம்

ஏமாறாதவன்

என்ற பெயர்களிலும் எழுதியவர் இவர் என சொல்லும் பொழுது -

இவரால் நான் தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

'எல்லா அய்யன்களையும் போட்டுத் தள்ள வேண்டும்...' என்ற அளவில் கூட வன்முறைகளையும் பிற இனத்தவரையும் தாக்குதல் கூடாது என்று எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

'எந்த பிராமணனும் என்னை இம்சிக்கவில்லை ' என ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டும், என் மனசாட்சியைத் தொட்டு, தைர்யமாக என வலைப்பதிவில் எழுதியவன். அந்த வரிகளை எழுதி முடித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, அந்த வரிகளை சோதனை செய்யும் முயற்சியாக இந்த நபர் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

ஏமாறதவன் என்ற பெயரில் எழுதிய இந்த நபர் - மரியாதை இனியும் அவசியமோ? - இவன் ஏமாறதவன் என்ற பெயரில் எனக்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - நான் அதை
பிரசுரிக்கவில்லை. அதிலே அவன் எழுதிய வரிகள் - 'நண்பன் ஷாஜி ஐயா - உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்' என்னுடைய ஆன்மீகத்தைப் பற்றி விமர்சிக்க இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது?


நான் பேச விரும்பும் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள இவனால் முடியுமா?

குரானில் ஆபாசம் நிறைந்திருக்கிறது என எழுதிய நாய் இவன் தானே? Secret, ஆடை என்று குழப்பிக் கொண்டு, இப்னு ஹம்துனை வம்புக்கு இழுத்தவன். பின்னர், அபூமுஹை விளக்கம் எழுதினார் - நான் ஆறு குரான் மொழி பெயர்ப்புகளைக் கொண்டு, அவற்றிற்கான விளக்கத்தைக் கொடுத்த பொழுது, புரிந்து கொண்டதற்காகவும், தவறாக எழுதியதற்காகவும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத இந்த நாய் - என் தளத்திற்கு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - எனக்கு ஆன்மீக அறிவு கிடையாது என்று. உண்மையான விளக்கம் வேண்டி எழுதிய வலைப்பதிவராக இருந்திருந்தால், அந்த விளக்கங்களுக்காக நன்றி கூறி இருக்க வேண்டும். ஆனால், அறிவுகளில் ஒன்று குறைவாக இருக்கும் இவனிடத்தில் நாகரீகம் காட்ட வேண்டுமா?

இவ்வாறு தவறு செய்ததை ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டி விளக்கம் கொடுத்தும், அதைக் கண்டு கொள்ளாமல், மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிக் கேவலமாக உண்மமக்குப் புறம்பாக பேசவும் எழுதவும் செய்த இவனுக்கு அமுக நண்பர்கள் மன்னிப்பு வழங்கியதை கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலவில்லை.

மன்னிப்பு என்ற வார்த்தையின் மகிமையை அறிந்தவனிடத்தில் தான் அதை வழங்க வேண்டுமே தவிர, அதன் மாண்புகளைப் பற்றித் தெரியாத இவனுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

22ஆம் தேதிய வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு போக வேண்டும் - அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த நாயும் கலந்து கொள்ளும் என்று தெரியவந்த பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது என்னால் இயலாது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால்,

- குரானில் ஆபாசம் மலிந்து இருக்கிறது என்ற பொய்யான செய்தியைப் பரப்பிய இவனது முகத்தில் குறைந்தபட்சம் காரி உமிழாமல் நான் திரும்பினால்,

- இஸ்லாமிய அடிப்படை வாதி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் எட்டு மாதங்கள் வலைப்பதிவே எழுதுவதை விட்டு அஞ்ஞான வாதம் புரிந்த என் மன வேதனைகளுக்காக இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

- இஸ்லாமிய வலைப்பதிவர்களை தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டுமென்று முனைந்து செயல்பட்டவனை இவன் என்று தெரிந்து கொண்டும் இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

அது என்னுள்ளே ஏற்படுத்தும் குற்ற உணர்விற்கு யார் பெறுப்பேற்பது?

அமுக நண்பர்கள் மன்னித்திருக்கலாம்.

ஆனால், இஸ்லாமிய வலைப்பதிவர்களே நீங்கள் சொல்லுங்கள் -

இவன் மன்னிக்கப்படவேண்டுமா?

இந்த விடுமுறையில், சென்னைக்கு வரும்பொழுது கண்டிப்பாக இது குறித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சந்தித்து உரையாடுவேன். காவல்துறைக்கும், வழக்காடு மன்றங்களுக்கும் இவனை இழுத்துச் செல்வதன் சாத்தியதைப் பற்றிக் கண்டிப்பாக ஆய்வோம்.

மேலும்

உடனடியாக இஸ்லாமிய வலைப்பதிவர்கள் இவனது அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பி,

இவன் செய்த ஈனச்செய்கைகளைக் குறிப்பிட்டு, மத நல்லிணக்கத்திற்கு தெரிந்தே வேட்டு வைக்கும் இவன் போன்ற நபர்களுக்கு தொடர்ந்து உங்கள் நிறுவனத்தில் பணி கொடுத்து, சம்பளம் கொடுத்து ஆதரிக்க வேண்டுமா ?

என்ற கேள்வியுடன் மின்னஞ்சல் அனுப்பலாமா? இது குறித்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எல்லோருக்கும் சம்மதமென்றால், அதை செய்யலாம்.

இது குறித்து, சென்னை வரும் பொழுது சந்திக்க விரும்பும் வலைப்பதிவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் தனி மடல் மூலமாக.

Wednesday, April 11, 2007

பட்டாம்பூச்சியா உங்கள் மனைவி?

பட்டாம்பூச்சி கனவுகளோடு
மல்பெர்ரி இலையினடியில்
பதுங்கி இருந்தேன்.

பற்களற்ற தாடைகளால்
இடைவிடாது அரைத்துண்டாக்கிய
துவாரப்பெருவெளிகளில்
எனக்கான சிறகுகள் காத்திருந்தன

பெருவெளியனைத்தும் நிறைத்து
வந்த நீயென் சிறகுகளாய்
பொருந்தக் காத்திருந்தேன்

நீயும் அழகிய சிறகுகள்
பொருத்துவதாய் உறுதியுரைத்தாய்.
சிறப்பானதொரு நந்தவனத்தில்
சிறகடிக்கவிடுவதாக நம்பிக்கையளித்தாய்.

என்னைச் சுற்றிச் சுற்றிப் பின்னிய
உனது வலைக்கயிற்றுப் பசையில்
கூட்டுப்புழுவாய் உறைந்தேன்.

இதமாய்த் தொடங்கி இறுக்கமாயணைத்து
இன்பமாயமைந்த தொடக்கம்
புழுக்கமாக மாற்றமுறுவதையுணர்ந்தும்
கூடுவிட்டு வெளியேறவியலாத
சிறையடைத்தாய்

உன் விருப்ப தினமொன்றில்
பிரி பிரியாக உதிர்த்து
பட்டாய் வார்த்து
பகட்டாக அணிந்தாயென்னை

உனக்கான அலங்காரப் பொருட்களில்
முதன்மையாக வைத்தாய்.
பெருமைபடுத்தியதாக
அலமாந்து கொண்டாய்.

இந்தப் பட்டாடையின் நூல்களுக்கிடையே
இன்னமும் விடுதலை பெற்று
பட்டாம்பூச்சியாகி விடலாமென்ற
தவிப்போடு துடித்திருக்கும்
என் ஆன்மாவை
நீ அணியும் பொழுதெல்லாம்
தன்னை இழந்து கொண்டிருக்கும்
என்னை அறிவாயா?

Saturday, April 07, 2007

நண்பன் .... (தருமியும் படிக்கலாம்...)

தட்டுங்கள் திறக்கப்படுமென்று
கூவிக்கொண்டே
கூடியவர்களின் வரிசை
நீண்டுகொண்டேயிருக்கிறது.

இல்லையென மறுக்கமாட்டானென
வான்நோக்கியுயர்த்திய
கைகளால்
வெளிச்சம் தேய்ந்துகொண்டேயிருக்கிறது.

உண்டென்றும் இல்லையென்றும்
வாத பிரதிவாதங்களின் குரலில்
பிரபஞ்சமே ஊமையாகின்றது

எம்மை ஏன் கைவிட்டீரென
அழுகின்ற குரலின்
குற்றச்சாட்டொன்றும் வீசப்படுகிறது

யானைப்படை விரட்டியடித்த
அபாஃபீல்கள்
எங்கே போயினவென்ற
ஏளனமொன்றும் எழுந்து நடக்கிறது.

எல்லோருக்கும் ஏதோவொரு
அதிசயமொன்று வேண்டியதிருக்கிறது
அவனிடமிருந்து.

ஏதும் கிடைக்காதென்று
அலுப்படைந்தவர்கள்
உறுதியாக மறுக்கின்றனர்
அவன் இல்லையென்று.

மளிகைப் பட்டியல் நீளம்
கோரிக்கைகளுடன்
தேடித்தேடி அலைகின்றனர்
பல வழிகளினூடாகவும் -
அவன் இருப்பை நம்புபவர்கள்.

ஏதோவொரு
எதிர்பாராத தருணத்தில்
எதிர்பட்டுவிட்ட
அவன் கேட்டான் -
எடு பட்டியலை
கொடுக்கிறேன் கேட்டதை

ஏதுமில்லை.
நமக்குள் கேட்பதும்
கொடுப்பதுவுமெதற்கு
ஏதோ ஒரு பரவசத்தில்
இயல்பாய் பிறந்த சொற்கள்
என்னிடமிருந்து.

அவனே திகைத்த பொழுது
நமக்குள்
நன்றியும் மன்னிப்பும்
கிடையாது
போய் வா

ஒரு துளி திகைப்பு
புன்னகையாக
மலர்ந்திறங்கும் வேளையில்
மறைந்து போனான்

யாரிடத்திலும்
சொல்லப்போவதில்லை
அவன் வந்ததையும்
போனதையும்
புன்னகைத்ததையும்.

Thursday, April 05, 2007

இலங்கை ஏமாற்றியதா?

கடைசிப் பந்து.

எல்லோரும் நகத்தைக் கடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ரவி போப்ரா, தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார் - எதிர் முனையில், மெஹ்மூத். இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

ஆனால், இலங்கை அணியினர், கூடி நிற்கின்றனர். கலந்து பேசுகின்றனர். எக்ஸ்ட்ரா மட்டுக் கொடுக்காதே - அறிவுரைகள்.

தேறாது என்ற நிலையில் இருந்து, வெற்றியை முகரும் தூரத்திற்கு தன் அணியைத் தூக்கி வந்த போப்ரா - தயார்.

இலங்கையின் தில்ஹாரா, தன் அணியினரின் அறிவுரை எல்லாம் கேட்டுக் கொண்ட பின்னர் - ஓடி வருகிறார்.

இரு அணி என்ற நிலை மாறி - இப்பொழுது இருவர் மட்டுமே - வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவே.

தில்ஹாரா - போப்ரா.

இருவருமே தங்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் அழுத்தத்தை உணர்கிறார்கள். தோற்றால், அதில் அணியின் பங்கு எத்தனையோ - அத்தனை பங்கு இந்த இருவருக்கும் உண்டு.

ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், தவிப்போடு நிலைமையக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அதே நிலைமை தான்.


தில்ஹாரா ஓடினார் - ஓடினார் - பந்தை விடாமல் பிடித்துக் கொண்டே ஒடினார். எதிரில் இருந்த போப்ரா சற்றே குழப்பத்துடன் - பிறகு திரும்பி ஒரு சுற்று. மீண்டும் தயார் நிலையில்.

இது சரியா?

இருவருமே அழுத்தத்தின் உச்சத்தில் இருக்கும் பொழுது, பந்து வீச்சாளர் மட்டும் தன் ஓட்டத்தை ஓடி, ஒரு ஒத்திகைப் பார்த்துக் கொண்டு, பாட்ஸ்மேனின் அழுத்தத்தை எகிற வைத்து - அடுத்த பந்தைப் போட்டு, பாட்ஸ்மேனைத் தவறிழைக்க வைத்தது சரியா?

ஆட்ட விதிகள் படி, பந்தை வீசாதது தவறில்லை எனலாம்.

என்றாலும், அந்த கடைசி பந்தை வீசுவதாகப் பாவனை செய்து, வீசாமல் போனது - இறுதியில் ஏமாற்றி விட்டார்களோ என்று தான் எண்ண வைக்கிறது....

இது சரியா?

விதிகளின் படி வென்றிருக்கலாம் - ஆனால், பாராட்டத் தோன்றியது இங்கிலாந்தையும் - ரவி போப்ராவையும் தான்..

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்