"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, April 11, 2007

பட்டாம்பூச்சியா உங்கள் மனைவி?

பட்டாம்பூச்சி கனவுகளோடு
மல்பெர்ரி இலையினடியில்
பதுங்கி இருந்தேன்.

பற்களற்ற தாடைகளால்
இடைவிடாது அரைத்துண்டாக்கிய
துவாரப்பெருவெளிகளில்
எனக்கான சிறகுகள் காத்திருந்தன

பெருவெளியனைத்தும் நிறைத்து
வந்த நீயென் சிறகுகளாய்
பொருந்தக் காத்திருந்தேன்

நீயும் அழகிய சிறகுகள்
பொருத்துவதாய் உறுதியுரைத்தாய்.
சிறப்பானதொரு நந்தவனத்தில்
சிறகடிக்கவிடுவதாக நம்பிக்கையளித்தாய்.

என்னைச் சுற்றிச் சுற்றிப் பின்னிய
உனது வலைக்கயிற்றுப் பசையில்
கூட்டுப்புழுவாய் உறைந்தேன்.

இதமாய்த் தொடங்கி இறுக்கமாயணைத்து
இன்பமாயமைந்த தொடக்கம்
புழுக்கமாக மாற்றமுறுவதையுணர்ந்தும்
கூடுவிட்டு வெளியேறவியலாத
சிறையடைத்தாய்

உன் விருப்ப தினமொன்றில்
பிரி பிரியாக உதிர்த்து
பட்டாய் வார்த்து
பகட்டாக அணிந்தாயென்னை

உனக்கான அலங்காரப் பொருட்களில்
முதன்மையாக வைத்தாய்.
பெருமைபடுத்தியதாக
அலமாந்து கொண்டாய்.

இந்தப் பட்டாடையின் நூல்களுக்கிடையே
இன்னமும் விடுதலை பெற்று
பட்டாம்பூச்சியாகி விடலாமென்ற
தவிப்போடு துடித்திருக்கும்
என் ஆன்மாவை
நீ அணியும் பொழுதெல்லாம்
தன்னை இழந்து கொண்டிருக்கும்
என்னை அறிவாயா?

6 comments:

காட்டாறு said...

ரொம்ப அழகா ஒப்பிடுயிருக்கிறீர்கள். ஆழமில்லை ஆனால் அழுத்தம் உண்டு

நண்பன் said...

காட்டாறு,

வாருங்கள். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. ஆனாலும் குழம்பி விட்டேன் -


ஆழம் எது?

அழுத்தம் எது?

இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லி இருக்கலாமே?

சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி

அன்புடன்
நண்பன்

செல்வநாயகி said...

நண்பன்,

உங்கள் இடுகைகளைப் பலசமயங்களில் ஆர்வமுடன் படித்துவருகிறேன். பின்னூட்டம் போட முயன்று ஏற்காததால் சிலநேரம் வாசித்துவிட்டு மட்டும் போகிறேன். என்ன பிரச்சினை என்று பாருங்கள் பின்னூட்டப் பெட்டியில்.

இந்தக் கவிதை நன்று.

தன் ஆன்மா என்பது "என் ஆன்மா" என்று வந்திருந்தால் வாசிக்கும்போது இன்னும் பொருத்தமாக இருக்குமோ?

கௌசி said...

என் வண்ணங்களால்
உன்னை அழகு செய்தேன்
என் தழுவலில்
உன் மானம் காத்தேன்
அரை மனிதனாய் இருந்த உன்னை
முழுமைப் படுத்தினேன்
இருந்தும் நீ சொல்ல மறுக்கிறாய்
நாம் சமமென்று

நாங்கள் இப்படிச் சொன்னால் ஒப்புவீர்களா?
செல்வநாயகி சொன்னதுபோல் 'என்'என்று இருந்தால் நன்றாகப் பொருந்தும்.சிறப்பான கற்பனை.

நண்பன் said...

செல்வநாயகி,

வாருங்கள்.

பின்னூட்டமிட முடியவில்லை என்பது புதிய செய்தி. இதை தொழில்நுட்பம் அறிந்தவர்கள் தான் சொல்லித் தர வேண்டும் - என்ன செய்ய வேண்டுமென்று.

என் என்று தான் இருக்க வேண்டும். சுட்டுதலில் ஒரு சிறு குழப்பம். மாற்றி விட்டேன்.

எப்பொழுதுமே, முதலில், தோன்றியதை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் சிறிய சிறிய திருத்தங்களைச் செய்து கொள்வது வழக்கம். அது போன்று தான் இதுவும். முன்பெல்லாம் யாரும் வாசித்து கருத்து சொல்ல மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி. மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

// நாங்கள் இப்படிச் சொன்னால் ஒப்புவீர்களா? //

என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டீர்களென்றால், அதை நான் ஒப்புக் கொண்டு பல காலம் ஆகின்றது.

மற்ற ஆண்களுக்கான கேள்வி என்றால், பலரும் இப்பொழுது தங்கள் மனைவியை மதிக்கிறார்கள், சமமாக நடத்துகிறார்கள். இல்லையென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றாலும் தவறாக இருக்க முடியாது. ஏனென்றால், இன்னமும் திருந்த வேண்டிய, தங்கள் பார்வைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் பலர் இருக்கின்றனர் என்பதும் உண்மை தான்.

நீங்கள், செல்வநாயகி சொன்ன "தன்" மாற்றப்பட்டுவிட்டது.

நன்றி தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்