"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, December 22, 2005

நெடுஞ்சாலையில் ஒரு துகிலுரிப்பு...........

நெடுஞ்சாலையில் ஒரு துகிலுரிப்பு...........

காற்று எனக்காகப் பாடிக்கொண்டிருந்த
ஒருநாள் நான் பயணம் போய்க் கொண்டிருந்தேன்
மெக்ஸிகோவிற்குப் போகும் நெடுஞ்சாலை ஒன்றில்.

அடிபட்டு, நெளிந்து, நைந்து போன
நீல மஸ்டாங்க் வண்டியொன்று எனக்கு முன்னே,
அழுக்குப் படிந்த பின் கண்ணாடியுடன்
விரைந்து கொண்டிருந்தது.

விரைந்து செல்லும் காரிலிருந்து திடீரென
அழகிய பெண்ணின் கரம் ஒன்று -
கடிகாரம் கட்டிய கரம் ஒன்று,
பலப்பல பொருட்களை
தூக்கி எறிய ஆரம்பித்தது -
பின்னோக்கி விரைந்திடும் சாலையின் மீது......

ஒரு தொப்பி,
ஒரு அழகிய வெள்ளை காலணி,
பின்னர் அதன் ஜோடி,
மடிப்புகள் நிறைந்த பாவாடை,
எல்லாம் ஒழுங்கற்ற இயக்கத்துடன்
காற்றில் ஒலியெழுப்பி
கண்முன்னே பறந்து செல்கிறது -
மார்புச் சட்டையும் கூட.

எரிசக்தியை அழுத்தி,
வண்டியின் வேகம் கூட்டி,
முந்தைய காரின் பின்னே
ஐம்பதடி தூரத்தில்
ஆவலுடன் உற்றுப் பார்க்கிறேன் -
உபயோகத்தில் பழமையான
தேய்ந்து போன மார்புக் கச்சை ஒன்று -
சிறிய மார்புகளுக்கானது,
விரைந்து போய்
சாலையோர வேலியில்
சிக்கிக் கொள்கிறது -
வேலிக்கு அப்பால்,
மஞ்சளும், பச்சையுமான
கோதுமை வயல்கள்.
வெளிர் மஞ்சள் மார்புக் கச்சையை,
வேலியில் ஆணியடித்தாற் போன்று
நிறுத்தி வைக்கிறது,
வீசியடிக்கும் காற்று....

வியர்த்துக் கொட்டி,
இன்னும் வேகமெடுத்து விரட்ட
உத்தேசத்திருக்கும் வேளையில்,
அட்டகாசமான சிவப்பில்,
வெள்ளை நூல் எம்பிராய்டரி கொண்ட
கீழ் உள்ளாடை,
நான் அறியுமுன்னே
விரைந்து வந்து என் பார்வையைத் தாக்க
நிலைகுலைந்தும், இடம், வலம் தடுமாறியும்,
அநாதையான அந்தச் சாலையில் விபத்தில்லாமல்
நிலைக்கு வந்து சேர்ந்த பொழுது,
காணவில்லை, அந்த உள்ளாடையை.
காற்றின் வலிய கரங்கள்
கீழ் உள்ளாடையை மட்டும் நகர்த்தவில்லை -
என் நாவையும் வரளத்தான் செய்து விட்டது.

அந்த துகிலுரியும் நங்கையை
நன்றாகப் பார்த்து விட
ஆவலும், பரபரப்பும், அதிகரித்தது -
ஒரு பெண் மட்டும் தானா?
இல்லை ஆணும் இருக்கிறானா?
அல்லது பல ஆண்களா?
அவள் மார்பின் மீது
அல்லது அவள் தொடையின் மீது
அவன் கைகள் இருக்குமோ?

நிச்சயமாக இந்தக் காட்சியைக்
கண்டே விட வேண்டும் -
அந்த அழுக்கடைந்த பின்கண்ணாடி உதவாது.

எரிசக்தி பெடலில் ஏறினின்று மிதிக்க
விரைந்து சென்று
அந்தக் காரின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே
பார்த்த அந்த முழுமையான விநாடியில்,
அடுத்தவர் அந்தரங்கத்தை நோட்டம் விடும்
அநாகரீக நரகவாசிகள் மிகுந்த உலகில்
நானும் ஒருவனாக
அந்த காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியே
கிடைத்த தரிசனத்தில்
நான் பார்த்தது ஒரே ஒரு மனிதனைத் தான் -
நாற்பது வயதிருக்கும் மனிதன்,
காரின் சக்கரத்தை இயக்கி கொண்டிருந்தான்.

மூக்குக் கண்ணாடி அணிந்து
சாலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
வானொலியில் கால்பந்தைக் கேட்டுக் கொண்டு,
நிர்ச்சலனமாய்,
நிதானமாய் போய்க் கொண்டிருந்தான்.

முந்திச் சென்ற நான்
பின் வரும் பொருள் காட்டும்
கண்ணாடி வழியே
திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன் -
என் வண்டியை
நிதானத்துக்குக் கொண்டு வந்தவனாய்.
பின்னோக்கி செல்லும் மரங்களுக்கிடையில்
உறுதி செய்து விட்டேன் -
ஒரு ஆண் தான்.

ஏமாற்றமுற்ற எனக்குத் தெரியவில்லை -
என்ன தான் நடந்தது?
அவன் வீசியெறிந்தவை
தொப்பியும், காலணிகளும்,
மார்புக் கச்சையும்,
கீழாடையும் மட்டும் தானா?
அல்ல
அவன் தான் அணிந்திருந்த
(அணிவிக்கப்பட்ட)
பெண்ணை தான் தூக்கி எறிந்தானா?
அல்லது நான் தான் தூக்கி எறிகிறேனா?
முன்னோர்களின் வழக்கத்தையும்
எனது பழைய முதலீடுகளையும்,
தூக்கி எறிந்து விட்டு -
இவ்வுலகின்
முகவரியற்ற இடங்களில்,
அம்மண வெறுமையை
துல்லியமாகப் புணர்ந்து ருசிக்க
வெறிகொண்டு பாய்ந்து செல்லும்
நான் தான் அந்த மனிதனா?


(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு - நண்பன்.
மூலம் யாருடையது? நீங்களே தேடி கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்)

1 comment:

நண்பன் said...

எழுதியவர் - ஏ.கே. ராமாநுஜம்.

தமிழும் கன்னடமும் அறிந்த மைசூர்காரர். என்றாலும் அறியப்பட்டதென்னவோ - ஆங்கிலக் கவிதைகளுக்காகத் தான்.

இது அவர் எழுதிய கவிதை தான். தன் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் தூக்கி எறிந்து விட்டு - அடுத்தவரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைத்து ருசிக்க நினைக்கும் அற்பத்தனமான வாழ்க்கையை நுகரத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்ற கரு தான் கவிதை.

இன்றைய நவீன வாதிகளுக்கு சரியான சாட்டையடி.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்