"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, December 25, 2005

ஒரு பிரார்த்தனை.

இன்று உலகில்
எந்த ஒரு மூலையிலும்
குண்டுகள் வெடிக்காதிருக்கட்டும்

எந்த ஒரு நதியும்
எந்த ஒரு மூலையிலும்
கரை மீறாதிருக்கட்டும்

எந்த ஒரு எரிமலையும்
எந்த ஒரு மூலையிலும்
பொங்கிக் குமுறாதிருக்கட்டும்

எந்த ஒரு கடலும்
எந்த ஒரு மூலையிலும்
உயிர்களை விழுங்காதிருக்கட்டும்

எந்த ஒரு இடியும்
எந்த ஒரு மூலையிலும்
எவர் தலையிலாவது விழாதிருக்கட்டும்

எனது இறைவனே !!!
உன்னால் கொடுக்க முடிந்தது
அனைத்தையும்
கொடுத்து விடு -
கேட்டது மட்டுமின்றி
கேட்காமல் விட்டதையும் தான்

இத்துடன்
எனது பிரார்த்தனைகள்
முடிந்து விட்டன -
நேரமின்மையால்

எந்த நிமிடத்திலும்
அழைப்பு வரலாம்
பதுங்கு குழி விட்டேகி
எதிரியின் மண்ணில்
எறிந்தே ஆகவேண்டும் குண்டுகளை -
தலைமை ஆணையிடலாம்.

இன்று
நான் எறியப் போகும்
இந்தக் குண்டுகளில்
எந்த ஒரு குழந்தையும்
சிக்காதிருக்கட்டும்.

இல்லையென்றால்
காக்கும் சக்தி இருப்பதாக
எண்ணிக் கொண்டு
இத்தனை நேரம் இறைஞ்சிய
என் பிரார்த்தனைகளை
என் குண்டுகளில் மடிந்துவிழும்
குழந்தைகளின் காலடியில்
சமர்ப்பித்துவிடும் -
சுவர்க்கத்தில் காலடி
எடுத்து வைக்கும் அவர்களிடம்

2 comments:

நிலவு நண்பன் said...

கண்ணீர் வரவழைக்கும் பிரார்த்தனை நண்பா..

மனம் உருகி வந்த கவிதை இது..

நண்பன் said...

நன்றி நிலவு நண்பன்

இன்று உலகின் பிரார்த்தனைகள் எல்லாம் இப்படித் தான் இருக்கின்றன.

புது வருடத்திலாவது உலகில் நிம்மதி பெருகட்டும்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்