முழுமையடைந்த வெறுமை....
ஒரு மாலைப் பொழுதில்
மெலிந்த நிழலை
வீழ்ந்த இலைகளுக்கிடையே
மரஉச்சியிலிருந்து
தூக்கியெறிந்தது
இலையுதிரும் காலம்
துக்கம் பாவிக்கும் நிழல்
துயருற்று கிடந்ததாங்கே
விதியை நொந்து
அப்பொழுது தான்
அவள் உள்நுழைந்தாள்
பரவசமூட்டும் புன்னகையை
எங்கெங்கும் படரவிட்டு
அடிவானம் தொட்டு உரசிய
மின்னல்களில்
அப்பழுக்கற்ற ஓவியமாய்
முதல் மழையின் மண்வாசனையை
உயிர்க்கொடியின்
ஒவ்வொரு திசுவிற்கும்
கறந்த பாலின் மணத்துடன்
விளம்பிக் கொண்டே
மனதினுள் பதிந்தாள்
படங்கள் நிரந்தரமாய்
சுவரில் தொங்குகிறது
ஒரு ஒழுங்கற்ற கோணத்தில்
என்னவோ மனம் மட்டும்
தேடுகிறது
அந்த மண்வாசனையை
மெல்ல மெல்ல தேய்ந்து
விலகிப் போகும்
மண்வாசனையை
மீண்டும் உயிர்ப்பிக்க
காலத்தால் மட்டுமே முடியும்
அதன் விருப்பம் போல
வீழ்ந்த நிழலின் பெருமூச்சு
விலகிக் கொள்கிறது.
(இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்க - http://sharepoetry.com/poem/show/4947
ஆங்கிலத்திலும் எழுதியது நானே. தமிழில் - வரிக்கு வரியான மொழி பெயர்ப்பு அல்ல.)
2 comments:
நன்றாக எழுதியுள்ளீர்கள்.
விரைவிலேயே நீங்கள் விரும்பும் மண்வாசனையை நுகர வாய்ப்புக்கள் வர வாழ்த்துக்கள்..
இருக்குமிடத்தின் வாசனைகள் அவை இல்லாத பொழுதினிலேயே இனிக்குமென உணர்ந்தால் இருக்குமிடமெலாம் சொர்க்கமே..
சுகா
நன்றி சுகா.
புலம் பெயர்தலின் வலியாக உணர்கிறீர்கள்.
இந்தப் பாலைவனத்தில் மழை பெய்வதில்லை. பெய்தாலும், மண் வாசனை வருவதில்லை.
அதனால், பிறந்த இடத்தின் மீதான மண்வாசனை மயக்கம் அதிகமிருக்கத் தான் செய்யும்.
ஆனால், இது உங்கள் பார்வை மட்டுமே. இன்னமும் கூர்ந்து கவனித்தால், மேலும் பல அர்த்தங்களையும் உணர முடியும்
Post a Comment